Wednesday, February 27, 2008

முதலீடும் முன்னேற்றமும்

அன்னியச்செலாவணி நிலை பாதகமாகி விட்டிருக்கிறது. தோல் துறையில் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. எல்லோரும் தமது தொழிலைக் குறுக்கிக் கொள்கிறார்கள். நாம் என்ன செய்ய வேண்டும்.

கடந்த அக்டோபர் முதல் எல்லோருக்கும் சம்பள விகிதங்களை அதிகப்படுத்தி மென்பொருள் துறையில் நிலவும் விகிதங்களுக்கு இணையாக ஆக்கி விட வேண்டும் என்று பல மாதங்களாகவே திட்டமிட்டு அறிவித்திருந்தோம். அக்டோபர் முதல் மாதா மாதம் மொத்தச் செலவுகள் இரண்டு மடங்காகி விட்டது.

புறச்சூழல் பாதகமாக ஆகும் போது செய்ய வேண்டிய நடவடிக்கைகளுக்கு எதிர் மாறாக செய்திருக்கிறோம்.

நிறுவனம் ஆரம்பிக்கும் போதும் சரி, யாரையும் வேலைக்கு எடுக்கும் போதும் சரி, முடிவுகளின் அடிப்படை நமது நிறுவனத்தின் குறிக்கோளை அடையும் திசையில் நம்மைச் செலுத்துகிறதா என்பதாக மட்டுமே இருந்து வந்தது. ஒரு டாலருக்கு 45 ரூபாய்கள் என்ற கணக்குப் போட்டு அதனால் நமக்கு இவ்வளவு வாய்ப்புகள் கிடைக்கும் என்று செய்யவில்லை.

டாலருக்கு 30 ரூபாய்கள் என்ற நிலை வந்தாலும் தோல் துறை இருக்கத்தான் செய்யும், அதில் பல நிறுவனங்கள் வெளியேறி விட்டாலும், தம்மை வலுப்படுத்திக் கொண்டவர்கள் வளர்ந்திருப்பார்கள். அப்படி வலுப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் நம்ம ஊரில் யாரும் மிஞ்சா விட்டால், மற்ற ஊர்களிலோ, நாடுகளிலோ இருப்பார்கள்.

அப்படி வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், புதிய நுட்பங்களில் முதலீடு செய்வார்கள். அப்போது நமக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அப்படிப் பட்டவர்களை அணுகித் தேடும் முயற்சிகள் அதிகமாக்கிக் கொள்ள வேண்டும்.

கும்ப்ளே சொல்வது போல டாசில் ஜெயிப்பது, ஆடுகளத்தின் தன்மை, பருவநிலை போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு நமது இலக்குகளை நிர்ணயிக்கக் கூடாது. இலக்குகளையும் தயாரிப்புகளையும் செய்து விட்டு போகும் பாதையில் சந்திக்கும் தடைகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

ஆடு மலை ஏறும் போது அதன் குறிக்கோள் மலையுச்சி. இடையில் மழை பெய்தால் தேவைப்பட்டால் கொஞ்சம் ஒதுங்கிக் கொள்ளலாம், அல்லது நனைந்து கொண்டே போய் விடலாம், பாதை கரடு முரடானால், பல்லைக் கடித்துக் கொண்டு ஏற வேண்டும், இதமான காற்று வீசினால் சிரமமில்லாமல் தொடரலாம். என்ன நடந்தாலும் மேலே ஏறுவதும் நிற்கப் போவதில்லை போய்ச் சேர வேண்டிய குறிக்கோளையும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை.

சூழ்நிலைகள் பாதகமாக இருக்கும் போது நம்முடைய முயற்சிகள் இன்னும் தீவிரமாக வேண்டும். இன்னும் திறமையாக உழைக்க வேண்டியிருக்கும். குலப் பெரியவர்கள் எல்லாம் எதிர்த் தரப்பில் அணி வகுத்து விட்டார்கள். சல்லியன் எதிர்த்தரப்புக்குப் போய் விட்டான். போரை விட்டு விட்டு ஓடி விட முடியுமா. 7 அக்குரோணி படையை 11 அக்குரோணி படையுடன் மோத விடத்தான் வேண்டும்.

வருவது வரட்டும் என்று முன்னேற வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும் புறச் சூழலுக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி பெறுவது என்று இறுதி நோக்கம் மட்டும் மாறாது, மாறக் கூடாது.


புறச்சூழல் மாறும் போது எத்தகைய முடிவுகளை எடுக்கலாம். ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்? சம்பளங்களைக் குறைத்தல்? குழுவில் ஒருவரைச் சேர்த்து உருவாக்குவதற்கு ஒரு ஆண்டு வரை ஆகிறது, அந்த ஓராண்டு நோக்கில் பார்த்தால் வெளிப் புறச் சூழல் மாறி விட்டது என்று சிலரை இழக்க முன்வருவது மதியுடமையாகாது என்பது என்னுடைய கருத்து.

Sunday, February 24, 2008

யாருக்கு மூலதனம்?

மூலதனத்தின் சக்தி வெறும் கையால் கிணறு தோண்டுவதற்கும், மண்வெட்டி ஒன்றைப் பயன்படுத்துவதற்கும், மின்சார துளை போடும் கருவியைப் பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாடுதான். முதல் முறையில் மூலதனம் எதுவுமே இல்லை, இரண்டாவது முறையில் 200 ரூபாய் மூலதனம், மூன்றாவது முறையில் 20000 ரூபாய் மூலதனம்.

மூலதனம் சேரும் போது ஒருவரது உழைப்பின் வெளிப்பாடு பல மடங்கு அதிகரித்து விடுகிறது. முதல் முறையில் ஆறு மாதங்கள் கையால் தோண்டியும் கிணறு தோண்டி முடிக்க முடியாமலே போய் விடலாம். இரண்டாவது முறையில் ஓரிரு மாதங்களில் தண்ணீர் பார்த்து விடலாம். மூன்றாவது முறையில் சில நாட்களிலேயே வேலை முடிந்து விடும்.

மூன்றாவது முறையில் வேலை செய்யும் தொழிலாளியின் உற்பத்தி திறன் அதிகமாவதால் வருமானமும் அதிகமாகி விடும். மூலதனம் உழைப்புடன் சேருவதால் ஏற்படும் பலனில் மூலதனத்தின் விலையைக் கொடுத்த பிறகு கூட தொழிலாளியின் வருமானம் பல மடங்கு அதிகமாகும் சாத்தியங்கள் இருக்கின்றன.

ஒரு சமூகத்தின் சேமிப்பை மூலதனமாக பயன்படுத்த, எடுத்துக் கொள்ள முடியும் ஒருவர்தான் மிகவும் சக்தி வாய்ந்தவர். அனில் அம்பானி சந்தையில் மூலதனம் திரட்ட வந்ததும் பன்னிரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பணம் திரட்ட முடிவது அவரது கையைப் பலப்படுத்துகிறது. அந்தப் பணத்தை வைத்து அவர் நாட்டின் விளைபொருட்களை, மற்றவர்களின் உழைப்பை தனக்குத் தேவையான திசையில் திருப்பி விட முடிகிறது.

'நாம் சேர்த்த எல்லா வளமும் இந்த சமூகத்திலிருந்துதான் வந்தது, அதனால் நம்மிடம் சேரும் வளங்களை சமூகத்துக்கே திருப்பிக் கொண்டு போக வேண்டும்' என்பது டாடா குழுமத்தின் அடிப்படை கொள்கையாக இருந்து வருகிறதாம். இந்த சமூக அமைப்பும், சந்தைகளும் சட்ட திட்டங்களும் இல்லா விட்டால், ஒரு தனிநபரது கடின உழைப்பு அவரது வயிற்றை நிரப்பக் கூட போதாத அளவில்தான் இருந்து வரும்.

அதற்கு மேல் சம்பாதிக்க முடியும் பணம் அனைத்துமே சமூகக் கூட்டமைப்பின் மூலம் கிடைப்பதுதான். இந்தக் கூட்டமைப்பின் பலன்களை கூட்டமைப்புக்கே பயன்படும்படி செய்ய வேண்டும் என்று உருவாவதுதான் பொதுவுடமை தத்துவங்கள்.

Thursday, February 21, 2008

பணம் கொடுக்கும் முறைகள் -1

வாங்கல் விற்றலில் பணம் கைமாறும் முறைகள் பல வகைப்படும். வாங்குபவர், விற்பவர்களில் யாரின் கை ஓங்கி இருக்கிறது, யாரின் நம்பகத்தன்மை அதிகம் என்பதைப் பொறுத்து அவை மாறுபடும்.

பரிமாற்றம் நேருக்கு நேர் நடந்தால் சிக்கல்கள் குறைவு. வாங்குபவர் பொருள் அல்லது சேவையை பார்த்து பரிசோதித்த பிறகு பணத்தைக் கொடுத்தால் போதும்.
  • பொருள் கண்ணை விட்டு மறையும் முன்னால் பணம் பைக்குள் வந்து விடும் என்ற நிம்மதி விற்பவருக்கு.
  • பொருளைப் பார்த்து உறுதிப் படுத்திக் கொண்ட பிறகு பணம் கொடுத்தால் போதும் என்ற வசதி வாங்குபவருக்கு.
ஊர் விட்டு ஊர் விற்கும் போது நாடு விட்டு நாடு போகும் ஏற்றுமதி வணிகத்தில் பொருளும் பணமும் எப்படி கைமாற வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

விற்பவருக்கு ஆதாயம் அதிகமான முறையில் ஆரம்பித்து வாங்குபவருக்கு அதிக ஆதாயம் இருக்கும் முறைகள் வரை பார்க்கலாம்.
  1. முழுத் தொகையும் முன்பணமாக அனுப்பிய பிறகு பொருள் அல்லது சேவை அனுப்பி வைக்கப்படும்
    பெரிய நிறுவனம் ஒன்றிலிருந்து சந்தைப் போட்டி அதிகம் இல்லாத பொருள் அல்லது சேவை வாங்க ஒரு புது வாடிக்கையாளர் அணுகினால் 'பணத்தைக் கட்டி விட்டுப் பொருளை எடுத்துக் கொண்டு போ' என்று சொல்லி விடலாம்.
    இணையத்தின் மூலம் பொருட்கள் வாங்கும் போது கடனட்டை மூலம் பணம் விற்கும் நிறுவனத்தின் கணக்குக்குப் போய்ச் சேர்ந்த பிறகுதான் பொருளை அனுப்பவே ஆரம்பிப்பார்கள்.
    முன்பணமாக வரைவோலை வாங்கி அனுப்பினால்தான் புத்தகங்கள் அனுப்பி வைப்பேன் என்று பதிப்பகங்கள் இருக்கின்றன.

  2. 'பொருளைத் தயாரித்து பொதிந்து வண்டியில் ஏற்றி அனுப்பி விடுகிறேன் (லாரியில், ரயிலில், கப்பலில், வானூர்தியில்). போக்குவரத்து நிறுவனம் கொடுத்த சீட்டைக் காண்பித்தால்தான் பொருளை விடுவிக்க முடியும். வங்கி மூலம் அந்தச் சீட்டை அனுப்பி, காசைக் கொடுத்து விட்டுப் பொருளை விடுவித்துக் கொள்ளுங்கள்' என்பது அடுத்த நிலை.
    இதில் வாங்குபவருக்கு கொஞ்சம் பாதுகாப்பு அதிகம். மூன்றாவது நிறுவனம் ஒன்றின் கையில் பொதியப்பட்ட பொருட்கள் இருக்கின்றன. பணம் கை விட்டுப் போய் விட்டாலும் ஏதோ ஒன்று கிடைக்கத்தான் போகிறது.
    தபால் மூலம் பொருளை அனுப்பி விட்டு தபால்காரரிடம் காசைக் கொடுத்து விடுமாறு நடக்கும் விபிபி முறையும் இது போலத்தான்.

  3. மேலே சொன்னதில் ஒரு பெரிய ஓட்டை, பொதியுள் என்ன இருக்கிறது என்று தெரிய முடியாமல் இருப்பது. விற்பனையாளர் டிரான்ஸிஸ்டர் வானொலி என்று சொல்லி அனுப்பியதைத் திறந்து பார்த்து உள்ளே செங்கற்கள் இருந்தால் வாங்கியவரின் பணம் போனது போனதாகி விடும்.
    அதனால் வாங்குபவர் தனது வங்கி மூலம் உத்தரவாதக் கடிதம் ஒன்றை அளித்துக் குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றினால் பொருளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று விற்பவருக்கு நம்பிக்கை அளிக்கலாம்.

    வங்கியிலிருந்து பணத்தைப் பெறுவதற்கு கடன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் எல்லா ஆவண ஆதாரங்களையும் காட்ட வேண்டும். அப்படிக் காட்டி விட்டால் வாங்குபவரின் வங்கி பணத்தைக் கொடுத்து விடும்.

    ஏற்றுமதியாகும் நாட்டில் இருக்கும் ஒரு தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும், பொதி விபரங்கள் விளக்கமாக தரப்பட வேண்டும் என்று பல நிபந்தனைகளை விதித்து பணம் கைவிட்டுப் போகும் முன் கப்பலில் ஏற்றி விடப்பட்ட பொருள் தாம் எதிர்பார்ப்பது போன்ற தரம் மற்றும் அளவுடன் இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு ஆவணம் கப்பலில் அல்லது வானூர்தியில், அல்லது லாரியில் ஏற்றி அனுப்பிய ஆவணம்.

    இப்படி விற்பவர் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்றி அவற்றுக்கான ஆவணங்களை காண்பித்து விட்டால் வங்கிப் பணத்தைக் கொடுத்தே தீர வேண்டும்.

    'பொருளும் போய்ப் பணமும் வரா விட்டால் என்ன செய்வது? பொருளை அவ்வளவு செலவில் வெளி நாட்டுக்கு அனுப்பிய பிறகு வாங்குபவர் பணத்தைக் கொடுத்துப் பொருளை எடுத்துக் கொள்ளா விட்டால் என்ன செய்வது' போன்ற விற்பவரின் கேள்விகளுக்கும் பொருத்தமான விடை கடன் கடிதங்கள்.

  4. நான்காவதாக கடன் கடிதத்தில் பொருளை எடுத்த பிறகு குறிப்பிட்ட நாட்கள் கழித்து வங்கி பணம் கொடுப்பதாக உறுதி தரும் முறை. இதில் ஆவணங்களை நிபந்தனைப் படி தயாரித்து சமர்ப்பித்த 30 அல்லது 60 நாட்களுக்குப் பிறகு வாங்கியவரின் வங்கி பணத்தை விற்பனையாளருக்கு கொடுத்து விடுவதாக உறுதி அளிக்கிறது.

  5. அடுத்ததாக எந்த கடிதமும் இல்லாமல், போக்கு வரத்து நிறுவனத்திடமிருந்து பொருளை விடுவித்துக் கொண்டு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு பணத்தை வாங்கியவரே செலுத்தி விடுதல். இதில் விற்பவருக்கு பணம் கிடைக்காமல் போகும் அபாயம் மிக அதிகம். வாங்குவது பேர் பெற்ற நிறுவனமாக இருந்தாலோ, இரண்டு நிறுவனங்களுக்கிடையே நீண்ட நல்லுறவு நிலவும் போதோ இத்தகைய பணம் கொடுக்கும் முறையைப் பின்பற்றிக் கொள்ளலாம்.
என்னதான் நிபந்தனைகள் விதித்தாலும் வாடிக்கையாளருடனான நல்லுறவுதான் பணத்தை வாங்க முடிகிற உறுதியான வழி. மற்ற வழிகள் எல்லாம் ஒரு பேருக்கு, திருப்தியளிக்கத்தான்.

Wednesday, February 20, 2008

பணம் என்னடா பணம் - 2

எல்லோருக்கும் தேவைப்படும், எந்த நேரத்திலும் எளிதில் வாங்கவோ விற்கவோ முடியும் ஒரு பொருளை இடைப் பொருளாக வைத்துக் கொண்டால், மேலே சொன்ன இரண்டு இக்கட்டுகளையும் களைந்து பரிமாற்றங்களை எளிதாக்கி விடலாமே என்று யாருக்கோ தோன்றியிருக்கும்.

எதை வைத்துக் கொள்ளலாம்? சீக்கிரம் கெட்டுப் போகாத பொருளாக இருக்க வேண்டும். அலகுகளாக எண்ணிப் பிரிக்கும் படி இருக்க வேண்டும். கையில் எடுத்துப் போகும் படி இருக்க வேண்டும்.

ஆடு மாடுகள், தானியங்கள், பதப்படுத்தப்பட்ட தோல், ஏன் கிளிஞ்சல்கள் கூட நாணயங்களாகப் பயன்படுத்தப்பட்டனவாம்.

ஆடு பரிமாற்ற செலாவணியாக பயன்படுத்தப்பட்டால் என்ன நடந்திருக்கும்?

விளைச்சல் முடிந்து விவசாயியின் கையில் நெல் இருக்கிறது. நெல் தேவைப்படும் உணவு விடுதிக்கு நெல்லைக் கொடுத்து 50 ஆடுகளை வாங்கிக் கொள்கிறார்.

நெசவாளரிடம் போய் துணிகள் வாங்கிக் கொண்டு 10 ஆடுகளை விலையாகக் கொடுத்து விடுகிறார்.

நெசவாளர் குடும்பத்துக்குத் தேவையான தச்சு வேலை செய்பவருக்கு 1 ஆடு கிடைக்கிறது.
தச்சர் சாப்பிட போது அந்த ஆட்டைக் கொடுத்து சாப்பாடு பெறுகிறார்.

இதே போல் தானியங்கள், தோல்கள், கிளிஞ்சல்கள் என்று வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் ஒவ்வொன்றிலும் குளறுபடிகள்.

தானியத்தை பயன்படுத்தினால் அளப்பதற்கு கொள்ளளவிகள் தேவை. அவற்றின் தரம் அளவு நிர்ணயிப்பதில் சிக்கல்கள் வரும்.

ஆடு செத்துப் போனால் என்ன ஆகும்? அதனால் வயதான ஆட்டை பணமாக ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள்.

இதற்கும் ஒரு தீர்வு வந்தது.

பணம் என்னடா பணம்? - 1

பணம் என்றால் என்ன?

நமது உழைப்பை இன்னொருவருக்கு பலனளிக்கும்படி கொடுத்து அதற்கு பதிலாக அவரது உழைப்பை நமக்கு பலனளிக்கும்படி வாங்கிக் கொள்வதற்கான இடைப் பொருள்தான் பணம்.

எனக்கு முடி வெட்டிக் கொள்ள வேண்டும், அதை செய்யும் கலைஞரின் உழைப்புக்கு மாறாக நான் அவருக்கு எனது உழைப்பை வழங்க வேண்டும். என்ன செய்யலாம்?

அவரது கடைக்கு நல்ல விளம்பரமாக அமையும்படி ஒரு வாசகத்தை உருவாக்கி, கணினியில் உள்ளிட்டு அழகாக அச்சடித்துக் கொடுக்கலாம். அதை கடைக்கு முன்பு கட்டிக் கொண்டால் இன்னும் பலர் கடைக்கு வருவதால் அவரது வருமானம் அதிகமாகலாம்.

இந்த முறைக்குப் பெயர் பண்ட மாற்று.

எனக்குத் தேவையான சேவை அல்லது பொருளைத் தேடிப் போகும் போது அதை கொடுக்க கூடியவரைக் கண்டு கொண்டால் மட்டும் போதாது. அவரது பணிக்கு மாறாக அவருக்குத் தேவையானதைக் கொடுக்க என்னிடம் ஏதாவது இருக்க வேண்டும். ஏற்கனவே கடையில் நல்ல விளம்பரப் பலகைகள் இருந்தால் எனது கணினித் திறனின் சேவை அவருக்குத் தேவைப்படாமல் போய் விடும்.

இரண்டாவதாக, 'ஒரு முடி வெட்டுக்கு இவ்வளவு வேலை பார்க்க வேண்டுமா' என்று நான் நினைக்கலாம். 'ஒரு முடி வெட்டுக்கு நான்கு தட்டிகள் தர வேண்டும்' என்று கடைக்காரர் சொல்லலாம். இப்படி பேரம் பேசுவதும் சிக்கலாகிப் போய் விடும். 'இதே போன்ற தட்டியை போன வாரம் ஒரு பெரிய உணவு விடுதிக்குச் செய்து கொடுத்து மாற்றாக அவர்களது விடுதி அறையில் நான்கு நாட்கள் தங்கும் வசதியைப் பெற்றதுடன்' ஒப்பிட்டால் இந்த முடி வெட்டுக்கு ஒரு தட்டி என்பது நமக்கு ஏற்புடையதாக இல்லாமல் போகலாம்.

பண்ட மாற்று முறை மட்டும் இருந்தால் இது போல பொருளின், சேவையின் மதிப்பு வாங்குபவர்களின் தேவை, விற்பவரின் விலை மட்டும் சார்ந்திராமல், மாற்றுப் பொருளுக்கான விலை, செலவு என்று நான்கு விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

இப்படித்தான் ஆரம்ப காலத்தில் மனிதர்கள் பொருட்களை, சேவைகளைப் பரிமாறிக் கொண்டிருக்கும் போது உணர்ந்திருப்பார்கள்.

Tuesday, February 19, 2008

அமெரிக்காவுக்கு சளி பிடிச்சா....

அமெரிக்கப் பொருளாதாரத்தின் தடுமாற்றங்களால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்?
  1. அமெரிக்காவில் வட்டி வீதங்கள் ஒரே மாதத்துக்குள் 1.25% குறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் நிலவும் வங்கி வட்டி வீதங்கள் மாற்றமின்றி உயர்ந்த நிலையிலேயே இருக்கின்றன. இதனால் தமது சேமிப்பை வங்கியில் போட்டு வைக்கும் வெளிநாட்டு இந்தியர்கள் மற்றும் இந்தியாவுக்குள் முதலீடு செய்ய வாய்ப்புகள் உள்ள பிற முதலீட்டாளர்கள் டாலர்களை ரூபாயாக மாற்றி இந்தியாவுக்கு அனுப்ப முயற்சிப்பார்கள்.

    இதனால் டாலரின் மதிப்பு குறையும்படியான தாக்கம் ஏற்படும்.

  2. அமெரிக்க நிதி நிறுவனங்களின் வீட்டுக் கடன்கள் வாராக் கடன்களாக மாறுவதும், வீடுகளின் விலைச் சரிவை ஒட்டி அவர்களின் சொத்து மதிப்புகள் குறைவதும் நடக்கப் போகின்றன. அடிப்படை இல்லாமல் உயர் நிலையில் இருந்த மதிப்புகளைச் சார்ந்து திரட்டிய பணத்தை இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்து வைத்திருந்த நிதி நிறுவனங்கள் பங்குகளை விற்றுப் பணமாக மாற்றும் கட்டாயம் ஏற்படும்.

    அந்தப் பணத்தை டாலராக மாற்றி எடுத்துச் செல்வதால், மூலதனச் சந்தையில் டாலரின் மதிப்பு அதிகரிக்கும்படியான தாக்கம் இருக்கும்.

  3. அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதம் குறைந்து, தொழில் நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை குறைக்க ஆரம்பிக்கின்றன. வீடுகளில் முதலீடு செய்திருப்பவர்களின் கடன் வாங்கும் திறனும் குறைந்து விடும். இதனால் குடும்பங்களின் வாங்கும் திறன் குறைந்து அமெரிக்க பொருளாதாரத்தில் விற்பனைகள் குறையும். இதனால், அமெரிக்கா மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதும் குறைந்து போகும்.

    இதனால் வர்த்தகக் கணக்கில் டாலரின் மதிப்பு அதிகமாகும்படியான தாக்கம் இருக்கும்.

  4. உள்நாட்டில் தேவைக் குறைவை ஈடு கட்ட, சரிந்து வரும் டாலரின் மதிப்பினால் கிடைக்கும் விலை ஆதாயத்தைப் பயன்படுத்தி, அமெரிக்க நிறுவனங்கள் வெளி நாட்டில் தமது பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதால் அமெரிக்காவின் ஏற்றுமதி அதிகரிக்கும்.

    இதனாலும் டாலரின் மதிப்பு அதிகமாகும்.

  5. அமெரிக்காவில் செலவினங்கள் குறைந்து, மலிவான விலையில் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். வேலைச் சந்தையில் சம்பள வீதங்கள் குறையும். அலுவலக வாடகைகள் குறையும். மூலப்பொருட்கள் விலை குறையும்.

    இதனால் அமெரிக்க ஏற்றுமதி பெருகும்.
மொத்தத்தில், சில மாதங்கள் நோக்கில் டாலரின் மதிப்பு குறையும்படியாகவும் (36 ரூபாய்கள்), ஒரு ஆண்டுக்குள் 40 ரூபாய் அளவுக்குப் போவதாகவும் இருக்கலாம்.

இந்த கணிப்பு அமெரிக்கப் பொருளாதாரக் காரணிகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டது. இதே போன்று இந்தியப் பொருளாதரத்தின் வளர்ச்சி வீதம், வங்கி வட்டி வீதங்கள், ஏற்றுமதி/இறக்குமதி, உள்நாட்டு தேவை இவற்றைப் பொறுத்து இந்திய ரூபாயின் மதிப்பின் மீதான தாக்கங்களும் செலாவணி மதிப்பைத் தீர்மானிக்கும்.

இதனால் தகவல் தொழில் நுட்பத் துறையில் என்னென்ன மாறுதல்கள் நடக்கும்?

அமெரிக்க நிறுவனங்கள் செலவினங்களைக் குறைக்க முயற்சிக்கும் நோக்கில் தகவல் தொழில் நுட்பத்தை இன்னும் அதிகமாக பயன்படுத்த முயற்சிக்கலாம். ஆனால் தனி நபர்களைப் பொறுத்த வரை மின்னணு சாதனங்களை வாங்குவது குறைந்து இது சார்ந்த தேவைகள் குறையும்.

அப்படி அதிகமாகும் தகவல் தொழில் நுட்பச் சேவை தேவைகளை வழங்குவதற்கு இந்தியாவில் செலவு குறைவு என்பது மாறியிருக்கும். அமெரிக்காவில் தற்போது செய்து கொண்டிருக்கும் வேலைகளை இழக்கும், தொழில் நுட்ப தொழிலாளர்களின் சம்பளங்கள் குறைந்து திட்டப்பணிகளை இந்தியாவுக்கு அனுப்பிச் செய்யாமல் அமெரிக்காவிலேயே செய்து கொள்வது அதிகரிக்கும்.
  • இதனால், இந்தியாவில் இருந்து இயங்கும் வெளிச் சேவை நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மற்றும் அளவுகள் குறையும்.
  • அமெரிக்காவில் செய்யப் போகும் திட்டப்பணிகளுக்குத் தேவைப்படும் இந்திய தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் அமெரிக்காவுக்குப் போக வேண்டிய தேவைகள் அதிகமாகும்.
  • இந்தியச் சந்தையில் தகவல் தொழில் நுட்பக் கருவிகள் சேவைகள் விற்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அது தொடர்பான விற்பனைத் துறை மேலாளர்கள், சேவைத் துறை மேலாளர்கள் போன்ற பணிகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாகும்.
மொத்தத்தில், ஆரம்ப நிலை பணிகள், அதிகம் திறனை தேவைப்படாத பணிகளுக்கான வேலைகள் இந்தியாவில் குறைந்து விடும். உயர் திறமை பணிகளுக்கான வல்லுனர்கள் அமெரிக்கா போக அதிக வாய்ப்புகள் ஏற்படும்.

இதை எப்படி எதிர் கொள்ளலாம்?

சிறிய நடுத்தர அளவு மென்பொருள் நிறுவனங்கள், உள்நாட்டுச் சந்தைக்குத் தேவையான மென்பொருள் சேவைகளில் கவனத்தைத் திருப்ப வேண்டும்.

கல்லூரி மாணவர்கள் தகவல் தொழில் நுட்பம், மென்பொருள் உருவாக்கம் தொடர்பான திறமைகளுடன் ஏதாவது ஒரு குறிப்பிட்ட துறையில் (கணக்கியல், உற்பத்தி, விற்பனை, மேலாண்மை) புலமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Wednesday, February 13, 2008

படைப்பாளிகள்

நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 10 செகண்டுகளுக்குள் ஓடி முடித்து ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை வெல்லும் வீரர் அந்த பத்து விநாடிகள் மட்டும்தான் உழைத்தாரா?

பதினைந்து முதல் இருபது ஆண்டுகள் தினமும் மனம் குவித்து பயிற்சி செய்து, பொருத்தமான உணவு உண்டு, தூக்கத்தை மட்டுப்படுத்தி, மற்ற கேளிக்கைகளில் நேரம் செலவழிப்பதைக் குறைத்து செய்த முயற்சிகளின் விளைவுதான் இந்த பத்து விநாடிகளின் சாதனை.

ஒவ்வொரு துறையிலும் அது போன்ற உழைப்பும் சாதகமும் இருந்தால்தான் உலகை வெல்ல முடியும். ஒரு
ப சிதம்பரத்தையோ, மு கருணாநிதியையோ எளிதாக குறை கூறி விட்டுப் போய் விடுகிறோம். அவர்களுக்கு இருக்கும் பொறுப்பு எவ்வளவு பெரியது. பங்குச்சந்தையில் குறியீட்டு எண் மதிப்பு குறைந்து விட்டால் நிதியமைச்சருக்கு ஏன் பதறுகிறது என்று கேட்கிறோம்?

இன்ஃபோசிஸ் நிறுவனம் பெருமைப்படுத்தப்பட் கூலி வேலைதான் செய்கிறது என்று இடது கையால் ஒதுக்கித் தள்ள முயல்கிறோம். எத்தனை ஆண்டுகள் உழைப்பும் கருத்தும் கவனமும் உருவாக்கிய நிறுவனம் இத்தனை பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி உலகுக்கே சேவைப் பொருளாதாரம் என்று நம் ஊரில் வாய்ப்புகளை உருவாக்க முடிந்தது.

ஒரு அம்பானி/டாடா உருவாக்கிய நிறுவனம் போல, பில்கேட்சின் மைக்ரோசாப்டு போல, லினஸ் தோர்வால்ட்சின் லினக்சு போல உலகை உலுக்கும் ஆக்கங்களை எப்போது படைக்கப் போகிறோம்

இதற்குத் தேவை தனி மனித முயற்சியும் உழைப்பும், கூட்டாக சமூகத்தின் ஒருங்கிணைப்பும்.

ஜாம்ஷெட்பூர் என்ற ஒரு நகரையே உருவாக்கிக் காட்டிய டாடா போன்ற கனவு நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது. உலகத் தரத்தில் கட்ட வேண்டும் என்று உறுதியுடன் இருந்து, அரசு சட்டங்கள் வரும் முன்னரே தொழிலாளர்களை நிறுவனத்தின் சொத்துக்களாக மதித்து சம்பள விகிதம், பணி நேரம் போன்றவற்றை ஒழுங்கு படுத்திய டாடா போன்ற பெரிய படைப்பாளிகள் நம்மில் எப்போது வரப்போகிறார்கள்!

அதற்கு என்னென்ன தேவை?

Saturday, February 9, 2008

சேமிப்பும் முதலீடும்

ஒரு சமூகத்தில் சேமிப்பும் முதலீடும் சமமாக இருக்க வேண்டும். ஒருவரின் சேமிப்பு இன்னொருவருக்கு மூலதனமாக பயன்படும்.

பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர் அதில் 8000 ரூபாய் செலவழிக்கிறார். செலவழித்து அவர் வாங்கிய பொருள், சேவை செய்தவர்கள் கையில் அந்தப் பணம் போகிறது. அவர்கள் வேறு வழியில் செலவழிக்கிறார்கள். இப்படி சுற்றி வந்து முதல் ஆள் 10000 ரூபாய் ஈட்டிய பணியில் விளைந்த பொருள்/சேவையும் வாங்கப்பட்டு விடும்.

எல்லாமே மனித உழைப்புதான். 10000 ரூபாய் ஒருவருக்கு சம்பளம் என்றால் அவரது பணியால் விளைந்த மதிப்பு 10000 ரூபாய்கள். தன் உழைப்பை பணமாக மாற்றிக் கொண்டு விட்டார். அந்த உழைப்பைச் செலவாணியாகப் பயன்படுத்தி சமூகத்தின் பிற உறுப்பினர்களின் உழைப்பை தனக்குப் பிடித்தவாறு திருப்பி விடும் உரிமையைப் பெறுகிறார்.

கொஞ்சம் இருங்க, இவரே 8000ம்தானே செலவழித்தார், மீதி இரண்டாயிரம் ரூபாய் என்னவாகும்? அந்த மதிப்பிலான பொருள்/சேவை தேங்கி விடாதா?

விடும்தான், ஒரு பழக்கம் இல்லாவிட்டால். சேமிப்பவர் தனது சேமிப்பை வங்கியில், அல்லது பங்குச் சந்தையில் அல்லது சொத்து வாங்க போடுகிறார். அவரைப் பொறுத்த வரை வருமானத்தில் ஒரு பகுதியை உடனடி நுகர்வுக்குப் பயன்படுத்தாமல் எதிர்காலத்துக்கு ஒதுக்கி வைத்து விட்டார்.

அந்தச் சேமிப்புப் பணத்தை கடனாக இன்னொருவர் பெற்று முதலீடு செய்கிறார்். அதை எதிர்கால உற்பத்தியை பெருக்கும் மூலதனமாகப் பயன்படுத்தினால், வளர்ச்சியும் கிடைக்கும்.

அதாவது, முழுதாக உடனடி நுகர்வுக்குப் பயன்படுத்தாமல் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து விட்டால் அது சேமிப்பு. அந்தச் சேமிப்பை இன்னொருவர் எடுத்து மூலதனமாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

எந்தத் துறையில் முதலீடு நடக்க வேண்டும்? யார் மூலம் முதலீடு நடக்க வேண்டும்? என்ற கேள்விக்கு விடை காண்பது ஒரு அடிப்படையான சிக்கல்.

சோவியத் போன்ற திட்டமிடும் பொருளாதாரங்களில் சில அறிவாளிகளைக் கொண்ட குழு கூடி முடிவெடுக்கும். இரும்பு உற்பத்தித் துறைக்கு இவ்வளவு மூலதனம், வானூர்தி உற்பத்தி துறைக்கு இவ்வளவு மூலதனம், கல்லூரி கட்ட இவ்வளவு மூலதனம் என்று முழு பொருளாதாரத்துக்கும் இந்தச் சின்னக் குழு திட்டமிட்டு விட வேண்டும்.

நடைமுறையில் சாத்தியமில்லாத நடைமுறை அது, அந்தப் பொருளாதாரங்கள் மண்ணைக் கவ்வியதன் ஒரு முக்கிய காரணம் முழுமையாக திட்டமிடல் மூலமே பொருளாதாரத்தை நடத்திச் செல்ல முயன்றது.

சந்தைப் பொருளாதாரத்தில், சேமிப்பாக சேரும் பணத்தை மூலதனமாகப் பெறுவதற்கு போட்டி நடக்கும். 'எனக்கு இவ்வளவு பணம் தந்தால் ஒரு ஆண்டு கழித்து 10% அதிகமாக திரும்பத் தருகிறேன்' என்று ஒருவர் சொல்வார். அவருக்கு தான் முதலீடு செய்யப் போகும் தொழில் வளர்ந்து பலன் தரும் என்று நம்பிக்கை. இன்னொருவர் 12% தர தயாராக இருக்கலாம். யார் அதிக விலை (வட்டி) கொடுக்க முன் வருகிறார்களோ அவர்களுக்கு மூலதனம் கிடைக்கும்.

வட்டி வீதத்தை விட முதலீடு திரட்டுபவரின் திறமையையும் தொழில் நிலவரத்தையும் பார்க்க வேண்டும். ஒரு ஆண்டில் இரட்டித்துத் தருகிறேன் என்று சொல்லி விட்டு ஆறே மாதத்தில் ஆளே காணாமல் போய் விடுகிறவரை விட ஒரு ஆண்டுக்குப் பிறகு 10% கூட்டித் தருவதாகச் சொல்லி விட்டு அசலையும் வட்டியுடன் திருப்பி தருபவருக்குத்தான் கொடுப்போம்.

மாடு வாங்குவதற்கு நண்பரிடம் கடன் வாங்கும் விவசாயி செய்யும் முதலீடு ஆரம்பித்து, வங்கிக் கடன்கள், கடன் பத்திரச் சந்தைகள், பங்குச் சந்தைகள், தனியார் பங்கு முதலீடு, டெரிவேட்டிவ் எனப்படும் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டு முறைகள் என்று எல்லாவற்றின் அடிப்படையும் 'சேமிப்பு யாருக்குப் போய்ச் சேர வேண்டும், எந்த விலையில் போய்ச் சேர வேண்டும்' என்று தீர்மானிப்பதுதான்.

Friday, February 8, 2008

மூலதனத்தின் மகிமை

வீட்டில் ஒரு 10 அடி ஆழமும் 4 அடிக்கு 4 அடி சுற்றளவும் உடைய பள்ளம் தோண்ட வேண்டும். வேலைக்கு ஒருவரைக் கூப்பிடுகிறோம். 'இதைத் தோண்டிக் கொடுத்திடுங்க. மொத்தம் 400 ரூபாய் கொடுத்து விடுகிறோம்' என்று பேசுகிறோம்.

தோண்ட வருபவர் எப்படி வேலை செய்வார்?

எந்த கருவியும் இல்லாமல் வெறும் கையினால் தோண்ட முடியுமா? அப்படியே முடிந்தால் அந்த நானூறு ரூபாய் வேலை எத்தனை நாட்களில் முடியும்? ஒரு வாரத்துக்கு மேல் ஆகலாம்.

ஒரே ஒரு மண்வெட்டி, 200 ரூபாய் விலையிலானது கொண்டு வந்தால் அதே வேலையை ஒன்றரை நாட்களில் முடித்து விடலாம். அந்த மண்வெட்டியை அடுத்த வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். வெறுங்கையில் வேலை செய்வதை விட மூன்று மடங்கு அதிகம் சம்பாதிக்கலாம்.

இதே சமயம் ஒரு தானியங்கி இயந்திரத்தைப் பயன்படுத்தினால் எவ்வளவு நேரம் ஆகும். 10000 ரூபாய்கள் விலை கொடுத்து மின் விசையால் இயங்கி மண்ணைப் பறித்து அதையே குவித்து வெளியே போட்டு விடும் இயந்திரம் கொண்டு வேலை செய்தால் அதே தொழிலாளி 2 மணி நேரத்தில் வேலையை முடித்து 400 ரூபாய்கள் வாங்கிக் கொண்டு போய் விடுவார். ஒரு நாளைக்கு 1600 ரூபாய்கள் சம்பாதிக்கலாம். வாரத்துக்கு 6 நாட்கள் உழைத்தால் 10000 ரூபாய்கள்.

இதுதான் மூலதனத்தின் மகிமை. உடலுழைப்புடன் மூலதனம் சேரும் போது உற்பத்தித் திறன் அதிகமாகி தொழிலாளியின் வருமானம் பல மடங்காக உயரும்.

கணினியைப் பயன்படுத்தி, இணையத்தின் மூலம் தகவல் பரிமாறிக் கொள்வதும் அது போன்று மூலதனம் மூலம் திறனை அதிகமாக்கிக் கொள்வதுதான்.

ஒரு தனிமனிதர் அல்லது நிறுவனம் மூலதனம் இல்லாமல் செயல்பட்டால், திறன் குறைந்த கருவிகளை மட்டுமே பயன்படுத்த முடியும். அதில் வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கைத் தரம் குறைவாகவே இருக்கும்

மூலதனம் எப்படி உருவாகிறது, எங்கு பயன்படுகிறது?

மூலதனத்தின் அடிப்படை சேமிப்புதான். ஒருவர் உழைத்து சம்பாதித்த பொருளை உடனடி நுகர்வுக்குப் பயன்படுத்தாமல் சேமிக்க ஆரம்பிக்கும் போது மூலதனம் உருவாகிறது.

(அடுத்தது - சேமிப்பும் முதலீடும்)

Thursday, February 7, 2008

வளரும் வழி

புதிதாக ஆரம்பித்த நிறுவனத்தின் வளர்ச்சி இலக்குகள் ஒவ்வொரு ஆண்டும் பல மடங்குகளாக அதிகரிக்க வேண்டும். என்னென்ன செய்கிறோம், எங்கெங்கு வாய்ப்புகள் இருக்கின்றன. என்னென்ன பலங்கள், என்னென்ன பலவீனங்கள், எங்கெங்கு ஆபத்துகள் வரலாம் என்று அலசிக் கொள்ள வேண்டும்.

சேவை நிறுவனம் ஒன்றில், ஆண்டு 0ல் X அளவு விற்பனை இருந்தால், 1ல் 5X, இரண்டாம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட மூன்று மடங்கு, 4ம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு, 5ம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்காக விற்பனை அதிகரிக்க வேண்டும்.

இப்படி எண்களில் சிந்திப்பது, இலக்குகளை நிர்ணயிப்பது, அதை முறைப்படி தினமும் கண்காணிப்பது, நிர்ணயித்த இலக்குகளை எட்டுவது என்பது எல்லோருக்கும் வந்து விடாது. குறிப்பாக சம்பளத்துக்கு வேலைபார்க்கும் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்களுக்கு இப்படி கோடிகளைத் துரத்துவது மனதளவில் பொருந்தாத ஒன்று.

பலரைச் சேர்த்து நிறுவனம் நடத்துபவர்களுக்கு அந்த மதிப்பு உருவாக்கும் பொறுப்பு இருக்கிறது. ஒவ்வொரும் திறம்பட செயல்பட வழி வகுத்து, முயற்சிகளின் வெளிப்பாட்டை பலனுள்ள சேவையாக மாற்றி, மாற்றிய சேவையை வாடிக்கையாளருக்கு உருப்படியாகப் போய்ச் சேர வைத்து, அந்த விபரங்களை தெளிவாக எடுத்துரைத்து, வாடிக்கையாளர் பெற்ற பலன்களில் ஒரு பகுதியை கட்டணமாக பெற்று வருமானம் பெருக்க வேண்டும்.

அதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, வசதிகளைப் பெருக்க வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.

இன்போசிஸ் நிறுவனத்தில் ஆரம்பத்தில் வேலை பார்த்த நூற்றுக் கணக்கான பேரின் சொத்து மதிப்பு இப்போது கோடிக் கணக்கில். முதல் நூறு எண்களுக்குள் ஒருவராக சேர்ந்தவரின் பங்குகளின் மதிப்பு நூற்று முப்பது கோடி ரூபாயாம்.

அதன் பொருள் என்ன?

ஒவ்வொருவரின் திறமையை/வேலையை வாடிக்கையாளருக்கு பயனுள்ள சேவையாக மாற்றியிருக்கிறது அந்த நிறுவனம். வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த சேவையின் மதிப்பு பல கோடி ரூபாய்கள், அதில் ஒரு பகுதி நிறுவனத்துக்கு கட்டணமாக வந்திருக்கிறது. அதில் ஒரு பகுதி வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளமாக, பங்குகளாக போய்ச் சேருகிறது.