Thursday, May 3, 2007

அடிப்படைச் செலவுகள் - (தோலின் கதை - 9)

தோல் தொழிற்சாலை வாங்கும் மூலப் பொருள் பச்சைத் தோல். அதைப் பதப்படுத்தி, பொருட்கள் செய்யத் தோதுவான தோலாக விற்பதுதான் இந்தத் தொழிலின் மதிப்பு அதிகரித்தல். இதற்கு பல வேதிப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். பல இயந்திரப் பணிகளைச் செய்ய வேண்டும். இயந்திரங்களை இயக்கவும் பிற பணிகளைச் செய்யவும் தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டும்.
  • பச்சைத் தோல் வாங்க எவ்வளவு செலவானது,
  • வேதிப் பொருட்களுக்கு எவ்வளவு செலவு,
  • இயந்திரப் பணிகளுக்கு என்ன செலவு,
  • மற்ற சம்பளம், விற்பனை செலவுகள்
    சேர்த்தால் மொத்த செலவு கிடைக்கும்.
இதை விடக் கூடுதல் விலைக்கு விற்றால்தான் நிறுவனம் இயங்க முடியும்.

பச்சைத் தோலை வாங்கும் போது ஒன்று இத்தனை ரூபாய் என்று கணக்குப் போட்டு மொத்தமாக வாங்குகிறோம். பாதியில்தான் அவற்றில் பல்வேறு தரங்களில் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரிய வருகிறது. வெவ்வேறு தரமுடைய தோலிலிருந்து பல வகையான தோல்கள் பல வகையான பயன்பாட்டுக்கு செய்கிறோம். அவற்றின் விலையும் வேறுபடும்.

இப்போது விற்கும் விலையை எப்படிக் கணக்கிடுவது. குறிப்பிட்ட தோல் செய்வதற்கு எந்தத் தரமுடைய தோல் எடுக்க வேண்டும், வேதிப் பொருட்களின் மொத்த விலை என்ன, இடையில் கழிந்து போன தோலின் மதிப்பு என்ன என்று கணக்கு போகும். விற்கும் விலையோ அந்த வகைத் தோலுக்கு சந்தையில் எவ்வளவு தேவை இருக்கிறது என்பதைப் பொறுத்தும் இருக்கிறது.

தோல் தொழிற்சாலை ஒன்று நடத்துபவர், சந்தையில் வாங்கும் பச்சைத் தோலுக்குக் கொடுக்கும் விலையை காலணித் தொழிற்சாலைக்கு விற்கும் தோலின் விலையுடன் எப்படித் தொடர்பு படுத்தி திறமையாகக் கணக்குப் போடுகிறார் என்பதைப் பொறுத்துதான் அவரது வெற்றி இருக்கிறது.

  1. முதலில் பச்சைத் தோல் வாங்கும் போதே உயர் தரத் தோல்கள் அதிகமாகக் கிடைக்கும்படி பொறுக்கி வாங்குவது, திறமையாகப் பேரம் பேசி விலை குறைப்பது செய்ய வேண்டும். இப்படி வாங்கி வந்த தோல் பாதி வரை பதப்படுத்திய பிறகு தரம் பிரித்தலில் என்ன மதிப்பு கிடைத்தது என்பதை ஒவ்வொரு தரத் தோலிலிருந்து என்ன மாதிரியான இறுதிப் பொருள் செய்து என்ன விலைக்கு விற்கலாம் என்பதைப் பொறுத்துக் கணக்கிட வேண்டும்.
    இந்தக் கணக்கைப் பொறுத்து அடுத்த முறை பச்சைத் தோல் வாங்கும் போது பேரம் பேச வேண்டும்.

  2. அடுத்ததாக சரியான தரமுள்ள தோலைப் பயன்படுத்துதல். நான்கு தரமுடைய தோல்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். உயர் தரமுடைய தோல் பொருள் செய்ய முதல் தர தோல் தேவை என்று வைத்துக் கொள்வோம். ஒரு திறமையான நிர்வாகி இரண்டாம் தரம் என்று பிரிக்கப்பட்ட தோலிலிருந்து நுணுக்கமான வேதி, இயந்திர பணிமூலம் உயர்தரப் பொருளுக்கு ஏற்றதாக அதை மாற்றி விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்குச் செலவு குறைந்து ஆதாயம் அதிகமாகி விடும்.

    மாற்றாக தேவையில்லாமல் உயர் தரத் தோலைப் பயன்படுத்தினால் இழப்பு ஏற்பட்டு விடும். விற்கும் தோலின் விலையில் பாதிக்கும் மேல் பச்சைத் தோலின் மதிப்பாக இருக்கும்.

  3. மூன்றாவதாக வேதிப் பொருட்களின் பயன்பாடு. வீணாக்கலைக் குறைத்து குறைந்த அளவு வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி தோல் செய்ய முடிந்தவருக்கு செலவு குறையும்,

2 comments:

வடுவூர் குமார் said...

"0 பின்னூட்டங்கள்:
இப்படி பார்க்கும் போது மனதை என்னவோ செய்கிறது.
செலவே இல்லாமல், இத்தொழிலில் இறங்குவார்க்கு இது எந்த மாதிரியான தகவல்கள்!!??
பணம் மற்றும் அனுபவம் சேர்ந்து காலத்துடன் கிடைக்கும் விஷயங்களை "சும்ம்மா" கொடுக்கும் நீங்கள் "கர்ணன்" தான்.
வாழ்க வளர்க உங்கள் பணி.

மா சிவகுமார் said...

நன்றி வடுவூர் குமார்.

இது பின்னூட்டங்களோடு நின்று விடவில்லை குமார். எதிர்காலத்தில் மாணவர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் தமிழிலேயே தகவல்கள் கிடைக்கும் அளவில் இணையத்தில் இந்தப் பக்கங்கள் உதவும் என்பது ஒன்றே போதுமே.

அன்புடன்,

மா சிவகுமார்