ஒரு தொழிலை/ நிறுவனத்தை நடத்தும் போது பொறுப்புணர்வு உச்சக் கட்டத்தில் போய் விடும். சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் அவதானித்து, வாடிக்கையாளர், ஊழியர்கள், போட்டியாளர்கள், அரசாங்கம், விற்பனையாளர்கள் என்று ஒவ்வொருவரிடமும் சரியான உறவுகளைப் பேண வேண்டும். மாறி வரும் சூழலுக்கு ஏற்ப சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு நூற்றுக் கணக்கான சின்னச் சின்ன முடிவுகள் எடுக்க வேண்டும். எது சரியான திசையில் கொண்டு போகும், எது தொல்லையைக் கொடுக்கும் என்று அலசி ஆராய முழு விபரங்களும் கைவசம் இருக்காது. முடிவு எடுத்து சிறிது காலம் கழித்துதான் அதன் விளைவுகள் தெரிய வரும். அந்த விளைவுகளை சமாளிக்கும் அதே நேரத்தில் மாதா மாதம் சம்பளம் கொடுப்பது, வாடகைக் கொடுப்பது, வாங்கிய பொருளுக்குப் பணம் கொடுப்பது, சரியான தரத்தில் பொருளை விற்பது. அதற்கான பணத்தைக் கொண்டு சேர்ப்பது என்று நிறுத்த முடியாத சக்கரத்தை இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
"இன்றைக்கு உடம்பு சரியில்லை, இரண்டு மாதங்கள் மருத்துவ விடுப்பு எடுத்து உடம்பைத் தேத்திக் கொண்டு வேலைக்குப் போகலாம்" என்ற சுகம் தொழில் நடத்துவதில் கிடையாது. வேலை பார்க்கும் போது நாம் அப்படி விடுப்பு எடுத்தால் வேறு யார் நம் வேலையைப் பார்க்க வேண்டும் என்று கவலைப் படுவதற்கு அமைப்புகள் இருக்கும், அந்த அமைப்புகளின் இறுதிப் பொறுப்பாளி ஒரு தனிமனிதர்தான்.
எனக்குத் தெரிந்த ஒரு நிறுவன உரிமையாளருக்கு நுரையீரல் புற்று நோய் வந்து விட்டது. அது வரை மாதத்துக்கு ஒரு கோடி ரூபாய் வரை வணிகம் செய்து கொண்டிருந்த அவர் அடுத்த ஆறு மாதங்களில் எல்லா நடவடிக்கைகளையும் குறைத்து, வேலை பார்த்தவர்களுக்கு வேறு இடம் தேடிக் கொடுத்து, சரக்குகளை விற்றுத் தீர்த்து, வர வேண்டிய பணத்தை வசூலித்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து நிறுவனத்தை மூடிக் கொண்டு விட்டார். நல்ல கட்டுப்பாட்டில் ஓடிக் கொண்டிருக்கும் வண்டியைத்தான் அப்படி வேகம் குறைக்கவோ, ஒழுங்காக நிறுத்தவோ முடியும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளர்ந்து விட்ட நிறுவனத்தை மூடுவது கூட சிக்கலாக இருக்கும். அதில் பலருக்கு பண இழப்பும் ஏற்படும்.
அத்தனை பேரை ஒன்று திரட்டி குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையை வழங்க ஆரம்பித்த பிறகு அந்த உந்தம் குறைந்து விடாமல் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். இதுவும் ஆகாய விமானம் பறப்பது போலத்தான்.
விமானம் மேலே கிளம்ப மேல் நோக்கிய உந்தம் வேண்டும். அதை உருவாக்க தரையிலேயே வேகம் பிடித்து காற்றழுத்த வேறுபாட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட வேகத்துக்கு மேல்தான் காற்றழுத்த வேறுபாடு விமானத்தின் எடையை தூக்க மேலே எழும்பவே முடியும். அதன் பிறகு அந்த வேகம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இடையில் ஏற்படும் மாற்றங்கள் எல்லாவற்றையும் சமாளித்து சரியான முடிவுகளை எடுத்து வேகத்தை பராமரிக்க வேண்டும்.
ஏதாவது தவறு செய்து கட்டுப்பாட்டை இழந்து விட்டால் பயணிக்கும் எல்லோருடனும் விமானம் கீழே விழ வேண்டியதுதான். தேவைப்படும் போது முறையாகக் கீழே இறங்குவதற்கான ஏற்பாடுகளையும் வைத்திருக்க வேண்டும்.
3 comments:
Wow! Great Job
நாணயம்.. போய் விமானமா?
நன்றாக இருக்கு.
நன்றி சோழாகுரூப்.
//நாணயம்.. போய் விமானமா?//
நாணயம் எங்க போச்சு, அதுவும் இருக்கு, இப்ப விமானமும் சேர்ந்துக்கிச்சு ;-)
அன்புடன்,
மா சிவகுமார்
Post a Comment