Wednesday, January 3, 2007

பணத்தை உறுதி செய்தல்

வணிகத்தில் பணம் கொடுக்கல்/வாங்கல் எப்போது நடக்க வேண்டும், எந்த அடிப்படையில் நடக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. விற்பவருக்கும் வாங்குபவருக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும்.

கடையில் போய் பொருள் வாங்கும் போது கூட, இதில் பல வகைகளைப் பார்க்கலாம். உணவு விடுதியில் சாப்பிடும் போது, முதலில் சாப்பிட்டு விட்டு, சாப்பிட்டவற்றைப் பொறுத்து பணம் கட்டி விடுகிறோம். மதியச் சாப்பாட்டின் போது நிறைய விடுதிகளில் சாப்பிடும் முன்னரே பணம் கொடுத்து சீட்டு வாங்கிக் கொள்ளும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

எப்படியானாலும், விற்பவர் தனது பொருளை சேவையை அளிப்பதற்கும் வாங்குபவர் பணத்தைக் கொடுப்பதற்கும் உள்ள கால இடைவெளி மிகக் குறைவு. நெருக்கிப் பார்த்தால் விடுதி நிர்வாகம் உள்ளே வரும் ஒவ்வொருவரிடம் முன் பணம் வாங்கிக் கொண்டு சாப்பிட அனுமதிப்பதுதான் சரியான முறை.

யார் யாரோ வருகிறார்கள், சாப்பிட்ட பிறகு காசு இல்லை என்றால் என்ன செய்வது? அதனால் பணத்தை முதலிலேயே வாங்கிக் கொள்ள வேண்டியதுதான் பாதுகாப்பு. சாப்பிடுபவர்களுக்கும் உறுதி இருக்கிறது. இவ்வளவு பெரிய விடுதி, இவ்வளவு பேர் வேலை பார்க்கிறார்கள், கண் முன்னால் சாப்பாடு தெரிகிறது, அதனால் பணத்தைக் கொடுத்து விட்டால் சாப்பாடு கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் தேவையில்லை.

அதே விடுதியில் ஒரு நிகழ்ச்சிக்காக நூறு சாப்பாடு கொண்டு வரச் சொன்னால், முன்பணம் வாங்காமல் ஆரம்பிக்க மாட்டார்கள். அதில் முடங்கும் பணம் அதிகம், நூறு சாப்பாடு கேட்பவர் அதில் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வேளை நிகழ்ச்சி நடக்காமல் போய், சாப்பாடு வேண்டாம் என்று திடீரென்று தகவல் சொல்லி விட்டால், செய்து வைத்ததை விடுதியினர் என்ன செய்ய முடியும்?

ஒரு வணிக நிறுவனம், இன்னொரு வணிக நிறுவனத்துக்கு விற்கும் போது இதே போன்ற கேள்விகள் எழுகின்றன. அதற்கு விடைகள் பல காரணிகளைப் பொறுத்து ஒவ்வொரு சூழலைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.

  1. வாங்குபவர் முழுத்தொகையையும் முன் பணமாகக் கொடுத்து விட்டுக் காத்திருப்பது.

    பொருள் விற்கும் நிறுவனம் மிகப் பெரியதாகவும் நம்பகத்துக்குரியதாகவும் இருந்து, விற்கும் பொருளின் சந்தைத் தேவை அதிகமாக இருந்தால், அவர்கள் விருப்பப்படி சட்டம் போடலாம். ஒரு மாதம் முன்பே பணத்தைக் கட்டினால்தான் சரக்கு அனுப்புவோம், என்று சொல்லி விட்டால் வாங்குபவர் பணத்தைக் கட்டி வாங்கித்தான் ஆக வேண்டும்.

    இதில் முன்கூட்டியே பணத்தைக் கட்டி விட்ட வாங்குபவர், பொருளின் தரத்தில் குறை இருந்தாலோ, சரியான நேரத்தில் பொருள் வந்து சேராவிட்டாலோ, விற்பனை நிறுவனத்தை தொங்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான். வாங்குபவர் கையில் எந்தப் பிடியும் இல்லை.

  2. விற்பவர், பொருள்/சேவையை வழங்கி விட்டு, அது வாடிக்கையாளரை நிறைவு செய்து விட்ட பிறகு பணத்தை பெற்றுக் கொள்வது.

    இது இன்னொரு எல்லை. இங்கு வாங்குபவருக்கு முழு ஆதாயம். 'பொருளைக் கொண்டு வா, எல்லாம் சரியாக இருந்தால் பணத்தைப் பெற்றுக் கொள், பணம் உடனேயே கிடைக்கலாம், அல்லது சில நாட்கள் கழிந்து கிடைக்கலாம்'.

    பொருளை அனுப்பி விட்டு வாங்கியவர் பின்னால் அலைய வேண்டியதுதான். பெரும்பாலான கொடுக்கல் வாங்கல் இந்த வகையில்தான் நடக்கின்றன. வாங்கும் நிறுவனத்தின் வலிமை, பொருளின் சந்தையில் கடும் போட்டி நிலவுதல் என்று விற்பவருக்கு வேறு வழி இல்லாமல் போய் விடுகிறது.

  3. வங்கி உத்தரவாதங்கள்

    உள்நாட்டு வணிகத்தில் மேலே சொன்ன இரண்டு முறைகளில் ஏதாவது தகராறு வந்தாலும் தீர்த்துக் கொள்ள, பேருந்தில் சீட்டு வாங்கிப் போய் இறங்கி விடலாம். வெளிநாடு, அல்லது அதிக தூரத்தில் இருக்கும் நிறுவனங்கள் வணிகம் செய்யும் போது, இது போல் ஒரே நிறுவனம் எல்லா சுமையையும் ஏற்றுக் கொள்வது நடக்காது. இதற்காக பெயர் பெற்ற வங்கி ஒன்றை இடையில் வைத்துக் கொள்ளலாம்.

    பொருள் ஏற்றுமதி,இறக்குமதியில் பரவலாகப் பயன்படுத்தப்படுவது லெட்டர் ஆஃப் கிரெடிட் எனப்படும் வங்கியின் நம்பிக்கைக் கடிதம். என்ன விலை, என்ன தரம் என்று விற்பவரும் வாங்குபவரும் முடிவு செய்து கொண்ட பிறகு ஒரு விற்பனை ஒப்பந்தத்தை போட்டுக் கொள்வார்கள். அந்த ஒப்பந்தப்படி பொருளை அனுப்பி விட்டால் பணம் கிடைத்து விடும் என்று உறுதியை விற்பனையாளருக்கு அளிக்க, வாங்குபவர் தனது வங்கியை அணுகி விற்பனையாளருக்கு ஒரு கடிதம் அனுப்பக் கேட்டுக் கொள்வார்.

    அந்தக் கடிதத்தில், 'இன்ன ஆவணங்களை எங்கள் வங்கியில் சமர்ப்பித்தால் உங்களது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள விவரப்படி பணம் கொடுப்பதாக உறுதி கூறுகிறோம்' என்று வங்கி சொல்லியிருக்கும். இந்த ஆவணங்கள் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்.

    பொதுவாக,
    • பொருளை அனுப்பி விட்டதை உறுதி செய்யும் போக்குவரத்து சீட்டு,
    • பொருளின தரத்தை உறுதி செய்யும் தரக்கட்டுப்பாடு சான்றிதழ்,
    • பொருளின் எண்ணிக்கை, விலை மற்றும் மதிப்பைக் குறிப்பிடும் விற்பனை சீட்டு,
    • பொருளின் எடை, பொதிகளின் எண்ணிக்கை விவரங்களைத் தரும் பொதிச் சீட்டு போன்றவற்றைக் கேட்பார்கள்.

      உற்பத்தியை முடித்து, தர நிர்ணயம் செய்து, சரியாக பொதிந்து கப்பலில் ஏற்றிய சான்றைப் பெற்று வங்கிக்கு அனுப்பினால் பணம் கிடைத்து விடும். வாங்குபவர் அந்தப் பொருளை எடுத்துக்கொள்ளாமலோ, எடுத்துக் கொண்ட பிறகு பணம் கொடுக்காமலோ இருக்க வழி இல்லை. இந்த உறுதி விற்பவருக்குக் கிடைத்து விடுகிறது.

      இன்ன பொருளை, இன்ன தரத்தில், இன்ன வகையில் பொதிந்து அனுப்பி விட்டார்கள் என்று மூன்றாம் தரப்புகளின் சான்று மூலம் உறுதி கிடைத்து விட்ட பிறகுதான் பணம் அனுப்புவதால் வாங்குபவருக்கும் உறுதியின்மை குறைவு.
இது போன்ற நம்பிக்கை கடிதம் அனுப்ப வங்கி வாங்கும் நிறுவனத்திடமிருந்து பணத்தை முன்கூட்டியே வைப்புநிதியாக வாங்கிக் கொள்ளும், அல்லது ஏற்கனவே இருக்கும் உறவின் அடிப்படையில் குறிப்பிட்ட தொகை வரை இந்த லெட்டர் ஆஃப் கிரெடிட் வழங்க முன்வரலாம்.

இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தில் பல வேறு வங்கிகளும், நிறுவனங்களும் நுழைக்கப்படலாம்.

மற்றபடி ஏற்றி அனுப்பிய போக்குவரத்து சீட்டைக் காட்டினால்தான் பொருள் கிடைக்கும் என்றக் கட்டுப்பாட்டின் படி, பணம் கொடுத்து போக்குவரத்து சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுதல் என்ற நேரடியான முறையும் பழக்கத்தில் உண்டு.

எந்த வணிகத்திலும், வெளியார் உத்தரவாதத்தை விட, வாங்குபவர்-விற்பவர்களுக்கிடையேயான நம்பிக்கை, உறவுதான் முக்கியமானது.

மென்பொருள் செய்து கொடுக்கும் நமது துறையில் எல்லாமே நம்பிக்கைதான். மென்பொருள் நிறுவனத்தின் முந்தைய நடத்தை, தற்போதைய அளவு என்று வாடிக்கையாளருக்கு நம்பிக்கை ஊட்டிய பிறகு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக வாங்கிய பிறகுதான் வேலையே ஆரம்பிக்கிறோம். இதுவே பழக்கமாக இருக்கிறது.

இந்தப் பழக்கத்தைப் பயன்படுத்தி பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விட்ட சிறு நிறுவனங்களும் பல உண்டு. ஆரம்பத்தில் பல வாடிக்கையாளர்கள் அத்தகைய அனுபவத்தைச் சுட்டிக் காட்டி, மென்பொருளை நிறுவி, செயல்படுத்திக் காட்டினால்தான் பணம் தருவேன் என்று சொன்னது கூட உண்டு. அப்போதுதான் ஆரம்பித்திருந்த நிறுவனத்தில் வேறு வழியில்லாமல் வாய்ப்புக் கிடைக்கிறதே என்று பல்லைக் கடித்துக் கொண்டு பணியில் இறங்கி மாட்டிக் கொண்டிருக்கிறோம்.

முதலிலேயே பணத்தைப் போடா விட்டால் வாடிக்கையாளர் நிறுவனத்துக்கும் நிர்வாகத்துக்கும் ஈடுபாடு வருவது நடக்காது. பணம் கொடுக்க முன்வருவது, நமது மென்பொருளைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் உறுதியையும் காட்டுகிறது. அதனால் மொத்த விலையின் 10%த்தையாவது முன்பணமாக வாங்காமல் வேலை ஆரம்பிப்பதே இல்லை என்று செயல்பட வேண்டும்.

No comments: