Wednesday, May 9, 2007

ஊரு விட்டு ஊரு வந்து (தோலின் கதை - 16)

அதாவது இறைச்சி சாப்பிடும் இடங்களில் எல்லாம் கிடைக்கும் பச்சைத் தோல்கள் திரட்டப்பட்டு, இத்தாலி, இந்தியா, சீனா, தென் அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் பதப்படுத்தப்படுகிறது. வளர்ந்த சமூகங்களில் இந்தப் பணி குறைந்ததன் காரணம், வேதிப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தண்ணீர் மாசுபடுத்தல்.

தோலிலிருந்து தோல் பொருள் செய்யும் தொழில் சீனா, வியட்நாம், இந்தியா போன்ற நாடுகளில் பெருமளவு நடைபெறுகின்றன.

மேலே சொன்ன இரண்டு தொழில்களுமே பிற நாடுகளிலும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் பெரும்பான்மை உற்பத்தி ஆசியா, தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பாவில் நடைபெறுகிறது.

  • விலை உயர்ந்த தோல் பொருட்கள் விற்பனை ஆகும் சமூகங்கள் முன்னேறிய நாடுகளில் இருக்கின்றன. ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற சந்தைகளில் ஆண்டுக்கு இரண்டு பருவங்கள் புதிய புதிய வடிவமைப்புடைய பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பல கோடி டாலர் மதிப்பில் விற்பனை ஆகின்றன.
  • இது போக குளிர் மிகுந்த பகுதிகளில் பொருளாதார முன்னேற்றம் குறைவாக இருந்தாலும் விலை குறைவான தோல் மேலாடைகள் தேவைப்படும்.
  • கடைசியாக வசதி குறைந்தவர்கள் கூடப் பயன்படுத்தும் விதமாக காலணிகள் உலகெங்கும் பயன்படுத்தப்படுகின்றன.
தோல் பொருட்கள் விற்பனையில் பெரு மதிப்பு வளர்ந்த பொருளாதார நாடுகளில் நடைபெறுகிறது. இந்தியா, சீனா போன்று மக்கள் செல்வம் நிறைந்த நாடுகளில் விலை குறைவான காலணிகள் விற்கின்றன. இந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் போது இங்கும் விலை உயர்ந்த பொருட்களை விற்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

கிட்டத்தட்ட ஒரு முழுச் சுற்று சுற்றி இறைச்சி விலங்குகளிலிருந்து எடுக்கப்பட்ட தோல், பயன்படும் பொருளாக அதே இடத்துக்கு வந்து சேருகிறது.

எடுத்துக் காட்டாக
  • ஜெர்மனியில் மாட்டிறைச்சி பண்ணையிலிருந்து திரட்டப்பட்ட தோல்கள்,
  • இந்தோனேசியாவுக்கு அனுப்பப்பட்டு,
  • பாதி பதனிடப்பட்ட நிலையில், இந்திய நிறுவனத்தால் வாங்கப்பட்டு,
  • இந்தியாவில் பதத் தோல் தயாராகி,
  • காலணி உருவாக்கம் சீனாவில் நடந்து,
  • இறுதி விற்பனை நியூயார்க்கின் காலணி கடையில் நடக்கலாம்.
  • அதை வாங்கிப் பயன்படுத்துபவர் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்கா போயிருக்கும் வணிகராக இருக்கலாம்.
இந்த எடுத்துக் காட்டு வலிந்து சொல்லப்பட்டதாகப் பட்டாலும் இவ்வளவு பரிமாற்றங்களுக்குப் பிறகே பெருமளவு உற்பத்தி, விற்பனை நடைபெறுகின்றன. ஆண்டு தோறும் நாடு விட்டு நாடு பாயும் தோல் மற்றும் தோல் பொருட்களின் ஏற்றுமதி(அல்லது இறக்குமதி) மதிப்பு 60 பில்லியன் டாலரைத் தாண்டுகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று லட்சம் கோடி ரூபாய்கள்.

இதைத் தவிர தோல் பதனிடுதலில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள், இயந்திரங்கள், காலணி, தோலாடை செய்யத் தேவைப்படும் இயந்திரங்கள், பிற தோல் இல்லாத பொருட்கள் இவற்றை வாங்கி விற்றலிலும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் புழங்குகின்றன.

2 comments:

வடுவூர் குமார் said...

பாதி பதனிடப்பட்ட நிலையில
அப்படி என்றால்?
எங்காவது சொல்லி நான் மறந்துவிட்டேனா?

மா சிவகுமார் said...

சொல்லலை என்று நினைக்கிறேன்.

பல நேரங்களில் பச்சைத் தோலாக கப்பலேற்றி அனுப்பாமல் பாதி வரை பதனிட்டு அனுப்புவார்கள்.

எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் பச்சைத் தோலை பதனிடும் வரையிலான தொழிற்சாலைகள் ஈரோடு , திண்டுக்கல் பகுதிகளிலும், அதற்கு மேல் அழகு படுத்தும் தொழிற்சாலைகள் ராணிப்பேட்டை போன்ற இடங்களிலும் இருக்கின்றன.

அன்புடன்,

மா சிவகுமார்