Thursday, December 27, 2007

போர்க்களம் - 4

முதல் பகுதி
இரண்டாவது பகுதி
மூன்றாவது பகுதி

காத்திருக்கும் அந்த நிமிடங்கள் தவிப்பாக இருந்தது. தேவையில்லாத பேச்சுக்களும் வளர்ந்து விடக் கூடாது. பேசாமலும் இருக்க முடியாது. அடுத்த சில நிமிடங்களில் எல்லோரும் வந்து விடத் திட்டமிட்டபடி படக்காட்சியும் விளக்க உரையும் ஆரம்பித்து விட்டது.

அவர்கள் கேட்க நினைக்கும் கேள்விகள், அறிய வேண்டும் தகவல்கள் என்று எல்லாமே காண்பித்துப் பேச முடிந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சேகரித்த விபரங்களை தொகுத்து முழுக் காட்சியாக விளக்கி முடிக்கும் போது நல்ல ஒரு சூழல் உருவாகியிருந்தது. இடையில் ஓரிரு குறுக்கீடுகள் வந்தாலும், அவர்கள் சொல்ல வந்த கருத்தை நாங்கள் ஏற்கனவே சேர்த்துக் கொண்டிருந்தோம்.

மனதில் நிரம்பியிருந்த கேள்விகள் கருத்துக்களுக்கு வடிவம் கிடைத்து வெளியில் வந்து விட்ட பிறகு விவாதம் ஆரம்பிக்கலாம்.

நல்லதோ கெட்டதோ, உள்ளதில் சொதப்பியிருந்த, அதிகம் கடுப்பேற்றும் மேலாளர் ஆரம்பித்து வைத்தார். 'பேசினது நல்லா பேசினீங்க, நல்லா விளக்கினீங்க, ஆனா..' என்று ஆரம்பித்து மிகத் தீவிரமாக நியாயமற்ற முறையில் தாக்கிக் குறை சொன்னார்.

எதிர்பார்த்திருந்தாலும் கேட்கும் போது மனம் வாடியது. அவர்கள் மீது நேரடியாக எதிர்க் குறை சொல்ல ஆரம்பிக்காமல், விளக்கங்கள் சொன்னேன். அதைத் தொடர்ந்து அவர்களது மனக்குறைகள் எல்லாம் வெளி வர ஆரம்பித்தது. நாங்களே அவற்றை எல்லாம் பேசி விட்டதால், அவற்றுக்கு அழுத்தம் குறைந்து போயிருந்தது.

இரண்டாவது தொழிற்சாலை மேலாளர் குறை கூறும் வடிவில், எங்கள் சேவையின் பலன்களை அவரது நிறைவுகளை வெளிப்படுத்தினார். மூன்றாவது தொழிற்சாலை மேலாளருக்கும் முதலாமவருக்கும் உட்கட்சிச் சண்டை. அவர் கடைசியில் வாயைத் திறந்தாலும் காரமாக ஆதரித்தார். 'என்னுடைய வேலைகளை கணினி மூலமாகத்தான் செய்கிறேன். என்ன அறிக்கை வேண்டுமோ, என்ன வெளிப்பாடு வேண்டுமோ அதை மென்பொருள் பயன்பாட்டில் எடுத்துக் கொள்கிறோம்' என்று அவர் அடித்த அடியில் சூழல் சாதகமாக மாறி விட்டது.

முதலாமவரின் மதிப்பு இறங்கி விட்டது, நம் பங்குக்கு முதல் தொழிற்சாலையில் அவர்களின் குறைபாடுகளையும் சுட்டிக் காட்டினோம். தொகுத்துப் பேசும் போது ஒரு மேலாளர் மூன்று தொழிற்சாலைக்குமான பணியை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கேட்டு முதல் மேலாளரைக் குறிப்பிட்டால், தலைவர் உடனேயே குறிக்கிட்டு மூன்றாமவரை நியமித்து விட்டார். முதலாமவரிடம் மன்னிப்புக் கேட்பு வேறு.

பணம், சேவைக் கட்டணம் குறித்து நாளைக்கு அலுவலகத்தில் வந்து பேசிக் கொள்ளச் சொல்லி விட்டார். கூட்டம் முடிந்து மற்றவர்கள் எல்லோரும் வெளியே போய் விட்ட பிறகு நாங்கள் மட்டும் நின்றிருக்க அரை மணி நேரத்துக்கு மேல் பேசிக் கொண்டிருந்தார் தலைவர். தனது அனுபவ முத்துக்களை வழக்கம் போல அள்ளி இறைத்தார். அதற்கு முன்பு அவர் பேசிக் கேட்டிராத இரண்டு பேரும் கேட்டிருந்த இரண்டு பேரும் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தோம்.

அடுத்த நாள் அவரைச் சந்திக்கும் போது பேசுவதற்கான ஆதாரங்கள் பல கிடைத்தன. திட்டமிட்டு அப்படிப் பேசிக் கொண்டிருந்தாரா, இயல்பாக வந்ததா என்று தெரியாது, தன்னிடம் பேரம் பேசுவதற்கு அவரே பல குறிப்புகளை விட்டுச் சென்றார்.

வினை முடித்த இனிமையுடன், நல்ல பசி வேறு. அலுவலத்துக்கு வந்து சாப்பிட்டு விட்டுச் சின்னச் சின்ன வேலைகளை முடித்தேன். இன்னொரு நிறுவனத்துக்குத் தொலைபேசினால் சனிக்கிழமை காலையில் 11 மணிக்கு வரச் சொன்னார். மதியத்துக்கு மேல் தொழிற்சாலை மேலாளருடன் சந்திப்பு 3.30க்கு. இடையில் நிறுவனத் தலைவரையும் சந்திக்க வேண்டும்.

வாராந்திர ஒருங்கிணைப்புக் கூட்டத்தை விட முடியாது என்று காலையில் 8 மணிக்கு எல்லோரையும் வரச் சொன்னோம். எட்டே காலுக்கு ஆரம்பித்தால் 10 மணி வரை போகலாம். அதன் பிறகு கிளம்பி பெரிய மேடு போய் 11 முதல் அரை மணி நேரத்துக்கு முதல் சந்திப்பை முடித்து விட்டால், இரண்டாவது அதி முக்கிய சந்திப்புக்குப் போய் விட்டு இரண்டரை மணிக்குக் கிளம்பினால், 40 கிலோமீட்டர்கள் பயணித்து தொழிற்சாலைக்கும் போய் விடலாம்.

ஐந்தாவது பகுதி

2 comments:

வடுவூர் குமார் said...

அப்பாடி! முதல் தடையை கடந்துவிட்டீர்கள்.

மா சிவகுமார் said...

//முதல் தடையை கடந்துவிட்டீர்கள்.//

:-)
அன்புடன்,
மா சிவகுமார்