- அமெரிக்காவில் வட்டி வீதங்கள் ஒரே மாதத்துக்குள் 1.25% குறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் நிலவும் வங்கி வட்டி வீதங்கள் மாற்றமின்றி உயர்ந்த நிலையிலேயே இருக்கின்றன. இதனால் தமது சேமிப்பை வங்கியில் போட்டு வைக்கும் வெளிநாட்டு இந்தியர்கள் மற்றும் இந்தியாவுக்குள் முதலீடு செய்ய வாய்ப்புகள் உள்ள பிற முதலீட்டாளர்கள் டாலர்களை ரூபாயாக மாற்றி இந்தியாவுக்கு அனுப்ப முயற்சிப்பார்கள்.
இதனால் டாலரின் மதிப்பு குறையும்படியான தாக்கம் ஏற்படும். - அமெரிக்க நிதி நிறுவனங்களின் வீட்டுக் கடன்கள் வாராக் கடன்களாக மாறுவதும், வீடுகளின் விலைச் சரிவை ஒட்டி அவர்களின் சொத்து மதிப்புகள் குறைவதும் நடக்கப் போகின்றன. அடிப்படை இல்லாமல் உயர் நிலையில் இருந்த மதிப்புகளைச் சார்ந்து திரட்டிய பணத்தை இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்து வைத்திருந்த நிதி நிறுவனங்கள் பங்குகளை விற்றுப் பணமாக மாற்றும் கட்டாயம் ஏற்படும்.
அந்தப் பணத்தை டாலராக மாற்றி எடுத்துச் செல்வதால், மூலதனச் சந்தையில் டாலரின் மதிப்பு அதிகரிக்கும்படியான தாக்கம் இருக்கும். - அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதம் குறைந்து, தொழில் நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை குறைக்க ஆரம்பிக்கின்றன. வீடுகளில் முதலீடு செய்திருப்பவர்களின் கடன் வாங்கும் திறனும் குறைந்து விடும். இதனால் குடும்பங்களின் வாங்கும் திறன் குறைந்து அமெரிக்க பொருளாதாரத்தில் விற்பனைகள் குறையும். இதனால், அமெரிக்கா மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதும் குறைந்து போகும்.
இதனால் வர்த்தகக் கணக்கில் டாலரின் மதிப்பு அதிகமாகும்படியான தாக்கம் இருக்கும். - உள்நாட்டில் தேவைக் குறைவை ஈடு கட்ட, சரிந்து வரும் டாலரின் மதிப்பினால் கிடைக்கும் விலை ஆதாயத்தைப் பயன்படுத்தி, அமெரிக்க நிறுவனங்கள் வெளி நாட்டில் தமது பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதால் அமெரிக்காவின் ஏற்றுமதி அதிகரிக்கும்.
இதனாலும் டாலரின் மதிப்பு அதிகமாகும். - அமெரிக்காவில் செலவினங்கள் குறைந்து, மலிவான விலையில் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். வேலைச் சந்தையில் சம்பள வீதங்கள் குறையும். அலுவலக வாடகைகள் குறையும். மூலப்பொருட்கள் விலை குறையும்.
இதனால் அமெரிக்க ஏற்றுமதி பெருகும்.
இந்த கணிப்பு அமெரிக்கப் பொருளாதாரக் காரணிகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டது. இதே போன்று இந்தியப் பொருளாதரத்தின் வளர்ச்சி வீதம், வங்கி வட்டி வீதங்கள், ஏற்றுமதி/இறக்குமதி, உள்நாட்டு தேவை இவற்றைப் பொறுத்து இந்திய ரூபாயின் மதிப்பின் மீதான தாக்கங்களும் செலாவணி மதிப்பைத் தீர்மானிக்கும்.
இதனால் தகவல் தொழில் நுட்பத் துறையில் என்னென்ன மாறுதல்கள் நடக்கும்?
அமெரிக்க நிறுவனங்கள் செலவினங்களைக் குறைக்க முயற்சிக்கும் நோக்கில் தகவல் தொழில் நுட்பத்தை இன்னும் அதிகமாக பயன்படுத்த முயற்சிக்கலாம். ஆனால் தனி நபர்களைப் பொறுத்த வரை மின்னணு சாதனங்களை வாங்குவது குறைந்து இது சார்ந்த தேவைகள் குறையும்.
அப்படி அதிகமாகும் தகவல் தொழில் நுட்பச் சேவை தேவைகளை வழங்குவதற்கு இந்தியாவில் செலவு குறைவு என்பது மாறியிருக்கும். அமெரிக்காவில் தற்போது செய்து கொண்டிருக்கும் வேலைகளை இழக்கும், தொழில் நுட்ப தொழிலாளர்களின் சம்பளங்கள் குறைந்து திட்டப்பணிகளை இந்தியாவுக்கு அனுப்பிச் செய்யாமல் அமெரிக்காவிலேயே செய்து கொள்வது அதிகரிக்கும்.
- இதனால், இந்தியாவில் இருந்து இயங்கும் வெளிச் சேவை நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மற்றும் அளவுகள் குறையும்.
- அமெரிக்காவில் செய்யப் போகும் திட்டப்பணிகளுக்குத் தேவைப்படும் இந்திய தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் அமெரிக்காவுக்குப் போக வேண்டிய தேவைகள் அதிகமாகும்.
- இந்தியச் சந்தையில் தகவல் தொழில் நுட்பக் கருவிகள் சேவைகள் விற்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அது தொடர்பான விற்பனைத் துறை மேலாளர்கள், சேவைத் துறை மேலாளர்கள் போன்ற பணிகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாகும்.
இதை எப்படி எதிர் கொள்ளலாம்?
சிறிய நடுத்தர அளவு மென்பொருள் நிறுவனங்கள், உள்நாட்டுச் சந்தைக்குத் தேவையான மென்பொருள் சேவைகளில் கவனத்தைத் திருப்ப வேண்டும்.
கல்லூரி மாணவர்கள் தகவல் தொழில் நுட்பம், மென்பொருள் உருவாக்கம் தொடர்பான திறமைகளுடன் ஏதாவது ஒரு குறிப்பிட்ட துறையில் (கணக்கியல், உற்பத்தி, விற்பனை, மேலாண்மை) புலமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
4 comments:
மிக எளிமையா எடுத்துச் சொல்லி இருக்கீங்க சிவக்குமார்.
எனக்கே புரிகிறது. நம் வீட்டுப் (அமெரிக்காவில்)பிள்ளைகள் சம்பந்தப் பட்டு இருப்பதால் இந்தப் பதிவைப் படித்துத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.
மனதுக்கு ஒரு தெம்பு வருகிறது
காலம் நல்ல படி மாறட்டும் நாமும் பிழைக்கவேண்டும் அவர்களும் பிழைக்க வேண்டும்.
மிக்க நன்றி.
//அமெரிக்காவில் வட்டி வீதங்கள் ஒரே மாதத்துக்குள் 1.25% குறைக்கப்பட்டுள்ளன. //
Petrodollar investment குவிவதாலும், உலக பொருளாதாரம் அமெரிக்க நுகர்வோர்களை சார்ந்து இருப்பதாலும் கால போக்கில் கடனுக்கு வட்டி கேட்பதற்கு பதில் incentive கொடுக்கும் காலுமும் வந்தாலும் வரலாம். பொருளாதாரம் மிகவும் மோசமானவுடன், 70களில் டாலருக்கு தங்கத்தை திருப்பி தரமுடியாது என்று சொன்னது போல், எதாவது அதிரடி முடிவு எடுத்து பிரச்சனையிளிருந்து தப்பிக்கலாம்!
வாங்க அம்மா, எப்படி இருக்கீங்க!
//நாமும் பிழைக்கவேண்டும் அவர்களும் பிழைக்க வேண்டும்.//
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் :-)
சதுக்க பூதம்,
//70களில் டாலருக்கு தங்கத்தை திருப்பி தரமுடியாது என்று சொன்னது போல், எதாவது அதிரடி முடிவு எடுத்து பிரச்சனையிளிருந்து தப்பிக்கலாம்!//
அப்படி ஒன்னும் நடக்கலாமோ! தங்கத்தை திருப்பித் தர மாட்டேன் என்று சொன்னதால் தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட செலாவணி முறை ஒழிந்தது.
அன்புடன்,
மா சிவகுமார்
வணக்கம் அண்ணா
//இந்தியாவில் நிலவும் வங்கி வட்டி வீதங்கள் மாற்றமின்றி உயர்ந்த நிலையிலேயே இருக்கின்றன.//
நேற்றில் இருந்து வங்கிகள் வட்டி விகிதங்களை குறைக்க ஆரம்பித்துதுள்ளன.
//அமெரிக்க நிதி நிறுவனங்களின் வீட்டுக் கடன்கள் வாராக் கடன்களாக மாறுவதும், வீடுகளின் விலைச் சரிவை ஒட்டி அவர்களின் சொத்து மதிப்புகள் குறைவதும் நடக்கப் போகின்றன்.//
அவர்கள் வட்டி விகிதங்களை குறைக்க காரணமே இந்த வீட்டுக்கடன்கள் தான்.இதுவும் அவர்களின் பொருளாதார சரிவிற்கு காரணம்.
//இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்து வைத்திருந்த நிதி நிறுவனங்கள் பங்குகளை விற்றுப் பணமாக மாற்றும் கட்டாயம் ஏற்படும்//
இல்லை அண்ணா இப்படி நடக்க வாய்ப்பு குறைவு தான்.
அங்கு வட்டி விகிதங்கள் குறைய குறைய நமது சந்தையின் மதிப்பு எப்போதுமே உயர்ந்துள்ளது.
//அமெரிக்கா மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதும் குறைந்து போகும்.//
அப்போதும் சீனா அவர்களுக்கு ஏற்றுமதி செய்வதில் முதளிடத்திளிருக்கும்
//அமெரிக்க நிறுவனங்கள் வெளி நாட்டில் தமது பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதால் அமெரிக்காவின் ஏற்றுமதி அதிகரிக்கும்.//
பொருட்களின் விற்பனை மட்டுமல்ல மாற்ற ஏழை நாடுகளுக்கு கடன் வழங்குவதும் அதிகரிக்கும்.பின்பு $ ரை உயர்த்தி அவையனைத்தும் வட்டியகவோ அல்லது ஆயில் லகவோ பெறப்படும்.
//கல்லூரி மாணவர்கள் தகவல் தொழில் நுட்பம், மென்பொருள் உருவாக்கம் தொடர்பான திறமைகளுடன் ஏதாவது ஒரு குறிப்பிட்ட துறையில் (கணக்கியல், உற்பத்தி, விற்பனை, மேலாண்மை) புலமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.//
முற்றிலும் உண்மை.அது மட்டுமல்ல விவசாயம் சார்புடைய பல புதிய தொழில்களை உருவாக்க வேண்டும்.மாணவர்களுக்கும் அது சம்பாந்தம்மான புரிதலை ஏற்படுத்த வேண்டும்.
மாலை தான் நினைத்துக்கொண்டிருந்தேன் தங்களுடைய INR சம்பந்தமான (நிர்னைப்பது) பழைய பதிவுகளை படிக்கவேண்டும் என்று.
காரணம் இன்று RBI தனது பாலிசி மாற்றியுள்ளதாம் அதனால் நேற்றும் இன்றும் INR உயர்ந்துள்ளது.
Post a Comment