ஒரு ஆண்டில் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட எல்லா பொருட்களின் மதிப்பையும், எல்லா சேவைகளின் மதிப்பையும் சேர்த்துக் கூட்டினால் கிடைப்பது மொத்த உள்நாட்டு உற்பத்தி.
இதில் நுகர்வோர் வாங்கும் பொருட்கள்/சேவைகள், வணிக நிறுவனங்கள் முதலீட்டுக்காக வாங்கும் பொருட்கள்/சேவைகள், அரசுகள் வாங்கும் பொருட்கள்/சேவைகள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் சேவைகள் அடங்கும். நூறு கோடி மக்களும் அந்த ஆண்டில் என்ன குப்பை கொட்டினார்கள் என்று தெரிந்து விடும்.
2005ம் ஆண்டில் இந்தியாவின் GDP 800 பில்லியன் டாலர்கள் என்றால் நாட்டு மக்களின் உழைப்பில் விளைந்த மதிப்பு இவ்வளவு என்று பொருள். 2006ம் ஆண்டில் அது 872 பில்லியன் டாலர்களாக உயர்ந்தால் 9% அதிக மதிப்பிலான உழைப்பு நடந்திருக்கிறது என்று தெரியும். இந்தியப் பொருளாதாரம் எவ்வளவு வேகமாக வளர்கிறது என்று பார்க்க ஒவ்வொரு ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பார்த்தால் போதும்.
சரி, இதை எப்படி அளப்பது? இரண்டு வழிகள் இருக்கின்றன:
- ஒன்று, அந்த ஆண்டு விற்கப்பட்ட எல்லா பொருட்களின் விலை மதிப்புகளை கூட்டிப் பார்க்கலாம். GDP கணக்கு போடும் துறை ஒவ்வொரு வணிக நிறுவனத்தின் / தனி நபரின் விற்பனைக் கணக்குகளை கூட்டிப் பார்த்து நுகர்வோருக்குக் கிடைத்த பொருட்கள்/சேவைகளின் மதிப்பை அளவிடலாம்.
- இன்னொன்று அந்த ஆண்டு ஒவ்வொரு வணிக நிறுவனமும் / தனி நபரும் செலவளித்த தொகைகளை கூட்டினாலும் அதே GDP கிடைத்து விடும்.
இந்த அளக்கும் முறைகளில் ஓரிரு சிக்கல்கள் வரலாம்.
ஒரே பொருள் பல முறை கைமாறும் போது அதன் மதிப்பு பல முறை சேர்ந்து விடக் கூடாது. இதைத் தவிரக்க விற்பனை மதிப்பைக் கணக்கிடும் போது இறுதியாக நுகர்வோர் கையில் போய்ச் சேரும் விற்பனையை மட்டும் சேர்த்துக் கொள்வார்கள்.
செலவுக் கணக்கு மூலம் அளக்கும் போது மற்ற நிறுவனங்களிலிருந்து வாங்கிய பொருட்கள் மீதான செலவைச் சேர்த்துக் கொள்ளாமல் அவற்றின் மதிப்பை அதிகரிக்க செலவிட்ட ஊதியங்கள், வட்டித் தொகைகள், லாபத் தொகைகள் போன்றவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆண்டு தோறும் நாம் வரவு செலவு கணக்காக வருமான வரித்துறைக்கு கொடுக்கும் விபரங்கள், கருத்துக் கணிப்புகள், கடைத்தெரு விற்பனை மதிப்பீடுகள், வேலை வாய்ப்பு விபரங்கள் போன்ற பல ஆவணங்களிலிருந்து GDP கணக்கிடப்படுகிறது. நாட்டின் மொத்த உற்பத்திக் கணக்கில் உங்கள் உழைப்பும் தெரிய அடுத்த தடவை தவறாமல் சரியான வருமான வரிக் கணக்கைக் காட்டுங்கள்.
9 comments:
/ஆண்டு தோறும் நாம் வரவு செலவு கணக்காக வருமான வரித்துறைக்கு கொடுக்கும் விபரங்கள், கருத்துக் கணிப்புகள், கடைத்தெரு விற்பனை மதிப்பீடுகள், வேலை வாய்ப்பு விபரங்கள் போன்ற பல ஆவணங்களிலிருந்து GDP கணக்கிடப்படுகிறது./
அப்படினா, நம்ம நாட்டின் GDP யை தோராயமாகதான் சொல்றாங்களா?
ஏன்னா, நம்ம நாட்டில வருமான வரி கட்றவங்க சதவீதமே ரொம்ப கம்மிதானே?!
பெரிய பெரிய 'தல'களைலாம் ஒழுங்கா வருமான வரி கட்டினாலே நம்ம நாட்டின் GDP double digit ல போயிருமே..!
அப்புறம் "இலவசங்கள்" னு ஒரு பக்கம்.......ம்ம்ம்ம்
வழக்கம்போல்.... மிக எளிமையான விளக்கத்திற்கு நன்றி!
விளக்கத்திற்கு நன்றி சிவக்குமார். ஆனால், கொஞ்சம் குழம்புகிறது.
//ஒன்று, அந்த ஆண்டு விற்கப்பட்ட எல்லா பொருட்களின் விலை மதிப்புகளை கூட்டிப் பார்க்கலாம். GDP கணக்கு போடும் துறை ஒவ்வொரு வணிக நிறுவனத்தின் / தனி நபரின் விற்பனைக் கணக்குகளை கூட்டிப் பார்த்து நுகர்வோருக்குக் கிடைத்த பொருட்கள்/சேவைகளின் மதிப்பை அளவிடலாம்.//
இதனால், விலைவாசி உயர்வும், GDP உயர்வாகத் தெரிய்க்கூடுமல்லவா? 10 ரூபாய்க்கு விற்ற அரிசி, இப்பொழுது 15 ரூபாய்க்கு விற்றால், இந்த 5 ரூபாய், GDP உயர்வுக்கான காரணிகளில் ஒன்றாகிவிடாதா? அல்லது அவ்வாறு நடப்பது சரியான ஒன்றா?
/10 ரூபாய்க்கு விற்ற அரிசி, இப்பொழுது 15 ரூபாய்க்கு விற்றால், இந்த 5 ரூபாய், GDP உயர்வுக்கான காரணிகளில் ஒன்றாகிவிடாதா?
/
வாங்கும் திறன் குறையும் என்பது ஒரு காரணமோ?
தென்றல்,
GDP கணக்கீடு தோராயமானதுதான், புள்ளி விபரங்களின் அடிப்படையில் திரட்டப்படுவதுதான்.
ஒரே முறையைப் பின்பற்றுவதால் ஒரு ஆண்டை விட அடுத்த ஆண்டில் ஏற்படும் மாற்றங்களை அவதானிப்பதற்கு இது உதவும். இந்தியாவின் ஜிடிபி 1 டிரில்லியன் டாலர் என்று சொல்வது தோராயமாக இருந்தாலும், சென்ற ஆண்டு 900 பில்லியனாக இருந்தது இந்த ஆண்டு 1 டிரில்லியனாக மாறியதால், வளர்ச்சி 11% என்று குறிப்பிட்டால் அந்த வளர்ச்சி வீதம் சரியாகவே இருக்க வேண்டும்.
குறைகுடம்,
நல்ல கேள்வி.
இந்தியப் பொருளாதரத்தின் வளர்ச்சி 8% என்று சொல்லும் போது, விலை அடிப்படையில் கணக்கிட்ட மொத்த உற்பத்தியிலிருந்து விலைவீக்க வீதத்தைக் கழித்து 8% வளர்ச்சி என்று பொருள்.
விலை வாசி உயர்வைக் கழித்து விட்டுதான் வளர்ச்சியைக் கணக்கிடுவார்கள். சமீபத்தில் துக்ளக்கில் குருமூர்த்தி இதற்கு முரணாக ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்.
அன்புடன்,
மா சிவகுமார்
எனக்கு பணவீக்கம் பற்றியும், அது எவ்வாறு ஏற்படுகிறது, மற்றும் அதன் விளைவுகள் பற்றி தெளிவான விளக்கம் தர முடியுமா?
அன்பின் இந்தியன்,
நாட்டில் பத்தாயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் கைமாற வேண்டுமானால் பத்தாயிரம் கோடி பணம் புழக்கத்தில் இருக்க வேண்டும். (இந்தக் கணக்கில் இன்னும் பல காரணிகள் வரும், ஒரு எளிய புரிதலுக்கு இப்படியே வைத்துக் கொள்ளலாம்).
பொருட்களின் அளவும் தரமும் உயராமல் திடீரென்று பணப்புழக்கம் இருபதாயிரம் கோடிகளாக உயர்ந்து விட்டால், இரண்டு மடங்கு பணம் அதே அளவு பொருட்களைத் துரத்த விலைவாசி இரண்டு மடங்காக உயர்வதுதான் மிஞ்சும்.
அதே போல, இருக்கும் பணத்தின் அளவு மாறாமல் கிடைக்கும் பொருட்களின் அளவு குறைந்து விட்டாலும் அதே நிலைமை வந்து விலைவாசி உயரும். இதுதான் பணவீக்கம்.
அன்புடன்,
மா சிவகுமார்
விளக்கத்திற்கு மிக்க நன்றி, சிவக்குமார்.
சிவக்குமார்,
விளக்கத்திற்கு நன்றி!
thanks for the explanation on GDP.
Post a Comment