Monday, May 14, 2007

கட்டி மேய்த்தல் (தோலின் கதை - 22)

ஐரோப்பிய உடை வடிவமைப்பு வல்லுனர் உருவாக்கிய மாதிரியின் படி தோல், காலணி செய்யப்பட வேண்டும்.

  • தோல் பதனிடுதல் இந்தியாவில் நடக்கலாம்,
  • காலணி செய்வது சீனாவில் நடக்கும்.
  • தான் நினைத்த நிறம், பார்வை, மென்மை, வழவழப்பு உருவாகியிருக்கிறதா என்று காலணி விற்பனை நிறுவனம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • அதற்காக நிறத்தின் மாதிரித் துண்டு, மற்ற இயல்புகளின் மாதிரிகளை இந்தியாவுக்கும், சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் அனுப்ப வேண்டும்.
  • அதை அடிப்படையைக் கொண்டு செய்யப்பட்ட தோல் இந்தியாவிலிருந்து சீனாவுக்குப் பறக்க வேண்டும்.
  • சீனாவில் காலணி செய்யப்பட்டு அமெரிக்க வாங்கும் நிறுவனப் பிரதிநிதிக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.
  • இடையில் யாருக்காவது நிறைவு இல்லா விட்டால், வேலையை மறுபடியும் செய்ய வேண்டும்.
இது பருவம் ஆரம்பிக்கும் முன்னர் தயாரிப்பு வேலைகளுக்கு. விற்பனைத் தேவையைப் பொறுத்து என்ன நிறத்தில் என்ன பாணி பொருள் எவ்வளவு வேண்டும் என்று ஒவ்வொரு கடையும் காலணி விற்பனை நிறுவனத்துக்கு தகவல் அனுப்ப வேண்டும். அந்தத் தகவல்களைத் திரட்டி, காலணி உற்பத்தி நிறுவனத்துக்கு அனுப்ப அவர்கள் அதற்குத் தேவையான தோல் முதலான பொருட்களை வாங்க அந்தந்த நிறுவனங்களுக்கு செய்தி தர வேண்டும்.

உற்பத்தி நடக்கும் போது முதலில் செய்து அனுப்பிய மாதிரியுடன் ஒத்துப் போகும் படி நிறம், வடிவம், மென்மை இருக்க வேண்டும். மாதிரி உருவாக்கலில் இருந்த நுணுக்கம் மாறிப் போய் பெரிய அளவில் உற்பத்தியில் சிறிய மாறுதல்கள் வந்து விடலாம், அப்படி வந்த மாறுதல்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவையா என்று சந்தேகம் இருந்தால் இத்தனை கை மாறி தகவல் போய்ச் சேர வேண்டும்.

தோல் உற்பத்தி சாலைக்கும், உற்பத்தி பொருட்கள் கடைகளுக்கும் போய்ச் சேர வேண்டும். அவை போகும் விபரங்கள், தாமதம் ஏற்பட்டால் அது குறித்த தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும். இவ்வளவுக்கும் எதிர்த் திசையில் பணம் வந்து சேர வேண்டும்

இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நாடுகளுக்கிடையே நடைபெறுவதால் தகவல் தொடர்பு மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.

2 comments:

வடுவூர் குமார் said...

ஆமாம்,ஒவ்வொரு தொழிலையும் வெவ்வேறு இடங்களில் செய்வதால் உற்பத்திச் செலவு கூடாது?

மா சிவகுமார் said...

உற்பத்தி செலவும், போக்குவரத்து, தகவல் தொடர்பு செலவும் கூடத்தான் செய்கிறது.

ஆனால், அதற்கு ஈடான பிற காரணிகள் அந்தச் செலவுகளை ஈடு கட்டும் அளவுக்கு ஆதாயங்களை அளிப்பதால்தான் இப்படி நடக்கிறது.

அன்புடன்,

மா சிவகுமார்