Thursday, December 27, 2007

போர்க்களம் - 3

முதல் பகுதி
இரண்டாவது பகுதி
  • நிறுவன வளத் திட்டமிடல் (நி வ தி) என்றால் என்ன, அதன் பலன்கள், இன்றைய உலக அளவில், இந்திய அளவில், தோல் துறை அளவில் யார் யார் சேவை அளிக்கிறார்கள் என்பது முதல் பகுதி.

  • இரண்டாவது பகுதியாக நமது நிறுவனத்தின் சேவையில் என்னென்ன செய்திருக்கிறோம், அதில் கண்ட குறைபாடுகள், அவற்றை நீக்க எடுத்த நடவடிக்கைகள், இது வரை சாதித்தவை, இனிமேல் அடுத்த மூன்று மாதங்களில் முடிக்கத் திட்டமிட்டிருப்பவை என்று வடிவம் கிடைத்து விட்டது. இரண்டு வாரங்கள் விவாதித்த கருத்துக்கள் எல்லாம் வடித்துச் சுருக்கியது போல அமைந்து விட்டிருந்தது. இன்னும் சில மாற்றங்கள் தேவைப்படலாம்.
சுற்றுலா குழுவினர் கிளம்பிப் போய் விட, தரையை சுத்தம் செய்து துடைத்து அரை மணி நேரம் செலவிட்டேன். வீட்டு வேலை செய்யும் போது கிடைக்கும் மனத்தெளிவும் அமைதியும் எந்த தியான முறையிலும் கிடைத்து விடாதுதான்.

நண்பரும் தயாராகி விட அலுவலகம் வந்து சேர்ந்தோம். கணினியை இயக்கி நண்பருக்கு ஒரு முறை போட்டுக் காட்டி ஒத்திகை. அவர் சில மாற்றங்களைச் சொன்னார். மொத்தத்தில் நன்றாக வந்து விட்டிருப்பது அவரது முகத்தில் தெரிந்தது. காட்சிக்கருவி கொண்டு வருபவரின் தொலைபேசி இயங்காமல் இருந்தது. இருந்தும் சரியான நேரத்தில் கொண்டு சேர்த்து விட்டார்.

அந்த நேரம் இன்னொரு அலுவலகத் தோழர் வந்து விட அவரை உட்கார வைத்து படக்காட்சியாகவே காட்டிப் பேசினேன். அதன் பிறகும் ஓரிரு மாறுதல்கள் செய்து கொண்டோம்.

பத்து மணிக்குக் கிளம்பி சந்திப்பு நடக்கும் தொழிற்சாலைக்குப் போய் விட்டோம். ஏற்கனவே இரண்டு பேர் போய் முந்திய நாள் ஏற்பட்ட கடைசி நிமிடக் குளறுபடிக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார்கள், அந்த மேலாளரைப் பார்க்க முடியவில்லை.

இரண்டாவது தொழிற்சாலைக்கு இரண்டு நாட்கள் முன்பு நானே போய் அதன் மேலாளரைச் சந்தித்து அவரது தேவைகளை, குறை நிறைகளைக் கேட்டறிந்திருந்தேன். அவர் கேட்டிருந்த அறிக்கைகளும் எடுத்துக் கொடுத்து விட்டிருந்தார்கள்.

மூன்றாவது தொழிற்சாலையில் ஏற்கனவே நல்லபடியாக பணி நடந்து கொண்டிருந்தது. அதற்கு கடைசி நேர கைபிடித்தல் செய்ய காலையிலேயே ஒருவர் போய் அந்த மேலாளருடனேயே வண்டியில் கூட்டத்துக்கு வர திட்டம்.

கூட்டம் நடத்த வேண்டிய அறையை தேர்ந்தெடுத்து பொருட்களை ஒதுக்க, நாற்காலிகளை ஏற்பாடு செய்ய, தூய்மை செய்யக் கேட்டுக் கொண்டோம். பெரிய உரிமையாளர் வருவதால் எல்லோருமே பரபரப்பாக இருந்தார்கள். பத்தரை மணிக்கெல்லாம் காட்சிக் கருவியை அமைத்து கணினியை இணைத்து திரைக் காட்சி சரியாகத் தெரிகிறதா என்று உறுதி செய்து கொண்டோம்.

11 மணி சந்திப்புக்கு இரண்டாவது தொழிற்சாலை மேலாளர் மட்டும் நேரத்துக்கு வந்து விட்டார். அவருடன் பொதுவாகவும், பணி குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். எல்லோரும் வந்த பிறகுதானே ஆரம்பிக்க வேண்டும். தாமதமாகவே ஆனாலும் நம்ம ஆட்கள் எல்லோரும் வந்து விட்டார்கள்.

மூலவர் பதினொன்றரைக்கெல்லாம் வந்து சேர மற்ற மேலாளர்கள் எல்லோரும் வந்திருக்கவில்லை. அவர் உட்கார்ந்த பிறகு விளக்குகளை அணைத்து விட்டுக் காட்சிப் படத்தின் முதல் துண்டைப் போட்டு வைத்திருந்தோம்.

நான்காவது பகுதி
ஐந்தாவது பகுதி

4 comments:

வடுவூர் குமார் said...

ஆயுதமே இல்லாத போரா?
நடத்துங்க. :-)

மா சிவகுமார் said...

//ஆயுதமே இல்லாத போரா?//
பளபளக்கும் உலோக ஆயுதங்கள் இல்லா விட்டாலும், மனதளவில் பல ஆயுதங்கள், தற்காப்புகள், தயாரிப்புகள் தேவைப்படுகின்றன. அதை உணர்ந்ததைப் பகிர்ந்து கொள்ளத்தான் இந்த இடுகைகள்.

அன்புடன்,
மா சிவகுமார்

Kasi Arumugam said...

தொடர் ஆர்வத்தைத் தூண்டுது, ஆனால் அநியாயத்துக்கு துண்டுபோட்டிருக்கீங்க:-)

கொஞ்சம் நீளமாகப் போடுங்க. கற்றுக்கொள்ள நிறைய இருகும் போல.

மா சிவகுமார் said...

//ஆனால் அநியாயத்துக்கு துண்டுபோட்டிருக்கீங்க:-) கொஞ்சம் நீளமாகப் போடுங்க.//

நான் ஒரு மாதத்துக்கும் மேல் உணர்ந்ததை 5 பிரிவுகளாத்தானே பிரித்திருக்கிறேன் :-)
அன்புடன்,
மா சிவகுமார்