சில நிறுவனங்கள் சக்கை போடு போடுகின்றன. மிதிவண்டியில் தேநீர் விற்றுக் கொண்டிருந்த நிறுவனர் தன் வாழ்நாளிலேயே நிறுவனத்தை பல கோடி மதிப்புள்ளதாக உருவாக்கி விட்டுச் செல்ல, அடுத்த தலைமுறையில் இன்னும் சில உயரங்களைத் தொட்டு மேலே மேலே வளர்ந்து கொண்டே போகின்றது அத்தகைய நிறுவனங்கள். ஒரு சில ஆண்டுகள் நன்றாக வளர்ந்து விட்டு அப்புறம் என்ன நடக்கிறது என்று தெரியாமல் வாடிப் போகின்றன இன்னும் சில நிறுவனங்கள்.
ஒரு சரவண பவன் கிளைக்குள் போய்ப் பார்த்தால், இருபத்தியைந்தாம் ஆண்டில் இருபத்தியைந்தாம் கிளையை மயிலாப்பூரில் துவங்குகிறோம் என்று அறிக்கையைப் பார்க்க முடிகிறது. நேற்று மதியம் சத்யம் திரைப்பட அரங்கு அருகில் இருக்கும் சரவணா துரித உணவுக்குள் போய் சாப்பிடப் போனேன். காசு வாங்கிக் கொண்டு சீட்டுக் கொடுக்கும் கல்லாப்பெட்டி ஊழியர்கள் கொஞ்சம் முசுடாக இருக்கிறார்கள். பொதுவாக சீட்டை உணவுக்காகக் கொடுத்த பிறகு பொறுமையில்லாமல் கால் மாற்றி நின்று கொண்டிருப்பேன்.
நேற்று, உள்ளே என்ன நடக்கிறது என்று அவதானித்தேன். சீட்டை வாங்கி ஒவ்வொருவருக்கும் தட்டில் சிற்றுண்டிகளையும், குட்டிச்சாப்பாட்டுத் தட்டுகளையும், தேநீர், காபி குவளைகளையும் கொடுப்பது ஒருவர். பொதிந்து வாங்கிப் போக வருபவர்களைக் கவனிக்க இன்னொருவர். பின்னணியில் இவர்கள் இருவருக்கும் ஆதரவு அளிக்க ஒவ்வொரு பகுதியாக ஏழெட்டு பேர்.
எல்லோரிடமும் பொதுவாகத் தெரியும் ஒன்று அவர்களிடம் இருக்கும் உற்சாகமும் மனநிறைவும்தான். ஒவ்வொருவரும் கடனே என்று வேலை செய்வது போல இல்லாமல் உண்மையான மகிழ்ச்சியுடன், உதட்டில் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டு நடமாடும் வீட்டுச் சூழலில் இருப்பது போலப் பட்டது.
சமையல் பக்குவங்கள், நல்ல சேர்க்கைகள், தரக்கட்டுப்பாடு என நிர்ணயித்து விட்டாலும், கடைசியில் ராஜகோபாலோ, ஷிவகுமாரோ, சரவணனோ வந்து வாடிக்கையாளர்களைக் கவனிக்கவில்லை. ஊழியர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு கனிவும் செய்யும் வேலையில் பற்றும் இருப்பது இந்நிறுவனத்தின் வெற்றிக்கு ஒரு காரணம் என்று படுகிறது.
சிறிய நிறுவனம் ஒன்றை நடத்தும் போது, ஏற்கனவே இந்த வழியில் நடந்து பெரிய நிறுவனமாக வளர்ந்து விட்டவர்களிடமிருந்து கற்றுக் கொள்வது பலனளிக்கும். ஒரு அம்பானி தன் வாழ்நாளிலேயே பல்லாயிரம் கோடி தொழில் குழுமத்தை உருவாக்கி, அது இரண்டாகப் பிரிந்த பிறகும் அவரது இரண்டு மகன்களும் இன்னும் கலக்குவது எப்படி? ஒரு டாடா நிறுவனம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தான் செய்வதில் எல்லாம் நேர்மையையும், சமூக உணர்ச்சியையும் உள்ளடக்கி மாறி வரும் தேவைகளுக்கேற்ப புதிய துறைகளிலும் நுழைந்து தனது இடத்தைத் தக்க வைத்திருப்பது எப்படி?
எவ்வளவோ கணினிகள் வந்து விட்டாலும், ஒரு ஐபிஎம் மேசைக்கணினியோ, மடிக்கணினியோ தரும் நிறைவான உணர்வு இன்னும் நீடித்திருப்பது எப்படி? சரவணா ஸ்டோர்சில் பொருள் வாங்கும் அனுபவமும், சேகர் எம்போரியத்தில் வாங்கும் அனுபவமும் ஏன் வித்தியாசமாக இருக்கிறது?
ஒரு காலத்தில் கோலோச்சிய கோத்ரெஜும், ரஸ்னாவும் எங்கே இருக்கின்றன?
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேலாண்மை என்பது ஒரு அறிவியல் என்ற கருத்து வேகமாகப் பரவியது. சரியான அமைப்புகளை ஏற்படுத்தி, வேலைகளை சிறு பகுதிகளாகப் பிரித்து வைத்து விட்டால், நிறுவனம் தன்னால் ஓடிக் கொண்டே இருக்கும் என்பத அதன் அடிப்படைத் தத்துவம்.
ஆனால் நிறுவனம் இயங்கும் சூழ்நிலை மாறிக் கொண்டே இருக்கிறது.
வாடிக்கையாளரின் தேவைகள் மாறுகின்றன, போட்டியாளர்களின் திறமை அதிகமாகிறது.
விற்பனை வரி போய் மதிப்பு கூட்டும் வரி வருகிறது,
உலக வர்த்தக நிறுவன அமைப்பின் கீழ் பன்னாட்டு வணிக முறைகள் மாறி போட்டி அதிகரிக்கிறது,
மென்பொருள் துறையில் வளர்ச்சியால் சம்பள விகிதங்கள் வெகுவாக உயர்ந்து விட்டன.
குறிப்பிட்ட நேரத்தில் பொருந்தும் ஒரு அமைப்பையும் வேலை செய்யும் விதிகளையும் அமைத்து விட்டு, அவை பின்பற்றப்படுகின்றனவா என்று கண்காணிக்க மேலாளர்களையும் நியமித்து விட்டு, இன்னொரு கண்காணிப்பாக தணிக்கைக் குழுக்களை ஏற்படுத்தி, ஆண்டுக்கு ஒரு முறை வெளி தணிக்கை அதிகாரிகளால் இவை அனைத்தையும் சரி பார்க்க ஏற்பாடு செய்து விட்ட பிறகு வண்டி ஓடிக் கொண்டே இருக்குமா என்ன?
ஒரு டாடா இண்டிகாம் சேவை மையத்துக்குள் போய்ப் பாருங்கள், அதே வேலையைச் செய்யும் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் சேவை மையத்துக்குள் புகுந்து பாருங்கள். இரண்டிலும் மாறுபட்ட தனித்துவமான உணர்வு, அனுபவம் கிடைக்கும். இதை வரையறுத்தது யார்?
வரிசையாக எட்டு மளிகைக்கடைகள் இருந்தாலும் குறிப்பிட்ட கடைக்குப் போய் பொருள் வாங்குகிறோம். ஏன்? அவ்வளவு பெரிய சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ் அருகில் துணி விற்கும் சிறிய கடைகளும் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன, எப்படி?
விமானத்தில் ஏறியதும் ஏர் இந்தியா விமானத்துக்கும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்துக்குமே (இரண்டுமே வெளிநாட்டு சேவை விமானங்கள்) ஒரே மாதிரியான அனுபவம் கிடைப்பதில்லையே, ஏன்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்து விட்டால் அடுத்த வெற்றிக்கதைக்கான நிறுவனத்தை ஆரம்பித்து விடலாம். ஏற்றுமதி வியாபரத்தில் வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பெயர், முகவரியைப் பெற்று விடப் பெருமுயற்சி செய்வார்கள். அது மட்டும் இருந்து விட்டால் எல்லாம் சாதித்து விடலாம் என்று நினைப்போம். ஒரு அமெரிக்க திட்ட வேலை கிடைத்து விட்டால் சொந்தத் தொழில் ஆரம்பித்து விடுவேன் என்று எல்லோருக்குமே ஒரு கனவு இருக்கும்?
எங்க அம்மா தமிழாசிரியை. தமிழில் இளநிலை பட்டம் பெற்று, முதுநிலை பட்டம், ஆசிரியப் பயிற்சி இளநிலை, முதுநிலை என்று படித்துக் கொண்டே போனதில் தமிழ் இலக்கியங்கள், தமிழ் மொழிச் செல்வங்களில் நல்ல புலமை ஏற்பட்டு விட்டது. ஆனால், இன்று வரை கடிதங்கள் எழுதுவது, பாடக்குறிப்புகள் எழுதுவது தவிர எனக்குத் தெரிந்து எதையும் எழுத முயற்சிக்கவே இல்லை.
'என்ன எழுதுவது என்று தெரியாமல் எப்படி எழுதுவது. யாராவது ஒரு தலைப்பைக் கொடுத்து விட்டால் எழுத ஆரம்பித்து விடலாம்' என்று சொல்வார்கள். தலைப்பு மட்டுமா முக்கியம்.
ஒரு நிறுவனத்தில் தலைமை மேலாளராக பல ஆண்டுகள் பணி புரிந்து எல்லா நெளிவு சுளிவுகளையும் கற்றுக் கொண்டாலும் தனியே தொழில் ஆரம்பிக்க முற்றிலும் பாதுகாப்பான திட்டமிட்ட வழி கிடையாது.
நான் டாடாவில் பணி புரியும் போது சில நடுவயது மேலாளர்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு நாள் மூலப் பொருள் பிரிவில் பொறுப்பாளராக இருப்பார். அவர் இல்லா விட்டால் அந்த இடமே நின்று விடும் என்று தோன்றும். ஏதோ காரணத்தினால், அவரையே இறுதி உற்பத்தி தரக்கண்காணிப்புக்கு அனுப்பி விடுவார்கள். எந்த முணுமுணுப்பும் இல்லாமல் அங்கு வேலையை ஆரம்பித்து விடுவார்கள். அங்கும் சிறப்பாக பணி புரிவார்கள்.
இவர்கள் டாடா நிறுவனத்தை விட்டு வெளியே வந்து விட்டால் அவர்களின் திறமைக்குப் பொருத்தமான வேலை வேறு எங்கும் கிடைப்பது அரிது. அந்த நிறுவனத்தில் நெளிவுசுளிவுகளை நன்கு உணர்ந்து நிறுவனம் எப்படி இயங்குகிறது என்பதை நன்றாகப் புரிந்து கொண்டு வேலைகளைச் செய்ய முடிவதுதான் அவர்களது முதன்மை வளம். அதற்கு வெளியில் மதிப்பு இருக்காது.
அப்படி இருபது ஆண்டு அனுபவத்துக்குப் பிறகு வெளியில் வேலை தேடிச் சென்ற ஒரு மேலாளர் சில மாதங்களிலேயே திரும்பி வந்து விட்டார். அவருக்கு தண்ணீரில் நீந்த மட்டும்தான் பழக்கம், கட்டாந்தரையில் ஓடத் தெரியாது.
தொழிலை உருவாக்கி நடத்த ஒரு நிறுனத்தின் எல்லா பிரிவுகளிலும் புலமை இருப்பது மட்டும் போதாது. இன்னும் சொல்லப்போனால் அப்படி எல்லாப் பிரிவிலும் புலமை தேவை கூட இல்லை.
தேவைப்படுவது, எல்லாவற்றையும் ஒருங்கிணைத்த பிறகு கூடுதலாகச் சேரக்கப்படும் ஒரு மாயப் பொருள். அதுதான் தொழில் முனைவோரால் சேர்க்கப்படுவது.
புதிய வையவிரிவுவலை நுட்பங்கள் வந்ததும் வலையுலாவியிலேயே பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவைகள் ஒவ்வொன்றும் மாறி விட்டன. யாஹூ, ஜிமெயில், ரிடிஃப்மெயில் இன்னும் ஹாட்மெயில் எல்லாம் புதிய உருவெடுக்கின்றன. தொழில் நுட்பங்கள் ஒன்றுதான், ஆனால் கடைசியில் வெளிவரும் பயன்பாட்டில் பெரிய வேறுபாடுகள்.
வீடு கட்டும் செங்கல், மணல், கம்பி, கல் ஒன்றுதான். எப்படி ஒவ்வொரு வீடும் வெவ்வேறு நிறைவைத் தருகின்றன?
கூகுள் இணையத்தில் தேடும் சேவையில் ஆரம்பித்தது. அப்புறம் மின்ஞ்சல் சேவை. பிளாக்கரை வாங்கிக் கொண்டது, ஆர்க்குட்டை வாங்கியது, பிக்காசா, வரைபடங்கள் என்று சேர்த்துக் கொண்டே போகிறது.
புதிதாக உருவாக்கப்பட்ட சேவைகளிலும், வாங்கப்பட்ட சேவை கூகுளின் கீழ் வந்து சில காலம் கழிந்தும் ஒரு குறிப்பிட்ட, வரையறுக்க முடியாத பண்பு வந்து விடுவதை அவதானிக்க முடிகிறது. ஒருவருக்கு அந்தப் பண்பு பிடித்திருக்கலாம், இன்னொருவருக்கு அது எரிச்சலூட்டலாம். அந்த தனித்துவம் எவ்வளவு வலிமையாக இருக்கிறது, எவ்வளவு பேரைக் கவர்கிறது என்பதைப் பொறுத்தது ஒரு நிறுவனத்தின் வெற்றி.
மைக்ரோசாப்டின் சேவைகளிலும் இதே மாதிரியான பொதுப் பண்பு ஒன்றைப் பார்க்கலாம்.
அந்த தனித்துவம் எங்கிருந்து வருகிறது? அதுதான் நிறுவனரின் பங்களிப்பு.
நிறவனத்தை ஆரம்பித்தவர் தன்னுடைய கருத்துகளை நம்பிக்கைகளை கொள்கைகளை எப்படி மேம்படுத்திக் கொண்டு, அதை நிறுவனத்தின் எல்லா உறுப்பினருக்கும் பரவச் செய்கிறாரோ அதைப் பொறுத்ததுதான் அதன் வளர்ச்சியும் எதிர்காலமும்.