Tuesday, January 2, 2007

நெய்க்கு தொன்னை ஆதாரமா? அல்லது...

தேவைகளையும் நம்மிடம் இருக்கும் வளங்களையும் எப்படி பொருத்திப் போவது என்பது இன்னொரு பெரிய கேள்வி. இதுவரை வாடிக்கையாளர் என்ன கேட்கிறார்களோ, அல்லது எதைச் செய்தால் பணம் வசூலிக்க முடியுமோ அந்த வேலைகளுக்கு யார் பொருத்தமோ அவரை ஈடுபடுத்தி ஓடிக் கொண்டிருந்தோம்.

தேவைகளின் நெருக்கம் அதிகமாக இருக்கும் போது கைவசம் இருக்கும் மனிதவளத்தைச் சரியாகத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டும் என்று தோன்றியது. குறிப்பிட்ட காலகட்டத்தில் வாடிக்கையாளருக்கு வாக்குக் கொடுத்த பணிகளை முடித்துக் கொடுத்து பணத்தைக் கொண்டு வருவது ஒரு பக்கம், மறு பக்கத்தில் பணி புரியும் எல்லோருக்கும் வேலை பொருத்தமாக இருக்கிறதா என்ற கண்காணிப்பது.

குறிப்பிட்ட வாரத்தில் என்னென்ன வேலைகள் முடிக்கப்பட வேண்டும், யார் யார் என்னென்ன வேலை செய்வார்கள் என்று இரண்டு புறத்தையும் பொருத்தி விட்டால் எவர் மீதும் தேவையில்லாத நெருக்கடியும் ஏற்படாது, எவரும் முழுமையான வேலை இல்லாமல் சோர்ந்து போகும் நிலையும் ஏற்படாது.

பொதுவாக நன்றாக வேலை செய்பவர்கள் மீது சுமை ஏறிக் கொண்டே போகும். நிறுவனத்தின் வேலைப் பளுவை மட்டும் கருத்தில் கொண்டு பணித் திட்டமிடும் போது ஏற்கனவே கைநிறைய வைத்திருக்கும் பொறுப்பானவர்களுக்கு இன்னும் கொஞ்சம் கொடுத்து விடலாமா என்று தோன்றுவது இயற்கை. கடனைக் கழித்து விட்டுப் போகும் அரைகுறை திறனாளர்களிடம் பொறுப்பைக் கொடுக்க தயக்கம்.

இதனால் திறமையானவர்கள் மீது நெருக்கம் அதிகமாகி அவர்கள் கடுப்பாக, கொஞ்சம் திறமை குறைந்தவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் சோர்ந்து போக மொத்தத்தில் நிறுனத்திற்கு படிப்படியாக சரிவு ஏற்படும். இரு தரப்பினருமே சில நாட்களுக்குள் வெவ்வேறு காரணங்களுக்காக பணியில் சுணக்கம் காட்ட ஆரம்பிக்க அது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் சீரற்ற பணி வழங்கலை இன்னும் மோசப்படுத்த சில மாதங்களில் சகிக்க முடியாமல் வேறு இடம் தேடுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

ஒரு நிறுவனத்தை விட்டு வேறு இடம் தேடுவதற்கு சம்பளத் தொகை மட்டும் காரணம் கிடையாது என்று நண்பர் ஒருவர் கூறினார். சம்பளம் இரண்டு அல்லது மூன்று மடங்கு கிடைக்கிறது என்றால் அதை விட்டு விட்டு குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள் என்றாலும், வேலை பார்க்கும் இடத்தில் கிடைக்கும் மன நிறைவு, அல்லது அது இல்லாமை இன்னொரு முதன்மை காரணம் என்று தோன்றுகிறது.

மிக அதிகமாக பணிச் சுமை, தன்னால் தாங்க முடியாத அளவுக்கு நெருக்கடி வந்து விட்டால், நேர்மையான பொறுப்பானவர்கள் திடீரென்று ஒரு நாள் விடுப்பு எடுத்து விடுவார்கள். ஒவ்வொரு நாளும் சேர்ந்து கொண்டே போகும் சுமையை சரி செய்து கொள்ள, திட்டமிடப்படாத, தன்னிச்சையான தற்காப்பு நடவடிக்கை போலப் படுகிறது.

மறு பக்கத்தில் போதுமான பணிகள், பொறுப்புகள் வழங்கப்படாமல், கவனம் போதாமல் வந்து போகும் கொஞ்சம் பின்தங்கிய ஊழியர், வேண்டா வெறுப்பாக நேரம் தாழ்த்தி வருவது, அதைச் சுட்டிக் காட்டினால் நேரத்துக்கு வந்து பணி விதிகளை மட்டும் பின்பற்றி பணியில் கருத்து செலுத்தாமல் இருப்பது, உற்சாகம் குன்றி காணப்படுவது என்று சறுக்கிக் கொண்டிருப்பார்கள்.

சிறிய நிறுவனங்களில் ஓரிரு ஆண்டுகளுக்கு மேல் யாரும் நிலைக்க மாட்டேன் என்கிறார்கள் என்பது பொதுவாகக் கேள்விப்படும் குறை.

'பெரிய நிறுவனத்துக்கு அதிக சம்பளத்துக்குத் தாவி விடுகிறார்கள். சேரும் போது நாம் கொடுத்த ஆதரவு, இவ்வளவு காலம் பயிற்சி அளித்து வளர்த்ததை எல்லாம் பொருட்படுத்துவதே இல்லை' என்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கையாளுகிறார்கள்.

சான்றிதழ்களை முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொண்டு குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி புரிய வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக் கொள்வது ஒரு சாரார்.

'கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் அடைத்து கூவென்று சொன்னால் கூவாதம்மா' என்று உணர்ந்து, நமக்கு கிடைக்கப் போவது அவ்வளவுதான், இருக்கும் வரை இருக்கட்டும், அப்புறம் போகும் போது நல்லுணர்வோடு போகட்டும். அப்புறம் நாம் பெரிதாக வளர்ந்த பிறகு அவர்களே விருப்பத்துடன் திரும்பி வருவார்கள்' என்று இன்னொரு தரப்பு.

'ஒருவரை வேலையை விட்டு நீக்க வேண்டுமானால், வேலை நீக்க உத்தரவு கொடுக்க வேண்டியதில்லை. அதைத் தவிர்த்த பிற நெருக்கடிகளாக அவரையே தானாக வேலையை விட்டுப் போக வைத்து விடுவோம்' என்று டாடாவில் ஒரு மேலாளர் கூறுவார்.

அதே நாணயத்தில் மறு புறமாக ஒருவர் வேலையை விட்டு விட்டு, வேறு இடத்துக்குப் போக முடிவு செய்து விட்டால், தானாக பதவி விலகும் கடிதம் எழுதாமல், நிறுவனத்தை போதுமான அளவு வெறுப்பேற்றி அவர்களாகவே வெளியே அனுப்பும் படி செய்ய அதிக நாட்கள் பிடிக்காது. எனவே ஒப்பந்தம் போட்டு ஒருவரை பிடித்து வைத்துக் கொள்ள முடியும் என்பது நடைமுறையில் ஓரிரு மாதங்களுக்கு தவிர்க்க முடியாததை தள்ளிப் போட உதவலாம். அது பிரச்சனைக்குத் தீர்வு கிடையாது.

இரண்டாவது அணுகு முறையில், நிறுவனத்துக்கு மிகச் சிறந்த நண்பர்கள் வட்டம் உருவாகி விடும். ஆனால், நிறுவனம் வளர ஓராண்டு பயிற்சி பெற்றவரை விட்டுக் கொடுத்து விட்டு மீண்டும் ஆரம்பத்திலிருந்து இன்னொருவருக்கு பயிற்சி அளிக்க ஆரம்பிப்பது உதவாது. பெரிய நிறுவனங்கள் இதை ஓரளவு சமாளித்துக் கொண்டாலும், சிறிய நிறுவனங்களுக்கு ஒவ்வொரு விலகலும் ஒரு பேரிடியாகத்தான் இறங்குகிறது.

தத்துவமாகப் பேசினால், பெரிய நிறுனம் மூன்று மடங்கு சம்பளம் கொடுத்து இதே ஆளை எடுத்து சமாளிக்க முடிகிறது என்றால் அவரிடமிருந்து அவ்வளவு மதிப்பு கிடைக்கிறது என்றுதானே பொருள். மூன்று மடங்கு இல்லை, இரண்டு மடங்கு மதிப்பை நம்மால் ஏன் சந்தைப்படுத்தி அவருக்கு உயர் ஊதியம் கொடுக்க முடிவதில்லை என்று சிந்திக்க வேண்டும்.

நம்முடைய மேலாண்மை, திட்டமிடுதலில் எங்கோ குறை இருக்கிறது. ஐந்து ஆண்டு நிறுவனம் நடத்தியதில் எந்த நேரத்திலும் ஊழியர்களின் எண்ணிக்கை இருபதைத் தாண்டியதில்லை. ஆனால் இதுவரை பணிபுரிந்து விட்டுச் சென்றவர்களின் கணக்கை எடுத்தால் அது இருபதுக்கும் அதிகமாக இருக்கும். அதில் சிலர் மிகத் திறமையான, பொறுப்பானவர்கள். சிலர் அவ்வளவு பொறுப்பு காட்டாதவர்கள்.

ஆனால், நிறுவனத்திற்கு ஒரு நாளாவது ஒருவர் வந்து போனால் நிறுனம் செய்யும் முதலீடு ஆரம்பித்து விடுகிறது. விட்டுச் சென்ற முப்பது பேரின் இப்போதைய சம்பளங்களைக் கூட்டினால் நிறுவனத்தின் இன்றைய வருவாயில் பல மடங்காக இருக்கும். அவர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் அவர்களது பங்களிப்பை திறமையைப் பயன்படுத்தி அந்தத் தொகையை விட அதிக வருமானம் ஈட்டத்தான் செய்கிறார்கள்.

பணியை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அதைச் செய்ய வேண்டிய ஊழியர்களின் வளர்ச்சியையும் திட்டமிட்டு செயலாற்றுவது அவசியம் என்று தோன்றுகிறது.

இதற்கு மென்பொருள் பயன்பாடு ஏதேனும் இருக்கிறதா என்று விசாரித்தேன். 'மைக்ரோசாப்டின், எம்எஸ் புரோஜெக்டு என்ற பயன்பாடு பரவாயில்லை, இணையம் மூலமாகக் கிடைக்கும் சில பயன்பாடுகள் உள்ளன, பிளான்னர் என்று அறியப்படும் முன்பு மிஸ்டர் புராஜெக்டு என்ற பயன்பாடு லினக்சில் இருக்கிறது'. ஆனால் எதுவுமே நேரடியாக ஒரு நிறுவனத்தின் தேவைக்குப் பொருந்தாது என்று புரிந்தது.

பெரிய நிறுவனங்கள் தமது தேவைக்கேற்ப தாமே ஒரு கருவியை உருவாக்கிக் கொண்டுள்ளார்களாம். சிறிய நிறுவனமாக அதற்கு முதலீடு செய்ய முடியாவிட்டால், ஒரு குறிப்பேட்டிலோ, கணினி விரிதாளிலோ ஆரம்பித்து அதை தினமும் புதுப்பிக்கும் வேலையை ஒருவர் செய்து வர வேண்டியதுதான்.

நம்முடைய வாடிக்கையாளர்களை எல்லாம், 'விரிதாளை நம்பாதீர்கள், எங்கள் மென்பொருளைப் பயன்படுத்துங்கள்' என்று கேட்டுக் கொண்டு விட்டு, நம்ம வேலைக்கு விரிதாளைப் பயன்படுத்துவது கொஞ்சம் தவறுதான். மாற்றாக மூலநிரலுடன் கிடைக்கும் பரிநிரல் செயலிகளில் ஒன்றை பயன்படுத்த ஆரம்பித்தால், போகப் போக நமது தேவைக்கு ஏற்ப அதையே மாற்றிக் கொள்ளலாம்.

அந்த பயன்பாடு நமது நிறுவனத்தில் புழக்கத்தில் இருக்கும் மென்பொருள் கருவிகளாலேயே உருவாக்கப்பட்டிருப்பதும் நல்லது. நாங்கள் கொஞ்ச நாட்களாக டாட்புராஜெக்டு என்ற பிஎச்பியில் எழுதப்பட்ட பரிநிரல் பயன்பாட்டை பயன்படுத்தி வருகிறோம். எல்லாத் தேவைகளுக்கும் பொருத்தமாக இல்லாவிட்டாலும், மிக உதவியாகவே உள்ளது.

இப்போது வளங்களைத் திட்டமிடுதலில் கருத்தில் கொள்ள முடிவு செய்யும் போதுதான் இடிக்கிறது. பார்க்கலாம்.

No comments: