Monday, January 8, 2007

பேச்சும் செயலும்

வாய்ச்சொல்லில் வீரம்?
நான் வேலை பார்த்த ஒரு நிறுவனத்தில் எல்லா நிறுவனங்களைப் போல தரத்துக்கு முதலிடம் கொடுக்கும் வாக்கியங்கள், முழக்கங்கள், பேச்சுக்கள் ஏராளம் உண்டு. ஆனால், இறுதித் தரக்கட்டுப்பாட்டு அறையில் ஏதாவது கருத்து வேறு பாடு ஏற்பாட்டு ஒரு தரப்பு பொருளை வாடிக்கையாளருக்கு அனுப்ப முடியாது, தரம் சரியில்லை என்று வாதிட, இன்னொரு தரப்பு அப்படி நிறுத்தினால் அந்த மாத விற்பனை அளவு பாதிக்கப்பட்டு விடும் என்று எதிர் வாதம் செய்து கொணடிருப்பார்கள்.

கடைசியில் முடிவெடுக்க தொழிற்சாலையின் தலைவரைக் கூப்பிடுவார்கள். நான் பார்த்தது வரை அவர் தரத்துக்கு ஆதரவாக முடிவு எடுத்ததே இல்லை. கூட்டங்களில் அவர் தரக் கட்டுப்பாடு பற்றி ஆயிரம் பேசினாலும், இப்படி முடிவு எடுக்கும் நேரத்தில் ஒருமுறை அவர் காட்டும் வழி தொழிற்சாலை எங்கும் மிக விரைவில் மிக எளிதாகப் பரவி விடும்.

'அவன் கொடுக்கிற காசுக்கு இவ்வளவு போதும், கொஞ்சம் முன்னபின்ன இருந்தாலே போதும். நம்ம விட்டா வேற எங்க போவாங்க. வந்துதான் தீர வேண்டும். ' என்று வாடிக்கையாளரை இழிக்கின்ற போக்கு பக்கம் பக்கமாக எழுதப்பட்ட தரக்கட்டுப்பாடு ஆவணங்களையும் மீறி ஊழியர்களிடையேயும், தொழிலாளர்களிடையேயும் பரவியிருந்தது.

பெரிய நிறுவனத்தில் ஒரு உயர் மேலாளர் இப்படி இருந்தால் அவரை சமன் செய்ய, அவருக்கு மூத்த மேலாளரோ, அல்லது அவருக்கு ஒரு நிலை கீழே இருக்கின்ற மேலாளரோ, தரத்துக்கு தாங்கிப் பிடிப்பவர்களாக இருந்து விடுவார்கள். ஆனால், ஒரு சிறு நிறுவனத்தில் வழக்கமாக ஒருவர்தான் தலைமைப் பொறுப்பில் இருப்பார். அவரது செயல்கள் நிறுவனத்துக்கு வழி காட்டும், பேச்சுக்கள் இல்லை.

'யாரும் அலுவலகத்துக்கு தாமதமாக வரக்கூடாது' என்று உத்தரவு போட்டு விட்டுத் தான் தினமும் அலுவலக நேரம் தாண்டி வருவதை வழக்கமாக வைத்திருக்கும் தலைவருக்குப் பயந்து ஊழியர்கள் நேரத்துக்கு வரலாம். ஆனால், நேரத்துக்கு வரும் உண்மையான பொறுப்பு அவர்களிடம் இருக்காது. வெளியில் ஒரு வாடிக்கையாளரைச் சந்திக்கும் போதோ, அல்லது கண்காணிப்பு இல்லாத நேரங்களில் தலைவரின் செயலின் மூலம் கிடைத்த வழிகாட்டலின் படி நேரம் தவறி செயல்படுவார்கள்.

முன்வரிசையிலிருந்து வழிநடத்துதல் என்றால் படைத்தலைவன் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு படைகளின் முன்னால் போக வேண்டும் என்று பொருள் இல்லை. நிறுவனத்திற்கு தான் அறிவுறுத்தும் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதில் முதல் இடம் வகிப்பது என்பது தலைமையின் பொறுப்பு. செயல், சொற்களை விட உரக்கப் பேசுகிறது என்பது ஆங்கிலப் பழமொழி.

எங்கள் நிறுவனத்தில், 'லெதர்லிங்க் கோஸ் பக்ஃப்ரீ' என்று ஒரு முழக்கத்தை உருவாக்கியுள்ளோம். பொதுவாக பழுதுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் மென்பொருள் நிரலில் பிழைகள் எதுவும் இருக்கக் கூடாது, பயன்பாடு எதிர்பார்த்தது போல செயல்பட வேண்டும் என்றுதான் பொருள். எல்லா வேலைகளிலும் சிறப்படைய வேண்டுமென்றால் இந்த முழக்கத்தை ஒவ்வொரு பணியிலும் செயல்படுத்த வேண்டும்.

இதை அச்சடித்து அலுவலகத்தின் ஒவ்வொரு அறையிலும் ஒட்டி விடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ஒருவர். இணையப் பக்கத்தில் முதல் பக்கத்திலேயே இதற்கு ஒரு சுட்டி கொடுத்து விட முன் வந்தார் பயிற்சி மாணவி ஒருவர். மாலையில் வெளியே போய் விட்டு வந்து பார்த்தால் அச்சடித்த தாள்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஆனால், பசை தடவி ஒட்டியதில் மேற்பரப்பு சமமாக இல்லாமல், சுருங்கல்களுடன் காட்சியளித்தது.

'ஏங்க பக்ஃப்ரீ என்று ஒட்டுவதிலேயே இவ்வளவு பழுது இருந்தால் எப்படி' என்று அதைக் கிழித்து விட்டுப் புதிதாக ஒட்ட முடிவு செய்தோம்.
  • வாடிக்கையாளரிடம் உறவாடுவதில் எந்தத் தவறும் நடக்காமல் பார்த்துக் கொள்வது
  • மென்பொருள் உருவாக்க வழிமுறைகளில் எந்தச் சறுக்கலும் இல்லாமல் செயல்படுவது
  • மென்பொருள் நிரலில் எந்தப் பழுதும் இல்லாமல் தரக் கட்டுப்பாடு நடத்துவது
  • சொன்ன நேரத்துக்கு தவறாமல் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது
  • எல்லா விற்பனை செயல்களையும் நேரம் தவறாமல் தரம் சிதறாமல் செயல்படுத்துவது
  • ஊழியர்களுக்கு சேர வேண்டிய பலன்களை குறித்த நேரத்தில் கொடுப்பது
  • அரசு சார்ந்த கடமைகளைத் தள்ளிப் போடாமல் முடித்து விடுவது
என்று ஒவ்வொரு செயல்பாட்டிலும் தரம் மிளிர வேண்டும். எதிலும் விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்ற உறுதி செயல்கள் மூலமாக எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும்.

3 comments:

வடுவூர் குமார் said...

"தலை" எவ்வழி..
இப்போது இங்கு நடப்பதை சொல்கிறேன்.
எங்கள் தலை ஒரு நாள் மீட்டிங்கில்..
நீங்கள் எல்லாம் படித்தவர்கள் அதனால் உங்களை இத்தனை மணிக்கு அலுவலகத்துக்கு வந்து இத்தனை மணிக்கு போங்கள் என்று சொல்லமாட்டேன்.நான் இங்கு போலீஸ் வேலை பார்க்க வரவில்லை.கூடிய வரை நேர்மையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.கம்பெனி பெயருக்கு களங்கம் வராமல் பார்த்துக்கொள்ளவும்.
இப்படி பல அறிவுரைகளை கொடுத்தார்.
அன்றிலிருந்து பார்க்கிறேன்,யாரும் அனாவசியமாக மீறாமல் சுமூகமாக போய்கொண்டிருக்கிறது.
அவருக்கும் எங்களுக்கும் பிரச்சனையில்லை.

மஞ்சூர் ராசா said...

நல்லதொரு வழிகாட்டல் பதிவு.
வடுவூர் குமாரின் நிறுவன நிர்வாகியின் அறிவுரைதான் மிகவும் பயன் கொடுக்கக்கூடிய வழி.

மா சிவகுமார் said...

நன்றி வடுவூர் குமார், மஞ்சூர் ராசா,

வாழ்க்கையே ஒரு தொடரும் பாடம்தானே. கீழ் வேலை பார்ப்பவர்களைக் குழந்தைகள் போல நடத்தாமல் பொறுப்புள்ள மனிதர்களாக நடத்தினால் அவர்களும் அதை மதித்து நடந்து கொள்வார்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்