Saturday, February 9, 2008

சேமிப்பும் முதலீடும்

ஒரு சமூகத்தில் சேமிப்பும் முதலீடும் சமமாக இருக்க வேண்டும். ஒருவரின் சேமிப்பு இன்னொருவருக்கு மூலதனமாக பயன்படும்.

பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர் அதில் 8000 ரூபாய் செலவழிக்கிறார். செலவழித்து அவர் வாங்கிய பொருள், சேவை செய்தவர்கள் கையில் அந்தப் பணம் போகிறது. அவர்கள் வேறு வழியில் செலவழிக்கிறார்கள். இப்படி சுற்றி வந்து முதல் ஆள் 10000 ரூபாய் ஈட்டிய பணியில் விளைந்த பொருள்/சேவையும் வாங்கப்பட்டு விடும்.

எல்லாமே மனித உழைப்புதான். 10000 ரூபாய் ஒருவருக்கு சம்பளம் என்றால் அவரது பணியால் விளைந்த மதிப்பு 10000 ரூபாய்கள். தன் உழைப்பை பணமாக மாற்றிக் கொண்டு விட்டார். அந்த உழைப்பைச் செலவாணியாகப் பயன்படுத்தி சமூகத்தின் பிற உறுப்பினர்களின் உழைப்பை தனக்குப் பிடித்தவாறு திருப்பி விடும் உரிமையைப் பெறுகிறார்.

கொஞ்சம் இருங்க, இவரே 8000ம்தானே செலவழித்தார், மீதி இரண்டாயிரம் ரூபாய் என்னவாகும்? அந்த மதிப்பிலான பொருள்/சேவை தேங்கி விடாதா?

விடும்தான், ஒரு பழக்கம் இல்லாவிட்டால். சேமிப்பவர் தனது சேமிப்பை வங்கியில், அல்லது பங்குச் சந்தையில் அல்லது சொத்து வாங்க போடுகிறார். அவரைப் பொறுத்த வரை வருமானத்தில் ஒரு பகுதியை உடனடி நுகர்வுக்குப் பயன்படுத்தாமல் எதிர்காலத்துக்கு ஒதுக்கி வைத்து விட்டார்.

அந்தச் சேமிப்புப் பணத்தை கடனாக இன்னொருவர் பெற்று முதலீடு செய்கிறார்். அதை எதிர்கால உற்பத்தியை பெருக்கும் மூலதனமாகப் பயன்படுத்தினால், வளர்ச்சியும் கிடைக்கும்.

அதாவது, முழுதாக உடனடி நுகர்வுக்குப் பயன்படுத்தாமல் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து விட்டால் அது சேமிப்பு. அந்தச் சேமிப்பை இன்னொருவர் எடுத்து மூலதனமாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

எந்தத் துறையில் முதலீடு நடக்க வேண்டும்? யார் மூலம் முதலீடு நடக்க வேண்டும்? என்ற கேள்விக்கு விடை காண்பது ஒரு அடிப்படையான சிக்கல்.

சோவியத் போன்ற திட்டமிடும் பொருளாதாரங்களில் சில அறிவாளிகளைக் கொண்ட குழு கூடி முடிவெடுக்கும். இரும்பு உற்பத்தித் துறைக்கு இவ்வளவு மூலதனம், வானூர்தி உற்பத்தி துறைக்கு இவ்வளவு மூலதனம், கல்லூரி கட்ட இவ்வளவு மூலதனம் என்று முழு பொருளாதாரத்துக்கும் இந்தச் சின்னக் குழு திட்டமிட்டு விட வேண்டும்.

நடைமுறையில் சாத்தியமில்லாத நடைமுறை அது, அந்தப் பொருளாதாரங்கள் மண்ணைக் கவ்வியதன் ஒரு முக்கிய காரணம் முழுமையாக திட்டமிடல் மூலமே பொருளாதாரத்தை நடத்திச் செல்ல முயன்றது.

சந்தைப் பொருளாதாரத்தில், சேமிப்பாக சேரும் பணத்தை மூலதனமாகப் பெறுவதற்கு போட்டி நடக்கும். 'எனக்கு இவ்வளவு பணம் தந்தால் ஒரு ஆண்டு கழித்து 10% அதிகமாக திரும்பத் தருகிறேன்' என்று ஒருவர் சொல்வார். அவருக்கு தான் முதலீடு செய்யப் போகும் தொழில் வளர்ந்து பலன் தரும் என்று நம்பிக்கை. இன்னொருவர் 12% தர தயாராக இருக்கலாம். யார் அதிக விலை (வட்டி) கொடுக்க முன் வருகிறார்களோ அவர்களுக்கு மூலதனம் கிடைக்கும்.

வட்டி வீதத்தை விட முதலீடு திரட்டுபவரின் திறமையையும் தொழில் நிலவரத்தையும் பார்க்க வேண்டும். ஒரு ஆண்டில் இரட்டித்துத் தருகிறேன் என்று சொல்லி விட்டு ஆறே மாதத்தில் ஆளே காணாமல் போய் விடுகிறவரை விட ஒரு ஆண்டுக்குப் பிறகு 10% கூட்டித் தருவதாகச் சொல்லி விட்டு அசலையும் வட்டியுடன் திருப்பி தருபவருக்குத்தான் கொடுப்போம்.

மாடு வாங்குவதற்கு நண்பரிடம் கடன் வாங்கும் விவசாயி செய்யும் முதலீடு ஆரம்பித்து, வங்கிக் கடன்கள், கடன் பத்திரச் சந்தைகள், பங்குச் சந்தைகள், தனியார் பங்கு முதலீடு, டெரிவேட்டிவ் எனப்படும் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டு முறைகள் என்று எல்லாவற்றின் அடிப்படையும் 'சேமிப்பு யாருக்குப் போய்ச் சேர வேண்டும், எந்த விலையில் போய்ச் சேர வேண்டும்' என்று தீர்மானிப்பதுதான்.

10 comments:

KARTHIK said...

தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா

K.R.அதியமான் said...

seems some contradiction with this post and the one about towards pothu vudamai in your main blog.

planned economy Vs free markets ?

மா சிவகுமார் said...

நன்றி கார்த்திக். இடுகைகளைத் தொடர ஊக்கம் கிடைப்பது உங்கள் பின்னூட்டங்களில்தான் :-)

அதியமான்,

'உலகத்தில் எங்குமே முரண்பாடுகள் இல்லை. எங்காவது முரண்பாடுகளை பார்ப்பதாகத் தோன்றினால், உங்கள் கருதுகோள்களை சரிபாருங்கள்' - அயன் ராண்ட்!

அன்புடன்,
மா சிவகுமார்

TBR. JOSPEH said...

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இன்றியமையாதவை இந்த சேமிப்பும் அந்த சேமிப்பு முதலீடாக மாறுவதும்தான்.

சேமிப்பு இல்லையேல் முதலீடு இல்லை.. முதலீடு இல்லையேல் சேமிப்பு இல்லை என்பது போன்ற ஒரு தொடர் ஓட்டம்தான் நாட்டின் பொருளாதாரத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது.

சுருக்கமா சொன்னாலும் தெளிவா சொல்றீங்க சிவா.. வாழ்த்துக்கள்.

K.R.அதியமான் said...

yes MASi,

Ayn Raid said A is A and non-contradiction, etc.

but i was refererring to your stand in the post towards socialism in your main blog with the contents of this post which clarifies the efficency of market when compared to 'planned' economy in best utilisation of capital and resources.

so why this contradiction in two different posts from one person ?
is planned economy or socialism inevitable and better than the market one ? or ...?

மா சிவகுமார் said...

வணக்கம் ஜோசப் சார்,

//சேமிப்பு இல்லையேல் முதலீடு இல்லை.. முதலீடு இல்லையேல் சேமிப்பு இல்லை என்பது போன்ற ஒரு தொடர் ஓட்டம்தான் நாட்டின் பொருளாதாரத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது.//

னால் நீங்கள் ஏற்கனவே சொன்னது போல எல்லா சேமிப்பும் முதலீடாக மாறி விடும் என்று உத்தரவாதம் கிடையாது. அதற்கு சந்தை இழுபறிகள் தேவைப்படும்.

//சுருக்கமா சொன்னாலும் தெளிவா சொல்றீங்க//

தெளிவான நடையில் எழுதும் உங்கள் பாராட்டு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

அதியமான்,

//is planned economy or socialism inevitable and better than the market one//

இன்றைய மனித வளர்ச்சி நிலையில் சந்தைப் போட்டியால் இயங்கும் பொருளாதார முறை உள்ளதில் சிறப்பாக செயல்படுகிறது.

நம்ம எல்லோரின் உள்ளங்கள் உயர் நிலையை அடையும் போது பேராசைகளும், பற்றாக்குறைகளும் தேவையில்லாமல் போய் சந்தைப் பொருளாதாரம் அற்றுப் போகும்.

அன்புடன்,
மா சிவகுமார்

K.R.அதியமான் said...

////நம்ம எல்லோரின் உள்ளங்கள் உயர் நிலையை அடையும் போது பேராசைகளும், பற்றாக்குறைகளும் தேவையில்லாமல் போய் சந்தைப் பொருளாதாரம் அற்றுப் போகும்/////

'சொர்கம்' என்று இதை அழைப்பார்கள். ஆனால் பூலோகத்தில் இது சாத்தியமில்லை. மேலோகத்தில்தான் இது....
:)))

K.R.அதியமான் said...

'பொருள் செய்ய விரும்பு' என்று தலைப்பில், பேராசை பற்றிய விமர்சனம் முரண்பாடானாது. தொழில் முனைவோர் பேராசை படாவிட்டால் இவ்வளவு வளர்சி நடந்திருகுமா ? யாரையும் ஏமாற்றாமல், பித்தலாட்டம் செய்யாமல், பேராசை படுவது தவறல்ல. நெறி பிறழாமல் பொருள் ஈட்டுவதை பேராசை என்று குழப்பக்கூடாது.
உ.ம் : இன்போசிஸ் நாராயணமூர்த்தி, ஜெ.ஆர்.டி.டாட்டா...

மா சிவகுமார் said...

அதியமான்,

//ஆனால் பூலோகத்தில் இது சாத்தியமில்லை. மேலோகத்தில்தான் இது.... //

சாத்தியமில்லை என்றால் பூலோகத்துக்கு அழிவு காலம்தான். சிலர் வாழ வாழ பலர் வாட வாட இருக்கும் நடைமுறைகள் நீண்ட காலம் நீடிக்கு முடியாது.

அன்புடன்,
மா சிவகுமார்

K.R.அதியமான் said...

அதியமான்,

//ஆனால் பூலோகத்தில் இது சாத்தியமில்லை. மேலோகத்தில்தான் இது.... //

//சாத்தியமில்லை என்றால் பூலோகத்துக்கு அழிவு காலம்தான். சிலர் வாழ வாழ பலர் வாட வாட இருக்கும் நடைமுறைகள் நீண்ட காலம் நீடிக்கு முடியாது.///

அழியுமா அல்லது வளருமா என்று பார்கலாம்...