Friday, May 11, 2007

பாழ்படும் நிலமும் நீரும் (தோலின் கதை - 18)

தோல் பதனிடும் போது பல வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பார்த்தோம்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துக் கொண்டால்
  • பதப்படுத்த மரங்களின் பட்டை, கொட்டை போன்ற தாவரப் பொருட்களும்,
  • தோல் வலைப்பின்னலின் இடைவெளிகளை நிரப்ப குளுகோஸ் போன்ற இயற்கைப் பொருட்களும்,
  • தோலை மென்மைப்படுத்த விலங்கு அல்லது தாவர எண்ணெய்களும் பயன்படுத்தப்பட்டன.
  • தோலின் மேற்பரப்பை அழகு படுத்த முட்டை மஞ்சள்கரு, பால் கூடப் பயன்படுத்தப்பட்டன.
அப்படி உருவான தோலிற்கு பன்முகத் தன்மை, பல பயன்படு தன்மை குறைவாகவும், பயன்படும் நாட்கள் குறைவாகவும் இருந்தாலும் பயன்படுத்திய பிறகு எளிதாக மக்கிப் போகும் இயல்பு இருந்தது.

இப்போது செய்யப்படும் தோலில், பதப்படுத்த குரோமியம் உப்புகளும், இடைவெளிகளை நிரப்ப பெட்ரோல் சார்ந்த வேதிப் பொருட்களும், மென்மை அளிக்க பெட்ரோல் சார்ந்த எண்ணெய்ப் பொருட்களும், தோலின் மேற்பரப்பை அழகு படுத்தவும் செயற்கை வேதிப் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.

இதன் மூலம் தோலைப் பதப்படுத்தும் செலவு குறைந்து, கிடைக்கும் தோலின் வலிமையும், வகைகளும், பயன்படு நாட்களும் வெகுவாக உயர்ந்திருந்தாலும் பதப்படுத்தும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரையும் பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட தோல் பொருட்களையும் சுற்றுச் சூழலை பாதிக்காமல் கையாளுவது பெரிய சவாலாக உருவெடுத்திருக்கிறது.

கழிவு நீரில் உள்ள சிக்கல், தோலை வேதிப் பொருட்களுடன் சேர்க்கும் போது தோலில் ஏறாமல் தண்ணீரிலேயே இருந்து விடும் வேதிப் பொருட்களின் கைவேலை. சாயம் ஏற்ற தோலின் எடையில் 10% சாயப் பொருளை போட்டால் தோல் 8%தான் ஏற்றுக் கொள்ளும் மீதி 2% நீரிலேயே தங்கி விடும். திறமையான தொழில் நுட்பம் மூலம் இதை 1.5% ஆகக் குறைக்கலாம் ஆனால் முற்றிலும் வேதிப் பொருளை பயன்படுத்தி விட முடியாது.

முப்பது நாற்பது வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படும் போது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தலைவலி தரும். குரோமியம் உப்புகள், அமிலமும் காரமும் சேர்ந்து உருவாகும் நடுநிலை உப்புகள், சாயங்கள், எண்ணெய் பொருட்கள், தண்ணீரில் மிதக்கும் கூழ்மப் பொருட்கள் என்று கலவையான நீர் அப்படியே நிலத்திலோ நீர்நிலைகளிலோ கலக்கப்பட்டால் நிலமும், நீர்நிலையும் பாழடைந்து விடும்.

ஒரு ஆற்றில் ஓடும் நீரில், நாம் குடிக்கும் குடிநீரில் பத்து லட்சத்தில் 8 பங்கு உயிர் வாயு கரைந்திருக்கும். அதைத்தான் மீன் முதலான நீர் வாழ் உயிரனங்கள் சுவாசிக்கின்றன. தண்ணீரில் ஒரு மீன் செத்து விடுகிறது, அல்லது வேறு ஏதோ கழிவுப் பொருள் கலக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

நீரில் கலந்திருக்கும் உயிர் வாயு ஆக்சிஜனால் அது மெதுவாக எரிக்கப்பட்டு சில மணி நேரங்கள், அல்லது சில நாட்களில் அந்தக் கழிவு செரித்து விடும். ஓடும் நீரில் வளி மண்டலத்திலிருந்து உயிர் வாயு தொடர்ந்து கரைந்து கொண்டே இருப்பதால், இப்படி பயன்பட்டு விடும் உயிர் வாயு ஓரிரு கிலோ மீட்டர் ஓட்டத்தில் மீண்டும் நீருக்குக் கிடைத்து விடும்.

2 comments:

வடுவூர் குமார் said...

ஹும்,கொடுமை ஆரம்பம் ஆகிவிட்டது.மாசுபடுதலை சொல்கிறேன்.

மா சிவகுமார் said...

ஆமா, சோகக் கட்டம் ஆரம்பித்து விட்டது :-(

அன்புடன்,

மா சிவகுமார்