Sunday, May 13, 2007

யார் மணி கட்டுவது (தோலின் கதை - 21)

எவ்வளவு அதிகமாக வேதிப் பொருளை விற்கிறார்களோ அவ்வளவுக்கு ஆதாயம் இந்த வேதி நிறுவனங்களுக்கு. பொதுவாக மருந்து, உணவு வேதிப் பொருட்கள், பிற பயன்பாட்டுக்கான வேதிப் பொருட்களுடன் ஒரு பிரிவாக தோல் வேதிப் பொருட்களை விற்கும் பெரு நிறுனங்களே இந்த வேலையில் ஈடுபடுகின்றன. இந்த நிறுவனங்கள் புதிய நுட்பங்களை உருவாக்கி அதன் செலவையும் வேதிப் பொருளின் விலையில் ஏற்றிக் கொள்கிறார்கள்.

இப்படி தோல் துறைக்கு வேதிப் பொருள் விற்பதில் கடும் போட்டி நிலவுகிறது. தோல் செய்ய செலவாகும் மதிப்பின் கிட்டத்தட்ட 15-20 சதவீதம் வேதிப் பொருள், 50%க்கு மேல் பச்சைத் தோலின் மதிப்பு.

வேதிப் பொருளின் அளவைக் குறைக்க ஆசைப்பட்டாலும் 20% செலவை 18% ஆகக் குறைக்கப் போய் 50% மதிப்புடைய தோலின் மதிப்பு 40% ஆகக் குறைந்து விட்டால் பெரும் இழப்பு ஏற்பட்டு விடும். அதனால் தோல் பதனிடும் நிறுவன மேலாளர்கள், வேதிப் பொருள் வழங்கும் நிறுனங்களின் தொழில் நுட்ப ஆலோசனைகளுக்கு மாறாக செய்யத் துணிய மாட்டார்கள்.

வேதி நிறுவனங்களின் தொழில் நுட்பக் கவனம் என்னவோ, எப்படி அதிகமான வேதிப் பொருட்களை விற்பது என்பதில்தான் இருக்கிறது. வீணாகப் போகும் அளவைக் குறைப்பதால் தோல் நிறுவனத்துக்கும், சுற்றுச் சூழலுக்கும் ஆதாயம் இருந்தாலும் வேதிப் பொருளை விற்கும் நிறுவனத்துக்கு குறுகிய கால நோக்கில் இழப்புதான்.

இதனால் மேலே சொன்ன முதல் அணுகு முறை தவறிப் போய் விடுகிறது. இரண்டாவதாகச் சொன்ன தேவையும் கவனிக்கப்படாமல் போய் விடுகிறது.

தமது வருவாயில் ஒரு சிறு பகுதியை மட்டும் ஈட்டும் தோல் பதனிடும் பொருள் பிரிவில் பெருமளவு முதலீடு செய்து தோல் பதனிடும் முறையில் வேதிப் பொருட்கள் பயன்பாட்டை எப்படி ஒழித்துக் கட்டலாம் என்று செய்யும் முனைப்பு யாருக்கும் இல்லை. நடைமுறையில் இருக்கும் பழக்கத்தை மாற்றப் போய் தமது மூக்கைத் தாமே சிதைத்துக் கொள்ள வேதிப் பொருள் தயாரித்து விற்கும் நிறுவனங்களுக்கும் விருப்பம் இல்லை.

சுற்றுப் புறச் சூழல் மாசுபடுவது பெரிய பிரச்சனையாகி எப்படியாவது வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவழிப்பது ஆரம்பித்தால் சில ஆண்டுகளில் இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கலாம்.

இனிமேல் இந்தத் துறையில் மேலாண்மை சிக்கல்களைப் பார்க்கலாம்.

5 comments:

வடுவூர் குமார் said...

R&D பண்ண இஷ்டம் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு பூமியையும் நிலத்தடி நீரையும் கஷ்டப்படுத்துகிறோம்.
அரசு மானியம் வாங்கும் கல்லூரிகள் இதை ஒரு பிராஜக்டெட் ஆக எடுத்து பண்ணலாமே!!

பொன்ஸ்~~Poorna said...

இன்னும் இடுகையைப் படிக்கவில்லை.. ஆனால், தலைப்பு ரொம்பவும் பயங்கரமாக இருக்கிறது சிவகுமார்..
"பூனைக்கு யார் மணி கட்டுவது = தோலை உரித்து "
பாவங்க பூனை ;)

மா சிவகுமார் said...

வணக்கம் குமார்,

அரசு துறையில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற இட்ங்களில் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. ஆனால், நடைமுறை தொழில்நுட்பமாக மாற்ற தொழில் துறையில் முயற்சிகள் போதவில்லை.

பொன்ஸ்,

//தலைப்பு ரொம்பவும் பயங்கரமாக இருக்கிறது சிவகுமார்.//

எப்படி மாற்றுவது? பூனைக்கு என்ற சொல்லை எடுத்து விடுகிறேன்.

நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

Anonymous said...

காந்தியவாதியான நீங்கள் காந்தி பசுவதை பற்றி சொல்லியிருந்தது குறித்து ஒரு பதிவு போட இயலுமா?

மா சிவகுமார் said...

பனித் துளி,

காந்தி பசுவதை பற்றிச் சொல்லியிருந்ததைக் குறித்து எழுத சிறிது அவகாம் வேண்டும். (சில மாதங்கள்).

இங்கு என்னுடைய கருத்துக்களைச் சொல்கிறேன்:

பிற உயிர்களைக் கொல்வதைக் குறித்துப் பல விதமான கொள்கைகள் இருக்கலாம்:

1. எந்த உயிருக்கும் தீங்கிழைக்க மாட்டோம் என்னும் சமனத் துறவிகள். குளித்தால் அழுக்கில் இருக்கும் கிருமிகள் செத்து விடும், நிழலில் நடந்தால் அங்கு ஒதுங்கிய புழுக்களை மிதிக்க நேரிடலாம், மழைக் காலத்தில் பயணம் செய்தால் உயிர்கள் சாக நேரிடலாம் என்று அதை எல்லாம் தவிர்ப்பவர்கள்.

2. நமது வாழ்க்கைக்குத் தேவையான போது பிற உயிர்களைக் கொன்றும் உணவு தயாரித்துக் கொள்வோம் என்று இறைச்சி உணவைச் சாப்பிடும் பெரும்பான்மை மக்கள்.

3. சாப்பாட்டுக்காகக் கொல்ல மாட்டோம், ஆனால் நமக்குத் துன்பம் விளைப்பவற்றை கொன்று விடுவோம் என்னும் இறைச்சி உண்பதைத் தவிர்க்கும் மக்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேர்வு. ஒருவர் செய்வது தவறு என்று இன்னொருவர் சொல்ல உரிமை இருக்கக் கூடாது.

எனக்கு இறைச்சி சாப்பிட விருப்பம் இல்லை என்றால் நான் சாப்பிடவில்லை. சாப்பிடுபவர்களைத் தடுக்கவும் எனக்கு உரிமை இல்லை.

1. பசு வதைத் தடுப்பு என்று குறிப்பிட்ட மத நம்பிக்கைக்காக பிறரையும் மாட்டிறைச்சி சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுவது சரியாக முடியாது.

2. எதை நம்பினாலும் இறைச்சிக்காகக் கொல்லப்படும் அல்லது வளர்க்கப்படும் விலங்குகளை சரிவரப் பராமரித்து அவற்றை தேவையின்றி வதைக்கும் செயல்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

நம்ம ஊரில் விலங்குகளை கூட்டமாக ஏற்றி அனுப்புவது, கொடூரமாக நடத்துவது, இரக்கமில்லாமல் வதைத்து கொல்வது போன்ற செயல்கள் எந்தப் பிரிவினராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான்.

வளர்ந்த நாடுகளில் இறைச்சிக்காக அனுப்பப்படும் விலங்குகளைக் கூட கவனமாக சரிவர நடத்தி மிகக் குறைந்த அளவு வதையுடன் உணவுக்காக பயன்படுத்த வேண்டும் என்று விதிமுறைகள் இருக்கின்றன.

அன்புடன்,

மா சிவகுமார்