Friday, May 4, 2007

செலவுக் கணக்கு (தோலின் கதை - 10)

நான்காவதாக, தவறான வேலை முறைகளால் தோலுக்கு அடிபடுவதோ, மேற்பரப்பில் கறைகள் ஏற்படுவதோ நிகழாமல் பார்த்துக் கொள்வது. இவ்வளவு பாடுபட்டுச் செய்யும் தோலில் கவனக் குறைவால் பழுது ஏற்பட்டு விட்டால் அது நேராக இழப்புக் கணக்கில் சேர்ந்து விடும்.

ஐந்தாவதாக, தோலின் பரப்பளவைக் கண்காணித்தல்.

தண்ணீரில் முக்கி, இயந்திரங்களில் அடித்து, வேதி வினைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் தோலின் பரப்பளவு வெகுவாக வேறுபடலாம். ஒரே பச்சைத் தோலை வெவ்வேறு முறையில் பதப்படுத்தினால் அதன் பரப்பளவு 10-20 சதவீதம் வரை கூடவே குறையவோ செய்யலாம்.

வாங்குவது எண்ணிக்கையின் அடிப்படையில்தான் என்றாலும், விற்கும் போது பரப்பளவின் அடிப்படையில் விற்க வேண்டியிருக்கிறது. தோல் பொருள் செய்பவர்கள் அதிகப் பரப்பு இருந்தால் கூடுதலான பொருளுக்குப் பயன்படுத்த முடியுமாதலால் பரப்புக்குத்தான் விலை. தோலின் பரப்பளவை எவ்வளவுக்களவு அதிகரிக்க முடியுமோ அவ்வளவுக்களவு கூடுதல் ஆதாயம் கிடைக்கும்.

நெளிவான ஆடைக்கு செய்யப்படும் தோலில் சுருக்கம் அதிகமாக இருப்பதால் பரப்பு குறைவாகவும், காலணிக்குப் பயன்படும் விறைப்பான தோலில் பரப்பு அதிகாமவும் இருக்கும்.

இப்படி எளிமையாகத் தென்படும் ஒரு தோலைச் செய்து விற்பதில் இவ்வளவு நுணுக்கங்கள். இதே போல நெசவுத் துறை, இரும்பு போன்ற உலோகத் துறைகள், எண்ணெய் சுத்திகரிக்கும் ஆலைகள், உணவுப் பொருள் பதப்படுத்தும் தொழில்கள் முதலான இயற்கைப் பொருட்களை தொழில் பயன்பாட்டுக்கு மாற்றும் எல்லா தொழில்களிலும் மேற்சொன்ன கணக்கீடுகள் தேவைப்படும்.

இந்த அடிப்படை உற்பத்திச் செலவினங்கள் போக வணிகச் செலவுகள் எல்லாத் தொழில்களுக்கும் பொதுவானவை உண்டு.
  • நிறுவனத்தை நடத்த மேலாளர்களுக்கு ஊதியம்
  • பொருளை ஏற்றி அனுப்பும் வண்டிக்குச் செலவு
  • வாங்கும் பொருட்களுக்கு வரி
  • விற்கும் போது விற்பனை வரி
  • இறக்குமதி/ஏற்றுமதி செய்ய வேண்டியிருந்தால் அது தொடர்பான செலவுகள்
  • இடைத்தரகர் இருந்தால் அவருக்கு பங்கு
  • விற்பனைக்கு அனுப்பும் போது காப்பீடு செய்ய கட்டணம்
  • வங்கிச் செலவுகள்
    என்று தலையைச் சுற்ற வைக்கும் செலவினங்கள் நூற்றுக் கணக்கில் இருக்கலாம்.
வரும் விருந்தினருக்கு தேநீர் வாங்கிக் கொடுப்பதிலிருந்து, வாடிக்கையாளரைச் சந்திக்க வெளிநாடு போவது, இயந்திரங்களை வாங்க பயணம் செய்தல், புதிய பருவத்துக்கான மாதிரிப் பொருட்களைச் செய்து கொடுப்பது என்று குறையில்லாமல் வேலை வைக்கும் நடவடிக்கைகள் ஏராளம் இருக்கும்.

தொழில் முனைவராக தொழில் நடத்தும் போது இது எல்லாவற்றையும் கவனத்தில் வைத்து முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும். ஒரு குண்டூசி கூட வீணாகச் செலவானால், அது நிறுனத்தின் வருமானத்தைப் பாதிக்கும். அப்படிக் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு ஒவ்வொரு செலவினத்தையும் கண்காணித்து, முடிந்த அளவு வருவாயைப் பெருக்கும் முனைவோர்தான் வெற்றி பெற முடியும்.

இன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் தவறுகள் செய்து பிழைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு. நாம் ஒன்றைத் தவறாகச் செய்து கொண்டிருந்தால், மெக்சிகோவில் இருக்கும் அந்தத் தவறைச் செய்யாத நிறுவனம் விலை குறைவாக விற்று நம்மை தொழிலிலில் இருந்து துரத்தி விடும். வாங்குபவர்களும் விற்பவர்களும் உலகின் எந்தப் பகுதியிலும் செயல்படும் வசதியும் உரிமையும் இருக்கும் போது, நம்மால் முடிந்த அளவு, புதுப் புது முறைகளில் வீண் செலவுகளைக் குறைத்து பொருளின் மதிப்பை அதிகப்படுத்தினால்தான் தாக்குப் பிடிக்க முடியும்.

2 comments:

வடுவூர் குமார் said...

ஆமாம்,தோலை பதப்படுத்தும் இயந்திரங்களைப் பற்றியும் விரிவாக சொல்லுங்களேன்.
சென்னையில் குரோம்பேட் பகுதியில் தான் இந்த மாதிரி தொழில்கள் நடைப்பெற்றதாக நினைவு.

மா சிவகுமார் said...

இயந்திரங்களைப் பற்றியும் எழுதுகிறேன். சென்னை குரோம்பேட்டை நாகல் கேணி, பம்மல் பகுதியில் இப்போதும் தோல் பதனிடும் நிறுவனங்கள் இருக்கின்றன.

அன்புடன்,

மா சிவகுமார்