நிறுவன வளத் திட்டமிடல் என்று மென்பொருள் சேவை வழங்குவது யுரேகா போர்ப்ஸ் சலவை எந்திரம் விற்பது அல்லது வெற்றிட எந்திரம் விற்பது போன்றது.
நம்ம ஆள் வாடிக்கையாளர் வீட்டுக்குப் போய், 'எப்படித் தரையை, கூரையை, சுவர்களை தூய்மை செய்ய வேண்டும். தூய்மை செய்த பிறகு தூசியை எப்படி பையிலிருந்து வெளியேற்ற வேண்டும், எவ்வளவு நேரம் தொடர்ந்து ஓட்டலாம்' என்று விளக்கிச் சொல்ல வேண்டும். அதில் புதிதாக ஏதாவது நுட்பம் இருந்தால் அதையும் விளக்கமாகச் சொல்லி விட வேண்டும்.
சொல்லா விட்டால் அப்படி ஒரு வசதி இருப்பது தெரியாமல் அதைப் பயன்படுத்தாமலேயே இருந்து விடுவார்கள். பணமும் நேரமும் செலவழித்து ஒரு நுட்பத்தை உருவாக்கிச் சேர்த்திருக்கிறோம். விற்கும் விலையில் அந்த செலவும் அடங்கி இருக்கிறது. வாடிக்கையாளர் அந்த நுட்பத்துக்கான பலனை அடையா விட்டால் கொடுத்த காசுக்கான பலன் அவருக்குக் கிடைக்காமல் போய் அடுத்த முறை நம்மிடம் வர மாட்டார்.
நாங்கள் ஆரம்பத்தில் மென்பொருளுக்கு இன்ன விலை என்று பேசி விட்டு, நிறுவுதல், மாற்றங்கள் செய்தல், பயிற்சி அளித்தல், தேவையான அறிக்கைகளை எடுத்தல் போன்றவற்றுக்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று பொறுப்பேற்றுக் கொள்வோம்.
எங்களைப் பொறுத்தவரை ஏற்கனவே மென்பொருள் செய்து வைத்திருக்கிறோம், வாடிக்கையாளர் இடத்துக்குப் போய் வேலை செய்யும் ஒவ்வொரு நாளுக்கும் செலவாகிக் கொண்டே இருக்கிறது. அந்தக் காசு வர வேண்டும். மென் பொருளை நிறுவியதும் இவ்வளவு காசு, ஒரு மாதத்துக்குப் பிறகு இவ்வளவு காசு என்று அட்டவணை அமைத்துக் கொண்டோம்.
வாடிக்கையாளருக்கோ மென்பொருளை அவர்கள் பயன்படுத்த ஆரம்பித்து தினசரி வேலை விபரங்களை சேகரித்து அறிக்கைகள் வர ஆரம்பித்த பிறகுதான் பயன்பாடு தெரிகிறது. அதற்கு முன்பு காசு கொடுக்கத் தயங்குவார்கள். அப்படியே கொடுத்தாலும், பேசிய முழுத் தொகையை கொடுக்கும் முன்பு பயன்பாடு அவர்கள் எதிர்பார்த்தபடி கிடைத்து விட்டதா என்று பார்ப்பார்கள்.
நாங்கள் விற்பதாக நினைத்துக் கொண்டிருந்தது மென்பொருள். அவர்கள் வாங்குவதாக நினைத்துக் கொண்டிருந்தது அதன் மூலம் கிடைக்கும் பலன்கள். இரண்டுக்கும் இடையேயான இடைவெளியில் பல வாக்குவாதங்கள், கருத்து பேதங்கள்.
அப்படி நோக்கங்கள் தெளிவாக இல்லாததால் எங்களது முயற்சிகள் புதிது புதிதாக வாடிக்கையாளர்களைத் தேடுவதில் இருந்தன. ஏற்கனவே வாய்ப்பளித்த இடங்களில் சீக்கிரம் மென்பொருளை நிறுவிக் கொடுத்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்று முயல்வோம். இதனால் விற்பனையின் மதிப்பும் அதிகமாக முடியாமல் தவித்தோம்.
ஒரு பொருளின் விலைக்கு இரண்டு பக்கங்கள். ஒன்று வாங்குபவருக்குக் கிடைக்கும் பலனின் அளவு, இரண்டாவது விற்பவருக்கு ஆகும் முயற்சியின் அல்லது செலவின் அளவு. விலை பலனை விடக் குறைவாகவும், முயற்சியை விட அதிகமாகவும் இருக்க வேண்டும். இல்லை என்றால் வாங்குபவர் அல்லது விற்பவர் பின்வாங்கி விடுவார்.
இரண்டுமே ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. அதிக விலை கொடுக்கும் வாடிக்கையாளருக்கு கூடுதல் செலவு செய்து அதிக பலனைத் தேடிக் கொடுக்க முடியும். அந்த வாடிக்கையாளரும் கூட இவ்வளவு காசு கொடுத்து விட்டோமே, இதை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று தேடித் தேடி, விற்பனையாளரை துரத்தி துரத்தி ஆகக் கூடுதல் பலனை பெற முயற்சிப்பார்.
12 comments:
நாணயத்தின் இரு பக்கம் போல்...
நல்ல உதாரணம்.
வாங்க குமார்,
இதைப் புரிந்து கொள்ளாததால் பெரிய இழுபறிகள். நான் வேலை பார்த்த பெரிய நிறுவனங்களில் கூட எல்லோருக்கும் அந்தப் புரிதல் இருந்ததாகப் படவில்லை.
அன்புடன்,
மா சிவகுமார்
மா சிவகுமார்
இதில் எனக்கு இன்னொன்றும் தோன்றுகிறது.ஒரு மென்பொருளை வாங்கும் முடிவு உள்ளவரின் எண்ணமும்,அதை உபயோகிப்பவரின் எண்ணமும் ஒரே அலைவரிசையில் இருந்தால் விற்பனை செய்பவரின் நிலைமை சுமூகமாக போய்விடும்,இல்லாவிட்டால் ஒரே மென்பொருளைப் பற்றி வெவ்வேறு விதமாக விளக்க வேண்டும்.இதில் ஏதோ ஒன்றை சரிவர நம்மால் புரியவைக்கமுடியாவிட்டால் நஷ்டம் தான்.
சும்மா கையால் பேப்பரை தள்ளுவது போல் இந்த மென்பொருளெல்லாம் சரியாக வராது என்று தள்ளிவிடுவார்கள்.
//ஒரு மென்பொருளை வாங்கும் முடிவு உள்ளவரின் எண்ணமும்,அதை உபயோகிப்பவரின் எண்ணமும் ஒரே அலைவரிசையில் இருந்தால் விற்பனை செய்பவரின் நிலைமை சுமூகமாக போய்விடும்,///
அப்படி கொண்டு வர வேண்டியதுதானே விற்பனையாளரின் வேலை :-)
//அட்டவணை அமைத்துக் கொண்டோம்.
இந்த அட்டவணையை எந்த அடிப்படையில் அமைத்துக் கொண்டீர்கள்?? முயற்சி?
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு புரிந்தவுடன் அட்டவணை மாற்றினீர்களா? எந்த அளவு (+/-)?
நன்றி!
கெ.பி.
அட!
கெகேபிக்கினி கூட நம்பர் போட்டுகிட்டாரு!!
//இந்த அட்டவணையை எந்த அடிப்படையில் அமைத்துக் கொண்டீர்கள்?? முயற்சி? //
ஆமா, நாம் எவ்வளவு வேலை செய்கிறோமோ அதைப் பொறுத்து வசூல்.
//வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு புரிந்தவுடன் அட்டவணை மாற்றினீர்களா? எந்த அளவு (+/-)?//
அவர்களுக்கு ஆதாயம் கிடைப்பதைப் பொறுத்து வசூல் :-) (+ தான்)
அன்புடன்,
மா சிவகுமார்
உங்கள் தேடல்மிகுந்த பதிவுகளை படிப்பவன் என்ற முறையில் உங்களிடம் ஒரு கேள்வி?
உங்களிடம் ஒருவர் மென்பொருள் செய்வதற்காக ஒப்பந்தம் செய்திருக்கிறார். நீங்களும் செய்து கொடுத்திருக்கிறீர்கள்.அது சோதனை ஓட்டத்திலேயே இருக்கிறது.அதை வாடிக்கையாளர் உபயோகிக்கவும் செய்கிறார்.உங்களுக்கு அவர் பாதிப்பணத்தை மாத்திரம் செலுத்தியிருக்கிறார்.மிகுதி தரவேண்டியுள்ளது.
ஆரம்ப நிலையிலுள்ள கொம்பனியாதலால் உங்களுக்கு பணத்தட்டுப்பாடு.ஆகவே அவரிடம் மிகுதிப்பணத்தை கேட்டு நயமாக மின்னஞ்சல் செய்கிறீர்கள்.(அதைப்பற்றி வாடிக்கையாளர் கவனத்தில் எடுக்வில்லை.அதே நேரம் அவர் நேரத்திற்கு பணம்பட்டுவாடா செய்வதில் கொஞ்சம் கஞ்சப்பேர்வழி என்று உங்களுக்குத்தெரியும்) அதே நேரம் அதே வாடிக்கையாளர் வேறொரு மென்பொருளுக்கு உங்களிம் ஆய்வறிக்கையும் செலவுமதிப்பீடும் கேட்கிறார்.ஓரளவு பெரிய ஆர்டர் அது.ஆய்வறிக்கை தயார்செய்யவும் செலவுமதிப்பீட்டு அறிக்கைக்கும் உங்களுக்கு ஒரு வாரமும் பணச்செலவும் இன்னபிற அமையச்செலவுகளும் ஏற்படும்.
இந்நிலையில்..
உங்களின் நிலைப்பாடு என்ன?
1. செய்த மென்பொருளுக்கு கணக்கு முடிக்கப்பட்ட பின்தான் அடுத்த புறொஜெக்ற் என்று கறாராக சொல்லிவிடுவீர்கள்
2. வாடிக்கையாளர் பணம் கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இந்தத்திட்டத்திலும் இறங்குவீர்கள்
3. வாடிக்கையாளருக்கு நிலைமையினை எடுத்துக்கூறி பணத்தை பெற்றபின்தான் அடுத்ததிட்டத்திற்கு நகருவீர்கள்
4. முந்திய புறொஜெக்ற் போனால் போகட்டும் என்று பெரும் பணத்தை கருத்தில் கொண்டு இந்த திட்த்தின் வேலைகளை முன்னெடுப்பீர்கள்
5.அவ்வாடிக்கையாளருக்கு கறாராக மின்னஞ்சல் அனுப்பிவிட்டு அவருடனான தொடர்புகளை துண்டித்துக்கொள்வீர்கள்
கொஞ்சம் விரிவான பதிலை எதிர்பார்க்கிறேன்,உங்களுக்கு முடிந்தால் மட்டும்
வணக்கம் சேரன்கிருஷ்,
//3. வாடிக்கையாளருக்கு நிலைமையினை எடுத்துக்கூறி பணத்தை பெற்றபின்தான் அடுத்ததிட்டத்திற்கு நகருவீர்கள்//
இதை கொஞ்சம் மாற்றிக் கொள்வேன்.வாடிக்கையாளரிடம் பணத்தைத் துரத்திப் பிடிப்பதில் வேகத்தை அதிகப்படுத்தும் அதே நேரத்தில் புதிய திட்டத்துக்கான தயாரிப்புகளையும் ஆரம்பித்து விடுவேன்.
1. நமக்கு வர வேண்டிய பணத்தை கேட்பதில் எந்தத் தயக்கமும் வேண்டியதில்லை. நமது பணத்தட்டுப்பாட்டைச் சொல்லிக் கேட்காமல், செய்த வேலைக்குப் பணத்தைக் கொடுங்கள் என்று கேட்பேன்.
2. அப்படிக் கேட்கும் அதே சமயம் புதியத் திட்டத்துக்கான தயாரிப்புகள் ஆரம்பித்து விட்டதையும் வாடிக்கையாளருக்கு தெரிவித்து நல்ல உறவுச் சூழலை பராமரித்துக் கொள்வேன்.
3. எவ்வளவு பெரிய ஆர்டராக இருந்தாலும் அதைக் கருத்தில் கொண்டு வர வேண்டிய பணத்தில் விட்டுக் கொடுக்க மாட்டேன். கடைசியில் பணம் நம் கையில் வருவதுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை.
இந்தப் பணத்தை வசூலிக்காமல் விட்டு விட்டால் பெரிய திட்ட வேலை செய்த பிறகு வந்து சேரும் என்று என்ன உத்தரவாதம்?
4. அப்படிக் கறாராக நாம் இருக்கும் போது வாடிக்கையாளரும் பணம் கொடுப்பதில் சுணக்கத்தைக் குறைத்துக் கொள்வார்.
அன்புடன்,
மா சிவகுமார்
சேரன்கிரீஸ் கேள்விகளும் உங்கள் பதில்களும் மிக அருமை.
உள்ளங்கை நெல்லிக்கனி.
//உள்ளங்கை நெல்லிக்கனி.//
காலையில் இதைப் பற்றி யோசித்து விட்டு முற்பகலில் ஒரு வாடிக்கையாளரைப் பார்க்கப் போனால் அங்கு சிறிய அளவில் இந்த மாதிரி சிக்கல்.
கொஞ்சம் முகத்தையும் திருப்பிய பிறகுதான் நம்ம பக்கத்தைப் புரிய வைக்க முடிந்தது.
அன்புடன்,
மா சிவகுமார்
நன்றி :)
<--அப்படிக் கறாராக நாம் இருக்கும் போது வாடிக்கையாளரும் பணம் கொடுப்பதில் சுணக்கத்தைக் குறைத்துக் கொள்வார்-->
நாங்கள் எவ்வளவுதூரம் கறாராக இருக்கிறோம் என்பதை
அவருக்கு புரியவைப்பதில்தானே பொதுவாக கருத்துபேதங்கள் ஏற்படுகின்றன
Post a Comment