கூட்டத்தோடு கோவிந்தா போடுவதற்கான அமைப்புகள் தவிரக்கப்பட வேண்டும்.
புகழ் பெற்ற வாத்தியக் கலைஞரின் மகனுக்கு இசை அறிவே கிடையாது. தந்தையின் இறப்புக்குப் பின் அரசன் மகனுக்கு அரசவை இசைக்குழுவில் வேலை கொடுத்தான். அந்த அவையில் பத்து இருபது கலைஞர்கள் ஒரே நேரத்தில் வாசிப்பது வழக்கம். இவன், ஒன்றும் தெரியாமலேயே கூட்டத்தில் மற்றவர்களின் நடுவில் தானும் வாசிப்பது போல் பாவித்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தான்.
அந்த அரசன் வயதாகி இறக்க, இளவரசன அரியணை ஏறினான். இளவரசனுக்கு கூட்டு இசை பிடிக்காமல் ஒவ்வொருவராக ஒவ்வொரு நாளும் வாசிக்க வேண்டும் என்று மாற்றியமைத்தான். நம்ம நாயகர் தன் முறை வரும் நாளுக்கு முன்னமேயே ஊரை விட்டே ஓடி விட்டான்.
ஒருவரை மட்டும் நம்பி இருக்கக் கூடாது என்று மாற்று ஆளாக இன்னொருவருக்கும் பயிற்சியளித்து வைத்திருப்பது சில நிறுவனங்களில் வழக்கம். சம்பளச் செலவு இரண்டு மடங்கானாலும், ஒரே ஆள் விடுமுறையிலோ அல்லது திடீரென்று வேலையை விட்டோ போவதால் பணி பாதிக்காமல் இருக்க இது உதவும்.
அப்படிச் செய்யும் போது, மாற்றாக வேலையில் சேர்த்துக் கொண்டவருக்கும் தெளிவான பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் குறுகிய காலத்துக்கு நிறுத்தி வைத்துக் கொள்ளக் கூடிய வேலைகள் பல இருக்கும். அவற்றுள் சிலவற்றை இவருக்கு அளித்து அவரது பணிக்கும் மதிப்பு அளிக்க வேண்டும்.
சில இடங்களில் ஒருவருக்கு மாற்றாக அவருக்கு இணையான இன்னொருவரை அமர்த்தாமல், குறைந்த சம்பளத்தில் இரண்டு மூன்று பேரை வேலைக்கு வைத்து விடுவார்கள். இந்தக் கூட்டத்தில் குயில் கூட்டில் காக்கைக் குஞ்சாக ஒருவர் மாட்டிக் கொண்டால் மற்றவர்களின் நிழலில் தன்னை மறைத்துக் கொண்டு காலத்தை ஓட்டி விடுவார்.
எதற்கு ஒருவரின் வாழ்க்கையை பாதிக்க வேண்டும் என்று கூட இருப்பவர்களும் அவரைப் பாதுகாத்து அவர் செய்ய வேண்டிய வேலைகளை பகிர்ந்து கொண்டு விடுவார்கள். நிர்வாகத்துக்கு ஓரளவு புரிந்தாலும், தெளிவாக வரையறுக்கப்பட்ட செயல்பாட்டு இலக்குகள் இல்லாததால் அப்படியே பல ஆண்டுகள் கூட வண்டி ஓடி விடும்.
எப்போதாவது கூட வேலை பார்ப்பவர்களிடம் தகராறு வந்து விட்டாலோ, அல்லது தவிர்க்க இயலாத சூழலில் பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை வந்து விட்டாலோ சாயம் வெளுத்து வேலையை விட்டு விடுவார். அப்போது யாருக்கும் பெரிய வருத்தம் இருக்காது. விட்டது தொல்லை என்று ஒரு நிம்மதி கூட வந்து விடலாம்.
இதில் அபாயம் என்னவென்றால் இப்படி சில ஆண்டுகள் ஒரு இடத்தில் வேலை பார்த்த ஆவணத்தை வைத்துக் கொண்டு இன்னொரு நிறுவனத்தில் வேலை தேடி அங்கும் ஓரிரு ஆண்டுகள் பழைய பெருமையில் ஓட்டி விடுவார். இப்படியே வாழ்நாளையே வீணாகக் கழித்து விடக் கூட வாய்ப்புகள் இருக்கின்றன.
No comments:
Post a Comment