Wednesday, December 26, 2007

போர்க்களம் - 1

குருட்சேத்திரப் போர்க்களம். அபிமன்யூ சக்கர வியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான். உடைப்பை ஜெயத்ரதன் அடைத்துக் கொள்ள தனியே மாட்டிக் கொள்கிறான். தீவிரமான போர் நடக்கிறது. ஆசிரியர் துரோணர் எதிர்க் கட்சியில். அவருக்கு ஒரே பூரிப்பு. 'மாணவனின் மகன், சிறு பையன் எப்படி திறமையாக போர் புரிகிறான்' என்று பாராட்டுகிறார்.

தான் கற்றுக் கொடுத்த வித்தை தனக்கு எதிரேயே பயன்படுத்தப்படும் போது மகிழ்ச்சியுடன் எதிர்த் தாக்குதல் நடத்தி போராட்டம் காணும் ஆசிரியர்கள் ஏராளம்.

அப்படி ஒரு நாள்.

அக்டோபரிலிருந்து அதிகரித்த செலவுகள், முனைப்பான உழைப்பு, ஆர்வமான குழுவினர் என்று புறப்பட்டு விட்டாலும் மூன்று மாதங்களாக ஒரு பெரிய வாடிக்கையாளர் நிதானிக்க ஆரம்பித்து விட தவிப்பும், சிக்கல்களும். பொறுமை இழக்காமல், ஒவ்வொரு சிடுக்காக விடுவிக்கும்படி தொடர்ந்து வேலையைச் செய்து கொண்டு வந்து அதற்கான கணக்குகளையும் வைத்திருந்தோம். டிசம்பர் முதல் வாரத்தில் நாள் முழுதும் காத்திருந்து பின் மாலையில் சில நிமிடங்கள் சந்தித்த போது அதன் விளைவுகள் தெரிய ஆரம்பித்தன.

'நான் வெளிநாடு போறேன், திரும்பி வந்ததும் நிறுவனத்தில் உயர் மேலாளர்கள் எல்லோரையும் கூட்டி விவாதிக்க வேண்டும். அவர்களையும் ஈடுபடுத்தினால் இந்தத் திட்டத்தை இப்படியே தொடர முடியும்' என்று சொல்லி 21ம் தேதி என்று நாள் குறித்து விட்டுப் போய் விட்டார்.

மூன்று ஆண்டுகள் தாண்டி விட்ட உறவு. ஒரு பணி முடிந்து ஆறு மாதங்களாக நல்ல பெயர். இரண்டாவதாகக் கிடைத்த வேலையில் தேக்கங்கள் பல ஏற்பட்டு அதை முடுக்கி விடத்தான் இந்தக் கூட்டம். பல சிக்கல்கள். நம் பக்கம் பல குளறுபடிகள். அவர்கள் பக்கம் பல குழப்பங்கள். சென்னையிலேயே வெவ்வேறு இடங்களில் மூன்று தொழிற்சாலைகள். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு மேலாண்மை அமைப்புகள். மூன்றிற்குமிடையே ஓருங்கிணைப்பு இல்லாதது, மென்பொருள் வழுக்கள், நம் குழுவினரின் தவறுகள் என்று எதைத் தொட்டாலும் எதிர்மறையாகவே போய் விடக் கூடிய வெடிகுண்டுகள்.

இரண்டு வாரங்களில் எப்படிப் பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்று தயாரிக்க முடிவு செய்தோம்.
மிக நெருக்கமாக இணைந்து வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் அந்த நிறுவனத்தின் தேவைகள் நன்கு புரிந்தவை.
  • அவர்களுக்கு முழுமையான சேவை எப்படி இருக்க வேண்டும்.
  • இது வரை நாம் செய்த பணியில் சாதித்தது என்ன,
  • அதனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைத்தது.
  • நமது சேவையின் மீது அவர்களுக்கு என்னென்ன குறைபாடுகள், முறையீடுகள்,
  • அவற்றைச் சரி செய்ய என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தோம்,
  • இனிமேல் அடுத்து செய்ய வேண்டியது என்ன
என்று பகுதி வாரியாக தொடர்புடைய எல்லோரும் உட்கார்ந்து விவாதித்தோம்.
(தொடரும்)
இரண்டாவது பகுதி
மூன்றாவது பகுதி
நான்காவது பகுதி
ஐந்தாவது பகுதி

2 comments:

வடுவூர் குமார் said...

உங்கள் வலி... ஹூம் பலருக்கு பாடமாக இருக்கப்போகிறது.
கொஞ்சமும் வெட்கப்படாமல் தோல்விகளை பகிர்ந்துகொள்கிறீர்களே அதற்கே ஒரு "ஷொட்டு" கொடுக்கலாம்.

மா சிவகுமார் said...

//கொஞ்சமும் வெட்கப்படாமல் தோல்விகளை பகிர்ந்துகொள்கிறீர்களே அதற்கே ஒரு "ஷொட்டு" கொடுக்கலாம்.//

:-). இறுதியில் வெற்றி அடைந்த தோல்விகள் மட்டும்தான் வெளியே வருகின்றன! தோல்வியாக முடிந்த கதைகள் சொல்ல முடிகிறதா என்றும் பார்க்க வேண்டுமே!

அன்புடன்,
மா சிவகுமார்