Tuesday, May 15, 2007

எல்லைகளைத் தாண்டி (தோலின் கதை - 23)

தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்குப் பிறகு, தில்லியிலிருந்து கொல்கத்தா போக ரயில் சீட்டோ, விமானச் சீட்டோ சென்னையிலேயே பதிவு செய்து கொள்ள முடிகிறது. வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை வீட்டிலிருந்தே கையாள முடிகிறது.

குளிர்பதனப் பெட்டியில் முட்டைகளின் எண்ணிக்கைக் குறைந்தால் அதில் பதித்திருக்கும் சில்லு மூலமாக அருகில் இருக்கும் கடையின் கணினிக்குத் தகவல் போய்க் கடையிலிருந்து முட்டை கொண்டு வரும் வசதி வந்து விடலாம். முட்டை வந்ததும் செல்பேசியில் சில விசைகளை அழுத்தி அதற்கான மதிப்பை கடையின் கணக்குக்கு மாற்றிக் கொடுத்து விடும் நாள் வந்து விடலாம்.

இது போல தாமாகவே பொருள் தேவைகள் பரிமாறிக் கொள்ளப் படும் மின்னணு வசதிகள் வளர்ந்த நாடுகளின் வணிகத் துறையில் ஓரளவு வந்து விட்டன. கார்பொரேட் எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனம் அலுவலகங்களில் தேவைப்படும் பொருட்களை வழங்கும் சேவையை செய்கிறது. அதன் வாடிக்கையாளர் நிறுவனக் கணினியில் என்னென்ன பொருட்கள் தேவை என்று பதிவு செய்து வாங்குபவர் தமது ஒப்பதலை அளித்து விட்டால், கணினித் தொடர்பு மூலமாக விபரங்கள் கார்ப்பொரேட் எக்ஸ்பிரசுக்கு வந்து சேர்ந்து, பொருளை வாடிக்கையாளருக்கு அனுப்பி விடுகிறார்களாம்.

  • போஸ்டனில் ஒரு வலைப்பதிவர் ஒரு சோடி காலணி வாங்கி அதன் விபரம் கடைக் கணினியில் பதிந்து சரக்கு குறைகிறது.
  • சரக்கு இவ்வளவுக்குக் கீழ் குறைந்தால், ஒரே நாளில் இந்த பாணி காலணியில் இத்தனை எண்ணிக்கை விற்பனை ஆனால், காலணி நிறுவனத்துக்குத் தகவல் போக வேண்டும் என்று வழி சொல்லி வைத்திருந்தால் தகவல் கணினி இணைப்பு மூலம் நியூயார்க்கில் இருக்கும் காலணி நிறுவனத்துக்குப் போய்ச் சேர்ந்து விடும்.

  • இன்னும் 15 நாட்களில் அந்தக் கடைக்கு அனுப்பும் வகையில் கைவசம் சரக்கு இருக்கிறது என்றால் அதைக் குறித்துக் கொண்டு, அந்த நிறுவனத்தில் சரக்கு வைத்திருக்கும் கொள்கைப்படி காலணி உற்பத்தி நிறுவனத்தின் கணினிக்கு புதிய தேவை விபரம் அனுப்பப்பட்டு விடலாம். எந்த நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற விபரமும் ஏற்கனவே பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கலாம்.

  • காலணி தொழிற்சாலையின் கணினி, அங்கத்திய சரக்குக் கையிருப்பை அவதானித்து தேவைப்பட்டால் புதிதாக உற்பத்திக்கும், அதற்குத் தேவைப்படும் பொருட்களை வாங்கவும் செய்திகள் அனுப்பலாம். அதை அடிப்படையாகக் கொண்டு தோல் தொழிற்சாலைக்குத் தகவல் வந்து சேரலாம்.
இப்படி ஒரு கணினி வலைப்பின்னல் இருந்தால் இன்றைக்கு நிகழும் குழப்பங்களினால் ஆகும் செலவுகளின் பெரும்பகுதி குறைந்து விடும். இது அனைத்துமே மனிதர்களால் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நிறுவனமாக தகவல் கையாளும் கணினி அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு நிறுவனங்களின் கணினி அமைப்புகளை கவனமாக இணைத்து விட்டால் இது நடந்து விடும்.

வங்கித் துறையில் ஒவ்வொரு வங்கியாக கணினி மயமாக்கப்பட்டு, வங்கிகளுக்கிடையே நடைபெறும் பரிமாற்றங்கள் ஒரு மையக் கணினி வழியாக நடைபெறுவது போலவும் செய்யலாம்.

4 comments:

Sridhar V said...

மிக அருமையான தொடர்.

இது நிச்சயமாக புத்தகமாக வரவேண்டும். ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும்.

மா சிவகுமார் said...

நன்றி ஸ்ரீதர்,

தமிழிலிருந்து ஆங்கிலத்தில் புத்தகங்கள் மொழிபெயர்க்கும் காலமும் வரும் என்று நானும் ஆசைப்படுகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

வடுவூர் குமார் said...

கணினி கட்டமைப்பு-படிக்க உங்க எண்ணம் நன்றாகத்தான் உள்ளது.
உபயோகத்துக்கு வர சில வருடங்கள் பிடிக்கலாம் அல்லது வராமலே போகவும் வாய்ப்புள்ளது.

மா சிவகுமார் said...

பல துறைகளில் இது நடக்க ஆரம்பித்து விட்டது குமார்.

நமது மென்பொருள் சேவை நிறுவனங்கள் வருந்தி வருந்தி செய்யும் பணிகளில் பெரும்பகுதி, அமெரிக்காவிலும், ஐரோப்பவிலும், சப்பானிலும் இப்படி இணைக்கப்பட்ட உலகை உருவாக்கும் திசையில்தான் நடக்கின்றன.

சப்பானின் நைக் நிறுவன சரக்கு அறையில் மனிதர்களே தலையிடாமல், இயந்திரங்கள் சரக்குகளைக் கையாளும் முறைகளை செயல்படுத்துவதில் என் நண்பன் ஒருவன் பணி புரிகிறான்.

இன்னும் பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன!

அன்புடன்,

மா சிவகுமார்