Wednesday, May 2, 2007

தோல் கிடைக்கும் இடங்கள் (தோலின் கதை - 6)

இந்த ஊறுகாய்த் தோலில் குரோம் உப்புக்கரைசலைச் சேர்த்து பதப்படுத்தியதும் பாக்டீரியாக்கள் தாக்க முடியாத தோல் வலைப்பின்னல் கிடைத்து விடுகிறது.

பழைய காலத்தில் மரப்பட்டைகளையும், கொட்டைகளையும் ஊற வைத்து தயாரித்த கரைசல்களைக் கூடப் பயன்படுத்தினார்கள். ஏதாவது மரத்தில் பூச்சிக் கடித்து விட்டால் உடனேயே பால் வடியும், அந்தப் பால் நுண்ணுயிரிகளைக் கொன்று ஒரு தடுப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொள்ளும். அதே வேலைதான் மரப்பட்டையிலிருந்து வரும் சாறு தோலுக்கும் செய்கிறது.

இப்போது கிடைத்த தோல் சுத்தமாக, மேல் பரப்பு பார்க்கும் படியாக, அழுகிப் போய் விடாத நிலைக்கு வந்து விட்டது. தேவையான நிறம், வலைப்பின்னலுக்கிடையே இடைவெளிகளை நிரப்புதல், இடைவெளிகளில் எண்ணெய்ப் பொருட்களைச் சேர்த்து மென்மைத் தன்மை கொடுத்தல், மேற்பரப்பில் பாதுகாப்பு பூச்சு வழங்குதல் போன்ற வேலைகள் இருக்கின்றன.

பதப்படுத்தல் முடிந்த பிறகுதான் வாங்கிய தோலின் மதிப்பை தீர்மானிக்க முடியும்.
  • தோலின் பரப்பில் அடி பட்ட தழும்புகள் இருக்கிறதா,
  • தோல் வயதான விலங்குடையதாக இருந்தால் சுருக்கம் அதிகமாக இருக்கிறதா,
  • தோலை உரிக்கும் போது ஏதாவது கத்தி வெட்டு பட்டிருக்கிறதா,
  • விலங்கு உயிரோடு இருக்கும் போது அம்மைப் பட்ட தழும்புகள் இருக்கிறதா

    என்றெல்லாம் பார்த்து பல தரங்களாகப் பிரிப்பார்கள்.

எந்த பழுதும் இல்லாமல் இருந்தால் முதல் தரம் என்று ஆரம்பித்து பயன்படுத்தவே முடியாத கழிவுத் தோல் வரை கிடைக்கும். நல்ல தோலாக இருந்தால் விலை உயர்ந்த பொருள் செய்யப் பயன்படுத்தலாம். மோசமான தரமுடையதை கெட்டியாக மேற்பூச்சு பூசி விலை குறைவாகத்தான் விற்க முடியும். வாங்கிய ஆயிரம் தோலில் எவ்வளவு முதல், இரண்டாவது, மூன்றாவது... தரம் என்று கணக்கு போட்டுப் பார்த்தால்தான் வியாபாரிக்குக் கொடுத்த காசு கட்டுப்படியாகுமா என்பது புரியும்.

பொதுவாக மாட்டுத் தோல்தான் பெருமளவு சந்தைக்கு வரும். இந்தியாவைத் தவிர்த்து மற்ற நாடுகளிலெல்லாம் மாட்டிறைச்சிதான் பெரும்பான்மை மக்களின் உணவில் இடம் பெறுகிறது. இந்த இறைச்சிக்காக கொல்லப்படும் மாடுகளின் தோல்களிலிருந்துதான் நாம் வாங்கும் தோல் செருப்பில், தோல் பையில், பணப்பையில் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் எருமைத் தோலும், ஆட்டுத் தோலும் அதிகம். ஆட்டுத் தோலின் தடிமன் குறைவாக இருப்பதால் மென்மையான பெண்களுக்கான காலணிகள் செய்யப் பயன்படுகிறது. இந்திய ஆட்டுத் தோலின் பெரும்பகுதி ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வளர்ந்த பொருளாதாரங்களுக்கு விலை உயர்ந்து காலணிகளாக ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகிறது.

இவற்றைத் தவிர குளிர் பகுதிகளில் கம்பளிக்காக வளர்க்கப்படும் கம்பளி ஆட்டுத் தோலும் கிடைக்கிறது. இந்தக் கம்பளி ஆட்டுத் தோல் மென்மையாக இருப்பதால் தோல் மேலாடைகள் செய்ய பயன்படுகிறது.

2 comments:

வடுவூர் குமார் said...

அடுத்த முறை மாட்டுத்தோலை தொடும் போது இந்த பதிவு ஞாபகம் வரும்.

மா சிவகுமார் said...

நன்றி வடுவூர் குமார். மாட்டுத் தோல் என்று எப்படித் தெரிந்து கொள்வது என்பதும் ஒரு வித்தைதான்.

அன்புடன்,

மா சிவகுமார்