Thursday, January 11, 2007

தனிப்பயனாக்கம்

ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனிச்சிறப்பானவர். தேவைகள் மாறுபடுகின்றன என்று புரிதலுடன் செயல்படுவது சில பொருட்களுக்குத் தேவை. ஒருவரின் செலவுகளில் பெரும்பங்கை வகிக்கும் சேவை/ பொருட்களை விற்கும் போது அந்த வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப சேவை அளிப்பது தேவை.

பத்து ரூபாய் கொடுத்து பேனா வாங்கும் போது இருக்கும் எதிர்பார்ப்புகள், பத்து லட்ச ரூபாய் கொடுத்து வீடு வாங்குவதோடு ஒப்பிட முடியாதவை. இது மாதம் இருபதாயிரம் ரூபாய் வருமானம் இருப்பவருக்கு. கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்களுக்கு இந்த அளவுகள் மாறுபடலாம், ஆனால் சொல்ல வருவது எல்லோருக்கும் பொருந்தும்.

வருமானத்தில் பெரும்பங்கை எடுத்துக்கொள்ளும் அல்லது வாழ்க்கையை பெரிதும் மாற்றி விடப் போகும் தேவைகளுக்கு ஒவ்வொரு வாடிக்கையாளரையும் தனிப்பட்ட முறையில் கவனித்து சேவையை மாற்றி அமைத்து வழங்க வேண்டும். அப்படிப்பட்ட தொழில்களில் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும் போதே ஒரு நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்பதால் அப்படிச் செய்வதில் சிரமும் இல்லை.

'நீங்கள் எந்த நிறத்தில் வேண்டுமானாலும் கார் வாங்கிக் கொள்ளலாம், அது கறுப்பு நிறமாக இருக்க வேண்டும்' என்று விற்ற ஃபோர்டை ஆரம்ப உற்சாகத்தில் சகித்துக் கொண்ட சந்தை போட்டி வந்தவுடன், தனி விருப்பங்களை நிறைவேற்ற முயலும் பொருட்களுக்குத் தாவி விட ஆரம்பித்தனர். உண்மையில் மிக வெற்றிகரமாக இயங்கும் நுகர்பொருள் துறை நிறுவனங்கள் கூட ஒவ்வொரு வாடிக்கையாளரையும் சிறப்பாக தனியாகக் கவனிக்கப்பட்டதாக உணரச் செய்வதற்கான வழிமுறைகளைக் கண்டு கொண்டவையாகத்தான் இருக்கின்றன.

வீடு விற்பவர்கள், ஆயுள் காப்பீடு விற்பவர்கள், தொழிற்சாலைகளுக்குப் பெரிய இயந்திரங்களை வழங்குபவர்கள் இவர்களுடன், நிறுனத்தின் எல்லா மூலைகளிலும் ஊடுருவி மாற்றங்களை கொண்டு வரக் கூடிய மென்பொருள் சேவை வழங்குபவர்களுக்கும் ஒரே மாதிரியான பொருளை எல்லோருக்கும் விற்றுக் கொள்ளலாம் என்ற அணுகு முறை உதவாது.

கண்களை மூடிக் கொண்டு, காய்ச்சல் என்றால் இன்ன மருந்து, தலைவலி என்றால் இன்னொரு மாத்திரை என்று கொடுத்து விட முடியும் மருந்துக் கடை பிரதிநிதிகள் இருந்தாலும், மருத்துவர்களைத் தேடிப் போகும் கூட்டம் குறைந்து விடாது. மருத்துவர் நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய், வாய்ப்ப கொடுப்பதுதான் பொருத்தமானது. மருந்து ஒன்றுதான், ஆனால் அதையே ஒரு மருத்துவர், உடல்நிலையை சூழலை ஆராய்ந்து பரிந்துரைக்கும் போது கிடைக்கும் பலன், வெறுமனே மருந்தை உள்ளே தள்ளுவதில் வராது.

'புதிய வாடிக்கையாளரின் தேவைகள் என்ன, அவர்கள் பின்பற்றும் வழிமுறைகள் என்ன, எப்படி செயல்பட்டால் அவர்களுக்கு வேலை நடக்கும்' என்று அடியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். முன் அனுபவங்கள், ஏற்கனவே பார்த்திருந்த இருபத்தைந்து வாடிக்கையாளர்களுடன் ஒப்பிட்டு ஆரம்பத்திலேயே ஒப்பீட்டாக திட்டம் தீட்டினால் அந்த வரையறையை உடைக்கும் வரை இழுத்தடிப்புதான்.

முதலில் பார்க்கும் போது திறந்த மனதுடன் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அலசும் போது முந்தைய அனுபவத்துடன் ஒப்பிட முனையலாம். ஏற்படுத்தி வைத்திருந்த செயல்திட்டத்தின் அமைப்புக்குள் புதிய விபரங்களை பொருத்திக் கொள்ளலாம். ஆனால், எப்போதுமே நினைவில் வைத்திருக்க வேண்டியது தற்போது வேலை செய்யும் வாடிக்கையாளரின் தேவைகளை மட்டுமே. அதற்கு இடையூறாக வேறு எதையும் உறுதியாக ஒதுக்கித் தள்ளி விட வேண்டும்.

முந்தைய அனுபவங்களை வழிகாட்டியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே ஒழிய, அவை வழியை மறைக்கும் போது அகற்றி விட்டு புதிய முறையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

No comments: