Friday, December 28, 2007

போர்க்களம் - 5

முதல் பகுதி
இரண்டாவது பகுதி
மூன்றாவது பகுதி
நான்காவது பகுதி

ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விட்டேன். 20 நிமிட நடையும் கிடைத்தது. 7 மணிக்கு வாராந்திர பரிசோதனை செய்ய வேண்டும். 7 மணி தாண்டி ஐந்து நிமிடங்களில் அலுவலகம். வேலை ஆரம்பித்து விட்டது. ஒரு பால் ஊத்தாத தேநீர் மட்டும் குடித்துக் கொண்டேன். எட்டேகாலுக்கு வந்திருந்தவர்களை வைத்து கூட்டத்தை ஆரம்பித்து விட்டோம். அடுத்த சில நிமிடங்களில் எதிர்பார்த்த எல்லோரும் சேர்ந்து கொண்டார்கள். ஒருவர் மட்டும் டிமிக்கி.

முந்தைய நாள் கூட்ட விபரங்களையும் விளக்கி விட்டு என்ன பேச வேண்டும் என்று எல்லோரது கருத்தையும் தெரிந்து கொண்டேன்.
  • இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து நமக்கும் ஆதாயம் இது வரை கிடைக்கவில்லை.
  • பல லட்சங்கள் செலவழித்து அவர்களுக்கும் முழுப் பலன் கிடைக்கவில்லை.
  • இன்னும் மூன்று மாதங்கள் வேலை செய்ய என்ன அடிப்படை.
  • வேலை வெற்றிகரமாக முடியாவிட்டால், என்ன தண்டம்,
  • முடித்து விட்டால், என்ன வெகுமதி
    என்று ஒவ்வொருவராகக் கருத்து சொன்னார்கள்.
ஒன்பதே முக்காலுக்கு அந்த கூட்டம் முடிய தயாரிப்பு ஆவணங்களுக்காக அரை மணி நேரம் போனது. கிளம்பும் போது பத்தரை மணி, ஒரு வாய் ஏதாவது சாப்பிட நேரமில்லை. 11 மணிக்கு வரச் சொன்னவரின் அலுவலத்தை அடையும் போது 11.20. நல்ல வேளையாக அவர் தாமதமாக பதினொன்றரைக்குத்தான் வந்தார். அவரைச் சந்தித்துப் பேசி விட்டு வந்த நோக்கத்தையும் நிறைவேற்றிக் கொண்டு அடுத்த இடம் 12 மணிக்கு. அவர் இன்னும் வந்திருக்கவில்லை.

கிடைத்த இடைவெளியில் போய் சாப்பிட்டுக் கொண்டோம். மீண்டும் வரவேற்பு பகுதியில் காத்திருக்கும் போது அதிகம் காத்திருக்கும் முன் அவரே வந்து விட்டார். வேறு யாரும் காத்திருக்கவும் இல்லை. சாப்பாட்டு வேளை என்பதால் சாப்பிட ஆரம்பிக்கும் முன் சந்திக்க முடியுமா சாப்பிட்ட பிறகுதானா என்று உட்கார்ந்திருந்தோம். இடையில் அவரது உதவியாளரிடம் நினைவுபடுத்தவும் செய்தேன்

ஒன்றரை மணி வாக்கில் உள்ளே கூப்பிட்டார்கள். 'சாப்பிட்டிருக்க மாட்டார், சீக்கிரம் பேசி விட்டு வந்து விடலாம்' என்று போனோம். பேசி முடித்து வெளி வரும் போது மணி 4 தாண்டி விட்டிருந்தது. அவர் சாப்பிடாமலேயே பேசிக் கொண்டிருந்திருக்கிறார். ஒரு நிலைக்குப் பிறகு எனக்கும் அந்த கவனம் தப்பி விட்டிருந்தது. வெளியே வந்த பிறகு உதவியாளர் வருத்தப்படும் போதுதான் உறைத்தது.

உள்ளே போகும் போது ஒரு மடிக்கணினியை வைத்துக் கொண்டு கணினி பராமரிப்புப் பணியாளரிடம் குறை சொல்லிக் கொண்டிருந்தார். அதைப் பற்றிப் பேச ஆரம்பித்து, 'குழந்தைக்கு ஒரு மடிக்கணினி' திட்டம் பற்றிச் சொல்லி, இந்திய அரசு அதை நிராகரித்து விட்டதாகச் சொன்னேன்.

அங்கிருந்து வெளிநாட்டு உதவிப் பணம், சமூக சேவை மையங்கள் என்று ஆரம்பித்தார். அப்படியே திரும்பி நிதி திரட்டி தங்க கூரையுடன் கோயில் கட்டிய வேலூர் சாமியாரைக் குறிப்பிட்டார். அதற்கு ஒரு எதிர்ப்புத் தெரிவிக்க அந்தச் சாமியார் எப்படி விளக்குகிறார் என்று சொன்னார், திருப்தியான விளக்கம் இல்லை.

ஆன்மீகம், இந்து மதம், என்று பேச்சு நீள அவ்வப்போது தொந்தரவு செய்த கைப்பேசியை வெளியே உதவியாளரிடம் கொடுத்து விட்டார். பல இடங்களில் அவரது கருத்தை ஏற்றுக் கொள்ளாத முகபாவமும், பேச்சும் அவருக்குப் புரியக் கூடியவை. இந்த நிலையில் இன்றைக்கு வந்த வேலை எப்படிப் போகுமோ என்று ஒரு எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. கடைசியில் ஆர்எஸ்எஸ் பிற மதங்கள் என்றும் வந்து சேர்ந்தது. என்னுடைய கருத்துக்களை கோடி காட்டினேன்.

அப்படி இரண்டு மணி நேரம் ஓடிய பிறகு, 'சொல்லுங்க சிவா' என்று வேலை ஆரம்பித்தார். பேசும் போது தொழிலில் வாடிக்கையாளர் சேவை பற்றியும் பேசியிருந்தார். மனதுக்குள் கையை மடித்து விட்டுக் கொண்டு கையில் கொண்டு வந்திருந்த திட்டத்தை நீட்டினேன். ஒரே பக்கத்தில் நான்கே அட்டவணைகள்.

இதுவரை வாங்கும் பணம், அடுத்த மூன்று மாதங்களில் முடிக்க வேண்டியது, அதற்கு எதிர்பார்ப்பது, முடிக்கா விட்டால் என்ன தண்டம், முடித்து விட்டால் என்ன வெகுமதி என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.

சரமாரியாக ஆயுதங்களைத் தொடுக்க ஆரம்பித்தார். பல முறைகளில் அவரிடம் பேசியதில் ஏற்பட்ட புரிதல்களும், அவர் எப்படி எல்லாம் பேசுவார் என்று எதிர்பார்த்திருந்த தயாரிப்புகளும், இன்றைக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்று நானும் சண்டையில் இறங்கி விட்டேன். ஆரம்ப காலங்களில் இப்படி யாராவது பேரம் பேச ஆரம்பித்தால் உடனேயே விட்டுக் கொடுத்து விடுவேன். அவர்கள் கேட்கும் கேள்விகள் நம்மைக் குறை சொல்ல இல்லை, நமது காரணங்களை புரிந்து கொள்ள என்பது இப்போதுதான் புரிகிறது.

'ஆரம்பித்தில் சொன்ன விலையில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் கூடினால் பரவாயில்லை, 10 மடங்காக சொன்னால் என்ன நியாயம்' அவர்கள் தேவைகளையும் 3 தொழிற்சாலைகளுக்கு விரித்து, பல குழப்பங்களையும் சமாளிக்க வைத்ததை நேரடியாகச் சுட்டிக் காட்டாமல் நியாயத்தை விளக்கினேன். கேட்ட பணத்தில் பாதியில் நின்றார். அதுவே பெருந் தொகைதான், ஆனாலும் முடியாது என்று விட்டேன்.

'நாங்கள் திட்டமிட்ட அளவு பணம் தராவிட்டால் தேவையான முயற்சி போட முடியாமல் மீண்டும் வேலை அரைகுறையாக நின்று விடும்' என்று கணக்குகளை என் குறிப்பேட்டில் எழுதிப் பார்த்தேன். நெருக்கிப் பிடித்தால் சம்பளச் செலவு மட்டும் கேட்டதில் மூன்றில் இரண்டு பங்கு வருகிறது. மற்ற செலவுகளுக்கு ஒரு பங்கு. இடையில் அவருக்கு தொலைபேசி அழைப்பு.

அவர்கள் போட்டியாளர்களுக்குக் குறைந்த விலையில் கிடைத்து விடுமோ என்று ஒரு கேள்வி, அதையும் விளக்கினேன். 30 ஆண்டு SAP கூட கூடுதல் ஒரு நிறுவனத்துக்கு விலை குறைக்க முடியாது, மென்பொருள் உருவாக்கம், பராமரிப்பின் இயல்பு அப்படி என்று விளக்கினேன். இறுதியாக 5ல் நான்கு பங்கில் நின்று விட்டார். நாங்களும் ஏற்றுக் கொண்டோம். பெரும் பொறுப்புதான்.

அவரது குரலும் பல முறை உயர்ந்தது, இடையிடையே புன்சிரிப்பு வேறு. நானும் உச்சக் கட்டத்தில், விடாமல் சண்டை போட்டேன். நண்பரின் ஆதரவு வேறு. 'இதே மாதிரி அந்த வேலைக்கும் ஒரு திட்டம் போட்டுக்கோப்பா' என்று அனுப்பி வைத்தார். பழைய நிலுவையில் பெரும்பகுதிக்கு காசோலையும் கொடுத்து விட்டார்.

(முடிந்தது)

3 comments:

மா சிவகுமார் said...

வினையூக்கி,

பின்னூட்டக் கயமைக் காவலர் பிடித்து உள்ளே போட்டு விடப் போறாங்க :-)

அன்புடன்,
மா சிவகுமார்

KARTHIK said...

//கேட்கும் கேள்விகள் நம்மைக் குறை சொல்ல இல்லை, நமது காரணங்களை புரிந்து கொள்ள என்பது இப்போதுதான் புரிகிறது.\\


சரிதான்
ஆனால் இக்கேள்விகள் நாம் order கு போகும்போது ஒருமாதிரியும்.
நிலுவை தொகைக்கு போகும்போது வேருமாதிரியும் வெளிப்படுகிறது.
பகிர்தலுக்கு நன்றி.

மா சிவகுமார் said...

//ஆனால் இக்கேள்விகள் நாம் order கு போகும்போது ஒருமாதிரியும். நிலுவை தொகைக்கு போகும்போது வேருமாதிரியும் வெளிப்படுகிறது.//

:-)

அது நம் பார்வை சார்ந்தும் இருக்கின்றதோ! எப்படி வெளிப்பட்டாலும் கேள்விகளுக்கு நிறைவான பதில் அளிப்பது தேவைதானே.

அன்புடன்,
மா சிவகுமார்