Wednesday, March 5, 2008

தகவல் பரிமாற்றம்

ஒரு நிறுவனத்தில், சமூகத்தில் ஒவ்வொருவரும் தமது திறமைகளை, பணிகளை, சாதனைகளை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் இருக்க வேண்டும்.

அப்படி இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் தமது திறமைகளை, பணிகளை, சாதனைகளை எண்ணங்களை மற்றவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஏன்?

1. என்னிடம் குறிப்பிட்ட திறமை இருக்கிறது என்பது தெரிந்தால்தான் அடுத்தவர்களுக்குத் தேவைப்படும் போது அதைப் பயன்படுத்திக் கொள்ள என்னை அணுகுவார்கள்.

ஒரு நிறுவனத்தின் பொருளை சேவைகளை விளம்பரம் செய்வது இந்த நோக்கத்தில்தான். பூக்கடையாக இருந்தாலும் விளம்பரம் இருந்தால்தான் செழிக்கும்.

நிறுவனத்துக்குப் பொருந்துவது தனிமனிதர்களுக்கும் பொருந்தும். நிறுவனத்தில், வீட்டில், சமூகத்தில் நம்முடைய திறமைகளை சரிவர வெளிப்படுத்தி அடுத்தவர்களுக்குத் தெரியப்படுத்தி விட வேண்டும்.

அதற்கு வலைப்பதிவுகள், தெருமுனைக் கூட்டங்கள், கவிதைகள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தல், ஓவியம் வரைதல் ஏன் நல்ல மென்பொருள் உருவாக்குதல் என்று விருப்பப்பட்ட ஊடகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. நான் என் நடவடிக்கைகளை அடுத்தவர்களுக்குத் தெரியப்படுத்தும் போது அதிலிருக்கும் நிறைகுறைகளை எனக்கு தெரிவிப்பார்கள். நான் செய்வதை விடச் சிறப்பாக அவர்களுக்கு வழி தெரிந்தால் அதை நமக்குத் தெரிவிக்க முன்வருவார்கள்.

3. நமது திறமைகள், சாதனைகள், பணிகளுக்கான ஊதியம் அப்போதுதான் நமக்கு வந்து சேரும்.

'திறமையான எழுத்தாளர். உயிரோட்டமுள்ள கதைகளை எழுதினார். கடைசி வரை வறுமையில்தான் வாழ்ந்தார்' என்றால், ஒன்று அவரது திறமையை வெளிப்படுத்த ஊடகம் சமூகத்தில் இல்லை. அல்லது அவரால் அந்த ஊடகத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

எந்தத் துறையிலும், ஒரு நிறுவனத்தில் பணி புரியும் போது கூட, ஊதிய உயர்வு, பணி முன்னேற்றம் போன்ற எல்லாமே நாம் செய்வது நமது மேலதிகாரிகள், கூட வேலை செய்பவர்கள், நமக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும்.

'நான் என் வேலையை நேர்மையாக, கருத்தோடு செய்து முடிப்பேன். பலன்கள் தானாக வந்து சேர வேண்டும்' என்று இருந்து விடாமல், அந்தப் பணியின் பலன்கள் பலருக்கும் போய்ச் சேரும்படி தகவல்களைப் பரவச் செய்ய வேண்டும்.

இதன் மறுபக்கம், மற்றவர்களின் திறமைகளை, பணிகளை, சாதனைகளைப் பற்றித் தெரிந்து வைத்திருத்தல்.

5 comments:

BALA.GANESAN said...

thanks super anna

manjoorraja said...

எவ்வளவுதான் திறமையிருந்தாலும் அதை சரிவர வெளிப்படுத்தவில்லையென்றால் அதனால் எந்த பயனும் இல்லை.

சரியான கட்டுரை.

KARTHIK said...

வணக்கம் அண்ணா
//பூக்கடையாக இருந்தாலும் விளம்பரம் இருந்தால்தான் செழிக்கும்.//

விளம்பாரம் என்பது ஒருவகையான போதை.எந்தளவுக்கு விளம்பரம் செய்கிறீர்களோ அந்தளவுக்கு விற்பனை அதிகரிக்கும்.நான் மறுக்கவில்லை விளம்பரத்தை நிருத்திப்பருங்கள் வியாபாரமும் அந்தளவுக்கு குறையும்.
முந்தய பதிவில் தாங்கள் குறிப்பிட படி வாடிக்கையாளர் சேவையே முக்கியம்.

நல்ல கட்டுரை பகிர்ந்தமைக்கு நன்றி

சக்தி said...

அருமை !!
இது சுயாவிளம்பரம் / தற்பெருமை என மக்களால் பலசமயங்களில் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது !!
திறமை சார்ந்த குழுமங்கள் அமைத்துக்கொள்வது /ஏற்படுத்திக்கொள்வது நடைமுறையில் சாத்தியமா ?

மா சிவகுமார் said...

வாங்க வாழ்க தமிழ், மஞ்சூர் ராசா, கார்த்திக், சக்தி.

இருப்பதை வெளிப்படுத்தினால் அது தகவல் பரிமாற்றம், இல்லாததை தம்பட்டம் அடித்தால் அது சுய விளம்பரம்/தற்பெருமை.

இருப்பதை வெளிப்படுத்தாமல் இருந்தால் நமக்குத்தான் இழப்பு.

சரிதானே!

அன்புடன்,
மா சிவகுமார்