Wednesday, May 2, 2007

அழகு படுத்துதல் (தோலின் கதை - 7)

தோலுக்கு என்ன நிறம் கொடுக்க வேண்டும், எவ்வளவு மென்மையாக இருக்க வேண்டும், என்ன மாதிரி மேற்பூச்சு செய்ய வேண்டும் என்பதெல்லாம், தோல் பொருட்களை வடிவமைக்கும் கலைஞர்களால் தீர்மானிக்கப் படுகிறது.

ஆண்டு தோறும் என்ன நிறம், எந்த மாதிரியான உடைகள் மக்கள் வாங்குவார்கள் என்று தீர்மானிப்பதில் ஐரோப்பாவின் ஃபேஷன் கலைஞர்கள் பெரும்பங்கு வகிக்கிறார்கள். ஆண்டுக்கு இரண்டு முறை வெயில் காலத்துக்கு ஒன்று, குளிர்காலத்துக்கு ஒன்று என்று புதிய பாணி உடைகளையும் காலணிகளையும், கைப்பைகளையும் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.

மற்ற ஆடை அலங்காரத் துறைகளைப் போலவே தோல் துறையிலும் பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள்தான் அதிகமாக விற்பனையாகின்றன. அவற்றின் விலையும் அதிகம்.

அடுத்த பருவத்துக்கு எந்த மாதிரியான தோல் வேண்டும் என்று கிடைத்த வேண்டுகோளைப் பொறுத்து மேலே சொன்ன பதப்படுத்தப்பட்ட தோலை இன்னும் வேதி வினைகளுக்கு உட்படுத்துகிறார்கள். பதத் தோலின் தடிமனை வேண்டிய அளவுக்கு, இயந்திரம் மூலம் குறைத்து விட்டு, பெரிய உருளைகளில் போட்டு தண்ணீரில் மூழ்கடித்து, எண்ணெய்ப் பொருட்கள், சாயப் பொருட்கள், இடைவெளிகளை நிரப்பும் பொருட்கள் என்று புகுத்துவார்கள்.

அதிகமாக எண்ணெய்ப் பொருள் போட்டால் மென்மை அதிகமாகும் திடம் குறைந்து விடும், மேலங்கி செய்யப் பயன்படும் தோலுக்கு இது போன்ற சமையல் நடக்கும். திடமான காலணித் தோல் வேண்டுமானால் நிரப்பும் பொருட்களை அதிகமாக்கி எண்ணெயைக் குறைத்துக் கொள்வார்கள். தேவையான நிறத்துக்கு ஏற்ப சாயத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வளவும் செய்வதுற்கு இருபதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு, ஏழெட்டு மணி நேரத்துக்கும் அதிகமான சுழற்சி நடைபெறும். உருளையினுள் தண்ணீரில் மிதக்கும் தோல்கள் உருளையைச் சுற்றுவதன் மூலம் பதப்படுகின்றன.

வெளியில் எடுத்த தோல் துணி துவைக்கும் கருவியிலிருந்து வெளி வந்த துணிகளைப் போல இருக்கும். ஒரே வேறுபாடு, தோலின் நார்பின்னலும் தடிமனும் பருத்தித் துணிகளை அதிகமாக இருக்கும். தோலைக் கொஞ்சம் சுருக்கம் நீக்கி காய வைப்பார்கள். காயும் போதே புரத அமைப்பிலிருந்து தண்ணீர் வெளியேறி தோல் மொடமொடவென்று காய்ந்து விடும். இப்படி தொடுவதற்கு உலர்ந்ததாகப் படும் தோலில் கூட 10% நீர் நிரம்பியிருக்கும்.

இந்த மொடமொடவென்ற தோலை இயந்திரங்களால் மென்மையாக்கிப் பார்த்தால் இன்னும் குறைபாடுகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். ஈரமான நிலையில் தரம்பிரித்தது சரியில்லாமல் இருந்தால் இந்த நிலையில் குறைகள் வெளியே தெரிய ஆரம்பித்து விடும். அப்படி ஒத்து வராத தோல்களை ஒதுக்கி வைத்து விட்டு அடுத்த வேலைக்குத் தயாராவார்கள்.

2 comments:

வடுவூர் குமார் said...

புரிகிறது,இருந்தாலும் ஒரு படம் கூடவா கிடைக்கவில்லை?
:-))

மா சிவகுமார் said...

சோம்பல்தான் :-) படங்களும் சேர்த்தால் நன்றாகத்தான் இருக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்