Tuesday, December 25, 2007

மக்கள் தொகை மாற்றங்கள்

அமெரிக்க மக்கள் தொகை, பிரிவுகள், ஒவ்வொரு கால கட்டத்திலும் அந்தப் பிரிவுகளில் ஏற்படும் ஒட்டு மொத்த மாற்றங்கள் என்று பல ஆராய்ச்சிகள் செய்து கட்டுரைகள் எழுதுகிறார்கள். 1930களின் பொருளாதாரச் சரிவைப் பார்த்து வாழ்ந்த குழந்தைகளை டிப்ரெஷன் தலைமுறை, பொருளாதாரத் தேக்கத் தலைமுறை என்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1950களில் அமைதி ஏற்பட்ட போது நிறைய குழந்தைகள் பெறப்பட்டனவாம். அவர்களை பேபி பூமர்ஸ் - குழந்தைப் பெருக்கத்தினர் - என்று அழைக்கிறார்கள். அதற்குப் பிறகு பேபி பர்ஸ்ட்.

பேபி பூமர்கள் வேலைக்குப் போகும் கட்டம், பேபி பூமர்கள் திருமணம் செய்து கொள்ளும் கட்டம் என்று ஒவ்வொரு கால கட்டத்தையும் அலசி மாற்றங்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மக்களை அவர்கள் பிறந்து வாழ்ந்த காலத்தை வைத்துப் பிரிக்க முயற்சித்தால் எப்படி இருக்கும்.
  • ஒரு பிரிவில் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று போராட்டம் நடந்த காலத்தில் 1940களுக்கு முன்பு பிறந்து வளர்ந்தவர்கள்.

    இன்றைக்கு இவர்களுக்கு எழுபது வயதுகளுக்கு மேல் ஆகியிருக்கும். பெரிய அளவில் வருமானம் கிடையாது. அரசு ஊழியராக இருந்தால் ஓய்வூதியத்துடனும். மற்றவர்கள் குழந்தைகளின் ஆதரவிலும் வாழ்ந்து வரலாம்.
    இவர்கள் தியாகராஜ பாகவதர் முதலான சினிமா காலகட்டத்தின் ரசிகர்கள். மன்மத லீலையினர்.

  • அடுத்த பிரிவில் விடுதலை கிடைக்கும் ஆண்டுகளில் 1940களில் பிறந்தவர்கள்.

    இவர்கள் ஐம்பதுகளின் இந்தி எதிர்ப்புப் போராட்டம், 60களில் திராவிட இயக்க ஆட்சி பிடிப்பு என்று பார்த்து வாழ்க்கையின் நடுக்கட்டில் 1970களின் பொருளாதார அதிர்ச்சிகளை பார்த்திருப்பார்கள். தொண்ணூறுகளில் தாராளமயமாக்கலும் பொருளாதார சீர்திருத்தமும் கொண்டு வரும் மாற்றங்கள் இவர்களை நேரடியாகத் தொட்டு விடாமல் இருக்கிறது.

    இவர்கள் எம்எஸ்விஸ்வநாதன், டிஎம் சௌந்திரராஜன், கண்ணதாசன் என்று உருகுவார்கள். திராவிடக் குழந்தைகள்.

  • மூன்றாவது பிரிவில், 1980களுக்கு முன்பு பிறந்து வளர்ந்தவர்கள். இவர்களின் குழந்தை மற்றும் இளமைப் பருவம், எம்ஜிஆரின் ஆட்சி, கருணாநிதியின் எதிர் அரசியல் பார்த்து வளர்ந்தது. இளையராஜா, எஸ்பி பாலசுப்பிரணியம், கமலஹாசன், ரஜினி காந்த் என்று அதிகம் குழப்பமில்லாத சூழல்கள்.

    சத்துணவுத் திட்டமும், வேகமாக வளர்ந்த உயர் கல்வித் துறையும் இந்தப் பிரிவினருக்கு கல்வி வாய்ப்பைத் திறந்து விட்டது. இட ஒதுக்கீடு மூலமாக பெரும்பாலானோருக்கு அது வரை மூடப்பட்டிருந்த கதவுகள் திறந்தன. பொருளாதார காரணங்கள் அல்லது வாய்ப்புகளைப் பற்றி அறியாமல் இருப்பவர்கள்த பின்தங்கி இருக்கிறார்கள். 'யார் வேண்டுமானாலும் கதவை இடித்துத் திறந்து கொள்ளலாம், திறக்கா விட்டால் கதவை உடைத்து விடுவோம்' என்ற மாற்றங்களை பார்த்து வளர்ந்த காலகட்டத்தினர் இவர்கள்.

    கூட்டமான முன்னேற்றத்தினர்.

  • நான்காவது கடைசிப் பிரிவில் இருப்பவர்கள் 1980களுக்குப் பிறகு பிறந்து வளர்ந்த இன்றைய இளைஞர்கள். எம்ஜிஆர் என்பவரைத் தெரியாமல் வளர்ந்திருப்பார்கள். உலக மயமாதல், தகவல் தொழில் நுட்பப் புரட்சி, ஏஆர்ரஹ்மான், ஐந்திலக்க சம்பளம், அமெரிக்கா செல்லும் வாய்ப்புகள் என்று முற்றிலும் புதிய உலகைப் பார்க்கிறார்கள்.

    தகவல் தொழில்நுட்ப தலைமுறையினர்.
இப்படிப் பிரித்துக் கொண்டால் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து பொருளாதார சமூக மாறுபாடுகள் எப்படி இருக்கும் என்பதை ஆராய முடியும்.

  • 2020ல் கூட்டமான முன்னேற்றத் தலைமுறையினருக்கு சராசரி வயது 45 முதல் 60 வரை இருக்கும்.
  • தகவல் தொழில் நுட்பத் தலைமுறையினர் வீடுகள் வாங்கவும், திருமணம் செய்யவும், குழந்தை பெற்றுக் கொள்ளவும் ஆரம்பித்திருப்பார்கள்.
  • திராவிடக் குழந்தைகள் எல்லோரும் முழுநேர பணியிலிருந்து ஓய்வு பெற்றிருப்பார்கள்.
  • மன்மத லீலையினரில் ஒரு சிலரே மிஞ்சியிருப்பார்கள்.
அத்தகைய சூழலில் அரசியல், கலை, வணிகம் போன்ற துறைகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?

  • சிறு நகரங்களில் கூட ஆங்கிலத்தில் கல்வி பயின்று வரும் குழந்தைகள் இளைஞர்களாக பொருளாதார முடிவுகளை எடுப்பவர்களாக இருப்பார்கள்.
  • ஊடகங்கள், அரசியல் நடைமுறைகளில் பரிமாற்ற மொழி மாறியிருக்கும்.
  • அப்போதைய இளைஞர்கள் மின்னணு பொருட்களான, தொலைக்காட்சி, கணினி போன்றவற்றை பார்த்து வளர்ந்திருப்பார்கள்.
  • மின்னணு பொருட்களின் சந்தை பெருகும்.
கூட்டமான முன்னைற்றத் தலைமுறையினர் தங்களுக்கே உரிய குழப்பமான பாணியில் அரசியலையும் கலை உலகையும் வடிவமைக்க முயன்று கொண்டிருப்பார்கள். திராவிடத் தலைமுறையினருக்கும், தகவல் தொழில் நுட்பத் தலைமுறையினருக்கும் இருக்கும் தெளிவு இவர்களிடம் கிடையாது. தாம் பார்த்து வளர்ந்த உலகிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பொருளாதார சமூகச் சூழலில் பிழைக்க வேண்டிய கட்டாயத்துடன் வாழ்ந்த இவர்களிடம் பழமையும் புதுமையும் முண்டி அடித்துக் கொண்டு வருத்திக் கொண்டிருக்கும்.

1 comment:

Unknown said...

நான் தகவல் தொழில்நுட்ப தலைமுறையினன்,

அருமையான ஒப்பீடு... வாழ்த்துக்கள் மற்றும் நன்றி..