Thursday, December 27, 2007

போர்க்களம் - 2

முதல் பகுதி

மொத்தம் மூன்று அமர்வுகளில் குறிப்பேட்டில் பல பக்கங்கள் நிறைந்து விட்டன.

இதற்கிடையே ஒவ்வொரு தொழிற்சாலையிலும் என்னென்ன வேலை நடந்திருக்கிறது. அங்கிருக்கும் மேலாளர்களுக்கு என்ன குறை நிறைகள் என்று அடையாளம் கண்டு கொண்டு அங்கு வேலையையும் தொடர்ந்தோம். அந்தந்தப் பிரிவு மேலாளர்களுக்கும் இப்படி ஒரு சந்திப்பில் பேசுவதற்கு தயாரிப்பு வேண்டும். அவர்களது தேவைகளைச் சொல்லி வேலை வாங்கினார்கள்.

கணினியில் ஒரு உரைத் தொகுப்பாக வைத்துக் கொண்டு எல்லோருக்கும் ஒரு சுற்று விட்டோம். இடையில் ஊருக்கு ஒரு பயணம் எல்லாம் முடித்து விட்டுத் திரும்பி வந்து வேலை தொடர்ந்தது. ஊருக்கு மடிக்கணினி எடுத்துப் போகாமல் நான்கு நாட்களுக்கு கணினியிலிருந்து பிரிவு கிடைத்த ஓய்வு.

17ம் தேதி ஒரு மின்னஞ்சல் அனுப்பி நினைவூட்டல். 19ம் தேதி அவர்களாகவே அழைத்து 21ம் தேதி சந்திப்பை உறுதி செய்தார்கள். கிடைத்த அறிகுறிகள் மிக நல்லதாகவே இருந்தன.

20ம் தேதி மதியத்துக்கு மேல் என்ன காண்பிக்க வேண்டும் என்று இறுதி வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன். களப்பணியாளர்கள் கடைசி நிமிடத் திக்கல்களை சரி செய்யப் போனார்கள். இருமக் காட்சிக் கருவி ஒன்றை வாடகைக்கு எடுத்து காண்பிக்கலாம் என்று நினைத்திருந்தோம். மாலை நான்கு மணிக்குப் பிறகுதான் அந்த நினைவே வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாடகைக்குக் கொடுத்திருந்த நிறுவனத்தின் தொலைபேசி எண்ணை வைத்திருந்தேன். அது மாறாமல் இருக்க வேண்டுமே!

மாறியிருக்கவில்லை. பழைய உறவை நினைவில் வைத்திருந்து மாலையே வந்து கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள். ஒரு நாள் வாடகை 750 ரூபாய், தொடரும் உறவுக்காக 150 ரூபாய்கள் தள்ளுபடி. ஒவ்வொரு முறையும் இந்தக் கருவிகளின் அளவு குறுகி, தரம் உயர்ந்திருக்கிறது. நேற்றைக்கு நாளிதழில் பார்த்தால் ஏசர் நிறுவனத்தின் காட்சிக் கருவி 45 ஆயிரம் ரூபாய்களுக்குக் கொடுக்கிறார்களாம்.

அப்பா அம்மா வெளியூர் கிளம்பும் தயாரிப்புகள் வேறு.. காலையில் வழியனுப்ப வர முடியாது என்று முதலிலேயே சொல்லி விட்டேன். என் பங்காக சின்னச் சின்ன ஏற்பாடுகளுக்கான பணிகள் 20ம் தேதி முழுவதும். கடைசி நேரச் சிக்கல் ஒன்று ஒரு தொழிற்சாலையில். அங்கிருக்கும் மேலாளர் உள்ளதில் கடுப்பேற்றுபவர். எப்படியாவது சரி செய்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

தூங்கும் முன் எதுவும் செய்ய ஓடவில்லை. காலையில் எழுந்து பார்த்துக் கொள்ளலாம் என்று நல்ல தூக்கம். விழிப்பு வந்த பிறகும் நாளில் புத்துணர்வுடன் இருக்க வேண்டும் என்று அரை மணி நேரம் அமைதியாகப் படுத்துக் கொண்டிருந்து விட்டே எழுந்தேன். ஏழு மணிக்கு விமான நிலையத்துக்குக் கிளம்புகிறார்கள். அந்தத் தயாரிப்புகள் முடிந்து விட்டன. நானும் 5 மணிக்கு எழுந்து குளித்து விட்டு அவர்கள் பைகளை மூடி வைத்து, வாடகை வண்டிக்கு தொலைபேசி ஏற்பாடு செய்தலையும் முடித்துக் கொண்டேன்.

சரி கணினியை இயக்கி விடுவோம் என்று மேசையில் வைத்து உயிர் கொடுத்து 11 மணிக்குப் பேசப் போவதற்கு திரைக்காட்சிகளுக்கு இறுதி வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன்.

மூன்றாவது பகுதி
நான்காவது பகுதி
ஐந்தாவது பகுதி

3 comments:

வடுவூர் குமார் said...

இருமக் காட்சிக் கருவி
ஹோ! Projector ஐ சொல்கிறீர்களா?

Unknown said...

சிவா,
என்ன நடந்தது ? எப்படி தீர்க்கப்பட்டது என்பதை அறிய ஆவல்.

பகிர்ந்து கொள்ளுதலுக்கு நன்றி!

மா சிவகுமார் said...

//Projector ஐ சொல்கிறீர்களா?//

ஆமாமா, digital=இருமம், projector=காட்சிக் கருவி :-)

//என்ன நடந்தது ? எப்படி தீர்க்கப்பட்டது என்பதை அறிய ஆவல்.//

சீக்கிரம் தெரிந்து விட்டதே!
அன்புடன்,
சிவகுமார்