மூலதனத்தின் சக்தி வெறும் கையால் கிணறு தோண்டுவதற்கும், மண்வெட்டி ஒன்றைப் பயன்படுத்துவதற்கும், மின்சார துளை போடும் கருவியைப் பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாடுதான். முதல் முறையில் மூலதனம் எதுவுமே இல்லை, இரண்டாவது முறையில் 200 ரூபாய் மூலதனம், மூன்றாவது முறையில் 20000 ரூபாய் மூலதனம்.
மூலதனம் சேரும் போது ஒருவரது உழைப்பின் வெளிப்பாடு பல மடங்கு அதிகரித்து விடுகிறது. முதல் முறையில் ஆறு மாதங்கள் கையால் தோண்டியும் கிணறு தோண்டி முடிக்க முடியாமலே போய் விடலாம். இரண்டாவது முறையில் ஓரிரு மாதங்களில் தண்ணீர் பார்த்து விடலாம். மூன்றாவது முறையில் சில நாட்களிலேயே வேலை முடிந்து விடும்.
மூன்றாவது முறையில் வேலை செய்யும் தொழிலாளியின் உற்பத்தி திறன் அதிகமாவதால் வருமானமும் அதிகமாகி விடும். மூலதனம் உழைப்புடன் சேருவதால் ஏற்படும் பலனில் மூலதனத்தின் விலையைக் கொடுத்த பிறகு கூட தொழிலாளியின் வருமானம் பல மடங்கு அதிகமாகும் சாத்தியங்கள் இருக்கின்றன.
ஒரு சமூகத்தின் சேமிப்பை மூலதனமாக பயன்படுத்த, எடுத்துக் கொள்ள முடியும் ஒருவர்தான் மிகவும் சக்தி வாய்ந்தவர். அனில் அம்பானி சந்தையில் மூலதனம் திரட்ட வந்ததும் பன்னிரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பணம் திரட்ட முடிவது அவரது கையைப் பலப்படுத்துகிறது. அந்தப் பணத்தை வைத்து அவர் நாட்டின் விளைபொருட்களை, மற்றவர்களின் உழைப்பை தனக்குத் தேவையான திசையில் திருப்பி விட முடிகிறது.
'நாம் சேர்த்த எல்லா வளமும் இந்த சமூகத்திலிருந்துதான் வந்தது, அதனால் நம்மிடம் சேரும் வளங்களை சமூகத்துக்கே திருப்பிக் கொண்டு போக வேண்டும்' என்பது டாடா குழுமத்தின் அடிப்படை கொள்கையாக இருந்து வருகிறதாம். இந்த சமூக அமைப்பும், சந்தைகளும் சட்ட திட்டங்களும் இல்லா விட்டால், ஒரு தனிநபரது கடின உழைப்பு அவரது வயிற்றை நிரப்பக் கூட போதாத அளவில்தான் இருந்து வரும்.
அதற்கு மேல் சம்பாதிக்க முடியும் பணம் அனைத்துமே சமூகக் கூட்டமைப்பின் மூலம் கிடைப்பதுதான். இந்தக் கூட்டமைப்பின் பலன்களை கூட்டமைப்புக்கே பயன்படும்படி செய்ய வேண்டும் என்று உருவாவதுதான் பொதுவுடமை தத்துவங்கள்.
3 comments:
//'நாம் சேர்த்த எல்லா வளமும் இந்த சமூகத்திலிருந்துதான் வந்தது, அதனால் நம்மிடம் சேரும் வளங்களை சமூகத்துக்கே திருப்பிக் கொண்டு போக வேண்டும்' என்பது டாடா குழுமத்தின் அடிப்படை கொள்கையாக இருந்து வருகிறதாம்.//
வணக்கம் அண்ணா
தங்களுடைய சிந்தனைகள் அனைத்தும்
கம்யுனிசம் சார்ந்ததாக எனக்குப்படுகிறது.
எனினும் வரவேற்கப்பட வேண்டியதுதான்.
கார்த்திக்,
//தங்களுடைய சிந்தனைகள் அனைத்தும் கம்யுனிசம் சார்ந்ததாக எனக்குப்படுகிறது.//
அப்படியா! நான் ஒரு பாவமும் அறியாதவன் :-)
அன்புடன்,
மா சிவகுமார்
:)
Post a Comment