Thursday, July 19, 2007

சில குறிப்புகள் - மென்பொருள் துறையில் தொழில் வேலை வாய்ப்புகள்

'அப்படி என்னதான் செய்யறீங்க? இத்தனை ஆயிரம் கோடி ஏற்றுமதி என்கிறாங்க, இத்தனை லட்சம் படிச்ச பசங்க வேலை பார்க்கிறாங்க. இன்னும் பல ஆண்டுகளுக்கு இது வளர்ந்து கொண்டே போகும் என்கிறாங்க. மென் பொருள்னா என்னங்க?'

'பொதுவா ஒரு பொருளை, சேவையை உருவாக்கி ஒருத்தருக்குக் கொடுத்து காசு சம்பாதிக்கிறோம். மென்பொருள் துறையில் என்ன நடக்குது, இவ்வளவு வளர்ச்சி என்று புரியவில்லை'

என்று நண்பர் ஒருவர் கேட்டார். வேதித் தொழில் நுட்பம் படித்து வளைகுடா நாடு ஒன்றில் பெரிய வேலையில் இருக்கிறார்.

நாமெல்லாம் கையால், விலங்குகளின்் ஆற்றலால் செய்து வந்த வேலைகளை இயந்திரங்களால் செய்ய ஆரம்பித்தது தொழில் புரட்சி போல, மனித மூளையில் நடந்து வந்த வேலைகளை கணினிகளால் செய்து கொள்வது தகவல் தொழில் நுட்பப் புரட்சி. நாம் இப்போது இருப்பது அந்தப் புரட்சியின் ஆரம்பக் கட்டங்களில்.

 • எங்கெல்லாம் திரும்பத் திரும்ப நடக்கும் கணக்குகள் போட வேண்டுமோ,
 • எங்கெல்லாம் தகவல்களைத் திரட்டி வைத்துக் கொண்டு பின்னர் பயன்படுத்த வேண்டியிருக்கிறதோ,
 • எங்கெல்லாம் புதிய கருவிகளில் சிந்திக்கும் வேலை செய்ய வடிவமைக்க வேண்டுமோ
அங்கெல்லாம் மனித சிந்தனையை முழுமையாகவோ, பகுதியாகவோ மாற்றிக் கொள்ள கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. கணினிகளை இயக்க தேவைப் படும் உயிர்ப் பொருள்தான் மென்பொருள்.

அதுக்கு ஏன் இவ்வளவு மதிப்பு?

ஒரு நிறுவன மேலாண்மையை எடுத்துக்குவோம். சின்னக் கடை என்று வைத்துக் கொள்வோம். மொத்தமாக நொறுக்குத் தீனிகள் வாங்கி சின்ன அளவில் பொதிந்து கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி. வேலை செய்ய ஆறு பேர், தின்பண்டங்களை வழங்குபவர்கள் 10-15 இடங்கள், வாடிக்கையாளராக சில்லறை விற்பனைக் கடைகளுக்கு வினியோகிக்கும் பணி செய்பவர்கள் 10-12 பேர்.

இந்தத் தொழிலில் கையாள வேண்டிய விபரங்கள்,
 • யாரிடமிருந்து என்ன விலைக்கு, எந்தப் பொருளை வாங்குகிறோம்,
 • அவருக்குப் பணம் கொடுக்க வேண்டிய கொடுத்த தகவல்கள்,
 • வேலை பார்ப்பவர்கள் தினமும் வந்த விபரம், விடுமுறை எடுத்த விபரம்,
 • போட்ட பொதிகளின் எண்ணிக்கை அளவு வாரியாக,
 • யார் எத்தனை பொதிகள் எடுத்துச் சென்றார்கள், யார் எவ்வளவு பணம் தர வேண்டும்,
 • கைவசம் விற்காமல் சரக்கு எவ்வளவு மீதி இருக்கிறது
என்று வரவு செலவு கணக்கு போட வேண்டும்.
 • எந்த விற்பனையாளரிடமிருந்து வாங்கிய பொருளில் குறைபாடுகள் தென்பட்டன,
 • எந்த பொருளுக்கு விற்பனை அதிகரிக்கிறது, எதற்குக் குறைகிறது.
 • புதிதாக என்ன விற்க ஆரம்பிக்க வேண்டும்
என்று எதிர்காலத் திட்டமிடல்களும் வேண்டும்.

கணினி காலத்துக்கு முன்பு இத்தகைய தொழிலில் உரிமையாளர் ஒரு சின்ன நோட்டுப் புத்தகத்தில் விபரங்களைத் தனக்குப் புரியும் படிக் குறித்து வைத்துக் கொள்ளலாம், பணம் வர வேண்டிய விபரம், கையிருப்பு இரண்டையும் பார்த்துக் கொண்டால் போதுமானது.

இன்னும் நுணுக்கமாக தகவல் சேகரிக்க, குறித்து வைக்க அதை அலசிப் பார்க்க ஆரம்பித்தால் அவருக்கு அதற்குத்தான் நேரம் சரியாக இருக்கும் அல்லது புதிதாக ஆள் போட வேண்டும். பெரிய நிறுவனங்களில் கணினிகள் வரும் முன்னரே இது போன்று தகவல் திரட்டுவதற்காக சிலரை வைத்திருப்பார்கள்.

ஆனாலும் மனித மூளையைப் பயன்படுத்தி சில வேலைகளை செய்வதில் அளவு இருக்கிறது. பெருவாரியான தகவல்களை சேமித்த வைத்தல், சிக்கலான கணக்குகளைப் போடுதல் போன்ற பணிகளுக்கு நமது மூளை அவ்வளவு திறமுடையது இல்லை. அந்த வேலைகளுக்கு மின்னணுக் கருவிகளைப் பயன்படுத்துவதுதான் கணினித் துறை.

நீராவி எந்திரத்தை மனித ஆற்றலுக்கும், கால்நடைகளின் உழைப்புக்கும் மாற்றாகப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு அது வரை முடியாத பலப் பல சாத்தியங்கள் தோன்றின. தரையில் வேகமாகப் போக இயந்திரங்களை பயன்படுத்தும் போது, கிடைத்த கூடுதல் வேகத்தைப் பயன்படுத்தி பறக்கும் விமானங்களை உருவாக்க முடிந்தது. இதே போல நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான சிறிதும் பெரிதுமான கண்டுபிடிப்புகள் தோன்றி மனித வாழ்க்கையை மாற்றி அமைத்தன.

இவ்வளவு இருந்தாலும் 'இயந்திரம் என்ன வேலை செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும்' என்று திட்டமிட்டு, தீர்மானித்து அதை இயக்குவது மனிதக் கைகளால்தான் நடந்தது.

அதே போல நமது மூளையால், முடிந்த வரை செய்து வந்த வேலையைக் கணினிகளுக்கு தள்ளி விட்டு வேகமாக துல்லியமாக முடிக்கும் வசதி உருவானவுடன் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் சாத்தியமாகின்றன.

எவ்வளவுதான் நடந்தாலும் கணினிகளைப் பயன்படுத்துவது, வடிவமைப்பது, இயக்குவது மனிதர்களாகத்தான் இருக்கிறது.

இப்படியாக வழக்கமான தொழில்களின் தகவல் திரட்டல், அலசுதல், பழைய கருவிகளை இயக்குதல், புதிய கண்டுபிடிப்புகளுக்கு உயிர் கொடுத்தல் என்று கணினிகள் பயன்படுத்தப்படும் எல்லா இடங்களிலும் மென்பொருட்கள் எனப்படும் கணினியின் உயிர்ப்பொருட்கள் பயன்படுகின்றன.

இத்தகைய மாற்றங்களில் பெரும் பகுதி அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில்தான் நடக்கின்றன.

நம்ம ஊரில் ரயில்வே துறையில் பயண முன்பதிவு, வங்கிகளில் கணினி மயமாக்கம், தொலை தொடர்பு நிறுவனங்களில் கணினி மயமாக்கம் என்று இருப்பது போல ஒவ்வொரு துறையிலும் கணினிகளைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்ட முன்னேறிய நாடுகளில்தான் மென்பொருள் தேவை பெரிய அளவில் இருக்கிறது.
 • மருத்துவர் ஒருவர் தான் பார்த்த நோயாளியைப் பற்றிய விபரங்களைச் சேமிக்க கணினிகள் பயன்படுத்தப் படுகின்றன.
 • தொழில் நிறுவனங்கள் தமது வாங்கல், விற்றல், சரக்கு கையிருப்பு, ஊழியர்களை கையாளுதல் போன்றவற்றுக்குக் கணினிப் பயன்பாடுகளைப் பயன்படுத்துகின்றன.
 • புதிது புதிதாகக் கண்டுபிடிப்புகள் தோன்றி அவற்றை இயக்க மென்பொருட்கள் தேவைப் படுகின்றன.
'நாம் மென்பொருள் துறையில் வல்லரசு, இந்தியாவை நம்பித்தான் மேலை நாடுகள் இயங்குகின்றன, இந்தியா ஒளிருகிறது' என்று பேசிக் கொள்வதில் முற்றிலும் உண்மை இல்லை.

மென் பொருள் பயன்படுத்துவது, அதன் மூலம் வாழ்க்கைத் தரம் உயர்வது, புதிய கண்டுபிடிப்புகள் நடப்பது எல்லாம் வேறு இடங்களில்தான். அதனால் அங்கு இருக்கும் வல்லுநர்கள் என்ன மென்பொருள் தேவை, அது எப்படி வடிவமைக்கப்பட வேண்டும், அதற்கு என்ன செலவு செய்யலாம் என்று திட்டமிட்டு அதை உருவாக்கும், பராமரிக்கும் பணியை நம் பக்கம் தள்ளி விடுகிறார்கள். அதைத்தான் நமது இளைஞர்கள் மாய்ந்து மாய்ந்து செய்கிறோம்.

இந்த நமது பணிக்கு ஆண்டுக்கு 50,000 கோடி வருமானம் கிடைக்கிறது என்றால் இந்தப் பணியைப் பயன்படுத்தும் சமூகங்களுக்கு அதை விட இரண்டு மடங்காவது நன்மை கிடைக்கும் அல்லவா?

மென்பொருள் என்பது ஒரு வீடு கட்டவது போல என்று வைத்துக் கொள்ளலாம்.

ஒருவருக்கு வசிக்க வீடு வேண்டும். அந்தக் குடும்பத்தில் எத்தனை பேர், யார் யார் என்ன செய்கிறார்கள், எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும், என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்று அலசி ஆராய்வது முதல் படி.

இரண்டாவதாக இந்தத் தேவையை எப்படி செயல் படுத்த முடியும் என்று படம் வரைவது, தொழில் நுட்பச் சாத்தியங்கள், செலவுகள் முதலியவற்றைக் கருத்தில் கொண்டு திட்டம் ஒன்றை உருவாக்குவது இரண்டாவது படி.

அதை வாடிக்கையாளர் ஏற்றுக் கொண்டால், திட்டத்தை எப்படிச் செயல்படுத்துவது என்று நடைமுறை வேலைகளைப் பார்ப்பது மூன்றாவது படி.

இந்த மூன்றாவது படி வேலைகளைத்தான் வெளிநாடுகளுக்கு மென்பொருள் சேவையை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் செய்கின்றன. ஜாவா, டாட் நெட் என்ற படித்து விட்டு வேலைக்குச் சேர்ந்தால் செய்யும் பணி கட்டிடம் கட்டும் வேலையில் செங்கல் அடுக்குவது, சாந்து குழைப்பது போன்ற வேலைகள்தான்.

அடுத்த படியில் உருவாக்கிய மென்பொருளைப் பராமரித்தல், பயன்படுத்தும் போது ஏற்படும் குறைகளை நிவர்த்தித்தல், பயனர் புதிதாகக் கேட்கும் மேம்பாடுகளை உருவாக்குதல் என்று முடிவில்லாமல் பணிகள் உள்ளன. வீட்டை தினமும் கூட்டிப் பெருக்க வைக்க நேரமும், ஆட்களும் இல்லாத நாடுகள் தகவல் தொழில் நுட்பப் புரட்சியின் சாத்தியங்களால் அந்த வேலைகளை வெளிநாடுகளில் செய்து வாங்கிக் கொள்ள முடிகிறது.

வேலை வாய்ப்பு என்று பரவலாகக் கிடைப்பது மேலே விளக்கியது போன்ற குறைந்த மதிப்பிலான பணிகள்தாம். அதனால் அவற்றைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. மென்பொருள் துறை இந்தியாவில் வளர்ந்ததால் பல்லாயிரக் கணக்கான பேருக்கு முன்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வருமானம் கிடைக்கிறது. அந்தப் பணம் வரியாக அரசாங்கத்துக்குப் போய் நலப் பணிகளில் பயன்படுகிறது. மென்பொருள் துறையில் பணிபுரிபவர்களின் குடும்பங்களை தளைக்கின்றன. தொழில் வாய்ப்புகள் பெருகுகின்றன.

ஆனால், இவை எல்லாவற்றையும் விடப் பல மடங்கு மதிப்புள்ள சாத்தியங்கள் மென்பொருள் துறையில் உள்ளன. கணினிகளை நம் ஊர் பணிகளுக்கு செயல்படுத்தும் பெரும் பணி காத்திருக்கிறது. அதைச் செய்ய பெருமளவிலான முயற்சிகள் நடப்பதில்லை. பெரிய நிறுவனங்கள் கூட அமெரிக்க ஐரோப்பிய பணிகளை மட்டுமே எடுப்பது என்று கொள்கை முடிவுடன் இயங்குகின்றன.

வேலை வாய்ப்பு என்று சொன்னால், அத்தகைய நிறுவனங்களில் திறமையான, படித்த, பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலைக்குப் பஞ்சமே இல்லை.

ஆனால் பெரும் புதையல் காத்திருப்பது உள்ளூர் பொருளாதாரத்தில். பேருந்தில் போகும் போது சீட்டு கொடுத்த பிறகு ஒரு சின்ன அட்டையில் கணக்குகளை எழுதிக் கொள்கிறார் நடத்துனர், பெங்களூரூவில் இருப்பது போல ஒரு குட்டிக் கணினியைக் கையில் வைத்துக் கொண்டு, அதில் விபரங்களை ஒத்தி சீட்டு அச்செடுத்துக் கொடுத்தால் விபரங்கள் தானாகவே பதிவாகி பணி முடிந்ததும் மையக் கணினியில் ஒப்படைத்து விடலாம். நடத்துனரின் பணி பல மடங்கு எளிதாகி விடும்.

எந்த தடத்தில் எந்த நேரத்தில் எந்த பருவத்தில் கூட்டம் அதிகமாக வருகிறது என்று ஆராய்ந்து பார்க்க, அதிக முயற்சி இல்லாமல், கணினியில் பதிக்கப்பட்ட விபரங்களைப் பயன்படுத்தி அறிக்கை உருவாக்கிக் கொள்ளலாம். அதற்கு சில நிமிடங்கள்தான் பிடிக்கும். அதைப் பொறுத்து முடிவுகளை எடுத்து பயணிகளுக்கு சேவையை மேம்படுத்தலாம்.

வளர்ந்த நாடுகளில் இந்த வேலைகளைச் செய்ய போதுமான பணியாளர்கள் கிடைக்காததால் அவை இந்தியா போன்ற நாடுகளில் செய்து பெறப்படுகின்றன.

3 comments:

வடுவூர் குமார் said...

இன்று நடந்த தொலைக்காட்சியின் பேட்டியின் சாராம்சம்?
நன்றாக இருக்கு.
இவ்வளவு தானா? இன்னும் இருக்கா?

dondu(#11168674346665545885) said...

இம்மாதிரி டயல்-இன் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது இரண்டாவது முறை. இரண்டாவது உங்கள் நிகழ்ச்சி. எவ்வளவு முயன்றும் லைன் கிடைக்கவில்லை. அது பற்றி அப்புறம் பேசுகிறேன்.

முதல் அனுபவம் சன் மியூசிக் சேனலில் கோலங்கள் மெகாசீரியல் இயக்குனர் திருச்செல்வத்துடன் (தொல்காப்பியன்) பேசுவது. முதலில் டயல் செய்ததுமே லைன் கிடைத்து பிறகு என்னை காத்திருப்பில் வைத்தனர். ரெகார்டட் செய்தி வந்து கொண்டேயிருந்தது. நான் பாட்டுக்கு அதை காதருகே வைத்துக் கொண்டு யதார்த்தமாக நிகழ்ச்சியை பார்க்க முடிந்தது. எனக்கு முந்தைய அழைப்பாளர் முறை முடிந்ததுமே எனக்கு நிகழ்ச்சி லைவாக தொலைபேசியில் கேட்க ஆரம்பித்தது. எனது முறை என்பதை உணர்ந்து உஷாராக முடிந்தது. அவரைக் கேள்வியும் கேட்டேன். பதிவும் போட்டேன்.

ஆனால் ஜெயா டிவியின் ஏற்பாட்டில் பளீரென குறைபாடுகள் தெரிந்தன. மூன்று செல்பேசி நம்பர்களைத் தந்தனர். எதை டயல் செய்தாலும் பிசி சிக்னல்தான். இருந்தாலும் விடாது 20 நிமிடங்கள் முயற்சி செய்தும் பலனில்லை. ஒரு லேண்ட்லைனைக் கொடுத்து அதில் 4 அல்லது 5 கால்களாவது காத்திருப்பில் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மற்றப்படி உங்கள் ப்ரொக்ராம் நன்றாக இருந்தது. முழுக்கப் பார்க்க இயலவில்லை. அது ஒரு குறைதான் எனக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மா சிவகுமார் said...

//இவ்வளவு தானா? இன்னும் இருக்கா?//

இது காலையில் நிகழ்ச்சிக்கு முன்பு எழுதிய குறிப்பு. நானாக பேசியது இதிலிருந்துதான். மற்றபடி தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன. அவற்றுக்கு பதில் அளிப்பதில்தான் நேரம் போனது.

/ரமற்றப்படி உங்கள் ப்ரொக்ராம் நன்றாக இருந்தது.//

நன்றி சார்.

//முழுக்கப் பார்க்க இயலவில்லை. அது ஒரு குறைதான் எனக்கு.//

உங்கள் கேள்வியும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் :-)

அன்புடன்,

மா சிவகுமார்