Saturday, May 5, 2007

தோலின் சிறப்பு (தோலின் கதை - 12)

உலகில் பதப்படுத்தப்படும் தோல்களில் பாதிக்கும் மேல் காலணிகள் செய்யப் பயன்படுகின்றன.

ஏன் தோலைப் பயன்படுத்த வேண்டும்? மரக்கட்டையிலோ, செயற்கை பொருட்களிலோ, ரப்பரிலோ இல்லாத சிறப்புப் பண்பு தோலில் என்ன இருக்கிறது?

ஏற்கனவே சொன்னபடி, தோல் என்பது இயற்கையால் நெய்யப்பட்ட ஒரு உறுதியான முப்பரிமாண வலைப்பின்னல். விலங்குகளின் வெளிப் பாதுகாப்பாக, உள்ளுறுப்புகளைப் பாதுகாப்பதுடன், உள் வெப்ப நிலை மாறுபடாமல் பார்த்துக் கொள்வதும் தோலின் பணி.
  • இந்தப் பின்னணியுடனான தோலின் வலைப்பின்னல் வலிமை, அதன் வளைவுத் தன்மையுடன் ஒப்பிடும் போது செயற்கை இழைகளை விட அதிகமாக இருக்கிறது.

  • இதை விட முக்கியமாக தோலினால் செய்த காலணிகளை அணியும் போது, காலில் உருவாகும் வியர்வை ஆவியாகி தோலின் மூலம் ஊடுருவி வெளியே போகவும், வெளியிலிருந்து தூய காற்று காலை அடையவும் வழி இருக்கிறது.
இந்த இரண்டு பண்புகளையும் இணைத்து செயற்கைப் பொருள் ஒன்றை உருவாக்குவது சவாலாகவே இருந்து வருகிறது.
  • நிறைய துளைகள் போட்டு காற்றோட்டம் ஏற்படுத்திக் கொடுத்தால், வலிமை குறைந்து விடும்.

  • வலிமைக்காக உறுதியான பின்னலாக உருவாக்கினால் பாதத்துக்கு ஆரோக்கியமான சூழ்நிலை இல்லாமல் போய் விடும்.
இயற்கை அன்னை நெய்த இந்த துணியுடன் வேறு எதுவும் ஒப்பிட முடியாமல் போவது வியப்பில்லைதானே.

தோல் பதனிடும் போது தோலின் அழுகிப் போகும் தன்மையை மாற்றும் போது - வலிமை, காற்று போகும் இயல்பு மாறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சரியாகப் பதப்படுத்தாத தோல் சீக்கிரம் அழுகிப் போகலாம், அல்லது தவறான முறைகளால் அதன் வலிமை இழந்திருக்கலாம். அல்லது அளவுக்கதிகமான வேதிப்பொருள் பயன்பாட்டினால் சுவாசிக்கும் இயல்பு மறைந்து போயிருக்கலாம்.

சரி, அடுத்ததாக தோல் பொருட்கள் செய்யும் தொழிலில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

2 comments:

வடுவூர் குமார் said...

திடிரென்று பார்த்தால் 12 என்று வருகிறது.??மீதியையும் படிக்க வேண்டும்.
இதிலும் சந்தேகம்... எல்லா தோலுக்கும் ஒரே மாதிரியான பண்புகள் இருக்குமா?பழைய பதிவில் பதில் சொல்லிவிட்டீர்களா?
நல்ல தொடராக அமைய வாழ்த்துக்கள்.

மா சிவகுமார் said...

//எல்லா தோலுக்கும் ஒரே மாதிரியான பண்புகள் இருக்குமா?பழைய பதிவில் பதில் சொல்லிவிட்டீர்களா?//

வெவ்வேறு தோல்களின் வேறுபாடுகள் குறித்தும் எழுதுகிறேன். வெவ்வேறு விலங்குத் தோல்கள், வெவ்வேறு பயன்பாட்டுக்கான தோல்களின் பண்புகள் வேறுபடுகின்றன.

அன்புடன்,

மா சிவகுமார்