இந்தக் குழந்தைக்கு வயது ஏழு ஆகி விட்டது. 2001ம் ஆண்டில் டிசம்பரில்தான் இந்தப் பணித்திட்டத்தில் தீவிரமாக இறங்கி நடைமுறைப்படுத்துவதை ஆரம்பித்தேன்.
இப்படி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் கருக் கொண்டது 2001ம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரியில் இருக்கலாம். பிஎல்சி நிறுவனத்தின் சார்பாக செய்து வந்த பணிகள் ஓய்ந்து கொண்டிருந்த சமயம். நிரல் உருவாக்கத்திலும், தமிழ் டாட் நெட் தொடர்ந்த எறும்புகள் குழுமத்திலும் ஆர்வமாக பணி செய்து கொண்டிருந்த சமயம்.
2001 டிசம்பரில் ஆரம்பிக்கும் போது, பெற்றெடுக்க உதவியாக இருந்தது கல்லூரி நண்பன். சீனாவிலிருந்து திரும்பி வந்து சென்னையில் இடம் பிடித்து வாழ்க்கையை அமைப்பதற்கு ஓரிரு மாதம் பிடித்தது. செயிண்ட் தாமசு மலைக்கருகில் இருந்த ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். அருகிலேயே இருந்த அவனுக்கு தொலைபேசி விபரம் சொன்னேன். இங்கே தங்கினால் நிறைய செலவாகும். இன்னொரு நண்பனின் வீட்டில் இப்போது இடம் இருக்கிறது, என்று அவன்தான் ஆலோசனை சொன்னான்.
அடையாறில் வீட்டில் இருந்து கொண்டே வாடகைக்கு வீடு தேடினேன். இந்து பத்திரிகையில் அகர வரிசையில் முதலில் வருவது அண்ணா நகர். வழக்கமான தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளை விட்டு விட்டு தேடினேன். அண்ணா நகரில் இரண்டு வீடுகள் அடையாளம் கண்டு கொண்டு ஒரு ஞாயிற்றுக் கிழமை பார்க்கக் கிளம்பினோம். முதல் வீடு புத்தம் புதிதாக வீட்டுக் காரர் ஆர்வமே இல்லாமல் காட்டினார். இரண்டாவது வீடு அமைந்து விட்டது.
நிறுவனம் தொடர்பாக நிரல் உருவாக்க வேண்டும். எறும்புகள் சந்திப்பு ஒன்றுக்குப் போனோம். அடையாறில் இருந்த ஒரு எறும்புகள் உறுப்பினரின் அலுவலகத்தில் நடந்தது. அங்கு ஒருவர். தோல் துறை தொடர்பான பயன்பாட்டை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னார். அவருடன் சேர்ந்து செயல்படலாம் என்று முடிவு செய்தோம்.
வளசரவாக்கத்தில் இருக்கும் வீடு அல்லது போரூரில் இருக்கும் அலுவலகத்துக்கு வாங்க பேசலாம் என்றார். ஒரு நல்ல நாளில் என்னை அடையாறிலிருந்து இரு சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு வளசரவாக்கம் நோக்கி அழைத்துச் சென்றான். கிளம்பும் போதே தாமதமாகி விட்டிருந்தது. எனக்கு நேரம் தவறி விடுமோ என்று எரிச்சல். நான்கு முறை தொலைபேசி தாமதமாக வருவதாகச் சொல்லி விட்டேன். 'அவர் வெளிநாட்டில் இருந்து வந்ததால்தான் இப்படி நேரம் பற்றிக் குறிப்பாக இருக்கிறார்' என்று அப்புறமாகச் சொன்னார்.
அவரது அலுவலகம் ஒரு வீட்டுக்குள் இருந்தது. புதியத் திட்டப் பணிக்காக ஒரு நிறுவனம் உருவாக்கி அதில் 50க்கு 50 என்று பொறுப்பும் உரிமையும் பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார். எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டால், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம்.
அவர்கள் நிரல் எழுதிக் கொடுத்து விட வேண்டும். நாங்கள் விற்றுப் பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். எப்படி இருக்க வேண்டும் என்று என்னுடைய எண்ணங்களை விளக்கினேன். அங்கு நிரல் உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடமும் விளக்கச் சொன்னார். முதலில் பயனர் மேலாண்மை பகுதியைச் செய்து விடலாம் என்று உடனேயே உறுதி அளித்தார்கள். வளசரவாக்கத்தில் இருந்த ஒரு விடுதியில் மதிய உணவும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம்.
திட்டப்படி, தோல் செய்யும் நிறுவனங்களுக்கு தோல் தேவையை அனுப்பும் வாடிக்கையாளர்கள் தமது தேவைகளை இணையத்தில் இணைந்து நமது பயன்பாடு மூலம் உள்ளிடுவார்கள். தோல் நிறுவனம் உள்நுழையும் போது புதிதாக வந்திருக்கும் தேவை விபரங்களைத் தெரிந்து கொள்வார்கள். அந்தத் தேவைகளை உற்பத்திக்கு எடுத்து, தயாரான பிறகு வாடிக்கையாளருக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த விபரங்களையும் இதே பயன்பாட்டில் போட்டு வைப்பார்கள். வாடிக்கையாளர்கள் எந்த நேரமும் எத்தனை தேவைகள் அனுப்பியிருக்கிறோம், எவ்வளவு உற்பத்தியில் இருக்கிறது, எந்தத் தேவைக்கு எவ்வளவு தோல் அனுப்பியிருக்கிறார்கள், எவ்வளவு மீதி இருக்கிறது போன்ற விபரங்களை இணையம் மூலம் பார்த்துக் கொள்ளலாம்.
ஒரு தோல் நிறுவனத்துக்கு 10 வாடிக்கையாளர்கள் இருந்தால், தோல் நிறுவனம் எல்லா வாடிக்கையாளர்களின் தேவை விபரங்களையும் பயன்பாட்டில் உள்ளிடும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது தேவை விபரங்களை மட்டும் பார்த்துக் கொள்ள முடியும். பயனரைப் பொறுத்து விபரங்களை மட்டுப் படுத்த வேண்டும்.
ஒரு தோல் நிறுவனத்துக்கு இதை விற்று விட்டால், அவர்கள் தமது வாடிக்கையாளர்களுக்குப் பயன்படுத்தக் கொடுப்பார்கள். அவர் இந்தப் பயன்பாட்டில் மனம் மகிழ்ந்து தான் தோல் வாங்கும் மற்ற நிறுவனங்களையும் இதே போல லெதர்லிங்க் பயன்பாட்டின் மூலமாக தனது தேவை விபரங்களை தெரிந்து கொள்ள வழி செய்யுமாறு வற்புறுத்துவார். அப்படி அவரது மற்ற விற்பனையாளர்களும் லெதர்லிங்கிலிருந்து பயன்பாட்டுக்கு பதிவு செய்து, வாடிக்கையாளருக்கு விபரங்கள் பார்க்க வழி செய்வார்கள்.
ஒரு வாடிக்கையாளருக்கு பல விற்பனையாளர்கள் லெதர்லிங்க் பயன்பாடு மூலம் தேவை விபரங்களை தெரிந்து கொள்ள வசதி கிடைத்திருந்தால், எல்லா விற்பனையாளர்களின் விபரங்களும் ஒரே இடைமுகத்தின் மூலம் வாடிக்கையாளருக்குத் தெரியும் படி வசதி செய்து கொடுத்து விட வேண்டும். லெதர்லிங்குக்கான பணம் விற்பனையாளர்களிடமிருந்து கிடைக்கும். வாங்குபவர்கள் கட்டணமின்றி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மிக உறுதியான திட்டம். பயன்பாட்டுக்குப் பணம் கொடுப்பவர்கள் நல்ல வாடிக்கையாளர் சேவை அளித்து தமது தொழிலை பெருக்கிக் கொள்ளலாம். அந்தச் சேவையால் மனம் மகிழ்ந்த வாடிக்கையாளர்கள் தாமே முன் வந்து மற்றவர்களுக்கு நமது பயன்பாட்டை பரிந்துரை செய்வார்கள்.
அப்படிப் பரிந்துரை செய்வதற்கான வசதிகளையும் கொடுக்க வேண்டும்.
இவ்வளவு விபரங்களையும் உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. ஏதோ ஆட்கள் கிடைத்து விட்டார்கள், வேலையை ஆரம்பித்து விடலாம் என்றுதான் அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து விட்டு நகருக்குள் சுற்றி வர ஒரு வண்டியும் வாங்கிக் கொள்ள வேண்டும். அண்ணா நகரின் 9வது பிராதானச் சாலையில் முதல் மாடியில் இருந்த வீட்டுக்கு முன்பணம் கொடுத்து குடிபுகுந்து விட்டேன். மூன்று அறைகள், ஒரு பெரிய முன்னறை, சமையலறை. ஒரு தளத்துக்கு நான்கு வீடுகள் வீதம், நான்கு தளங்கள் இருந்தன. அண்டை அயலாருடன் பழகும் இயல்பு எனக்கு கிடையாது.
அண்ணா நகரின் டிவிஎஸ் விற்பனை நிலையத்துக்குப் போய் வண்டிகளைப் பார்த்தோம். அங்கிருந்த விற்பனையாளர் சரியாகப் பேசிக் கவனிக்கவில்லை. விலையை காசோலையாகக் கொடுத்தால், காசோலை பணமாக மாறிய பிறகுதான் வண்டியை எடுத்துப் போக முடியும் என்று சொன்னதும் எனக்குக் கோபம் வந்து வெளியில் வந்து விட்டேன்.
நண்பர்கள் ஓட்டிக் கொண்டிருந்த சுசுகி சமுராய் வண்டியை வாங்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். 2001ம் ஆண்டில் அந்த தயாரிப்பையே ஓய்த்துக் கொண்டிருந்தார்கள். புதிதாக நான்கு சுழற்சி முறையிலான டிவிஎஃச் விக்டர் அறிமுகப்படுத்த இருந்தார்கள். கடைசியில் நங்கநல்லூரில் இருந்த புளூ பைக் நிறுவனத்தில் வண்டியை வாங்க பதிவு செய்து கொண்டோம். அவர்கள் வண்டி உரிமத்துக்கு ஏற்பாடு செய்ய 2 நாட்கள் பிடிக்க, 2 நாட்களுக்குப் பிறகுதான் வண்டியை எடுத்துக் கொண்டேன். அவர்களும் உடனடியாக வண்டியைக் கொடுத்து விடவில்லைதான்.
வண்டி வாங்கியாச்சு, ஓட்டப் படிக்க வேண்டும், ஓட்டுனர் உரிமம் வாங்க வேண்டும். கற்றுக் கொடுத்தலில் ஒரே நாளில் வண்டியை ஓட்ட ஆரம்பித்து விட்டேன். வேக மாற்றிகளைக் கையாளுதல் போன்ற புதிய விபரங்களில் தேர்ச்சி பெற வேண்டும். உரிமம் பெறுவதற்காக ஆலந்தூரில் இருந்த போக்குவரத்து அலுவலகத்தில் பழகுனர் உரிமம் வாங்கிக் கொண்டேன்.
அதை வைத்துக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன்.
இதற்கிடையில் குழுவினர் எழுதும் நிரல், மென்பொருள் நிறைவளிக்கவில்லை. அவர்களுக்கு பரிநிரல் பயன்பாடுகளைப் பயன்படுத்த விருப்பமில்லை. மைஎசுகியூஎல் வேண்டாம் என்று காரணங்களை அடுக்கினார்கள். போசுடுஎசுகியூஎல் பயன்படுத்தலாம் என்றால் அவர்களுக்கு அதில் தேர்ச்சியில்லை. போகும் போது ஏற்கனவே செய்து வைத்த சில இடைமுகங்களைக் காட்டினார்கள். நமது பயன்பாட்டுக்குத் தொடர்பில்லாமல் பொதுவாக பயனர் மேலாண்மை என்று இருந்தது. இடையில் வீட்டுக்குக் கூட்டிப் போய் மதிய உணவெல்லாம் கொடுத்தார்.
வெளி நாட்டிலிருந்து இந்தியா திரும்பி ஒரு ஆண்டு முடியும் காலமாகியிருந்தது. அவன் வேலை ஒன்றில் சேர முடிவு செய்து, மைலாப்பூரில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து விட்டான். நான் தனியாகத்தான் வளர்க்க வேண்டும்.
தமிழ்க் குழுக்களின் மூலம் அறிமுகமாயிருந்த பேராசிரியர் தனது உறவினரின் மென்பொருள் நிறுவனம் வேளச்சேரியில் இருப்பதாகவும், அவர்கள் பரிநிரல் பயன்படுத்தி மென்பொருள் செய்வதாகவும் சொன்னார். அவரிடம் தொடர்பு எண்களை வாங்கிக் கொண்டு அவர்களிடம் பேசினேன். விபரங்களைக் கேட்டு விட்டு 17000 ரூபாய்கள் கொடுத்தால் முடித்துக் கொடுத்து விடுவதாகச் சொன்னார்கள்.
வேளச்சேரியில் சுடாலினின் வீட்டுக்கு அருகிலேயே புரொபசனல் அல்காரிதம்சு என்று நடத்திக் கொண்டிருந்தார்கள். போசுடுகிரசுஎசுகியூஎல், பிஎச்பி என்று பேசினார்கள். தலைமையில் வேலை நடக்கும் என்றார்கள். எனக்கு என்ன தேவை என்பதை எழுதிக் கொடுத்து விடுமாறு கேட்டார்கள்.
நான் எச்டிஎம்எல்லில் எந்த மாதிரி இடைமுகங்கள், அறிக்கைகள் வர வேண்டும் என்று செய்து அதற்குள் நான் வாடகைக்கு எடுத்திருந்த இணையத் தளத்தில் போட்டு வைத்தேன். லெதர்லிங்க் டாட் நெட் என்ற முகவரியை பதிவு செய்து கொடுத்திருந்தார். போகசு இந்தியா என்ற நிறுவனத்தில் ஆண்டுக்கு 5000 ரூபாய் செலவில் இணைய வழங்கியில் இடம் வாங்கியிருந்தேன். அவர்கள் அதில் போசுடுகிரெசுஎசுகியூஎல்லும் போட்டுக் கொடுத்திருந்தார்கள்.
அந்தத் தளத்தில் போய் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்துக் கொள்ள வேண்டியது. முதல் தவணை பணத்தைக் கொடுத்து விட்டேன். மளமளவென்று நிரல் எழுத ஆரம்பித்து விட்டார்கள். பிப்ரவரி முதல் வாரம் தோல் கண்காட்சிக்கு முன்பு முடிக்க வேண்டும் என்று பேசியிருந்தோம். ஒரு மாதத்தில் முடித்து விடுகிறோம் என்று சொல்லியிருந்தார்கள்.
ஒரு மாதத்தில் எதுவுமே முடிந்திருக்கவில்லை, முடித்திருக்கவும் முடியாது. ஏதோ சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டார்கள். ஆனால் கொடுத்த பணத்துக்கு முழு பயன்பாட்டுக்கான அடிப்படை நிரல்கள் கிடைத்து விட்டன. கொஞ்சம் சண்டை போட்டு விட்டு நிரலை எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.
குழந்தை கண்களை இறுக மூடிக் கொண்டு குட்டியாக கையில் இருந்தது. வீட்டில் ஒரு அறையில் இரண்டு கணினிகள், ஒரு மடிக்கணினி என்று போட்டு வைத்திருந்தேன். வேலையைத் தொடர சித்தப்பா பையன் தம்பி நண்பனின் தம்பி சேர்த்துக் கொண்டேன். இரண்டு பேரும் கணினிவியலில் பட்டம் பெற்று வேலை இல்லாமல் இருந்தார்கள். அவரவர் வீட்டில் இருந்து வேலை செய்து கொள்ளலாம்.
இதற்குள் சமாதானக் கொடி காட்டி அவளையும் குழந்தைகளையும் வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டிருந்தேன். தோல் கண்காட்சியில் அறிமுகத்தின் மூலம் ஒரு தோல் நிறுவன உரிமையாளரைச் சந்தித்து நமது பயன்பாட்டைப் பற்றி விளக்கியிருந்தேன். குரோம்பேட்டை நாகல்கேணியில் இருக்கும் அவரது அலுவலகத்தில் சந்தித்து அது வரை செய்து வைத்திருந்த பயன்பாட்டைப் பற்றிச் சொன்னேன். அவர் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம், பயன்படுத்திப் பார்த்தால் போதும் என்று பேசிக் கொண்டேன்.
அவருக்கு எனது சீனத் தொடர்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணம் இருந்திருக்கும். சீனாவில் தோல்களை விற்க உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். எனக்குத் தெரிந்த தொழிற்சாலைகளைத் தொடர்பு கொள்ளச் சொல்லலாம் என்று விபரங்களைக் கொடுத்தேன். எனக்கு அதில் ஆர்வமில்லை. பிற்காலத்தில் வளர்த்தபடி செய்யும் திட்டம் எட்டிப் பார்க்கவே இல்லை. தோல் விற்பதில் எனது திறமை பொருந்தாது என்று ஏற்கனவே சலித்திருந்தது.
ஆரம்ப கால வாடிக்கையாளர்கள் எல்லோருமே சீனத் தொடர்பின் அடிப்படையில்தான் கிடைத்தார்கள்.
தொழில்நுட்ப முகப்பில் இணையத்தில் தீவிரமாக படிப்பதிலும் கற்றுக் கொள்வதிலும் ஈடுபட்டிருந்தேன். ஸ்லாஷ்டாட், போசுடுகிரெசுகியூஎல், பிஎச்பி என்று ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் படித்துக் கொண்டிருப்பேன். பயன்பாட்டில் செய்ய வேண்டிய மாறுதல்கள், புரிந்து கொள்ள வேண்டிய நுணுக்கங்கள் ஒவ்வொன்றையும் நானே புரிந்து கொள்ள முயற்சி செய்து வெற்றியும் கண்டு கொண்டிருந்தேன். பயன்பாட்டில் இருந்த தரவுத்தள வடிவமைப்பு, நிரல் அமைப்பு அனைத்தையும் முழுமையாகப் புரிந்து கொண்டிருந்தேன்.
இதற்கிடையில் ராணிப்பேட்டையில் போய் பேசி விட்டு வந்திருந்தேன். அவர்களுக்கு தகவல் மேலாண்மைக்கு உதவி செய்யலாம் என்று திட்டம். ராணிப்பேட்டையில் இணைய இணைப்பு சொதப்பலாக இருந்தது. இணையத்தில் அவர்களால் எதையும் செய்ய முடியாது. பாண்டிச்சேரியில் நிறுவனம் நடத்தி வரும் நண்பனிடமும் தொடர்பு கொண்டிருந்தேன். வேலை பார்க்கும் கல்லூரித் தோழியின் மூலம் அவர்களையும் சந்தித்துக் கொண்டிருந்தேன்.
வேலை தேட ஆரம்பித்திருந்தாள். நிறுவனத்துக்குப் போய் உரிமையாளரைச் சந்தித்த போது என்னைப் பற்றிச் சொல்ல என்னுடைய பயன்பாட்டைப் பார்க்க அழைத்திருந்தார். அங்கும் விற்பனைக்கான சாத்தியங்கள் தெரிந்தன.
நிரல் உருவாக்கத் தரப்பில் மனம் சலித்து வேறு வழி பார்த்து போயிருந்தார்கள். தொடர்பு கொண்டு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்க அவரது கல்லூரியில் மாணவர்களான இரண்டு பேரை அனுப்பி வைப்பதாகச் சொன்னார். அப்படி வந்து சேர்ந்தார்கள் இரண்டு பேர். 5000 ரூபாய் சம்பளம் தருகிறேன் என்று சொன்னதும், இரண்டு பேரும் சேர்கிறோம் ஆளுக்கு 2500 கொடுத்து விடுங்கள் என்று சேர்ந்து கொண்டார்கள்.
வீட்டில் அந்த அறையிலேயே சுவற்றில் பொருத்தும்படியாக ஒரு மேசை உருவாக்கி அவர்களும் உட்கார்ந்து பணி புரியும்படியான சூழலை உருவாக்கிக் கொண்டேன். வீட்டில் சூழலோ மோசமாகவே இருந்து வந்தது. உரசல்கள், வழக்கம் போல வெடிப்புகளாக அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. ஓரிரு முறை பணி புரிய வந்தவர்களும் அதைப் பார்க்க நேரிட்டது.
டாடா நிறுவனத்தில் ஓட்டுனராக இருந்தவர் தனது உறவினர் என்று ஒருவரை அனுப்பி வைத்தார். அவர் எப்படிக் கற்றுக் கொள்கிறார் என்று பார்த்து விட்டு முடிவு செய்தவாகச் சொல்லியிருந்தேன். அவரை சும்மாவே அனுப்பி வைத்து விட்டேன்.
நிரல் உருவாக்கத்தை முழுப் பொறுப்புடன் எடுத்துக் கொண்டார்கள். இரண்டு இடத்துக்கும் போய் அவர்களைப் பயன்படுத்த வைத்தோம். நமது பயன்பாட்டில் வாடிக்கையாளர் தேவைகளை உள்ளிடவும் ஆரம்பித்தார்கள். கொஞ்சம் காசு கூட வாங்கிக் கொண்டோம்.
கையில் இருந்த சேமிப்புகள் வேகமாகக் கரைந்து கொண்டிருந்தன. வீட்டு வாடகை, வீட்டுக்குப் பொருட்கள் வாங்குவது - சோபா, தரை விரிப்புக் கம்பளம், துணி துவைக்கும் எந்திரம், தொலைக்காட்சி, குளிர்பதன கருவி என்று எதையும் விட்டு வைக்காமல் வாங்கி முடித்தோம். வெளியில் சுற்றுவது, சாப்பிடுவது என்றும் குறையில்லை. இதோ ஓரிரு மாதங்களில் நிறுவனத்திலிருந்து பணமாகக் கொட்டப் போகிறது. அதனால் எந்தக் கவலையும் இல்லை.
வாடிக்கையாளர்களுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் அளவுக்கு பலன் கிடைக்கவில்லை. இணைய இணைப்பு சரியில்லாமல் பயன்படுத்துவது சரியில்லாமல் எதுவும் வெளிப்பாடு வரவில்லை. ஆனால் நடைமுறைத் தகவல்களை உள்ளிட முயற்சிக்கும் போது பயன்பாட்டில் பல மேம்பாடுகள் செய்ய வேண்டியது தெரிந்து செய்து முடித்தோம்.
தொழில் நுட்பப் புத்தகங்களையும் வாங்கிக் குவித்தேன். வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான சேவை அளிக்க வேண்டுமானால் சொந்தமாக வழங்கி இருக்க வேண்டும் என்று நெட்பார் இந்தியாவில் நமது வழங்கியை வைத்துக் கொள்ள ஒப்பந்தம் போட்டுக் கொண்டேன். மாதா மாதம் அதற்கு 7000 ரூபாய் செலவாகி வந்தது.
அந்த 7000, வீட்டு வாடகையில் நிறுவனத்தின் பங்காக 3000, சம்பளம் 5000 என்று 15000 ரூபாய்கள் செலவாகி வந்தது. இது போக தொலைபேசிக் கட்டணம், பயணச் செலவுகள் என்று மாதம் 20000 தாண்டியது. வீட்டுச் செலவுகளாக வாடகையில் பங்கு 4000, சாப்பாட்டுச் செலவுகள் 5000, வெளியில் போய் வரும் செலவுகள், குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் என்று 20000 தொட்டுக் கொண்டிருந்தது. மொத்தச் சேமிப்பு சில லட்சங்கள்தான் இருந்தது. டிசம்பர் வரும் போது எல்லாமே வறண்டு போயிருந்தது.