Friday, May 11, 2007

நஞ்சாகும் மீன்கள் (தோலின் கதை - 19)

இப்போது ஒரு தொழிற்சாலையிலிருந்து கழிவு நீர் ஆற்றில் கலக்கிறது என்று வைத்துக் கொள்வோம். கழிவின் அளவு ஆற்றின் அளவை விடச் சிறிதாக இருந்தால் ஆற்றின் இயற்கையான செரித்துக் கொள்ளும் திறனால் சுத்தமாக்கிக் கொள்ளும். ஆனால் கழிவின் அளவு மிக அதிகமாக இருந்தால் ஆற்று நீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜனின் அளவு குறைந்து விடும். இயற்கையாக செரித்து விட முடியாத வேதிப் பொருட்கள், உலோக மூலக் கூறுகளாக கழிவுகளாக வந்து கலந்தால் அவை நீரில் அப்படியே கரைந்து இருக்கும்.

இத்தகைய நீரில் மீன்களுக்கு சுவாசிக்க முடியாமல் ஆறு இறந்து போய் விடும். அந்த அளவு நிலைமை மோசமாகா விட்டாலும், உலோகங்கள் போன்ற நச்சுப் பொருட்கள் மீன்களின் உடம்பில் புகுந்து அதைச் சாப்பிடும் விலங்குகள், மனிதர்களையும் பாதிக்கும்.

இதே போன்ற கதைதான் நிலத்தில் கலக்கும் கழிவு நீர்களின் விளைவுகளும். இந்தக் கழிவுகள் பெட்ரோல் சார்ந்த வேதிப் பொருட்களை பெருமளவு பயன்படுத்தும் நிலைமையால் விளைவது.

கழிவு நீரைச் சுத்தப்படுத்திதான் பொது ஆறுகளில், நிலங்களில் வெளி விட வேண்டும் என்று சட்டங்கள் இருக்கின்றன. சுத்திகரிப்பு ஆலைகளும் பெருமளவு பொருட்செலவில் கட்டப்பட்டுள்ளன். நம் ஊரில் ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை பகுதிகளில் தனித்தனியாகவோ கூட்டாகவோ கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் தோல் பதனிடும் நிறுவனங்கள்.

என்னதான் சுத்திகரித்தாலும் 100% பாதுகாப்பான நிலைக்கு நீரை மாற்றுவது என்பது நடக்கவே முடியாத ஒன்று. அதனால் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை, நீதிமன்றங்களை திருப்திப் படுத்தும் அளவுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்து நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எவ்வளவுக்களவு அதிகமாக தூய்மை செய்கிறோம் அவ்வளவுக்களவு செலவு அதிகமாகும். கழிவு நீரை 90% தூய்மை செய்ய ஒரு அலகுக்கு 5 ரூபாய் செலவாகிறது என்றால் 99% தூய்மை செய்ய 50 ரூபாயும், 99.99% தூய்மை செய்ய 200 ரூபாயும் செலவாகலாம். அது பொருளாதார அடிப்படையில் கட்டுப்படாகாது என்பது ஒரு புறம்.

அதனால்தான் குடிக்கும் கோலா பானங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் இருப்பது இயற்கைதான் என்று வாதாடுகின்றார்கள் பத்து ரூபாய்க்கு அரை லிட்டர் நீரை விற்கும் நிறுவனங்கள்.

இன்னொரு புறம் தூய்மை செய்யப்படும் போது பிரித்து எடுக்கப்பட்ட வேதிக் கழிவை என்ன செய்வது!

2 comments:

வடுவூர் குமார் said...

மொத்தமும் சுத்திகரிப்பு பண்ணமுடியாது என்று தெரிந்த பின்னும்,தோலுக்கு மாற்று கண்டுபிடிக்கவில்லையா?
எவனோ சுத்தமாக இருக்க நம்மை ஏன் அழுக்காகிக் கொள்ளவேண்டும்?
நீங்கள் சொல்லியுள்ள ஆம்பூர் பகுதியில் மாற்றுத்தொழிலுக்கு ஏற்பாடு செய்தபிறகு,தொல் சுத்திகரிப்புக்கு தடைவிதிக்க முடியாதா?
கேள்விகள் தான் அதிகமாகுது.
இந்த தொடராவது நல்லுள்ளம் படைத்த அரசாங்க அதிகாரிகளின் கண்ணில் பட்டால் தேவலை.

மா சிவகுமார் said...

வடுவூர் குமார்,

சரியான கேள்விகளாகக் கேட்டு விடுகிறீர்கள். அடுத்த பகுதிகளில் இதற்கும் விடை இருக்கிறது.

பெரிய முதலீட்டில் தொழில்நுட்ப மாற்றம் ஏற்பட்டால் ஒழிய இந்த நிலைமை மாற வழி தெரியவில்லை.

அன்புடன்,

மா சிவகுமார்