Thursday, July 19, 2007

சில குறிப்புகள் - மென்பொருள் துறையில் தொழில் வேலை வாய்ப்புகள்

'அப்படி என்னதான் செய்யறீங்க? இத்தனை ஆயிரம் கோடி ஏற்றுமதி என்கிறாங்க, இத்தனை லட்சம் படிச்ச பசங்க வேலை பார்க்கிறாங்க. இன்னும் பல ஆண்டுகளுக்கு இது வளர்ந்து கொண்டே போகும் என்கிறாங்க. மென் பொருள்னா என்னங்க?'

'பொதுவா ஒரு பொருளை, சேவையை உருவாக்கி ஒருத்தருக்குக் கொடுத்து காசு சம்பாதிக்கிறோம். மென்பொருள் துறையில் என்ன நடக்குது, இவ்வளவு வளர்ச்சி என்று புரியவில்லை'

என்று நண்பர் ஒருவர் கேட்டார். வேதித் தொழில் நுட்பம் படித்து வளைகுடா நாடு ஒன்றில் பெரிய வேலையில் இருக்கிறார்.

நாமெல்லாம் கையால், விலங்குகளின்் ஆற்றலால் செய்து வந்த வேலைகளை இயந்திரங்களால் செய்ய ஆரம்பித்தது தொழில் புரட்சி போல, மனித மூளையில் நடந்து வந்த வேலைகளை கணினிகளால் செய்து கொள்வது தகவல் தொழில் நுட்பப் புரட்சி. நாம் இப்போது இருப்பது அந்தப் புரட்சியின் ஆரம்பக் கட்டங்களில்.

  • எங்கெல்லாம் திரும்பத் திரும்ப நடக்கும் கணக்குகள் போட வேண்டுமோ,
  • எங்கெல்லாம் தகவல்களைத் திரட்டி வைத்துக் கொண்டு பின்னர் பயன்படுத்த வேண்டியிருக்கிறதோ,
  • எங்கெல்லாம் புதிய கருவிகளில் சிந்திக்கும் வேலை செய்ய வடிவமைக்க வேண்டுமோ
அங்கெல்லாம் மனித சிந்தனையை முழுமையாகவோ, பகுதியாகவோ மாற்றிக் கொள்ள கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. கணினிகளை இயக்க தேவைப் படும் உயிர்ப் பொருள்தான் மென்பொருள்.

அதுக்கு ஏன் இவ்வளவு மதிப்பு?

ஒரு நிறுவன மேலாண்மையை எடுத்துக்குவோம். சின்னக் கடை என்று வைத்துக் கொள்வோம். மொத்தமாக நொறுக்குத் தீனிகள் வாங்கி சின்ன அளவில் பொதிந்து கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி. வேலை செய்ய ஆறு பேர், தின்பண்டங்களை வழங்குபவர்கள் 10-15 இடங்கள், வாடிக்கையாளராக சில்லறை விற்பனைக் கடைகளுக்கு வினியோகிக்கும் பணி செய்பவர்கள் 10-12 பேர்.

இந்தத் தொழிலில் கையாள வேண்டிய விபரங்கள்,
  • யாரிடமிருந்து என்ன விலைக்கு, எந்தப் பொருளை வாங்குகிறோம்,
  • அவருக்குப் பணம் கொடுக்க வேண்டிய கொடுத்த தகவல்கள்,
  • வேலை பார்ப்பவர்கள் தினமும் வந்த விபரம், விடுமுறை எடுத்த விபரம்,
  • போட்ட பொதிகளின் எண்ணிக்கை அளவு வாரியாக,
  • யார் எத்தனை பொதிகள் எடுத்துச் சென்றார்கள், யார் எவ்வளவு பணம் தர வேண்டும்,
  • கைவசம் விற்காமல் சரக்கு எவ்வளவு மீதி இருக்கிறது
என்று வரவு செலவு கணக்கு போட வேண்டும்.
  • எந்த விற்பனையாளரிடமிருந்து வாங்கிய பொருளில் குறைபாடுகள் தென்பட்டன,
  • எந்த பொருளுக்கு விற்பனை அதிகரிக்கிறது, எதற்குக் குறைகிறது.
  • புதிதாக என்ன விற்க ஆரம்பிக்க வேண்டும்
என்று எதிர்காலத் திட்டமிடல்களும் வேண்டும்.

கணினி காலத்துக்கு முன்பு இத்தகைய தொழிலில் உரிமையாளர் ஒரு சின்ன நோட்டுப் புத்தகத்தில் விபரங்களைத் தனக்குப் புரியும் படிக் குறித்து வைத்துக் கொள்ளலாம், பணம் வர வேண்டிய விபரம், கையிருப்பு இரண்டையும் பார்த்துக் கொண்டால் போதுமானது.

இன்னும் நுணுக்கமாக தகவல் சேகரிக்க, குறித்து வைக்க அதை அலசிப் பார்க்க ஆரம்பித்தால் அவருக்கு அதற்குத்தான் நேரம் சரியாக இருக்கும் அல்லது புதிதாக ஆள் போட வேண்டும். பெரிய நிறுவனங்களில் கணினிகள் வரும் முன்னரே இது போன்று தகவல் திரட்டுவதற்காக சிலரை வைத்திருப்பார்கள்.

ஆனாலும் மனித மூளையைப் பயன்படுத்தி சில வேலைகளை செய்வதில் அளவு இருக்கிறது. பெருவாரியான தகவல்களை சேமித்த வைத்தல், சிக்கலான கணக்குகளைப் போடுதல் போன்ற பணிகளுக்கு நமது மூளை அவ்வளவு திறமுடையது இல்லை. அந்த வேலைகளுக்கு மின்னணுக் கருவிகளைப் பயன்படுத்துவதுதான் கணினித் துறை.

நீராவி எந்திரத்தை மனித ஆற்றலுக்கும், கால்நடைகளின் உழைப்புக்கும் மாற்றாகப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு அது வரை முடியாத பலப் பல சாத்தியங்கள் தோன்றின. தரையில் வேகமாகப் போக இயந்திரங்களை பயன்படுத்தும் போது, கிடைத்த கூடுதல் வேகத்தைப் பயன்படுத்தி பறக்கும் விமானங்களை உருவாக்க முடிந்தது. இதே போல நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான சிறிதும் பெரிதுமான கண்டுபிடிப்புகள் தோன்றி மனித வாழ்க்கையை மாற்றி அமைத்தன.

இவ்வளவு இருந்தாலும் 'இயந்திரம் என்ன வேலை செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும்' என்று திட்டமிட்டு, தீர்மானித்து அதை இயக்குவது மனிதக் கைகளால்தான் நடந்தது.

அதே போல நமது மூளையால், முடிந்த வரை செய்து வந்த வேலையைக் கணினிகளுக்கு தள்ளி விட்டு வேகமாக துல்லியமாக முடிக்கும் வசதி உருவானவுடன் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் சாத்தியமாகின்றன.

எவ்வளவுதான் நடந்தாலும் கணினிகளைப் பயன்படுத்துவது, வடிவமைப்பது, இயக்குவது மனிதர்களாகத்தான் இருக்கிறது.

இப்படியாக வழக்கமான தொழில்களின் தகவல் திரட்டல், அலசுதல், பழைய கருவிகளை இயக்குதல், புதிய கண்டுபிடிப்புகளுக்கு உயிர் கொடுத்தல் என்று கணினிகள் பயன்படுத்தப்படும் எல்லா இடங்களிலும் மென்பொருட்கள் எனப்படும் கணினியின் உயிர்ப்பொருட்கள் பயன்படுகின்றன.

இத்தகைய மாற்றங்களில் பெரும் பகுதி அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில்தான் நடக்கின்றன.

நம்ம ஊரில் ரயில்வே துறையில் பயண முன்பதிவு, வங்கிகளில் கணினி மயமாக்கம், தொலை தொடர்பு நிறுவனங்களில் கணினி மயமாக்கம் என்று இருப்பது போல ஒவ்வொரு துறையிலும் கணினிகளைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்ட முன்னேறிய நாடுகளில்தான் மென்பொருள் தேவை பெரிய அளவில் இருக்கிறது.
  • மருத்துவர் ஒருவர் தான் பார்த்த நோயாளியைப் பற்றிய விபரங்களைச் சேமிக்க கணினிகள் பயன்படுத்தப் படுகின்றன.
  • தொழில் நிறுவனங்கள் தமது வாங்கல், விற்றல், சரக்கு கையிருப்பு, ஊழியர்களை கையாளுதல் போன்றவற்றுக்குக் கணினிப் பயன்பாடுகளைப் பயன்படுத்துகின்றன.
  • புதிது புதிதாகக் கண்டுபிடிப்புகள் தோன்றி அவற்றை இயக்க மென்பொருட்கள் தேவைப் படுகின்றன.
'நாம் மென்பொருள் துறையில் வல்லரசு, இந்தியாவை நம்பித்தான் மேலை நாடுகள் இயங்குகின்றன, இந்தியா ஒளிருகிறது' என்று பேசிக் கொள்வதில் முற்றிலும் உண்மை இல்லை.

மென் பொருள் பயன்படுத்துவது, அதன் மூலம் வாழ்க்கைத் தரம் உயர்வது, புதிய கண்டுபிடிப்புகள் நடப்பது எல்லாம் வேறு இடங்களில்தான். அதனால் அங்கு இருக்கும் வல்லுநர்கள் என்ன மென்பொருள் தேவை, அது எப்படி வடிவமைக்கப்பட வேண்டும், அதற்கு என்ன செலவு செய்யலாம் என்று திட்டமிட்டு அதை உருவாக்கும், பராமரிக்கும் பணியை நம் பக்கம் தள்ளி விடுகிறார்கள். அதைத்தான் நமது இளைஞர்கள் மாய்ந்து மாய்ந்து செய்கிறோம்.

இந்த நமது பணிக்கு ஆண்டுக்கு 50,000 கோடி வருமானம் கிடைக்கிறது என்றால் இந்தப் பணியைப் பயன்படுத்தும் சமூகங்களுக்கு அதை விட இரண்டு மடங்காவது நன்மை கிடைக்கும் அல்லவா?

மென்பொருள் என்பது ஒரு வீடு கட்டவது போல என்று வைத்துக் கொள்ளலாம்.

ஒருவருக்கு வசிக்க வீடு வேண்டும். அந்தக் குடும்பத்தில் எத்தனை பேர், யார் யார் என்ன செய்கிறார்கள், எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும், என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்று அலசி ஆராய்வது முதல் படி.

இரண்டாவதாக இந்தத் தேவையை எப்படி செயல் படுத்த முடியும் என்று படம் வரைவது, தொழில் நுட்பச் சாத்தியங்கள், செலவுகள் முதலியவற்றைக் கருத்தில் கொண்டு திட்டம் ஒன்றை உருவாக்குவது இரண்டாவது படி.

அதை வாடிக்கையாளர் ஏற்றுக் கொண்டால், திட்டத்தை எப்படிச் செயல்படுத்துவது என்று நடைமுறை வேலைகளைப் பார்ப்பது மூன்றாவது படி.

இந்த மூன்றாவது படி வேலைகளைத்தான் வெளிநாடுகளுக்கு மென்பொருள் சேவையை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் செய்கின்றன. ஜாவா, டாட் நெட் என்ற படித்து விட்டு வேலைக்குச் சேர்ந்தால் செய்யும் பணி கட்டிடம் கட்டும் வேலையில் செங்கல் அடுக்குவது, சாந்து குழைப்பது போன்ற வேலைகள்தான்.

அடுத்த படியில் உருவாக்கிய மென்பொருளைப் பராமரித்தல், பயன்படுத்தும் போது ஏற்படும் குறைகளை நிவர்த்தித்தல், பயனர் புதிதாகக் கேட்கும் மேம்பாடுகளை உருவாக்குதல் என்று முடிவில்லாமல் பணிகள் உள்ளன. வீட்டை தினமும் கூட்டிப் பெருக்க வைக்க நேரமும், ஆட்களும் இல்லாத நாடுகள் தகவல் தொழில் நுட்பப் புரட்சியின் சாத்தியங்களால் அந்த வேலைகளை வெளிநாடுகளில் செய்து வாங்கிக் கொள்ள முடிகிறது.

வேலை வாய்ப்பு என்று பரவலாகக் கிடைப்பது மேலே விளக்கியது போன்ற குறைந்த மதிப்பிலான பணிகள்தாம். அதனால் அவற்றைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. மென்பொருள் துறை இந்தியாவில் வளர்ந்ததால் பல்லாயிரக் கணக்கான பேருக்கு முன்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வருமானம் கிடைக்கிறது. அந்தப் பணம் வரியாக அரசாங்கத்துக்குப் போய் நலப் பணிகளில் பயன்படுகிறது. மென்பொருள் துறையில் பணிபுரிபவர்களின் குடும்பங்களை தளைக்கின்றன. தொழில் வாய்ப்புகள் பெருகுகின்றன.

ஆனால், இவை எல்லாவற்றையும் விடப் பல மடங்கு மதிப்புள்ள சாத்தியங்கள் மென்பொருள் துறையில் உள்ளன. கணினிகளை நம் ஊர் பணிகளுக்கு செயல்படுத்தும் பெரும் பணி காத்திருக்கிறது. அதைச் செய்ய பெருமளவிலான முயற்சிகள் நடப்பதில்லை. பெரிய நிறுவனங்கள் கூட அமெரிக்க ஐரோப்பிய பணிகளை மட்டுமே எடுப்பது என்று கொள்கை முடிவுடன் இயங்குகின்றன.

வேலை வாய்ப்பு என்று சொன்னால், அத்தகைய நிறுவனங்களில் திறமையான, படித்த, பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலைக்குப் பஞ்சமே இல்லை.

ஆனால் பெரும் புதையல் காத்திருப்பது உள்ளூர் பொருளாதாரத்தில். பேருந்தில் போகும் போது சீட்டு கொடுத்த பிறகு ஒரு சின்ன அட்டையில் கணக்குகளை எழுதிக் கொள்கிறார் நடத்துனர், பெங்களூரூவில் இருப்பது போல ஒரு குட்டிக் கணினியைக் கையில் வைத்துக் கொண்டு, அதில் விபரங்களை ஒத்தி சீட்டு அச்செடுத்துக் கொடுத்தால் விபரங்கள் தானாகவே பதிவாகி பணி முடிந்ததும் மையக் கணினியில் ஒப்படைத்து விடலாம். நடத்துனரின் பணி பல மடங்கு எளிதாகி விடும்.

எந்த தடத்தில் எந்த நேரத்தில் எந்த பருவத்தில் கூட்டம் அதிகமாக வருகிறது என்று ஆராய்ந்து பார்க்க, அதிக முயற்சி இல்லாமல், கணினியில் பதிக்கப்பட்ட விபரங்களைப் பயன்படுத்தி அறிக்கை உருவாக்கிக் கொள்ளலாம். அதற்கு சில நிமிடங்கள்தான் பிடிக்கும். அதைப் பொறுத்து முடிவுகளை எடுத்து பயணிகளுக்கு சேவையை மேம்படுத்தலாம்.

வளர்ந்த நாடுகளில் இந்த வேலைகளைச் செய்ய போதுமான பணியாளர்கள் கிடைக்காததால் அவை இந்தியா போன்ற நாடுகளில் செய்து பெறப்படுகின்றன.

Friday, July 13, 2007

நாணய மாற்று வீதமும் ஏற்றுமதியும்

டாலரின் மதிப்பு 4 ரூபாய் வரை குறைந்ததால் ஏற்றுமதித் துறையில் பணப் புழக்கம் நெரிந்துள்ளது. மாதம் 10,000,000 டாலர் (நாலரைக் கோடி ரூபாய்) ஏற்றுமதி செய்து கொண்டுருக்கும் ஒரு நிறுவனத்தில் மாதத்துக்கு 40 லட்சம் ரூபாய் பண வரத்து குறைந்து விடும். பல இடங்களில் செலவைக் குறைப்பார்கள்.

இந்த நெரிசலில் பல நிறுவனங்கள் நொடித்துப் போக வாய்ப்பு இருக்கிறது. என்னதான் நல்ல பொருள்/சேவை வழங்கினாலும், எதிர்கால சாத்தியங்கள் இருந்தாலும் நிகழ்காலத்தில் பணப் புழக்கம் நின்று போனால் உயிர் நின்று விடும். உடலில் ரத்த ஓட்டம் போல அது. வர வேண்டிய பணம் என்று எவ்வளவு இருந்தாலும் கையில் இருக்கும் பணமாக மாறாத வரை பலனில்லை.

பெரிய நிறுவனங்கள் இந்த மாற்று வீதக் குறைவிலிருந்து தப்பிக்க ஏற்பாடுகள் செய்திருந்ததால் இப்போதைய விளைவுகளைத் தவிர்த்தாலும். அடுத்த பருவத்துக்கான கணக்கிடுதலில் உதைக்கப் போகிறது.

உற்பத்தித் துறையைப் பொறுத்த வரை வலுவான ரூபாய் ஆறு மாத நோக்கில் ஏற்றுமதி திறனை அதிகரிக்கத்தான் செய்யும்.
  • இறக்குமதி இடுபொருட்களின் விலை குறைதல்,
  • பொதுவான உள்நாட்டு விலை வாசி குறைதல்,
  • வாடிக்கையாளரிடம் விலை மாற்றம் கோருதல்
என்று நான்கைந்து மாதங்களில் திறமையான தொழில் முனைவோர், முன்பை விட வலிமையாகி விடுவார்கள். இடைப்பட்ட மாதங்களில் பல்லைக் கடித்துக் கொண்டு இடுப்புப் பட்டையை இறுக்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.

1990களில் ரூபாயின் மதிப்பு குறையும் போது ஒவ்வொரு முறையும் இது ஏற்றுமதி வணிகத்துக்கு நல்லது என்று சொல்லிக் கொண்டாலும். அந்தத் தாக்கம் சில மாதங்களிலேயே சமன் படுத்தப்பட்டு ஏற்றுமதி வியாபாரமும் தத்தளிக்கத்தான் செய்தது. மலிவான விலை என்ற ஒரே வலிமையில் செய்யும் தொழில்கள் மறைந்தாலும், ஒட்டு மொத்தமான திறமையுடன் செயல்படும் உற்பத்தித் தொழில்கள் வளப்பட வலிமையான நாணயம் உதவுகிறது என்றே படுகிறது.

Wednesday, July 4, 2007

தரவுத் தள வடிவமைப்பு வழிகாட்டிகள் - நிவதி (ERP) 15

(கீழே கொடுத்துள்ள விபரங்கள் உண்மையும் கற்பனையும் கலந்தவை. சம்பந்தப்பட்டவர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் பதிவுகளை எடுத்துக்காட்டாக தருகிறேன்)


பதிவர் எண் பெயர் ஊர் நாடு பதிவு எண் பதிவு முகவரி பதிவு பெயர்இணைந்த நாள்
68 டோண்டு ராகவன் சென்னை இந்தியா 1325 http://dondu.blogspot.com Dondu's Dos and Donts 2004/10/05
75 சிறில் அலெக்ஸ் போஸ்டன் அமெரிக்க ஐக்கிய நாடுகள் 1332 http://theyn.blogspot.com தேன் 2005/01/25
92 அருள்குமார் சென்னை இந்தியா 1346 http://arul76.blogspot.com உணர்வின் பதிவுகள்2005/06/01
1932 http://chennapattinam.blogspot.com சென்னைப் பட்டணம் 2006/07/01
106 பாலபாரதி சென்னை இந்தியா 1359 http://balabharathi.wordpress.com விடுபட்டவை 2006/01/01
1932 http://chennapattinam.blogspot.com சென்னைப் பட்டணம் 2006/07/01


இப்படி தகவல் இருக்கும் அமைப்பு பதிவுகள் என்ற பட்டி. அதில் ஒவ்வொரு வரிசையிலும் பதிவர்-எண், பதிவர்-பெயர், ஊர், நாடு, பதிவு-எண், பதிவு-முகவரி, பதிவு-பெயர், இணைந்த-நாள் என்று விபரங்கள் இருக்கின்றன.

புதிதாக ஒருவர் பதிவைச் சேர்க்கும் போது
328 உண்மைத்தமிழன் சென்னை இந்தியா 2948 http://truetamilians.blogspot.com உண்மைத் தமிழன் 2007/01/25
என்று சேரும்.
  1. இப்படி விபரங்களைச் சேமித்துக் கொள்வதால் என்னென்னக் குறைபாடுகள்?
  2. முந்தைய இடுகையில் சொன்ன நோக்கங்களில் என்னென்ன தவறும்?
நிவதி = நிறுவன வளம் திட்டமிடல்

தரவுத் தள வடிவமைப்பு - நிவதி (ERP) 14

தரவுத் தளம் என்றால் தகவல்களை சேர்த்து வைக்கும் முறை.
  • நம் சட்டைப் பை குறிப்பேட்டில் தொலைபேசி எண்களைக் குறித்து வைத்திருப்பதும் தரவுத்தளம்தான். அதிலிருந்து தகவலைப் பெறுவது, புதிய தகவலைச் சேர்ப்பது ஒவ்வொன்றுக்கும் வழிமுறைகள் வைத்திருப்போம்.
  • விரிதாள் (spreadsheet) மென்பொருளில் தரவுத் தளம் இருக்கலாம்.
  • அல்லது ஒரு உரைக் கோப்பாகக் (text file) கூட வைத்திருக்கலாம்.
பெரிய அளவில் சிக்கலான விபரங்களைச் சேமிக்க அட்டிசார் தரவுத் தள மேலாண்மை பயன்பாடுகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. (Relational Database Management Systems). அட்டிகளில் (Relations/Tables)) விபரங்களைச் சேமிப்பதால் அப்படிப் பெயர்.
  • அட்டி என்பதில் வரிசை (tuples/row) வரிசையாகப் பல தகவல் தொகுப்புகள் இருக்கும்.
  • ஒவ்வொரு வரிசையிலும் பல விபரங்கள் (attributes/columns) இருக்கும்.
    எடுத்துக்காட்டாக ஒரு வலைப் பதிவரைக் குறித்த விபரங்கள் ஒரு வரிசையில் இருக்கும். வரிசை எண், பெயர், பதிவு முகவரி, பதிவின் பெயர் என்று விபரங்கள் இருக்கலாம்.
  • அடுத்தடுத்த வரிசைகளில் மேலும் பிற பதிவர்களின் விபரங்கள் இருக்கும்.
இப்படி அட்டி சார் தரவுத் தளங்களைப் பயன்படுத்துவதன் நோக்கங்கள்;
  1. சேமிக்கத் தேவைப்படும் இட அளவு குறைவாக இருக்க வேண்டும். ஒரே விவரத்தைத் திரும்பத் திரும்ப சேமித்து இடத்தை வீணாக்கக் கூடாது. (space saving)
  2. ஏதாவது விபரத்தை புதுப்பிக்கும் போது எல்லா இடங்களிலும் அந்த விபரம் மாறி விட வேண்டும். (avoiding updation anamoly)
  3. ஏதாவது வரிசையை தேவையில்லை என்று நீக்கும் போது, தேவைப்படும் மற்ற விபரங்களை நீக்க வேண்டிய நிலை இருக்கக் கூடாது. (avoiding deletion anamoly)
  4. ஏதாவது விபரம் சேமிக்கும் போது தேவை இல்லாத மற்ற விபரங்களையும் சேமிக்கும் கட்டாயம் இருக்கக் கூடாது (avoiding insertion anamoly)

Monday, July 2, 2007

ஆசிட் - நிவதி (ERP) 13

வங்கிக் கணக்குகளின் தரவுத் தளம் ஒன்றை எடுத்துக் கொள்வோம்.

பாலபாரதியின் கணக்கிலிருந்து 1000 ரூபாய்கள் லக்கிலுக்கின் கணக்குக்கு மாற்ற வேண்டும்.
  • முதல் படியாக பாலபாரதியின் கணக்கிலிருந்து 1000 ரூபாய் குறைக்கிறோம்.
  • தொடர்ந்து லக்கிலுக்கின் கணக்கில் 1000 ரூபாய் சேர்க்கிறோம்.
இந்த இரண்டும் நடந்தால்தான் பரிமாற்றம் முழுமை (Atomicity) அடையும்.

கணினியில் இந்த பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று மின்தடைப் பட்டு கணினி நின்று போகிறது. அந்த நேரத்தில் இரண்டு படிகளும் நடந்திருந்தால்தான் பரிமாறலைக் கணக்கில் காட்ட வேண்டும். பாலபாரதியின் கணக்கில் குறைக்காமலேயே லக்கி லுக்கின் கணக்கில் சேர்த்து விடவோ அங்கு குறைத்து விட்டு இங்கு கூட்டாமல் இருந்து விடவோ கூடாது.

இந்த முழுமை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வெவ்வேறு உத்திகளைக் கையாளுகிறார்கள்.

இரண்டாவதாக ஒழுங்கு

'ஒருவரது கணக்கில் கையிருப்பு 100 ரூபாய்க்குக் கீழ் போகக் கூடாது' என்பது போன்ற விதிகள் அமைக்கும் வசதியும், அந்த விதிகள் மாறாமல் இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளும் ஒழுங்கும் இருக்க வேண்டும்.

500 ரூபாய் கையிருப்பு இருக்கும் கணக்கிலிருந்து 475 ரூபாய் மாற்ற முயன்றால் அதை மறுத்து விடும் ஒழுக்கம் தரவுத் தள மென்பொருளுக்கு வேண்டும்.

மூன்றாவதாக தனிமை
ஒரே நேரத்தில் இரண்டு பரிமாறல்கள் நடந்தால் ஒன்று செய்யும் மாறுதல்கள் மற்றதைப் பாதிக்கக் கூடாது.

நான்காவதாக உயிர்மை
மாற்றங்கள் தரவுத் தளத்தில் சேமிக்கப்பட்டு விட்ட பிறகு வெளிப் புறக் காரணங்களால் அது பாதிக்கப்பட்டு மறைந்து போய் விடக் கூடாது.

(இந்த நான்கையும் இணைத்து தமிழில் பொருத்தமான குறுஞ்சொல் ஒன்றை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். தேவைப்பட்டால் தமிழ்ப் பெயர்களை மாற்றவும் செய்யலாம்.)

தரவுத் தளம் - குறிப்புகள் - நிவதி (ERP) 12

தென்றல் சொல்வது போல தரவுத்தளம் சரியானதைத் தேர்ந்தெடுத்தால் பாதிக் கிணறு தாண்டியது போல். ஒரு நிவதி மென்பொருள் வெற்றிக்கு தரவுத்தளத்தின் பங்கு மிக முக்கியமானது.

பயன்பாட்டுக்குக் கிடைக்கும் தரவுத்தளங்களில் (relational databased) சில கீழே (முழுப் பட்டியல்):

வணிக முறைப் பயன்பாடுகள்:
  1. ஐபிஎம் நிறுவனத்தின் DB2
  2. ஆரக்கிள் நிறுவனத்தின் ஆரக்கிள் (Oracle Database)
  3. மைக்ரோசாப்டு நிறுவனத்தின் எஸ்கியூஎல் சர்வர் (MS SQL Server)
திறவூற்று மென்பொருட்கள்
  1. மை எஸ்கியூஎல் (MySQL)
  2. போஸ்ட்க்ரெஸ் கியூஎல் (PostgreSQL)
எல்லா தரவுத்தளங்களும் SQL 92, SQL 99 போன்ற தகுதரங்களைப் பின்பற்றுகின்றன. அதனால். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டால், பல தரவுத் தளங்களிலும் இயங்கும்படி மென்பொருளை உருவாக்கிக் கொள்ளலாம்.

நடைமுறையில் ஒவ்வொரு தரவுத்தள மென் பொருளும் தனிப்பட்ட சில சிறப்புகளை உருவாக்கியுள்ளன. அத்தகைய சிறப்புக் கூறுகளைப் பயன்படுத்தினால் மற்ற தரவுத்தளங்களில் பயன்படுத்த மென் பொருளில் பல மாறுதல்கள் செய்ய வேண்டியிருக்கும்.

ஒரு தரவுத் தளத்துக்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளை ACID என்று குறுக்கிக் குறிப்பிடுகிறார்கள். முழுமை (Atomicity), Consistency (ஒழுங்கு), Isolation (தனிமை), Durability (உயிர்மை).

(இந்த நான்கையும் இணைத்து தமிழில் பொருத்தமான குறுஞ்சொல் ஒன்றை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். தேவைப்பட்டால் தமிழ்ப் பெயர்களை மாற்றவும் செய்யலாம்.)