Thursday, May 3, 2007

பூச்சு வேலை (தோலின் கதை - 8)

இது வரை சமையல் வேலை முடிந்தது. இனிமேல் பூச்சு வேலை. சுவருக்கு சாயம் பூசுவது போல, கதவுக்கு வண்ணம் அடிப்பது போல தோலின் மேற்பரப்பில் வித விதமாக நிறங்கள், பள பளப்புகள், வெவ்வேறு தொடும் உணர்வு தரும் பூச்சுக்களை அளிப்பார்கள். இதற்கும் பல விதமான பூச்சு வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி நூற்றுக் கணக்கான பாணிகளை உருவாக்க முடியும்.

இப்போதெல்லாம் பெரும்பகுதி வேதிப் பொருட்கள் கச்சா எண்ணெயிலிருந்து எடுத்தவையாகத்தான் இருக்கின்றன.

பெட்ரோல் கண்டு பிடிக்கப்படுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தோலைப் பதப்படுத்தி மனிதன் பயன்படுத்தி வந்தான். உணவைப் பாதுகாக்கும் நுட்பத்துக்கு சம காலத்தில் அல்லது அதற்கு முன்பே விலங்குத் தோலை பயன்படுத்தும் நுட்பம் உருவாகியிருக்கும்.

அந்த காலத்தில் இயற்கையில் கிடைக்கும் தாவரப் பொருட்கள், சாயங்கள், கொழுப்புகள் இவற்றைப் பயன்படுத்தியே பதப்படுத்தி வந்தார்கள். அப்படி செய்யும் தோலின் பண்புகளை விட இப்போது நவீன முறையில் செய்யப்படும் தோல்கள் உறுதியாகவும் பல்முனைப் பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும் உள்ளன.

ஆனால், இவ்வளவு வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் வேலைகளின் போது வெளியாகும் கழிவு நீர் சுற்றுப் புறத்தை மாசுப்படுத்துகிறது.

பொதுவாக தோல் தொழிற்சாலை அருகில் போனால் நமது மூக்கைத் தாக்கும் நாற்றம் அவ்வளவு பிரச்சனைக்குரியது இல்லை. அது இயற்கையாக விலங்குத் தோல் அழுகும் நாற்றம்தான். தோலாக மாற்றப்படா விட்டாலும் அந்த அழுகல் நடக்கத்தான் போகிறது. அதை பயனுள்ள பொருளாக மாற்றுவதால் நன்மைதான்.

பிரச்சனை ஆரம்பிப்பது பதப்படுத்தப் பயன்படும் அமில உப்புகள், நிறமூட்டப் பயன்படும் சாயங்கள், பிற உப்புகள் தண்ணீரில் கரைந்து வெளி வருவதுதான். இந்த வேதிப் பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், கழிவு நீரை வெளியில் விடும் முன்னர் ஊறு விளைவிக்கும் வேதிப் பொருட்களை பிரித்து எடுக்கவும் பல கோடி ரூபாய்களை செலவிடுகின்றன தோல் நிறுவனங்கள். இருந்தாலும் இன்னும் இந்தப் பிரச்சனை முற்றிலும் சரி செய்யப்பட்டு விட்டதாகச் சொல்ல முடியாது.

4 comments:

Unknown said...

//இருந்தாலும் இன்னும் இந்தப் பிரச்சனை முற்றிலும் சரி செய்யப்பட்டு விட்டதாகச் சொல்ல முடியாது.//

சிவா,
சாயத்தொழில்,தோல் பதனிடும் தொழில் இரண்டுமே சுற்றுப்புறத்தை கேடாக்குவதில் பெறும் பங்கு வகிக்கிறது.

பெரும்பாலான வீடுகளில் எப்படி பூஜை ரூம் சுத்தமாகவும் , கழிப்பறை மகாகேவலமாகவும் இருக்குமோ அது போல முதலாளிகளுக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு ஒரு தேவை இல்லாத சமாச்சாரமாகவே உள்ளது.

அரசாங்கம் சட்டம் போட்டால்தான் குண்டி கழுவேன் என்று இருக்கும் இவர்களை என்ன செய்யலாம்? என்னதான் சட்டங்கள் இருந்தாலும் நடைமுறையில் முதலாளிகள் இந்த கழிவுநீர் விசயத்தில் அசட்டையாகவே இருக்குறார்கள்.

முதலீட்டில் எத்தனை சதவீதம் இதற்கு ஒதுக்கினால் சுத்தமான சுகாதாரமான கழிவுநீரை (குறைந்த பட்சம் தாவரங்களுக்கு பயன்படுத்தும் வகையில்) உருவாக்க முடியும்?

மா சிவகுமார் said...

கல்வெட்டு,

இது சந்தைப் பொருளாதாரத்தின் அழுக்கு முகங்களில் ஒன்றுதான்.

1990கள் வரை சட்டம் முறையாகச் செயல்படுத்தாததால் மனம் போல நீரை வெளியில் விட்டு நிலங்களை பாழ்படுத்தினர்.

உச்சநீதி மன்றம் தடை போட்டவுடன், சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளார்கள். மாசுபடுத்தல் குறைந்து விட்டாலும் முற்றிலும் மறைந்து விடவில்லை.

இப்போது பயன்படும் தொழில் நுட்பத்தில் அடிப்படையிலேயே மாறுதல் ஏற்பட்டால் ஒழிய இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரமான பாதுகாப்பான தீர்வு இல்லை என்றுதான் எனக்குப் படுகிறது.

இதைப் பற்றி இன்னும் விரிவாக எழுதுகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

வடுவூர் குமார் said...

இதில் கழிவு நீர் பிரச்சனை மாதிரி சிமின்ட் பிளான்டில் தூசிப்பிரச்சனையும் இதே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

மா சிவகுமார் said...

//இதில் கழிவு நீர் பிரச்சனை மாதிரி சிமின்ட் பிளான்டில் தூசிப்பிரச்சனையும் இதே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது.//

நவீன தொழில் துறையில் இது மாதிரி மாசுபடுத்தும் செயல்களை ஒழுங்கு படுத்துவது மிகவும் தேவையானது.

அன்புடன்,

மா சிவகுமார்