Tuesday, January 23, 2007

பொருளாதார அரசியல்

'நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளைப் பொறுத்தவரை கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருப்பதுதான் ஒரே வழி' என்ற பார்வையை மாற்றி மேக்ரோஎகனாமிக் கொள்கைகளை வரையறுத்தவர் கீன்ஸ் என்ற ஆங்கிலேய அறிஞர்.

1920களின் பிற்பகுதியில் தொடங்கி பல ஆணடுகளாகத் தொடர்ந்து நீடித்த 'பெரும் பின்னடவு' என்ற great depression அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரங்களை பேரழிவுக்குக் கொண்டு போனது.
  • ஆயிரக் கணக்கானோர் வேலையில்லாமல் தெருவில் விடப்பட்டார்கள்.
  • வங்கிகள் திவாலாகின.
  • வணிக நிறுவனங்கள் நொடித்துப் போயின.
  • வருமானம் குறைந்து கொண்டே போனது. நாட்டின் உற்பத்தி அளவு ஆண்டுக்கு ஆண்டு கீழே விழுந்து கொண்டிருந்தது.
பழைய கால பொருளாதாரவியலின் படி இந்தப் போக்குகள் தானாகவே சரியாகி மீண்டும் வழக்கமான பொருளாதார நடவடிக்கை ஆரம்பித்து விட வேண்டும். ஆனால் சிக்கலின் தீவிரமும், அதன் நீடித்த தொடர்ச்சியும் மக்களின், அரசுகளின் பொறுமையைச் சோதித்தன. அதற்கு விடையாக வந்ததுதான் கீனிசியன் பொருளாதாரக் கோட்பாடுகள்.

  1. வேலை வாய்ப்புகள் சில நேரங்களில் குறைவது ஏன்? அதைத் தடுக்க ஏதாவது செய்ய முடியுமா?
  2. விலைவாசி ஏறிக் கொண்டே போவது ஏன்? அதற்கு அரசாங்கம் ஏதாவது செய்ய முடியுமா?
  3. ஒரு நாட்டின் உற்பத்தி திறனை அதிகரிக்க அரசுகள் என்ன செய்ய வேண்டும்?
இப்படி சமூகத்தின் சார்பில் கூட்டாக செய்ய வேண்டிய பொருளாதார நடவடிக்கைகளை சுட்டிக் காட்டுவது பொருளாதாரவியலின் வேலையாகப் போய் விட்டது. பொருளாதாரம் படித்த மன்மோகன் சிங் பிரதமராகியிருப்பது அதன் உச்சகட்டம் என்று சொல்லலாம்.

2 comments:

Sri Rangan said...

சிவகுமார்,வணக்கம்.

நீங்கள் குறிக்கும் பொருளாதார அறிஞர் John Maynard Keynesஎன்றே நினைக்கிறேன்.


நீங்கள் குறித்தெழுதும் இந்தக் கட்டுரை மிகவும் மொட்டையானது.


ஒரு பொருளாதாரக் கட்டுரையை இவ்வளவு மொட்டையாக எழுதுவதால் என்னத்தைச் சொல்ல வருகிறீர்கள்?


கீய்னெஸ்சின்(John Maynard Keynes ) கண்முன்னாலேலே அவரது கோட்பாடுகள் கேள்விக் குறியானது.இது மிகவும் வெகுளித்தனமான பொருளாதாரக் கோட்பாடென்பதை அவரது "அவசியமேற்படும்போது வட்டிக்கு வட்டி"விட்டுக் கொடுப்பில,; நாம் காணுவது மிகப் பெரும் நிதியாளர்கள் மென் மேலும் நிதியைப் பெருக்கி,அரச கடன் பளுவை மேலும் மிகையாக்குவதுதாம்.


ஜோன் மேய்நார்ட் கீய்னெஸ்(John Maynard Keynes) அரச கடன் பளுவைக் குறைப்தற்காகத் திட்டமிடுவதாகக் கூறியபோதும், அவரது பொருளியல் புரிதல் அதைச் சிக்கலாக்கியதே தவிர வேறொன்றுமில்லை.இதைக் கண்ணுற்போதுதாம் மார்க்சையும்,கீய்னெஸையும் இணைத்தபடி சில்வியோ கேசல்(Silvio Gesell)தனது பொருளாதாரக் குறிப்பை எழுத முனைந்தார்.அதுதாம் "பொருளாதார இயற்கை விதி" எனும் கோட்பாடு.அதைத்தாம் இறுதியாக நியாய வர்த்தகம் மென்றும் ஒரு சிலர் தூக்கிப் பிடிப்பது.


இதுவுமின்று மனிதரையும் அவர்கள் உழைப்பையும் உறிஞ்சும் வட்டிக்கு வட்டியை எதுவும் செய்ய முடியாதுள்ளது.


உங்கள் கட்டுரையில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விரிவாக வளர்த்துச் செல்லுங்களேன்.இதை உள்வாங்கிக் கொண்டு மேலும் கருத்துக்கள் முன்வைக்கலாமென நினைக்கிறேன்.

உங்கள் கட்டுரையை முழுமையற்றதாக இருக்கிறது.

ஆடம் சிமித்,
மார்க்ஸ்,
ஜோன் மேய்நார்ட் கீய்னெஸ்;
சில்வியோ கேசல்


இந் நான்கு நபர்களினதும் கோட்பாடுகளும் உழைப்பின் சாரத்தை வெவ் வேறு கண்ணோட்டத்தோடு பேசுபவை.இதில் நீங்கள் குறித்த சில நறுக்குகளை எந்தத் தளத்தில் முன் நிறுத்த முனைகிறீர்கள்?


கீய்னெஸ்சின் பொருளாதார முடிவுகள் யாவும் பொருளாதாரத்தில் சம நிலையற்ற போக்குகளை இன்னும் வளர்த்தது.


ஜேர்மனியின் வெளி நாட்டுக்கடன் 1.3 றில்லியன்கள் யுரோவாகும்.ஆனால் ஜேர்மனியில் பத்துவீதமான பணக்காரர்களின் நிதிக் கையிருப்பு 2.5 றில்லியன்கள் யுரோவாகும்.இவர்கள் ஆண்டொன்று அரசிடமிருந்தும்,தனியாரிடமிருந்தும்60 பில்லியன்கள் யுரோவை வட்டியாகப் பெறுகிறார்கள்.


இந்தச் சம நிலையற்ற நிதிச் சுழற்சி எங்ஙனம் பண வீக்கத்தை ஏற்படுத்துமென நாம் மிக இலகுவாக உணரலாம்.இங்கே எந்தக் கீய்னெஸ்சும் இதைச் சரிக்கட்டவில்லை.

உங்கள் கட்டுரையை விருவாக்கி எழுதுங்கள்.அது குறித்துக் கருத்துப் பரிமாறுவோம்.

மா சிவகுமார் said...

ஸ்ரீரங்கன்,

microeconomics பற்றி தொடராக எழுதி வந்தேன் . அதைத் தொடர்ந்து மேக்ரோஎகனாமிக்ஸ் எழுத ஆரம்பிக்கும் முயற்சியின் இரண்டாவது பதிவு இது. உங்களுக்கு மொட்டையாகத் தெரிவதில் வியப்பில்லை :-). இனிமேல் தொடர் என்று குறிப்பிடும்படியே தலைப்பு கொடுக்கிறேன்.

மற்றபடி கீய்னிஸியன் தத்துவங்களைக் குறை கூறும், அலசிப் பார்க்கும் கொள்கைகள் பல வந்து விட்டது உண்மைதான். கடந்த எழுபது ஆண்டுகளில் அரசுகளின் பொருளாதாரச் செயல்பாடுகளால் எல்லாமே குடிமுழுகிப் போய் விட்டது என்று நிறுவ முயலும் ஆராய்ச்சிகளும் நடக்கின்றன. ஆனால், கீய்ன்ஸ் உலகின் போக்கை மாற்றி அமைத்த கருத்துக்களுக்கு வித்திட்டவர் என்பதும், இன்றும் அவரது கொள்கைகளின் அடிப்படையிலேயே பெரும்பாலான தேசிய அரசுகளும் செயல்படுகின்றன என்பதும் மறுக்க முடியாத ஒன்றுதானே.

அன்புடன்,

மா சிவகுமார்