Tuesday, December 25, 2007

பொருளாதாரச் சூழல் மாற்றம்

அன்னியச்செலாவணி நிலை பாதகமாகி விட்டிருக்கிறது. தோல் துறையில் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. எல்லோரும் தமது தொழிலைக் குறுக்கிக் கொள்கிறார்கள். நாம் என்ன செய்ய வேண்டும்?

இந்த ஆண்டு அக்டோபர் முதல் எல்லோருக்கும் சம்பள விகிதங்களை அதிகப்படுத்தி மென்பொருள் துறையில் நிலவும் விகிதங்களுக்கு இணையாக ஆக்கி விட வேண்டும் என்று பல மாதங்களாகவே திட்டமிட்டு அறிவித்திருந்தோம். அக்டோபர் முதல் மாதா மாதம் மொத்தச் செலவுகள் இரண்டு மடங்காகி விட்டன.

புறச்சூழல் பாதகமாக ஆகும் போது செய்ய வேண்டிய நடவடிக்கைகளுக்கு எதிர் மாறாக செய்திருக்கிறோம்.

நிறுவனம் ஆரம்பிக்கும் போதும் சரி, யாரையும் வேலைக்கு எடுக்கும் போதும் சரி, முடிவுகளின் அடிப்படை நமது நிறுவனத்தின் குறிக்கோளை அடையும் திசையில் நம்மைச் செலுத்துகிறதா என்பதாக மட்டுமே இருந்து வந்தது. ஒரு டாலருக்கு 45 ரூபாய்கள் என்ற கணக்குப் போட்டு அதனால் நமக்கு இவ்வளவு வாய்ப்புகள் கிடைக்கும் என்று செய்யவில்லை.

டாலருக்கு 30 ரூபாய்கள் என்ற நிலை வந்தாலும் தோல் துறை இருக்கத்தான் செய்யும், அதில் பல நிறுவனங்கள் வெளியேறி விட்டாலும், தம்மை வலுப்படுத்திக் கொண்டவர்கள் வளர்ந்திருப்பார்கள். அப்படி வலுப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் நம்ம ஊரில் யாரும் மிஞ்சா விட்டால், மற்ற ஊர்களிலோ, நாடுகளிலோ இருப்பார்கள்.

அப்படி வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், புதிய நுட்பங்களில் முதலீடு செய்வார்கள். அப்போது நமக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அப்படிப் பட்டவர்களை அணுகித் தேடும் முயற்சிகள் அதிகமாக்கிக் கொள்ள வேண்டும்.

கும்ப்ளே சொல்வது போல டாசில் ஜெயிப்பது, ஆடுகளத்தின் தன்மை, பருவநிலை போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு நமது இலக்குகளை நிர்ணயிக்கக் கூடாது. இலக்குகளையும் தயாரிப்புகளையும் செய்து விட்டு போகும் பாதையில் சந்திக்கும் தடைகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

ஆடு மலை ஏறும் போது அதன் குறிக்கோள் மலையுச்சி. இடையில் மழை பெய்தால் தேவைப்பட்டால் கொஞ்சம் ஒதுங்கிக் கொள்ளலாம், அல்லது நனைந்து கொண்டே போய் விடலாம், பாதை கரடு முரடானால், பல்லைக் கடித்துக் கொண்டு ஏற வேண்டும், இதமான காற்று வீசினால் சிரமமில்லாமல் தொடரலாம். என்ன நடந்தாலும் மேலே ஏறுவதும் நிற்கப் போவதில்லை போய்ச் சேர வேண்டிய குறிக்கோளையும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை.

சூழ்நிலைகள் பாதகமாக இருக்கும் போது நம்முடைய முயற்சிகள் இன்னும் தீவிரமாக வேண்டும். இன்னும் திறமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

குலப் பெரியவர்கள் எல்லாம் எதிர்த் தரப்பில் அணி வகுத்து விட்டார்கள். சல்லியன் எதிர்த்தரப்புக்குப் போய் விட்டான். போரை விட்டு விட்டு ஓடி விட முடியுமா. 7 அக்குரோணி படையை 11 அக்குரோணி படையுடன் மோத விடத்தான் வேண்டும்.

வருவது வரட்டும் என்று முன்னேற வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும் புறச் சூழலுக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி பெறுவது என்ற இறுதி நோக்கம் மட்டும் மாறாது, மாறக் கூடாது.

புறச்சூழல் மாறும் போது எத்தகைய முடிவுகளை எடுக்கலாம். ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்? சம்பளங்களைக் குறைத்தல்? குழுவில் ஒருவரைச் சேர்த்து உருவாக்குவதற்கு ஒரு ஆண்டு வரை ஆகிறது, அந்த ஓராண்டு நோக்கில் பார்த்தால் வெளிப் புறச் சூழல் மாறி விட்டது என்று சிலரை இழக்க முன்வருவது மதியுடமையாகாது என்பது என்னுடைய கருத்து.

2 comments:

RK said...

//ஆடு மலை ஏறும் போது அதன் குறிக்கோள் மலையுச்சி. இடையில் மழை பெய்தால் தேவைப்பட்டால் கொஞ்சம் ஒதுங்கிக் கொள்ளலாம், அல்லது நனைந்து கொண்டே போய் விடலாம், பாதை கரடு முரடானால், பல்லைக் கடித்துக் கொண்டு ஏற வேண்டும், இதமான காற்று வீசினால் சிரமமில்லாமல் தொடரலாம். என்ன நடந்தாலும் மேலே ஏறுவதும் நிற்கப் போவதில்லை போய்ச் சேர வேண்டிய குறிக்கோளையும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை// மிக யதார்த்தமான கட்டுரை மற்றும் உவமை..

மா சிவகுமார் said...

நன்றி ராதாகிருஷ்ணன். அப்படியே உங்கள் பதிவுக்கும் போய்ப் பார்த்தேன். மகிழ்ச்சி.

அன்புடன்,
மா சிவகுமார்