Tuesday, May 1, 2007

தோலின் பணிகள் (தோலின் கதை - 4)

தோல் தொழிற்சாலைக்கு வரும் முன்னர் வழியில் அழுகி விடாமல் இருக்க பொதுவாக உப்புச் சேர்த்து பாதுகாத்திருப்பார்கள்.
  • முதல் வேலையாக ஓரங்களை வெட்டி நீக்கி விட்டு சோப்பு முதலிய வேதிப் பொருட்களுடன் தண்ணீரில் ஊற வைக்கிறார்கள். தண்ணீரில் ஊறும் போது மேலே ஒட்டியிருக்கும் அழுக்குகள் நீங்குவதோடு, உள்ளே புகுத்தப்பட்டிருந்த உப்பைக் கரைய வைத்து வெளியேற்றி விடுகிறது.

  • இப்படி நல்ல ஊறியிருக்கும் தோலை அடுத்து சுண்ணாம்பு கரைசலில் ஊற வைக்க வேண்டும். சுண்ணாம்புக் கரைசலுடன், முடியை உதிரச் செய்யும் சோடியும் சல்பைடு என்ற வேதிப் பொருளும் சேர்க்க வேண்டும். தோல் உண்மையில் ஒரு சிக்கலான உயிர் வலைப்பின்னல். கொத்து கொத்தாக புரத நார்கள் பின்னிப் பிணைந்து உருவானதுதான் தோல். இந்த பின்னல் அமைப்பால் தோலுக்கு உறுதித் தன்மையும் உடலைப் பாதுகாக்கும் இயல்பும் கிடைக்கிறது.
    • இந்த அடிப்படை பின்னலுக்கிடையேயான வெளிகளில் மற்ற புரதங்களும் சர்க்கரை சத்துக்களும் நிரம்பியிருக்கும்.
    • வெயில் காலங்களில் வேர்வையை வெளிப்படுத்தி உடல் வெப்ப நிலை ஏறாமல் பார்த்துக் கொள்ளும் வேர்வைச் சுரப்பிகளும் குளிராக இருக்கும் போது உடல் வெப்ப நிலை குறைந்து விடாமல் பாது காக்கும் கொழுப்புச் சுரப்பிகளும் தோலின் அடியில்தான் இருக்கும்.
    • உடலின் மேல்பரப்பில் இருக்கும் தோலின் மறு பரப்பில் ஒட்டிக் கொண்டிருப்பது சதை. அதைத்தான் இறைச்சியாக எடுத்துக் கொண்டாலும் சிறிதளவு பதப்படுத்த வரும் தோலிலும் ஒட்டியிருக்கும்.
விலங்கு உயிரோடு இருக்கும் போது, ஏன் நம்முடைய தோல் கூட, தோல் பல இன்றியமையாத வேலைகளைப் பார்க்கிறது.
  1. வெளிப்புற வெப்ப நிலை அதிகமாகும் போது வேர்வை வெளியேற்றுவதன் மூலம் தோல் பரப்பில் நீரை ஆவியாகச் செய்து, வெப்பத்தைக் குறைக்கிறது. வெயில் காலத்தில் தாகம் அதிகமாவதன் காரணம் இதுதான் என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
  2. வெளிப்புற வெப்ப நிலை குறையும் போது, எண்ணெய்ப் பசையை சுரக்கச் செய்து, ஆவியாதலைக் குறைத்து உடல் வெப்ப நிலை குறைந்து விடாமல் பாதுகாக்கிறது. அதனால்தான் குளிர் காலத்தில் அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறது. தோல் வழியாக நீர் வெளியேறுவது குறைந்து போவதால் பெரும்பகுதி நீர் சிறுநீராக வெளியாகிறது.
  3. உடல் முழுமைக்குமான பாதுகாப்பு உறையாக உள்ளுறுப்புகளை வெளி உரசல்களிலிருந்து பாதுகாக்கிறது. யாராவது தொட்டால் உணர்ந்து கொள்வதற்கான தொடுதலின் உணர் உறுப்பு தோல்தான்.
  4. வியர்வையின் மூலம் ரத்தத்தில் தேவையில்லாத உப்புகளை வெளியில் தள்ளுகிறது.

2 comments:

வடுவூர் குமார் said...

சில விலங்குகளின் தோலில் (மான்) உள்ள முடியை அப்படியே வைத்துவிடுகிறார்களே,அது ஏன்?தேவைக்கு ஏற்ற மாதிரி விட்டு விடுகிறார்களா? அல்லது தோலில் குணம் குறுக்கிடுகிறதா?

மா சிவகுமார் said...

வணக்கம் வடுவூர் குமார்,

பொதுவாக காட்டு விலங்களின் தோல்கள் அவை இயற்கையாக இறக்கும் போது எடுக்கப்பட்டு தனிடப்படுகின்றன.

முடியுடன் பதனிடுவது நடைமுறையில் சிக்கல் நிறைந்தது. அப்படிப் பதனிடப்பட்ட தோலின் மதிப்பும் அதிகம். ஓரிரு தோலை விலை உயர்ந்த அந்த முறையில் பதனிடலாம். பெருமளவில் செய்யும் போது அது கட்டுப்படி ஆகாது.

வேறு என்ன காரணம் என்று புலப்படவில்லை.

அன்புடன்,

மா சிவகுமார்