Thursday, March 13, 2008

தள்ளாடுகிறதா பொருளாதாரம்

இந்தியப் பொருளாதரத்தின் தொழில் துறை வளர்ச்சி வீதம் 2008 ஜனவரி மாதத்தில் 5.3% ஆக குறைந்தது. 2007ம் ஆண்டில் இதே மாதத்தில் வளர்ச்சி வீதம் 11.6% ஆக இருந்தது.

அதாவது 2006ம் ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடும் போது 2007ல் 11.6% வளர்ச்சி இருந்தது. 2007லிருந்து 2008ல் வளர்ச்சி 5.3% ஆக இருந்தது (இது கூட வளர்ச்சிதான், ஆனால் வீதம் குறைவு).

சுரங்கத் துறை, பொது உற்பத்தி, மின் உற்பத்தி, நுகர்பொருட்கள், வீட்டு பயன்பாட்டுக் கருவிகள், முதலீட்டு இயந்திரங்கள் என்று வெவ்வேறு துறைகளின் உற்பத்தி மதிப்புக்கு குறிப்பிட்ட விகிதாச்சாரம் கொடுத்து ொழில் துறை வளர்ச்சி குறியீட்டு எண் என்பதை நிர்ணயித்துக் கொள்கிறார்கள். இந்தக் குறியீட்டு எண்ணின் வளர்ச்சி அல்லது தேய்வுதான் உற்பத்தித் துறை மாற்றம் என்று சொல்கிறார்கள்.

இந்த குறியீட்டு எண் 1993-94ம் ஆண்டில் 100 ஆக இருந்ததாக வரையறுத்துக் கொண்டார்கள்.

சுரங்கத் துறை என்பது நிலக்கரி, தாதுப் பொருட்கள் முதலான இயற்கை வளங்களைத் தோண்டி எடுக்கும் பணியைச் செய்வது

முதலீட்டு இயந்திரங்கள் உற்பத்தியில் ஏற்படும் மாற்றம் உன்னிப்பாக கவனிக்கப் படும். ஒரு மாதத்தில் இயந்திரங்களில் முதலீடு குறைகிறது என்றால் அடுத்தடுத்த மாதங்களில் மற்ற பொருட்களின் உற்பத்தி குறையும் என்று கணக்குப் போடலாம். முதலீடு அதிகமானால்தான் உற்பத்தித் திறன் அதிகமாகி உற்பத்தி அளவும் அதிகரிக்கும்.

அதனால் இயந்திரங்களின் உற்பத்திக் குறைவு அதிகமான கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்து பிசினஸ் லைன் நாளிதழில் செய்தி

Wednesday, March 12, 2008

தகவல் தொழில் நுட்பத்தின் சாத்தியங்கள்

வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் நாளிதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் அமெரிக்காவைச் சேர்ந்து இரண்டு மேலாண்மை வல்லுனர்கள், தகவல் தொழில் நுட்பம் இன்றைய நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் முறைகளைப் பற்றி அலசியிருக்கிறார்கள்.

முழுக் கட்டுரையை இங்கு படிக்கலாம்.

அதைப் பற்றிய ஸ்லாஷ்டாட் விவாதத்தை இங்கு படிக்கலாம்.

சில குறிப்புகள்:

1. தகவல் தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் நிறுனத்தின் ஆதாய வீதத்தை அதிகரிப்பதோடு தகவல் தொழில் நுட்பத்தில் செய்யும் முதலீட்டில் நல்ல வருமானத்தையும் ஈட்டலாம்.

2. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தகவல் தொழில் நுட்ப பொருளாதாரத்தில் வெற்றியடைவதற்கு , நிறுவனத்தின் அடிப்படைத் திட்டமிடலின் போது தகவல் தொழில் நுட்பத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.

3. நிறுவனத்தின் தொழிலை நன்கு புரிந்த தொழில் முறை மேலாளரை தகவல் தொழில் நுட்பப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் அமர்த்த வேண்டும். நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவிலும் தகவல் தொழில் நுட்பத்தை ஒன்றுபடுத்த அவர் தலைமை நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

4. தொழில் நுட்ப முன்னேற்றங்கள், சந்தையிலும் பொருளாதாரத்திலும் மாற்றங்களின் வேகத்தை அதிகரித்துள்ளன. இதனால் ஏற்படும் வாய்ப்புகளையும் பாதகங்களையும் உடனுக்குடன் அடையாளம் கண்டு, சரியாக புரிந்து, எதிர் வினை ஆற்றுவது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் இன்றியமையாததாகிறது.

5. நிறுவனத்தின் பல்வேறு மட்டங்களில் இருக்கும் மேலாளர்கள், தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் செய்யக் கூடிய மேம்பட்ட தகவல் மேலாண்மை, தொழில் முறை அறிவு மேம்படல், தகவல் பாதுகாப்பு, மாற்றங்களை கையாளுதல், செய்முறைகளை ஒருங்கிணைத்தல் போன்றவை நிறுவனத்தின் வெற்றிக்கு இன்றியமையாதவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

6. தகவல் தொழில் நுட்பத்துக்காகத் திட்டமிடும் செலவினங்களும் முதலீடுகளும் மற்ற செலவினங்களைப் போலவே நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.

சன்னுக்கு என்ன ஆச்சு?

ஐபிஎம் நிறுவனங்களுக்கு தகவல் தொழில் நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனமாகத் தன்னை மறு அடையாளப்படுத்திக் கொண்டது. பயனர் கணினிப் பிரிவை லெனோவோ நிறுவனத்துக்கு விற்று விட்டது. இன்றைக்கு விற்பனையில் ஒரு பெரும் பகுதி சேவைகளிலிருந்து கிடைக்கிறது.

ஆரக்கிள் நிறுவனம் நிறுவன வள மேம்பாட்டு சேவை நிறுவனமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. தரவுத் தளம் மட்டும விற்கும்் நிறுனமாக இருந்து நிறுவனத்துக்குத் தேவையான எல்லா சேவைகளையும் வழங்கும் படி மற்ற சின்ன நிறுவனங்களை வாங்கி உள்வாங்கி சக்கை போடு போடுகிறது.

மைக்ரோசாப்டுக்கு அடுத்த சில ஆண்டுகளுக்கு மேசைக் கணினிகளுக்கு இயங்குதளமும் அலுவலக மென்பொருளும் விற்பதிலேயே நிறைந்து விடும். அதைச் சுற்றிச் சுற்றி மதில்கள் எழுப்புவதிலேயே முழுக்கவனமும் இருப்பது போல தெரிகிறது.

சன் மைக்ரோ சிஸ்டமஸ்் என்ன செய்கிறது?

ஜாவா தொடர்பான சேவைகளில் அதை உருவாக்கிய சன்னை முந்தி விட்டன பிற நிறுவனங்கள். சன் தனது இயங்குதளம் சோலாரிசை ஓப்பன் சோர்சாக வெளியிட்டு விட்டது. லினக்சு முதலான ஓப்பன் சோர்சு மென்பொருட்களுக்கும் ஆதரவு உண்டு.

சோலாரிஸ் கணினிகளின் விற்பனை வளர்ச்சி போதுமானதாக இல்லை. எங்கே போகிறது சன்?

Tuesday, March 11, 2008

வலைப்பதிவு மூலம் புரட்சி

இன்றைய (மார்ச்சு 11, 2008) எகனாமிக் டைம்ஸ் நாளிதழின் சென்னை பதிப்பில் 15ம் பக்கம் வெளியாகியுள்ள மைக்ரோசாப்டு நிறுவனத்தின் மனிதவளத் துறைத் தலைவர் லிசா பிரம்மலின் பேட்டிக் கட்டுரையில் தெரியும் தகவல்கள்.
  • 1987ல் மைக்ரோசாப்டு நிறுவனத்தில் 4500 பேர் பணியாற்றினார்கள். இப்போது 85,000 பேர் இருக்கிறார்கள்.

  • உலகெங்கும் இருக்கும் நிறுவன ஊழியர்களுடன் தொடர்பு வைத்திருக்க லிசா வலைப்பதிவு ஒன்றில் எழுதுகிறார்

  • தினமும் 1 மணி நேரம் எழுதவும், 3-4 நான்கு மணி நேரம் பின்னூட்டங்களுக்கு மறுமொழி அளிக்கவும் செலவிடுகிறார்.

  • மைக்ரோசாப்டு இந்தியாவில் 5000 பேர் பணிபுரிகிறார்கள்.
கூகுளின் அடித்தாடல் ஆரம்பித்த கட்டத்தில், 2005ல் பொறுப்பேற்ற பிரம்மல், ஊழியர்களை ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்க வைக்கும் forced ranking system முறையை மாற்றுவதில் ஈடுபட்டிருக்கிறார்.

Monday, March 10, 2008

இன்றைய உலகளாவிய நிறுவனத்தின் தன்மை

இன்றைய எகனாமில் டைம்ஸ் நாளிதழில் வெளியாகியுள்ள பேட்டியின் படி

  • ஐபிஎம் - இந்தியா இந்தியாவின் நான்காவது பெரிய தகவல் தொழில் நுட்ப சேவைகள் நிறுவனம்.
  • ஐபிஎம் இந்தியாவில் 73,000 பேர் பணிபுரிகிறார்கள்
  • உலகளாவிய ஐபிஎம் வருமானத்தில் 55% சேவைகளிலிருந்து வருகிறது.
  • 65% வருமானம் அமெரிக்காவுக்கு வெளியிலிருக்கும் சந்தைகளிலிருந்து கிடைக்கிறது

மனித வளம், வாடிக்கையாளர் உறவு, சிறப்பான சேவைகள் இந்த மூன்றும்தான் ஐபிஎம் இந்தியாவுக்கு வழிகாட்டும் நெறிகளாக பின்பற்றப்படுகின்றனவாம்.

“யாரும் தொழில்நுட்பத்தை மட்டும் வாங்குவதில்லை. வாடிக்கையாளர்கள் தொழில் முறை ஆதாயங்களை கணக்கிட்டுப் பார்க்கிறார்கள்.”

(ஐபிஎம் இந்திய துணைத் தலைவர் ராஜேஷ் நம்பியார்).

ஐந்தாவது பக்கத்துக்குப் போகவும

Wednesday, March 5, 2008

தகவல் பரிமாற்றம்

ஒரு நிறுவனத்தில், சமூகத்தில் ஒவ்வொருவரும் தமது திறமைகளை, பணிகளை, சாதனைகளை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் இருக்க வேண்டும்.

அப்படி இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் தமது திறமைகளை, பணிகளை, சாதனைகளை எண்ணங்களை மற்றவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஏன்?

1. என்னிடம் குறிப்பிட்ட திறமை இருக்கிறது என்பது தெரிந்தால்தான் அடுத்தவர்களுக்குத் தேவைப்படும் போது அதைப் பயன்படுத்திக் கொள்ள என்னை அணுகுவார்கள்.

ஒரு நிறுவனத்தின் பொருளை சேவைகளை விளம்பரம் செய்வது இந்த நோக்கத்தில்தான். பூக்கடையாக இருந்தாலும் விளம்பரம் இருந்தால்தான் செழிக்கும்.

நிறுவனத்துக்குப் பொருந்துவது தனிமனிதர்களுக்கும் பொருந்தும். நிறுவனத்தில், வீட்டில், சமூகத்தில் நம்முடைய திறமைகளை சரிவர வெளிப்படுத்தி அடுத்தவர்களுக்குத் தெரியப்படுத்தி விட வேண்டும்.

அதற்கு வலைப்பதிவுகள், தெருமுனைக் கூட்டங்கள், கவிதைகள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தல், ஓவியம் வரைதல் ஏன் நல்ல மென்பொருள் உருவாக்குதல் என்று விருப்பப்பட்ட ஊடகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. நான் என் நடவடிக்கைகளை அடுத்தவர்களுக்குத் தெரியப்படுத்தும் போது அதிலிருக்கும் நிறைகுறைகளை எனக்கு தெரிவிப்பார்கள். நான் செய்வதை விடச் சிறப்பாக அவர்களுக்கு வழி தெரிந்தால் அதை நமக்குத் தெரிவிக்க முன்வருவார்கள்.

3. நமது திறமைகள், சாதனைகள், பணிகளுக்கான ஊதியம் அப்போதுதான் நமக்கு வந்து சேரும்.

'திறமையான எழுத்தாளர். உயிரோட்டமுள்ள கதைகளை எழுதினார். கடைசி வரை வறுமையில்தான் வாழ்ந்தார்' என்றால், ஒன்று அவரது திறமையை வெளிப்படுத்த ஊடகம் சமூகத்தில் இல்லை. அல்லது அவரால் அந்த ஊடகத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

எந்தத் துறையிலும், ஒரு நிறுவனத்தில் பணி புரியும் போது கூட, ஊதிய உயர்வு, பணி முன்னேற்றம் போன்ற எல்லாமே நாம் செய்வது நமது மேலதிகாரிகள், கூட வேலை செய்பவர்கள், நமக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும்.

'நான் என் வேலையை நேர்மையாக, கருத்தோடு செய்து முடிப்பேன். பலன்கள் தானாக வந்து சேர வேண்டும்' என்று இருந்து விடாமல், அந்தப் பணியின் பலன்கள் பலருக்கும் போய்ச் சேரும்படி தகவல்களைப் பரவச் செய்ய வேண்டும்.

இதன் மறுபக்கம், மற்றவர்களின் திறமைகளை, பணிகளை, சாதனைகளைப் பற்றித் தெரிந்து வைத்திருத்தல்.

Tuesday, March 4, 2008

வளத்தை உருவாக்குவோம்

உடலுழைப்புடன் மூலதனம் சேரும் போது உற்பத்தித் திறன் அதிகமாகி தொழிலாளியின் வருமானம் பல மடங்காக உயரும். கணினியைப் பயன்படுத்தி, இணையத்தின் மூலம் தகவல் பரிமாறிக் கொள்வதும் அது போன்று மூலதனம் மூலம் திறனை அதிகமாக்கிக் கொள்வதுதான்.

ஒரு தனிமனிதர் அல்லது நிறுவனம் மூலதனம் இல்லாமல் செயல்பட்டால், திறன் குறைந்த கருவிகளை மட்டுமே பயன்படுத்த முடியும். அதில் வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கைத் தரம் குறைவாகவே இருக்கும்

தமிழர்களிடையே மூலதனம் எப்படி உருவாகிறது, எங்கு பயன்படுகிறது என்று பார்ப்போம்? மூலதனத்தின் அடிப்படை சேமிப்புதான். ஒருவர் உழைத்து சம்பாதித்த பொருளை உடனடி நுகர்வுக்குப் பயன்படுத்தாமல் சேமிக்க ஆரம்பிக்கும் போது மூலதனம் உருவாகிறது.

1. அதை வங்கியில் போட்டு வைத்தால், வங்கி தேவைப்படும் தொழில் முனைவோருக்கு அல்லது கடன் வாங்கும் தனிநபருக்கு அளிக்கிறது.
2. மும்பை பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு விலை ஏறி, அந்த நிறுனத்தின் தேவைக்கு அதிக மூலதனம் கிடைக்கிறது.
3. தங்கம் வாங்கினால், அதை விற்கும் மும்பை வணிகர்கள், தங்கச் சுரங்க உரிமையாளர்களிடம் நமது மூலதனம் போய்ச் சேருகிறது.

குஜராத்தில் ஒரு இளைஞர் புதிய தொழில் நிறுவனம் தொடங்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு முதலீடு எங்கிருந்து கிடைக்கும்?

தமிழகத்தில் ஒருவர் புதிய நிறுவனம் தொடங்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு?

கையிலிருக்கும் சேமிப்பைப் பயன்படுத்தி 100 கிராம் தங்கம் வாங்கி வைத்து விட்டீர்கள்.

உங்கள் நட்பு, அல்லது உறவினர் ஒருவர் மளிகைக் கடை நடத்துகிறார். அவருக்கு அந்த 1 லட்சம் ரூபாய்களை மூலதனமாகக் கொடுக்க நீங்களும் அதைப் பயன்படுத்து அவரும் தயாராக இருந்தால், கடைக்குத் தேவையான நவீன கருவி ஒன்றை வாங்கி கடையில் வேலை செய்பவர்களின் திறனை அதிகரிக்கலாம். அந்த அதிகரிப்பின் மூலம் வரும் ஆதாயத்தின் மூலம் உங்கள் முதலீட்டை வட்டியுடன் திருப்பவோ, அல்லது ஆதாயத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை ஆண்டு தோறும் தரவோ செய்யலாம்.

தமிழகத்தில் சேமிப்பை மூலதனமாக மாற்றி தொழில் முனைவோருக்கு அளிக்க வங்கிக் கட்டமைப்புகளும் இல்லை, பங்குச் சந்தைகளும் இல்லை, சமூக அமைப்புகளும் இல்லை. இருக்கும் பணத்தையும் மும்பை பங்குச் சந்தைக்கு எடுத்துச் செல்வதில் ஊடகங்கள் தீவிரமாக இருக்கின்றன.

Monday, March 3, 2008

நாய் விற்ற காசு குலைக்குமா! - கும்

வாழ்க்கையின் குறிக்கோள்களை கோடிகளிலும் லட்சங்களிலும அளக்கலாம். ஆனால் குறிக்கோள்களே கோடிகளாகவும் லட்சங்களாகவும் இருக்கக் கூடாது.

உருப்படியான குறிக்கோள்கள் இருந்து அதை எப்படி சரிவர அளந்து, அளவையை தொடர்ச்சியா அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தாமல் இருப்பது ஒரு வகை. அளவையை மட்டும் கருத்தில் கொண்டு அதை எப்படியாவது அதிகரித்துக் கொண்டே இருப்பது இன்னொரு வகை.

அள்ளிக் கொட்டும் பாத்திரமான தொழிலை விரிவுபடுத்திக் கொண்டே போக வேண்டும். பாத்திரத்தின் அளவு விரிந்து கொண்டே போக வேண்டும் என்பது வளரும் வேட்கை. ஆனால், அந்தப் பாத்திரத்தில் அள்ளிக் கொட்டுவது வெற்றுக் குப்பையாக இருக்க வேண்டுமா, அல்லது உணவாக்கும் தானியங்களாக இருக்க முடியுமா?

தானியங்களை விளைவிக்கும் விவசாயியிடம் சரியான அளவுப் பாத்திரம் இல்லாமல் விளைச்சலை சரிவர பங்கிடாமல் போனால் விவசாயி அழிந்து போவான். அளவுப் பாத்திரத்திலேயே கவனம் செலுத்தி எதை அள்ளிப் போடுகிறோம் என்று கவனிக்காமல் செயல்படுபவர்களின் கதி அதை விட மோசமாக அல்லவா இருக்கும்.

தினமும் மேலும் மேலும் அதிக முயற்சிகள். அதிக சுமைகளை சுமத்தல். ஆனால், மனதில் நிறைவு இருக்காது. வெற்று வாழ்க்கையாகப் போய் விடும்.

அளவைகள் மட்டும் வாழ்க்கை இல்லை. பணம் என்பது ஒரு அளவை. அது மட்டும் வாழ்க்கை இல்லை. அது எதை அளக்கிறது என்பதுதான் வாழ்க்கை. வாழ்க்கையில் நாம் செய்யும் பணிகளின் மதிப்பைக் காட்டுவது பணம். மாறுகோளாக, பணம் என்பது வாழ்க்கையின் மதிப்பைக் காட்டுவதில்லை