Friday, February 8, 2008

மூலதனத்தின் மகிமை

வீட்டில் ஒரு 10 அடி ஆழமும் 4 அடிக்கு 4 அடி சுற்றளவும் உடைய பள்ளம் தோண்ட வேண்டும். வேலைக்கு ஒருவரைக் கூப்பிடுகிறோம். 'இதைத் தோண்டிக் கொடுத்திடுங்க. மொத்தம் 400 ரூபாய் கொடுத்து விடுகிறோம்' என்று பேசுகிறோம்.

தோண்ட வருபவர் எப்படி வேலை செய்வார்?

எந்த கருவியும் இல்லாமல் வெறும் கையினால் தோண்ட முடியுமா? அப்படியே முடிந்தால் அந்த நானூறு ரூபாய் வேலை எத்தனை நாட்களில் முடியும்? ஒரு வாரத்துக்கு மேல் ஆகலாம்.

ஒரே ஒரு மண்வெட்டி, 200 ரூபாய் விலையிலானது கொண்டு வந்தால் அதே வேலையை ஒன்றரை நாட்களில் முடித்து விடலாம். அந்த மண்வெட்டியை அடுத்த வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். வெறுங்கையில் வேலை செய்வதை விட மூன்று மடங்கு அதிகம் சம்பாதிக்கலாம்.

இதே சமயம் ஒரு தானியங்கி இயந்திரத்தைப் பயன்படுத்தினால் எவ்வளவு நேரம் ஆகும். 10000 ரூபாய்கள் விலை கொடுத்து மின் விசையால் இயங்கி மண்ணைப் பறித்து அதையே குவித்து வெளியே போட்டு விடும் இயந்திரம் கொண்டு வேலை செய்தால் அதே தொழிலாளி 2 மணி நேரத்தில் வேலையை முடித்து 400 ரூபாய்கள் வாங்கிக் கொண்டு போய் விடுவார். ஒரு நாளைக்கு 1600 ரூபாய்கள் சம்பாதிக்கலாம். வாரத்துக்கு 6 நாட்கள் உழைத்தால் 10000 ரூபாய்கள்.

இதுதான் மூலதனத்தின் மகிமை. உடலுழைப்புடன் மூலதனம் சேரும் போது உற்பத்தித் திறன் அதிகமாகி தொழிலாளியின் வருமானம் பல மடங்காக உயரும்.

கணினியைப் பயன்படுத்தி, இணையத்தின் மூலம் தகவல் பரிமாறிக் கொள்வதும் அது போன்று மூலதனம் மூலம் திறனை அதிகமாக்கிக் கொள்வதுதான்.

ஒரு தனிமனிதர் அல்லது நிறுவனம் மூலதனம் இல்லாமல் செயல்பட்டால், திறன் குறைந்த கருவிகளை மட்டுமே பயன்படுத்த முடியும். அதில் வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கைத் தரம் குறைவாகவே இருக்கும்

மூலதனம் எப்படி உருவாகிறது, எங்கு பயன்படுகிறது?

மூலதனத்தின் அடிப்படை சேமிப்புதான். ஒருவர் உழைத்து சம்பாதித்த பொருளை உடனடி நுகர்வுக்குப் பயன்படுத்தாமல் சேமிக்க ஆரம்பிக்கும் போது மூலதனம் உருவாகிறது.

(அடுத்தது - சேமிப்பும் முதலீடும்)

8 comments:

துளசி கோபால் said...

ரொம்பச்சரி.
மூலதனமும் அதைச் சரியானபடி புரிந்துகொண்டு, செலவழிக்க மூளைதனமும் வேணும்.அப்படித்தானே?

உண்மைத்தமிழன் said...

//இமூலதனத்தின் அடிப்படை சேமிப்புதான். ஒருவர் உழைத்து சம்பாதித்த பொருளை உடனடி நுகர்வுக்குப் பயன்படுத்தாமல் சேமிக்க ஆரம்பிக்கும் போது மூலதனம் உருவாகிறது.//

இப்படியெல்லாம் டீடெயிலா யாருமே எங்களுக்குச் சொல்லித் தரலியே.. எவ்ளோ காசு வேஸ்ட்டா போச்சு.. இப்ப நினைச்சா தூக்கம் வர மாட்டேங்குது..

Anonymous said...

mukkiyama iyandhirathukku eriporul venum.

KARTHIK said...

//மூலதனத்தின் அடிப்படை சேமிப்புதான். ஒருவர் உழைத்து சம்பாதித்த பொருளை உடனடி நுகர்வுக்குப் பயன்படுத்தாமல் சேமிக்க ஆரம்பிக்கும் போது மூலதனம் உருவாகிறது.//

imm

வவ்வால் said...

மாசி,

//10000 ரூபாய்கள் விலை கொடுத்து மின் விசையால் இயங்கி மண்ணைப் பறித்து அதையே குவித்து வெளியே போட்டு விடும் இயந்திரம் கொண்டு வேலை செய்தால் அதே தொழிலாளி 2 மணி நேரத்தில் வேலையை முடித்து 400 ரூபாய்கள் வாங்கிக் கொண்டு போய் விடுவார். ஒரு நாளைக்கு 1600 ரூபாய்கள் சம்பாதிக்கலாம். வாரத்துக்கு 6 நாட்கள் உழைத்தால் 10000 ரூபாய்கள்.//

புதிய கருவி வாங்கி அதன் மூலம் அதிகரிக்கப்பட்ட வேலைத்திறனுக்கு அங்கே வேலை இருக்கவேண்டும் , அப்போது தான் அதன் பயன் கிடைக்கும்.

உதாரணமாக ஒரு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர் டிராக்டர் வாங்கி அவர் நிலத்தை உழுதது போக மற்றவர்களுக்கும் உழலாம். வருமானம் கிடைக்கும், ஆனால் அந்த ஊரில் இருக்கும் எல்லா ஒரு ஏக்கர் வைத்திருப்பவர்களும் டிராக்டர் வாங்கிவிட்டால், யாருக்கு வேலை செய்வார்.

எனவே புதிய கருவி ,வாங்கும் முன்னர் அதனால் அதிகரிக்கப்படும் திறனுக்கு ஏற்ப வேலை இருக்கா என்றும் பார்க்க வேண்டும்.

//மூலதனம் எப்படி உருவாகிறது, எங்கு பயன்படுகிறது?

மூலதனத்தின் அடிப்படை சேமிப்புதான். ஒருவர் உழைத்து சம்பாதித்த பொருளை உடனடி நுகர்வுக்குப் பயன்படுத்தாமல் சேமிக்க ஆரம்பிக்கும் போது மூலதனம் உருவாகிறது.//

சேமிப்பு மூலம் கையில் தங்கும் பொருள் எப்படி மூலதனம் ஆகும், அதை வருமானம் தரும் வகையில் முதலீடு செய்தால் மட்டுமே மூல தனம். இல்லை எனில் அது "surplus wealth" அவ்வளவு தான்.

சேமிக்காமல் செலவழிப்பதும் , சமயத்தில் மூல தனம் ஆகலாம், ஒருவன் எதற்காக செலவழிக்கிறான் என்பதை வைத்தே அதை சொல்ல முடியும்.எனவே நுகர்வுக்கு பயண்படும் பணம் எல்லாமே தண்ட செலவல்ல.

சாப்பிடுவது கூட செலவாக கருதமுடியாது, அதுவும் ஒரு மூல தனம், நம் உடம்பு தான் எந்திரம் எனில் அது வேலை செய்ய எரிப்பொருள் அளிப்பது உணவு அதற்கு செலவு செய்தால் அது செலவாகுமா?

திரைப்படம் போவது கூட செலவாக சொல்ல முடியாது நமது மன இறுக்கத்தை குறைத்து அடுத்த வேலைக்கு புதிதாக தயார் செய்வதாக சொல்லலாம், அதுவும் மூல தனமே, அதற்கென்று ஒரு நாளைக்கு 4 திரைப்படம் பார்க்க கூடாது :-)), வாரத்திற்கு ஒரு திரைப்படம் பார்ப்பது நம் மன நலம் பேணும் ஒரு மூல தன செலவெனலாம்(படம் நல்லா இல்லைனா டார்ச்சர் தான்).

TBR. JOSPEH said...

நல்லாருக்கு சிவா.

மூலதனத்தின் அடிப்படை சேமிப்புதான். ஒருவர் உழைத்து சம்பாதித்த பொருளை உடனடி நுகர்வுக்குப் பயன்படுத்தாமல் சேமிக்க ஆரம்பிக்கும் போது மூலதனம் உருவாகிறது./

எல்லா மூலதனத்துக்கும் அடிப்படை சேஎமிப்பு என்பது உண்மைதான். ஆனால் எல்லா சேமிப்புமே மூலதனம் ஆகிவிடுவதில்லை. நாட்டிலுள்ள அனைவருடைய சேமிப்பையும் சேகரித்து அதை மூலதனமாக்க ஒரு அமைப்பு தேவையல்லவா? அவைதான் வங்கிகள்.

மா சிவகுமார் said...

துளசி அக்கா,

//மூலதனமும் அதைச் சரியானபடி புரிந்துகொண்டு, செலவழிக்க மூளைதனமும் வேணும்.//

நச்!

உண்மைத்தமிழன்,
இனிமேலாவது கவனமாக இருங்க! :-)

அனானி,

//mukkiyama iyandhirathukku eriporul venum.//

ஆமா, முக்கியமான குறிப்பு. அந்த செலவு வருமானத்தில் கழித்துக் கொள்ளப்பட வேண்டும்.

நன்றி கார்த்திக். கீழே ஜோசப் சார் சொல்வது போல மூலதனம் முதலீடாக மாறுவதற்கு இன்னும் இரண்டு படிகள் தேவை.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் said...

வாங்க வவ்வால்,

//புதிய கருவி ,வாங்கும் முன்னர் அதனால் அதிகரிக்கப்படும் திறனுக்கு ஏற்ப வேலை இருக்கா என்றும் பார்க்க வேண்டும்.//

முற்றிலும் உண்மை.

//சேமிப்பு மூலம் கையில் தங்கும் பொருள் எப்படி மூலதனம் ஆகும், அதை வருமானம் தரும் வகையில் முதலீடு செய்தால் மட்டுமே மூல தனம். இல்லை எனில் அது "surplus wealth" அவ்வளவு தான்.//

இதுவும் அடிப்படை பொருளாதாரப் பாடம். சேமிப்பை
முதலீடாக மாற்றுவது நடக்கா விட்டால், நாட்டில் பொருளாதார வளர்ச்சி குறைபட்டு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விடும்.

இதில் இடைநிறுவனங்கள் (வங்கிகள், நிதிநிறுவனங்கள்) சேர்ந்து கணக்கை இன்னும் குளறுபடி ஆக்கி விடும்.

//நுகர்வுக்கு பயண்படும் பணம் எல்லாமே தண்ட செலவல்ல.//
எதுவுமே தண்டச் செலவல்ல. :-) நுகர்வு செலவு, அல்லது சேமிப்பு (முதலீடு). தண்டமா இல்லையா என்பது வேறு விவாதத்தில் வரும்!

வணக்கம் ஜோசப் சார்,

//நாட்டிலுள்ள அனைவருடைய சேமிப்பையும் சேகரித்து அதை மூலதனமாக்க ஒரு அமைப்பு தேவையல்லவா? அவைதான் வங்கிகள்.//

சின்ன திருத்தம் :-)

சேமிப்பை மூலதனமாக மாற்றுபவர்கள் தொழில் முனைவோர். சேமிப்பவர்களையும் தொழில் முனைவர்களையும் இணைக்கும் இடைநிறுவனங்கள் வங்கிகள். சரிதானே!

அன்புடன்,
மா சிவகுமார்