Monday, January 8, 2007

கேட்டல்

ஒரு நிறுவனத்தை வழி நடத்த சட்ட திட்டங்களுக்கு மேலாக உணர்வு பூர்வமான ஒரு செய்தி வேண்டும். பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் என்றால் கானாப்பாட்டில் கலக்குவார்கள் என்று ஒரு எல்லோரும் நினைக்க நினைக்க புதிதாக வரும் மாணவர்களுக்கு கானாப் பாட்டுக்கான கதவு தானே திறந்து விடுகிறது. அப்படி எல்லோரையும் நினைக்க வைக்க கல்லூரியில் பல மாணவர்கள் கானாப்பாட்டை தமது ஆர்வ நடவடிக்கையாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஒருவருக்கு மேல் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் போது, பொதுவான நடைமுறைகளைச் செயல்படுத்துவது தேவையாகி விடுகிறது. அந்த நடைமுறை விதிகளின் படி, வாடிக்கையாளரிடம் நடந்து கொள்ளும் முறை, செலவுக் கணக்கு எழுதும் முறை, தரக்கட்டுப்பாட்டு முறை என்று பக்கம் பக்கமாக எழுதி, நாட்கணக்கில் விவாதித்தாலும் எல்லோராலும் ஒரே மாதிரி அதைக் கடைப்பிடிக்க முடியாது.

நிறுவனத்தின் சேவை இயல்பைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் இருக்க நிறுவனத்துடன் உறவாடும் வெளியார் குழப்பமான கருத்துக்களை உருவாக்கிக் கொள்வார்கள். புது ஊழியர்களுக்கு நிறுவன நடவடிக்கைகளை, வழி முறைகளைப் புரிய வைக்க பெரும்பாடாகப் போய் விடும். இந்த நிறுனத்தின் பண்பாடு என்று உருவாகி எல்லோரிடமும் பரவுவது நடக்காது.

இங்குதான் தலைமைப் பொறுப்பு வகிப்பவர்களின், மேலாளர்களின் பங்கு தேவை. பிலிப்சு நிறுவனத்தின், எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்வோம் அல்லது மைக்ரோசாப்டின் எல்லா வீட்டிலும் கணினி என்று ஒரு போர் கீதம் எளிதாகப் பதிந்து நிறுனத்துக்கு உயிரும் உருவும், நீடித்த வாழ்நாளும் கொடுக்கிறது. பில் கேட்ஸ், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கணினி போய்ச் சேருவதுதான் நமது குறிக்கோள் என்று புரிய வைத்து எல்லோரின் நம்பிக்கையையும் பெற்று விட்ட பிறகு, அவர் உட்கார்ந்து சின்னச் சின்ன விதிமுறைகளை எழுதிக் கொண்டிருக்கத் தேவை கிடையாது.

இப்படி வரையறுக்கப்படும் குறிக்கோள், சுருக்கமாக, எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் படியாக, நினைவில் நிற்கும் படியாக, முன்னேற்றத்தை அளக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அப்ளையிங் தாட் என்று விப்ரோவின் குறிக்கோள் யாருக்கு என்ன தகவல் சொல்ல வருகிறது என்ற குழப்பமான ஒன்று.
சங்கர் படம் என்றால் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கும், நிறைய செலவு செய்யப்பட்டிருக்கும் என்று எதிர்பார்ப்பை உருவாக்கிய வேலை மட்டும் அவருடையது. அதன் பிறகு அவர் சொல்லாமலேயே சுற்றியிருக்கும் எல்லோரும் சங்கர் படங்களை மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள்.

ஹை பிளேசஸ் என்று கனடாவின் பிரதம மந்திரி ஒரு பாத்திரமாக வரும் கதை ஆர்தர் ஹீலியின் படைப்புகளில் ஒன்று. அவர் பதவியேற்ற புதிதில் ஒரு வரவேற்பில், மது பானங்களை கொண்டு வர, அன்று குடிக்கும் விருப்பம் இல்லாமல், 'ஆப்பிள் சாறு எதுவும் கிடைக்காதா' என்று உரக்கக் கேட்டு அதை வரவழைத்துக் குடிக்கிறார். பிரதருக்கு ஆப்பிள் சாறுதான் பிடிக்கும் என்று பரவலாகி எங்கு போனாலும், ஆப்பிள் சாறுதான் காத்திருக்கிறது. சலித்துப் போனாலும், இதைப் போய் சரி செய்ய நேரத்தை செலவிட மனமில்லாமல் ஆப்பிள் சாறு குடித்தே காலம் தள்ளுகிறார்.

நிறுவனத்தின் சேவை வெளியார்களுக்கு எப்படிப்பட்ட உணர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு செயல்படுத்தா விட்டால் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான புரிதல் இல்லாமல் நாம் எதிர்பார்க்கும் முடிவு வராது.

வெற்றிகரமான நிறுவனங்கள் வறட்டுத்தனமான சட்டதிட்டங்களுக்கு மேல் இது போல் உணர்வு பூர்வமான உறவை ஏற்படுத்தி ஊழியர்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் நேர்மறையான விளைவுகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

இந்த உணர்வு பூர்வமான உறவின் அடித்தளம் தலைமையின் உத்தரவால் வந்து விடாது. நிறுனத்திலிருக்கும் ஒவ்வொருவரும் தனக்கு இதில் பங்கிருக்கிறது, தனக்கு இதில் பெருமை இருக்கிறது என்று உணரச் செய்ய இந்த தளம் பரவலான விவாதங்களின் மூலமாக உரவாக்கப்பட வேண்டும்.

No comments: