வளத்தைச் சேர்க்கும் பாதையில் நடக்கும் அனுபவங்கள் பிறருக்கும் உதவியாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில்
Sunday, December 30, 2007
ஓடிக் கொண்டே இருக்கணும்
உற்சாகமாக உள்ளே போனார் விறகுவெட்டி. நல்ல உயர்தர விறகுக்கான மரங்கள் கிடைத்தன. நல்ல காசு. அடுத்த முறை மரம் எடுக்க வரும் போது முனிவரின் சொற்களை நினைவு கூர்ந்து இன்னும் உள்ளே போனார். வீடுகள் கட்ட, மரச்சாமான்கள் செய்யப் பயன்படும் அருமையான மரங்கள் இருந்தன. பல நாட்கள் கழித்து வரும் போது இன்னும் உள்ளே போகலாம் என்று போனால் சந்தன மரங்கள் இருந்தன. (அப்போதெல்லாம் சந்தன வீரப்பன் மட்டும்தான் வெட்ட முடியும் என்று இல்லை போலிருக்கிறது).
அவர் பெரும் பணக்காரராகி விட்டார்.
கதை சொல்வது என்னவென்றால், உன் நிலையில் நிறைவுற்று நின்று விடக் கூடாது. தொழிலாக இருந்தாலும் சரி, படிப்பு, கலை, விளையாட்டு, சமூக அறிவியலாக இருந்தாலும் சரி, ஆன்மீகமாக இருந்தாலும் சரி, தனி மனிதனோ, சமூகமோ மேலும் மேலும் மேம்பட முயற்சிக்க வேண்டும்.
ஜக்கி வாசுதேவ் சொன்னதாக என்னுடைய வாடிக்கையாளர் ஒருவர் சொன்னார்.
'நாம் விரிவடையும் போது பலர் அழிந்து போகிறார்களே அது பாவம் இல்லையா'
'அப்படி விரிந்து கொண்டே போவது மனித இயல்பு, அதுதான் இயற்கையின் அழைப்பு. உன் நிலையை தொழிலை பெருக்காமல் இருப்பதுதான் மனித இயல்புக்கு எதிரானது. நீயாகத் தேடிப் போய் ஒருவரை அழிக்க வேண்டும் என்று போகாத வரை, உனது விரிவாக்கலில் அடிபட்டு விடக் கூடியவர்களுக்கு நீ பொறுப்பு கிடையாது. ஒவ்வொரு உயிருக்கும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் முனைப்பு உண்டு. அது உனக்கும் இருக்க வேண்டும்'
Friday, December 28, 2007
போர்க்களம் - 5
முதல் பகுதி
இரண்டாவது பகுதி
மூன்றாவது பகுதி
நான்காவது பகுதி
முந்தைய நாள் கூட்ட விபரங்களையும் விளக்கி விட்டு என்ன பேச வேண்டும் என்று எல்லோரது கருத்தையும் தெரிந்து கொண்டேன்.
- இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து நமக்கும் ஆதாயம் இது வரை கிடைக்கவில்லை.
- பல லட்சங்கள் செலவழித்து அவர்களுக்கும் முழுப் பலன் கிடைக்கவில்லை.
- இன்னும் மூன்று மாதங்கள் வேலை செய்ய என்ன அடிப்படை.
- வேலை வெற்றிகரமாக முடியாவிட்டால், என்ன தண்டம்,
- முடித்து விட்டால், என்ன வெகுமதி
என்று ஒவ்வொருவராகக் கருத்து சொன்னார்கள்.
கிடைத்த இடைவெளியில் போய் சாப்பிட்டுக் கொண்டோம். மீண்டும் வரவேற்பு பகுதியில் காத்திருக்கும் போது அதிகம் காத்திருக்கும் முன் அவரே வந்து விட்டார். வேறு யாரும் காத்திருக்கவும் இல்லை. சாப்பாட்டு வேளை என்பதால் சாப்பிட ஆரம்பிக்கும் முன் சந்திக்க முடியுமா சாப்பிட்ட பிறகுதானா என்று உட்கார்ந்திருந்தோம். இடையில் அவரது உதவியாளரிடம் நினைவுபடுத்தவும் செய்தேன்
ஒன்றரை மணி வாக்கில் உள்ளே கூப்பிட்டார்கள். 'சாப்பிட்டிருக்க மாட்டார், சீக்கிரம் பேசி விட்டு வந்து விடலாம்' என்று போனோம். பேசி முடித்து வெளி வரும் போது மணி 4 தாண்டி விட்டிருந்தது. அவர் சாப்பிடாமலேயே பேசிக் கொண்டிருந்திருக்கிறார். ஒரு நிலைக்குப் பிறகு எனக்கும் அந்த கவனம் தப்பி விட்டிருந்தது. வெளியே வந்த பிறகு உதவியாளர் வருத்தப்படும் போதுதான் உறைத்தது.
உள்ளே போகும் போது ஒரு மடிக்கணினியை வைத்துக் கொண்டு கணினி பராமரிப்புப் பணியாளரிடம் குறை சொல்லிக் கொண்டிருந்தார். அதைப் பற்றிப் பேச ஆரம்பித்து, 'குழந்தைக்கு ஒரு மடிக்கணினி' திட்டம் பற்றிச் சொல்லி, இந்திய அரசு அதை நிராகரித்து விட்டதாகச் சொன்னேன்.
அங்கிருந்து வெளிநாட்டு உதவிப் பணம், சமூக சேவை மையங்கள் என்று ஆரம்பித்தார். அப்படியே திரும்பி நிதி திரட்டி தங்க கூரையுடன் கோயில் கட்டிய வேலூர் சாமியாரைக் குறிப்பிட்டார். அதற்கு ஒரு எதிர்ப்புத் தெரிவிக்க அந்தச் சாமியார் எப்படி விளக்குகிறார் என்று சொன்னார், திருப்தியான விளக்கம் இல்லை.
ஆன்மீகம், இந்து மதம், என்று பேச்சு நீள அவ்வப்போது தொந்தரவு செய்த கைப்பேசியை வெளியே உதவியாளரிடம் கொடுத்து விட்டார். பல இடங்களில் அவரது கருத்தை ஏற்றுக் கொள்ளாத முகபாவமும், பேச்சும் அவருக்குப் புரியக் கூடியவை. இந்த நிலையில் இன்றைக்கு வந்த வேலை எப்படிப் போகுமோ என்று ஒரு எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. கடைசியில் ஆர்எஸ்எஸ் பிற மதங்கள் என்றும் வந்து சேர்ந்தது. என்னுடைய கருத்துக்களை கோடி காட்டினேன்.
அப்படி இரண்டு மணி நேரம் ஓடிய பிறகு, 'சொல்லுங்க சிவா' என்று வேலை ஆரம்பித்தார். பேசும் போது தொழிலில் வாடிக்கையாளர் சேவை பற்றியும் பேசியிருந்தார். மனதுக்குள் கையை மடித்து விட்டுக் கொண்டு கையில் கொண்டு வந்திருந்த திட்டத்தை நீட்டினேன். ஒரே பக்கத்தில் நான்கே அட்டவணைகள்.
இதுவரை வாங்கும் பணம், அடுத்த மூன்று மாதங்களில் முடிக்க வேண்டியது, அதற்கு எதிர்பார்ப்பது, முடிக்கா விட்டால் என்ன தண்டம், முடித்து விட்டால் என்ன வெகுமதி என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.
சரமாரியாக ஆயுதங்களைத் தொடுக்க ஆரம்பித்தார். பல முறைகளில் அவரிடம் பேசியதில் ஏற்பட்ட புரிதல்களும், அவர் எப்படி எல்லாம் பேசுவார் என்று எதிர்பார்த்திருந்த தயாரிப்புகளும், இன்றைக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்று நானும் சண்டையில் இறங்கி விட்டேன். ஆரம்ப காலங்களில் இப்படி யாராவது பேரம் பேச ஆரம்பித்தால் உடனேயே விட்டுக் கொடுத்து விடுவேன். அவர்கள் கேட்கும் கேள்விகள் நம்மைக் குறை சொல்ல இல்லை, நமது காரணங்களை புரிந்து கொள்ள என்பது இப்போதுதான் புரிகிறது.
'ஆரம்பித்தில் சொன்ன விலையில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் கூடினால் பரவாயில்லை, 10 மடங்காக சொன்னால் என்ன நியாயம்' அவர்கள் தேவைகளையும் 3 தொழிற்சாலைகளுக்கு விரித்து, பல குழப்பங்களையும் சமாளிக்க வைத்ததை நேரடியாகச் சுட்டிக் காட்டாமல் நியாயத்தை விளக்கினேன். கேட்ட பணத்தில் பாதியில் நின்றார். அதுவே பெருந் தொகைதான், ஆனாலும் முடியாது என்று விட்டேன்.
'நாங்கள் திட்டமிட்ட அளவு பணம் தராவிட்டால் தேவையான முயற்சி போட முடியாமல் மீண்டும் வேலை அரைகுறையாக நின்று விடும்' என்று கணக்குகளை என் குறிப்பேட்டில் எழுதிப் பார்த்தேன். நெருக்கிப் பிடித்தால் சம்பளச் செலவு மட்டும் கேட்டதில் மூன்றில் இரண்டு பங்கு வருகிறது. மற்ற செலவுகளுக்கு ஒரு பங்கு. இடையில் அவருக்கு தொலைபேசி அழைப்பு.
அவர்கள் போட்டியாளர்களுக்குக் குறைந்த விலையில் கிடைத்து விடுமோ என்று ஒரு கேள்வி, அதையும் விளக்கினேன். 30 ஆண்டு SAP கூட கூடுதல் ஒரு நிறுவனத்துக்கு விலை குறைக்க முடியாது, மென்பொருள் உருவாக்கம், பராமரிப்பின் இயல்பு அப்படி என்று விளக்கினேன். இறுதியாக 5ல் நான்கு பங்கில் நின்று விட்டார். நாங்களும் ஏற்றுக் கொண்டோம். பெரும் பொறுப்புதான்.
அவரது குரலும் பல முறை உயர்ந்தது, இடையிடையே புன்சிரிப்பு வேறு. நானும் உச்சக் கட்டத்தில், விடாமல் சண்டை போட்டேன். நண்பரின் ஆதரவு வேறு. 'இதே மாதிரி அந்த வேலைக்கும் ஒரு திட்டம் போட்டுக்கோப்பா' என்று அனுப்பி வைத்தார். பழைய நிலுவையில் பெரும்பகுதிக்கு காசோலையும் கொடுத்து விட்டார்.
(முடிந்தது)
Thursday, December 27, 2007
போர்க்களம் - 4
முதல் பகுதி
இரண்டாவது பகுதி
மூன்றாவது பகுதி
காத்திருக்கும் அந்த நிமிடங்கள் தவிப்பாக இருந்தது. தேவையில்லாத பேச்சுக்களும் வளர்ந்து விடக் கூடாது. பேசாமலும் இருக்க முடியாது. அடுத்த சில நிமிடங்களில் எல்லோரும் வந்து விடத் திட்டமிட்டபடி படக்காட்சியும் விளக்க உரையும் ஆரம்பித்து விட்டது.
மனதில் நிரம்பியிருந்த கேள்விகள் கருத்துக்களுக்கு வடிவம் கிடைத்து வெளியில் வந்து விட்ட பிறகு விவாதம் ஆரம்பிக்கலாம்.
நல்லதோ கெட்டதோ, உள்ளதில் சொதப்பியிருந்த, அதிகம் கடுப்பேற்றும் மேலாளர் ஆரம்பித்து வைத்தார். 'பேசினது நல்லா பேசினீங்க, நல்லா விளக்கினீங்க, ஆனா..' என்று ஆரம்பித்து மிகத் தீவிரமாக நியாயமற்ற முறையில் தாக்கிக் குறை சொன்னார்.
எதிர்பார்த்திருந்தாலும் கேட்கும் போது மனம் வாடியது. அவர்கள் மீது நேரடியாக எதிர்க் குறை சொல்ல ஆரம்பிக்காமல், விளக்கங்கள் சொன்னேன். அதைத் தொடர்ந்து அவர்களது மனக்குறைகள் எல்லாம் வெளி வர ஆரம்பித்தது. நாங்களே அவற்றை எல்லாம் பேசி விட்டதால், அவற்றுக்கு அழுத்தம் குறைந்து போயிருந்தது.
இரண்டாவது தொழிற்சாலை மேலாளர் குறை கூறும் வடிவில், எங்கள் சேவையின் பலன்களை அவரது நிறைவுகளை வெளிப்படுத்தினார். மூன்றாவது தொழிற்சாலை மேலாளருக்கும் முதலாமவருக்கும் உட்கட்சிச் சண்டை. அவர் கடைசியில் வாயைத் திறந்தாலும் காரமாக ஆதரித்தார். 'என்னுடைய வேலைகளை கணினி மூலமாகத்தான் செய்கிறேன். என்ன அறிக்கை வேண்டுமோ, என்ன வெளிப்பாடு வேண்டுமோ அதை மென்பொருள் பயன்பாட்டில் எடுத்துக் கொள்கிறோம்' என்று அவர் அடித்த அடியில் சூழல் சாதகமாக மாறி விட்டது.
முதலாமவரின் மதிப்பு இறங்கி விட்டது, நம் பங்குக்கு முதல் தொழிற்சாலையில் அவர்களின் குறைபாடுகளையும் சுட்டிக் காட்டினோம். தொகுத்துப் பேசும் போது ஒரு மேலாளர் மூன்று தொழிற்சாலைக்குமான பணியை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கேட்டு முதல் மேலாளரைக் குறிப்பிட்டால், தலைவர் உடனேயே குறிக்கிட்டு மூன்றாமவரை நியமித்து விட்டார். முதலாமவரிடம் மன்னிப்புக் கேட்பு வேறு.
பணம், சேவைக் கட்டணம் குறித்து நாளைக்கு அலுவலகத்தில் வந்து பேசிக் கொள்ளச் சொல்லி விட்டார். கூட்டம் முடிந்து மற்றவர்கள் எல்லோரும் வெளியே போய் விட்ட பிறகு நாங்கள் மட்டும் நின்றிருக்க அரை மணி நேரத்துக்கு மேல் பேசிக் கொண்டிருந்தார் தலைவர். தனது அனுபவ முத்துக்களை வழக்கம் போல அள்ளி இறைத்தார். அதற்கு முன்பு அவர் பேசிக் கேட்டிராத இரண்டு பேரும் கேட்டிருந்த இரண்டு பேரும் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தோம்.
அடுத்த நாள் அவரைச் சந்திக்கும் போது பேசுவதற்கான ஆதாரங்கள் பல கிடைத்தன. திட்டமிட்டு அப்படிப் பேசிக் கொண்டிருந்தாரா, இயல்பாக வந்ததா என்று தெரியாது, தன்னிடம் பேரம் பேசுவதற்கு அவரே பல குறிப்புகளை விட்டுச் சென்றார்.
வினை முடித்த இனிமையுடன், நல்ல பசி வேறு. அலுவலத்துக்கு வந்து சாப்பிட்டு விட்டுச் சின்னச் சின்ன வேலைகளை முடித்தேன். இன்னொரு நிறுவனத்துக்குத் தொலைபேசினால் சனிக்கிழமை காலையில் 11 மணிக்கு வரச் சொன்னார். மதியத்துக்கு மேல் தொழிற்சாலை மேலாளருடன் சந்திப்பு 3.30க்கு. இடையில் நிறுவனத் தலைவரையும் சந்திக்க வேண்டும்.
வாராந்திர ஒருங்கிணைப்புக் கூட்டத்தை விட முடியாது என்று காலையில் 8 மணிக்கு எல்லோரையும் வரச் சொன்னோம். எட்டே காலுக்கு ஆரம்பித்தால் 10 மணி வரை போகலாம். அதன் பிறகு கிளம்பி பெரிய மேடு போய் 11 முதல் அரை மணி நேரத்துக்கு முதல் சந்திப்பை முடித்து விட்டால், இரண்டாவது அதி முக்கிய சந்திப்புக்குப் போய் விட்டு இரண்டரை மணிக்குக் கிளம்பினால், 40 கிலோமீட்டர்கள் பயணித்து தொழிற்சாலைக்கும் போய் விடலாம்.
ஐந்தாவது பகுதி
போர்க்களம் - 3
இரண்டாவது பகுதி
- நிறுவன வளத் திட்டமிடல் (நி வ தி) என்றால் என்ன, அதன் பலன்கள், இன்றைய உலக அளவில், இந்திய அளவில், தோல் துறை அளவில் யார் யார் சேவை அளிக்கிறார்கள் என்பது முதல் பகுதி.
- இரண்டாவது பகுதியாக நமது நிறுவனத்தின் சேவையில் என்னென்ன செய்திருக்கிறோம், அதில் கண்ட குறைபாடுகள், அவற்றை நீக்க எடுத்த நடவடிக்கைகள், இது வரை சாதித்தவை, இனிமேல் அடுத்த மூன்று மாதங்களில் முடிக்கத் திட்டமிட்டிருப்பவை என்று வடிவம் கிடைத்து விட்டது. இரண்டு வாரங்கள் விவாதித்த கருத்துக்கள் எல்லாம் வடித்துச் சுருக்கியது போல அமைந்து விட்டிருந்தது. இன்னும் சில மாற்றங்கள் தேவைப்படலாம்.
நண்பரும் தயாராகி விட அலுவலகம் வந்து சேர்ந்தோம். கணினியை இயக்கி நண்பருக்கு ஒரு முறை போட்டுக் காட்டி ஒத்திகை. அவர் சில மாற்றங்களைச் சொன்னார். மொத்தத்தில் நன்றாக வந்து விட்டிருப்பது அவரது முகத்தில் தெரிந்தது. காட்சிக்கருவி கொண்டு வருபவரின் தொலைபேசி இயங்காமல் இருந்தது. இருந்தும் சரியான நேரத்தில் கொண்டு சேர்த்து விட்டார்.
அந்த நேரம் இன்னொரு அலுவலகத் தோழர் வந்து விட அவரை உட்கார வைத்து படக்காட்சியாகவே காட்டிப் பேசினேன். அதன் பிறகும் ஓரிரு மாறுதல்கள் செய்து கொண்டோம்.
பத்து மணிக்குக் கிளம்பி சந்திப்பு நடக்கும் தொழிற்சாலைக்குப் போய் விட்டோம். ஏற்கனவே இரண்டு பேர் போய் முந்திய நாள் ஏற்பட்ட கடைசி நிமிடக் குளறுபடிக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார்கள், அந்த மேலாளரைப் பார்க்க முடியவில்லை.
இரண்டாவது தொழிற்சாலைக்கு இரண்டு நாட்கள் முன்பு நானே போய் அதன் மேலாளரைச் சந்தித்து அவரது தேவைகளை, குறை நிறைகளைக் கேட்டறிந்திருந்தேன். அவர் கேட்டிருந்த அறிக்கைகளும் எடுத்துக் கொடுத்து விட்டிருந்தார்கள்.
மூன்றாவது தொழிற்சாலையில் ஏற்கனவே நல்லபடியாக பணி நடந்து கொண்டிருந்தது. அதற்கு கடைசி நேர கைபிடித்தல் செய்ய காலையிலேயே ஒருவர் போய் அந்த மேலாளருடனேயே வண்டியில் கூட்டத்துக்கு வர திட்டம்.
கூட்டம் நடத்த வேண்டிய அறையை தேர்ந்தெடுத்து பொருட்களை ஒதுக்க, நாற்காலிகளை ஏற்பாடு செய்ய, தூய்மை செய்யக் கேட்டுக் கொண்டோம். பெரிய உரிமையாளர் வருவதால் எல்லோருமே பரபரப்பாக இருந்தார்கள். பத்தரை மணிக்கெல்லாம் காட்சிக் கருவியை அமைத்து கணினியை இணைத்து திரைக் காட்சி சரியாகத் தெரிகிறதா என்று உறுதி செய்து கொண்டோம்.
11 மணி சந்திப்புக்கு இரண்டாவது தொழிற்சாலை மேலாளர் மட்டும் நேரத்துக்கு வந்து விட்டார். அவருடன் பொதுவாகவும், பணி குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். எல்லோரும் வந்த பிறகுதானே ஆரம்பிக்க வேண்டும். தாமதமாகவே ஆனாலும் நம்ம ஆட்கள் எல்லோரும் வந்து விட்டார்கள்.
மூலவர் பதினொன்றரைக்கெல்லாம் வந்து சேர மற்ற மேலாளர்கள் எல்லோரும் வந்திருக்கவில்லை. அவர் உட்கார்ந்த பிறகு விளக்குகளை அணைத்து விட்டுக் காட்சிப் படத்தின் முதல் துண்டைப் போட்டு வைத்திருந்தோம்.
நான்காவது பகுதி
ஐந்தாவது பகுதி
போர்க்களம் - 2
மொத்தம் மூன்று அமர்வுகளில் குறிப்பேட்டில் பல பக்கங்கள் நிறைந்து விட்டன.
இதற்கிடையே ஒவ்வொரு தொழிற்சாலையிலும் என்னென்ன வேலை நடந்திருக்கிறது. அங்கிருக்கும் மேலாளர்களுக்கு என்ன குறை நிறைகள் என்று அடையாளம் கண்டு கொண்டு அங்கு வேலையையும் தொடர்ந்தோம். அந்தந்தப் பிரிவு மேலாளர்களுக்கும் இப்படி ஒரு சந்திப்பில் பேசுவதற்கு தயாரிப்பு வேண்டும். அவர்களது தேவைகளைச் சொல்லி வேலை வாங்கினார்கள்.
கணினியில் ஒரு உரைத் தொகுப்பாக வைத்துக் கொண்டு எல்லோருக்கும் ஒரு சுற்று விட்டோம். இடையில் ஊருக்கு ஒரு பயணம் எல்லாம் முடித்து விட்டுத் திரும்பி வந்து வேலை தொடர்ந்தது. ஊருக்கு மடிக்கணினி எடுத்துப் போகாமல் நான்கு நாட்களுக்கு கணினியிலிருந்து பிரிவு கிடைத்த ஓய்வு.
17ம் தேதி ஒரு மின்னஞ்சல் அனுப்பி நினைவூட்டல். 19ம் தேதி அவர்களாகவே அழைத்து 21ம் தேதி சந்திப்பை உறுதி செய்தார்கள். கிடைத்த அறிகுறிகள் மிக நல்லதாகவே இருந்தன.
20ம் தேதி மதியத்துக்கு மேல் என்ன காண்பிக்க வேண்டும் என்று இறுதி வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன். களப்பணியாளர்கள் கடைசி நிமிடத் திக்கல்களை சரி செய்யப் போனார்கள். இருமக் காட்சிக் கருவி ஒன்றை வாடகைக்கு எடுத்து காண்பிக்கலாம் என்று நினைத்திருந்தோம். மாலை நான்கு மணிக்குப் பிறகுதான் அந்த நினைவே வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாடகைக்குக் கொடுத்திருந்த நிறுவனத்தின் தொலைபேசி எண்ணை வைத்திருந்தேன். அது மாறாமல் இருக்க வேண்டுமே!
மாறியிருக்கவில்லை. பழைய உறவை நினைவில் வைத்திருந்து மாலையே வந்து கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள். ஒரு நாள் வாடகை 750 ரூபாய், தொடரும் உறவுக்காக 150 ரூபாய்கள் தள்ளுபடி. ஒவ்வொரு முறையும் இந்தக் கருவிகளின் அளவு குறுகி, தரம் உயர்ந்திருக்கிறது. நேற்றைக்கு நாளிதழில் பார்த்தால் ஏசர் நிறுவனத்தின் காட்சிக் கருவி 45 ஆயிரம் ரூபாய்களுக்குக் கொடுக்கிறார்களாம்.
அப்பா அம்மா வெளியூர் கிளம்பும் தயாரிப்புகள் வேறு.. காலையில் வழியனுப்ப வர முடியாது என்று முதலிலேயே சொல்லி விட்டேன். என் பங்காக சின்னச் சின்ன ஏற்பாடுகளுக்கான பணிகள் 20ம் தேதி முழுவதும். கடைசி நேரச் சிக்கல் ஒன்று ஒரு தொழிற்சாலையில். அங்கிருக்கும் மேலாளர் உள்ளதில் கடுப்பேற்றுபவர். எப்படியாவது சரி செய்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
தூங்கும் முன் எதுவும் செய்ய ஓடவில்லை. காலையில் எழுந்து பார்த்துக் கொள்ளலாம் என்று நல்ல தூக்கம். விழிப்பு வந்த பிறகும் நாளில் புத்துணர்வுடன் இருக்க வேண்டும் என்று அரை மணி நேரம் அமைதியாகப் படுத்துக் கொண்டிருந்து விட்டே எழுந்தேன். ஏழு மணிக்கு விமான நிலையத்துக்குக் கிளம்புகிறார்கள். அந்தத் தயாரிப்புகள் முடிந்து விட்டன. நானும் 5 மணிக்கு எழுந்து குளித்து விட்டு அவர்கள் பைகளை மூடி வைத்து, வாடகை வண்டிக்கு தொலைபேசி ஏற்பாடு செய்தலையும் முடித்துக் கொண்டேன்.
சரி கணினியை இயக்கி விடுவோம் என்று மேசையில் வைத்து உயிர் கொடுத்து 11 மணிக்குப் பேசப் போவதற்கு திரைக்காட்சிகளுக்கு இறுதி வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன்.
மூன்றாவது பகுதி
நான்காவது பகுதி
ஐந்தாவது பகுதி
Wednesday, December 26, 2007
போர்க்களம் - 1
தான் கற்றுக் கொடுத்த வித்தை தனக்கு எதிரேயே பயன்படுத்தப்படும் போது மகிழ்ச்சியுடன் எதிர்த் தாக்குதல் நடத்தி போராட்டம் காணும் ஆசிரியர்கள் ஏராளம்.
அப்படி ஒரு நாள்.
அக்டோபரிலிருந்து அதிகரித்த செலவுகள், முனைப்பான உழைப்பு, ஆர்வமான குழுவினர் என்று புறப்பட்டு விட்டாலும் மூன்று மாதங்களாக ஒரு பெரிய வாடிக்கையாளர் நிதானிக்க ஆரம்பித்து விட தவிப்பும், சிக்கல்களும். பொறுமை இழக்காமல், ஒவ்வொரு சிடுக்காக விடுவிக்கும்படி தொடர்ந்து வேலையைச் செய்து கொண்டு வந்து அதற்கான கணக்குகளையும் வைத்திருந்தோம். டிசம்பர் முதல் வாரத்தில் நாள் முழுதும் காத்திருந்து பின் மாலையில் சில நிமிடங்கள் சந்தித்த போது அதன் விளைவுகள் தெரிய ஆரம்பித்தன.
'நான் வெளிநாடு போறேன், திரும்பி வந்ததும் நிறுவனத்தில் உயர் மேலாளர்கள் எல்லோரையும் கூட்டி விவாதிக்க வேண்டும். அவர்களையும் ஈடுபடுத்தினால் இந்தத் திட்டத்தை இப்படியே தொடர முடியும்' என்று சொல்லி 21ம் தேதி என்று நாள் குறித்து விட்டுப் போய் விட்டார்.
மூன்று ஆண்டுகள் தாண்டி விட்ட உறவு. ஒரு பணி முடிந்து ஆறு மாதங்களாக நல்ல பெயர். இரண்டாவதாகக் கிடைத்த வேலையில் தேக்கங்கள் பல ஏற்பட்டு அதை முடுக்கி விடத்தான் இந்தக் கூட்டம். பல சிக்கல்கள். நம் பக்கம் பல குளறுபடிகள். அவர்கள் பக்கம் பல குழப்பங்கள். சென்னையிலேயே வெவ்வேறு இடங்களில் மூன்று தொழிற்சாலைகள். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு மேலாண்மை அமைப்புகள். மூன்றிற்குமிடையே ஓருங்கிணைப்பு இல்லாதது, மென்பொருள் வழுக்கள், நம் குழுவினரின் தவறுகள் என்று எதைத் தொட்டாலும் எதிர்மறையாகவே போய் விடக் கூடிய வெடிகுண்டுகள்.
இரண்டு வாரங்களில் எப்படிப் பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்று தயாரிக்க முடிவு செய்தோம்.
மிக நெருக்கமாக இணைந்து வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் அந்த நிறுவனத்தின் தேவைகள் நன்கு புரிந்தவை.
- அவர்களுக்கு முழுமையான சேவை எப்படி இருக்க வேண்டும்.
- இது வரை நாம் செய்த பணியில் சாதித்தது என்ன,
- அதனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைத்தது.
- நமது சேவையின் மீது அவர்களுக்கு என்னென்ன குறைபாடுகள், முறையீடுகள்,
- அவற்றைச் சரி செய்ய என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தோம்,
- இனிமேல் அடுத்து செய்ய வேண்டியது என்ன
(தொடரும்)
இரண்டாவது பகுதி
மூன்றாவது பகுதி
நான்காவது பகுதி
ஐந்தாவது பகுதி
தொழில் முனைவோருக்கு வழிகாட்டல்கள்
- 10 ரூபாய்க்கு வாங்கி 10.50 க்கு விற்று 50 காசுகள் ஆதாயம் பார்ப்பது ஒரு வகை வர்த்தகம். வாடிக்கையாளர் தரத்தயாராக இருக்கும் 10 ரூபாய்க்குள் பொருளைச் செய்து மிச்சப்படுத்துவதை ஆதாயமாக வைத்துக் கொள்வது போட்டி நிலவும் உற்பத்தித்துறை.
போட்டியாளர்கள் கொடுக்கும் விலையை விட உனக்கு அதிகமாகக் கிடைக்கப் போவதில்லை. - ஏற்கனவே இருக்கும் உறவுகள், அனுபவம் போட்டியாளர்களுக்கு வலிமை.
புதிய இயந்திரங்கள், வேகமாகச் செயல்பட முடிதல் புதிய முனைவருக்கு வலிமை. இரண்டையும் புரிந்து கொண்டு போட்டி போட வேண்டும். - புதிதாக சந்தையில் நுழைபவர்கள் போட்டியாளர்களை விடக் குறைந்த விலை, அல்லது உயர்ந்த தரம் கொடுத்தால்தான் வாடிக்கையாளர்கள் திரும்பிப் பார்ப்பார்கள். ஏதாவது புதிய சத்தம் எழுப்பி கவனத்தை ஈர்த்தால்தான் பிழைக்க முடியும். அந்த கவன ஈர்ப்புக்கு ஆகும் செலவுகளால் ஆதாயம் குறையும்.
- மலிவு என்பது பயனுள்ள பொருளுக்குத்தான். விலை குறைவாக வாங்கிய பொருளைப் பயன்படுத்த முடியாவிட்டால் அது மலிவு இல்லை, அது வீண்.
ஒரு ரூபாய்க்கு வாழைப் பழம் வாங்கிச் சாப்பிட்டால், அது 2 ரூபாய் பழத்தை விட மலிவு. ஆனால் வாங்கிய பழம் அழுகியிருந்தால் அந்தக் காசு வீண்தான். - விற்கும் பொருளிலும், அதன் விலையிலும் உனக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த விலைக்கு இந்தப் பொருளை/சேவையை நான் வாங்குவேனா என்று எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளரை சம்மதிக்க வைக்க முடியும்.
- தொழிலில் நிலைக்க வேண்டுமென்றால் நீடித்த வாடிக்கையாளர்கள் வேண்டும். விற்ற பொருள் அல்லது சேவையை அவர் பயன்படாமல் வைத்திருக்கிறார் என்றால் நீயே முனைந்து கூடுதல் உதவி செய்து பயன்படுத்த வைக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த முறை உன்னிடம் வர மாட்டார்கள்.
- யாராவது கூக்குரலிட்டால், காது கொடுத்துக் கேட்க வேண்டும். உன் சேவை பொருள் நிறைவாக இருந்தால் யாரும் குறை சொல்லப் போவதில்லை. குறைகள் எந்த வடிவில் சொல்லப்பட்டாலும் கூர்ந்து கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.
- நம்முடைய நலனைக் கருத்தில் வைக்கும் அதே நேரத்தில் அடுத்தவர்களின் நிலையிலிருந்து சிந்தித்துப் பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
- ஒரு உறவில் இரண்டு பக்கமும் ஆதாயம் இருந்தால்தான் உறவு நீடிக்கும். ஒரு பக்கத்துக்கு ஆதாயமே இல்லாமல் பேரம் பேசினால் உறவு நிச்சயமாக முறிந்து விடும்.
Tuesday, December 25, 2007
பொருளாதாரச் சூழல் மாற்றம்
இந்த ஆண்டு அக்டோபர் முதல் எல்லோருக்கும் சம்பள விகிதங்களை அதிகப்படுத்தி மென்பொருள் துறையில் நிலவும் விகிதங்களுக்கு இணையாக ஆக்கி விட வேண்டும் என்று பல மாதங்களாகவே திட்டமிட்டு அறிவித்திருந்தோம். அக்டோபர் முதல் மாதா மாதம் மொத்தச் செலவுகள் இரண்டு மடங்காகி விட்டன.
புறச்சூழல் பாதகமாக ஆகும் போது செய்ய வேண்டிய நடவடிக்கைகளுக்கு எதிர் மாறாக செய்திருக்கிறோம்.
நிறுவனம் ஆரம்பிக்கும் போதும் சரி, யாரையும் வேலைக்கு எடுக்கும் போதும் சரி, முடிவுகளின் அடிப்படை நமது நிறுவனத்தின் குறிக்கோளை அடையும் திசையில் நம்மைச் செலுத்துகிறதா என்பதாக மட்டுமே இருந்து வந்தது. ஒரு டாலருக்கு 45 ரூபாய்கள் என்ற கணக்குப் போட்டு அதனால் நமக்கு இவ்வளவு வாய்ப்புகள் கிடைக்கும் என்று செய்யவில்லை.
டாலருக்கு 30 ரூபாய்கள் என்ற நிலை வந்தாலும் தோல் துறை இருக்கத்தான் செய்யும், அதில் பல நிறுவனங்கள் வெளியேறி விட்டாலும், தம்மை வலுப்படுத்திக் கொண்டவர்கள் வளர்ந்திருப்பார்கள். அப்படி வலுப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் நம்ம ஊரில் யாரும் மிஞ்சா விட்டால், மற்ற ஊர்களிலோ, நாடுகளிலோ இருப்பார்கள்.
அப்படி வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், புதிய நுட்பங்களில் முதலீடு செய்வார்கள். அப்போது நமக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அப்படிப் பட்டவர்களை அணுகித் தேடும் முயற்சிகள் அதிகமாக்கிக் கொள்ள வேண்டும்.
கும்ப்ளே சொல்வது போல டாசில் ஜெயிப்பது, ஆடுகளத்தின் தன்மை, பருவநிலை போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு நமது இலக்குகளை நிர்ணயிக்கக் கூடாது. இலக்குகளையும் தயாரிப்புகளையும் செய்து விட்டு போகும் பாதையில் சந்திக்கும் தடைகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
ஆடு மலை ஏறும் போது அதன் குறிக்கோள் மலையுச்சி. இடையில் மழை பெய்தால் தேவைப்பட்டால் கொஞ்சம் ஒதுங்கிக் கொள்ளலாம், அல்லது நனைந்து கொண்டே போய் விடலாம், பாதை கரடு முரடானால், பல்லைக் கடித்துக் கொண்டு ஏற வேண்டும், இதமான காற்று வீசினால் சிரமமில்லாமல் தொடரலாம். என்ன நடந்தாலும் மேலே ஏறுவதும் நிற்கப் போவதில்லை போய்ச் சேர வேண்டிய குறிக்கோளையும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை.
சூழ்நிலைகள் பாதகமாக இருக்கும் போது நம்முடைய முயற்சிகள் இன்னும் தீவிரமாக வேண்டும். இன்னும் திறமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
குலப் பெரியவர்கள் எல்லாம் எதிர்த் தரப்பில் அணி வகுத்து விட்டார்கள். சல்லியன் எதிர்த்தரப்புக்குப் போய் விட்டான். போரை விட்டு விட்டு ஓடி விட முடியுமா. 7 அக்குரோணி படையை 11 அக்குரோணி படையுடன் மோத விடத்தான் வேண்டும்.
வருவது வரட்டும் என்று முன்னேற வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும் புறச் சூழலுக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி பெறுவது என்ற இறுதி நோக்கம் மட்டும் மாறாது, மாறக் கூடாது.
புறச்சூழல் மாறும் போது எத்தகைய முடிவுகளை எடுக்கலாம். ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்? சம்பளங்களைக் குறைத்தல்? குழுவில் ஒருவரைச் சேர்த்து உருவாக்குவதற்கு ஒரு ஆண்டு வரை ஆகிறது, அந்த ஓராண்டு நோக்கில் பார்த்தால் வெளிப் புறச் சூழல் மாறி விட்டது என்று சிலரை இழக்க முன்வருவது மதியுடமையாகாது என்பது என்னுடைய கருத்து.
மக்கள் தொகை மாற்றங்கள்
இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1950களில் அமைதி ஏற்பட்ட போது நிறைய குழந்தைகள் பெறப்பட்டனவாம். அவர்களை பேபி பூமர்ஸ் - குழந்தைப் பெருக்கத்தினர் - என்று அழைக்கிறார்கள். அதற்குப் பிறகு பேபி பர்ஸ்ட்.
பேபி பூமர்கள் வேலைக்குப் போகும் கட்டம், பேபி பூமர்கள் திருமணம் செய்து கொள்ளும் கட்டம் என்று ஒவ்வொரு கால கட்டத்தையும் அலசி மாற்றங்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மக்களை அவர்கள் பிறந்து வாழ்ந்த காலத்தை வைத்துப் பிரிக்க முயற்சித்தால் எப்படி இருக்கும்.
- ஒரு பிரிவில் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று போராட்டம் நடந்த காலத்தில் 1940களுக்கு முன்பு பிறந்து வளர்ந்தவர்கள்.
இன்றைக்கு இவர்களுக்கு எழுபது வயதுகளுக்கு மேல் ஆகியிருக்கும். பெரிய அளவில் வருமானம் கிடையாது. அரசு ஊழியராக இருந்தால் ஓய்வூதியத்துடனும். மற்றவர்கள் குழந்தைகளின் ஆதரவிலும் வாழ்ந்து வரலாம்.
இவர்கள் தியாகராஜ பாகவதர் முதலான சினிமா காலகட்டத்தின் ரசிகர்கள். மன்மத லீலையினர். - அடுத்த பிரிவில் விடுதலை கிடைக்கும் ஆண்டுகளில் 1940களில் பிறந்தவர்கள்.
இவர்கள் ஐம்பதுகளின் இந்தி எதிர்ப்புப் போராட்டம், 60களில் திராவிட இயக்க ஆட்சி பிடிப்பு என்று பார்த்து வாழ்க்கையின் நடுக்கட்டில் 1970களின் பொருளாதார அதிர்ச்சிகளை பார்த்திருப்பார்கள். தொண்ணூறுகளில் தாராளமயமாக்கலும் பொருளாதார சீர்திருத்தமும் கொண்டு வரும் மாற்றங்கள் இவர்களை நேரடியாகத் தொட்டு விடாமல் இருக்கிறது.
இவர்கள் எம்எஸ்விஸ்வநாதன், டிஎம் சௌந்திரராஜன், கண்ணதாசன் என்று உருகுவார்கள். திராவிடக் குழந்தைகள். - மூன்றாவது பிரிவில், 1980களுக்கு முன்பு பிறந்து வளர்ந்தவர்கள். இவர்களின் குழந்தை மற்றும் இளமைப் பருவம், எம்ஜிஆரின் ஆட்சி, கருணாநிதியின் எதிர் அரசியல் பார்த்து வளர்ந்தது. இளையராஜா, எஸ்பி பாலசுப்பிரணியம், கமலஹாசன், ரஜினி காந்த் என்று அதிகம் குழப்பமில்லாத சூழல்கள்.
சத்துணவுத் திட்டமும், வேகமாக வளர்ந்த உயர் கல்வித் துறையும் இந்தப் பிரிவினருக்கு கல்வி வாய்ப்பைத் திறந்து விட்டது. இட ஒதுக்கீடு மூலமாக பெரும்பாலானோருக்கு அது வரை மூடப்பட்டிருந்த கதவுகள் திறந்தன. பொருளாதார காரணங்கள் அல்லது வாய்ப்புகளைப் பற்றி அறியாமல் இருப்பவர்கள்த பின்தங்கி இருக்கிறார்கள். 'யார் வேண்டுமானாலும் கதவை இடித்துத் திறந்து கொள்ளலாம், திறக்கா விட்டால் கதவை உடைத்து விடுவோம்' என்ற மாற்றங்களை பார்த்து வளர்ந்த காலகட்டத்தினர் இவர்கள்.
கூட்டமான முன்னேற்றத்தினர். - நான்காவது கடைசிப் பிரிவில் இருப்பவர்கள் 1980களுக்குப் பிறகு பிறந்து வளர்ந்த இன்றைய இளைஞர்கள். எம்ஜிஆர் என்பவரைத் தெரியாமல் வளர்ந்திருப்பார்கள். உலக மயமாதல், தகவல் தொழில் நுட்பப் புரட்சி, ஏஆர்ரஹ்மான், ஐந்திலக்க சம்பளம், அமெரிக்கா செல்லும் வாய்ப்புகள் என்று முற்றிலும் புதிய உலகைப் பார்க்கிறார்கள்.
தகவல் தொழில்நுட்ப தலைமுறையினர்.
- 2020ல் கூட்டமான முன்னேற்றத் தலைமுறையினருக்கு சராசரி வயது 45 முதல் 60 வரை இருக்கும்.
- தகவல் தொழில் நுட்பத் தலைமுறையினர் வீடுகள் வாங்கவும், திருமணம் செய்யவும், குழந்தை பெற்றுக் கொள்ளவும் ஆரம்பித்திருப்பார்கள்.
- திராவிடக் குழந்தைகள் எல்லோரும் முழுநேர பணியிலிருந்து ஓய்வு பெற்றிருப்பார்கள்.
- மன்மத லீலையினரில் ஒரு சிலரே மிஞ்சியிருப்பார்கள்.
- சிறு நகரங்களில் கூட ஆங்கிலத்தில் கல்வி பயின்று வரும் குழந்தைகள் இளைஞர்களாக பொருளாதார முடிவுகளை எடுப்பவர்களாக இருப்பார்கள்.
- ஊடகங்கள், அரசியல் நடைமுறைகளில் பரிமாற்ற மொழி மாறியிருக்கும்.
- அப்போதைய இளைஞர்கள் மின்னணு பொருட்களான, தொலைக்காட்சி, கணினி போன்றவற்றை பார்த்து வளர்ந்திருப்பார்கள்.
- மின்னணு பொருட்களின் சந்தை பெருகும்.
Sunday, October 28, 2007
Wednesday, October 17, 2007
நிரல் பராமரிப்பு - 6
ஒவ்வொரு திட்டத்தின் சிவிஎஸ்சில் தற்போதைய பதிப்பை உருவாக்கம் கிளையாக ஆக்கி விட வேண்டும். எல்லா கோப்புகளையும் உருவாக்கம் கிளைக்குள் தகவிறக்கி விட்டால் போதும்.
உருவாக்கம் கிளையிலிருந்து புதிதாக உருவான கோப்புகளை அப்படியே சோதனை கிளையில் இருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர் கிளைகளுக்கு இணைத்து (merging) விட வேண்டும்.
வாடிக்கையாளர்களின் தற்போதைய நிரல் தொகுப்பிலிருந்து கோப்புகளை மேலே உருவாக்கிய கிளை பதிப்பில் நகல் செய்தால் அவர்களுக்காக செய்த மாற்றங்கள் நிரல் பராமரிப்புக்குள் வந்து விடும். அது சரிவர வேலை செய்கிறது என்று உறுதி செய்து கொண்ட பிறகு சோதனை கிளையிலிருந்து பயன் கிளைக்கு இணைக்கும் வேலையை மேலாளர் செய்து விடுவார்.
கடைசியாக பயன் கிளையிலிருந்து ஒரு பிரதியை எடுத்து வாடிக்கையாளர் இடத்தில் மாற்றி விடுவோம். இப்போது எல்லாமே ஒரே நிரல் கட்டுப்பாடு முறைக்குள் வந்து விட்டது.
மென்பொருள் பயன்பாட்டு நிரல்கள் ஒரு புறம் இருக்க, அதே நேரம் தரவுத் தள வடிவமைப்பின் பிரதிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு வாடிக்கையாளர் பிரதிக்கும் இன்னொரு வாடிக்கையாளர் பிரதிக்கும் நிரல் கோப்புகள் மட்டுமின்றி, தரவுத் தள வடிவமைப்புகளும் எப்படி வேறுபடுகின்றன என்று கவனிக்க வேண்டியிருக்கும்.
ஒரு பிரதியில் மூன்று அடைவுகள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
திட்டம் 3
உரு
சோதனை
பயன்
-வாடி1
- பயன்பாடு
- நிரல் தொகுப்புகள்
- நுட்பக் கோப்புகள்
பயன்பாடு அடைவில் மென்பொருளைப் பயன்படுத்தும் போது பயனர் அணுகும் கோப்புகள் மட்டும் இருக்க வேண்டும். நிரல் தொகுப்புகளில் செயலிகள் (functions), செயலிக்கூட்டுகள் (classes) போன்றவற்றின் தொகுப்புகள் இருக்க வேண்டும். இவை பயன்பாட்டு நிரல்களில் சேர்க்கப் பட்டிருக்க வேண்டும். சேர்க்கப்பட்ட கோப்புகளுக்கான அடைவு இது என்று குறிப்பிட தோதுவாக இருக்கும்.
நுட்பக் கோப்புகளில் தரவுத் தளத்தை உருவாக்கப் பயன்படுத்திய உரைக் கோப்புகள் இருக்கும். தரவுத் தள வடிவமைப்பு ஒரு கோப்பு, கொடாநிலையாக முதலில் போட்டுத் தரும் தரவுகள் ஒரு கோப்பில், தரவுத் தள செயலிகளுக்கு ஒரு தனி அடைவு - அதில் ஒவ்வொரு செயலிக்கும் ஒரு கோப்பு. இப்படிப் போட்டு வைத்து விட்டால் வாடிக்கையாளர் பதிப்புகளுக்கிடையேயான தரவுத் தள மாறுதல்களையும் எளிதாகக் கையாளலாம்.
நிரல் பராமரிப்பு - 5
தொகுப்பு
- திட்டம் 1
உருவாக்கம்
சோதனை
பயன்
- திட்டம் 2
உருவாக்கம்
சோதனை
பயன்
- திட்டம் 3
உருவாக்கம்
சோதனை
பயன்
என்ற விரிவு.
- உருவாக்கம் என்பது புதிய கூறுகளை உருவாக்குதல், பெரிய மாற்றங்களை செய்தல் போன்ற வேலைகளுக்குப் பயன்படும்.
- சோதனையும், பயனும் ஒரே மாதிரி இருக்கும். இரண்டிலுமே தற்போது பயன்பாட்டில் இருக்கும் பிரதிகள் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாடிக்கையாளர் பிரதிக்கும் ஒரு கிளை இருக்கும்.
உருவாக்கம்
சோதனை - வாடி 1
வாடி 2
வாடி 3
பயன் - வாடி 1
வாடி 2
வாடி 3
பயன் அடைவில் இருக்கும் குறிப்பிட்ட வாடிக்கையாளர் கிளையிலிருந்து பிரதியை எடுத்துப் பார்த்தால் அது அவர்கள் இடத்தில் ஓடும் நிரலை அப்படியே ஒத்திருக்க வேண்டும்.
வாடிக்கையாளரிடமிருந்து வரும் புகார் அல்லது கோரிக்கைக்கேற்ப நிரலை மாற்றுவதற்கு சோதனைக் கிளையிலிருந்து நிரல் பிரதி உருவாக்கிக் கொள்ள வேண்டும். செய்ய வேண்டிய மாறுதல்களைச் செய்து கோப்பை தொகுப்புக்கு அனுப்புவார் உருவாக்குனர். தொகுப்புக்கு அனுப்பும் போது நமது issue tracker பயன்பாட்டில் வாடிக்கையாளர் கோரிக்கையை உள்ளிடும் போது கிடைத்த கோரிக்கை எண்ணையும் (issue id) குறிப்பிட வேண்டும்.
இந்த மாறுதல், குறிப்பிட்ட கோரிக்கை எண் தேவையைச் சரி செய்வதற்காக சேர்க்கப்பட்டது என்று தெரிந்து கொள்ள இது உதவும்.
மாறுதலை செய்த ஊழியர் அது பற்றிய விபரத்தை, தொகுப்புக்கு அனுப்பும் போது கிடைத்த மாறுதல் எண்ணைக் (revision no) குறிப்பிட்டு, 'இன்ன கோரிக்கை எண்ணுக்காக, இன்ன மாறுதல் எண்ணில் மாற்றங்களை சோதனைத் தொகுப்பில் சேர்த்திருக்கிறேன்' என்று மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பி விடுவார். அதே தகவல் சோதனை குழுவுக்கும் போகும்.
சோதனை செய்பவர் குறிப்பிட்ட மாறுதல் எண்ணுக்கான பதிப்பை தொகுப்பிலிருந்து பெற்று என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்ற விபரங்களையும் எடுத்து சோதனை செய்வார்.
மேலாளர் கோரிக்கை விபரங்களையும், மாறுதல்களையும் சீர்தூக்கிப் பார்ப்பார். எல்லாம் சரிவர இருந்தால், சோதனைக் குழுவின் சோதனை முடிவுகளும் ஒத்துப் போனால் அதே மாற்றங்களை சோதனைக் கிளையிலிருந்து பயன் கிளைக்கு கடத்துவார்.
இது போல மாற்றங்களை எடுத்தல், மாற்றங்களை ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு அனுப்புதல் போன்ற அன்றாட வேலைகளுக்கான கட்டளைகள் சப்வெர்ஷனில் மிக எளிதாக மாற்றப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர் பிரதிக்கு மேலாளர் பயன் கிளைக்கு கடத்திய மாறுதல் எண்ணுக்கான நிரல் மேம்பாட்டைச் செய்து விடுவோம். அதாவது வாடிக்கையாளரின் பயன்பாடும் சப்வெர்ஷன் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பிரதியாகவே இருக்கும். அங்கே போய் மேம்படுத்தும் கட்டளையைக் கொடுத்தால் மாற்றங்கள் இறங்கி வந்து விடும்.
யார் என்ன மாற்றம் செய்ய வேண்டுமானாலும் அது சோதனை கிளையில்தான் நடக்க வேண்டும். பயன் கிளையில் மாற்றங்களைச் சேர்ப்பது சோதனைக் கிளையிலிருந்து இணைக்கும் முறையில் மட்டும்தான் நடக்க வேண்டும். அந்த இணைப்புக்கான அனுமதி ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒருவரின் பொறுப்பில் இருக்க வேண்டும்.
நிரல் பராமரிப்புத் தொகுப்பை இணைய வழங்கியில் வைத்துக் கொண்டு வாடிக்கையாளர் கணினிகள், வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர் என்று எல்லா இடங்களிலும் ஒத்திசைவு செய்து கொள்ளலாம். வெளியூர்களிலிருந்து நமது உருவாக்கத்தில் பங்களிக்க முன்வருபவர்களுக்கும் வசதியாக இருக்கும்.
சரி, ஏற்கனவே இருக்கும் நிரல் பிரதிகளை என்ன செய்வது. அவற்றை நிரல் பராமரிப்புத் தொகுப்புக்கு எப்படி கொண்டு வருவது என்றும் திட்டமிட வேண்டும்.
ஒவ்வொரு திட்டத்தின் சிவிஎஸ்சில் தற்போதைய பதிப்பை உருவாக்கம் கிளையாக ஆக்கி விட வேண்டும். எல்லா கோப்புகளையும் உருவாக்கம் கிளைக்குள் தகவிறக்கி விட்டால் போதும்.
உருவாக்கம் கிளையிலிருந்து புதிதாக உருவான கோப்புகளை அப்படியே சோதனை கிளையில் இருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர் கிளைகளுக்கு இணைத்து விட வேண்டும்.
வாடிக்கையாளர்களின் தற்போதைய நிரல் தொகுப்பிலிருந்து கோப்புகளை மேலே உருவாக்கிய கிளை பதிப்பில் நகல் செய்தால் அவர்களுக்காக செய்த மாற்றங்கள் நிரல் பராமரிப்புக்குள் வந்து விடும். அது சரிவர வேலை செய்கிறது என்று உறுதி செய்து கொண்ட பிறகு சோதனை கிளையிலிருந்து பயன் கிளைக்கு இணைக்கும் வேலையை மேலாளர் செய்து விடுவார்.
கடைசியாக பயன் கிளையிலிருந்து ஒரு பிரதியை எடுத்து வாடிக்கையாளர் இடத்தில் மாற்றி விடுவோம். இப்போது எல்லாமே ஒரே நிரல் கட்டுப்பாடு முறைக்குள் வந்து விட்டது. மேலே சொன்ன நடைமுறைப்படி மாற்றங்களை கையாளலாம்.
மென்பொருள் பயன்பாட்டு நிரல்கள் ஒரு புறம், அதே நேரம் தரவுத் தள வடிவமைப்பின் பிரதிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு வாடிக்கையாளர் பிரதிக்கும் இன்னொரு வாடிக்கையாளர் பிரதிக்கும் நிரல் கோப்புகள் மட்டுமின்றி, தரவுத் தள வடிவமைப்புகளும் எப்படி வேறுபடுகின்றன என்று கவனிக்க வேண்டியிருக்கும்.
ஒரு பிரதியில் மூன்று அடைவுகள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
திட்டம் 3
உரு
சோதனை
பயன்
-வாடி1
- பயன்பாடு
- நிரல் தொகுப்புகள்
- நுட்பக் கோப்புகள்
பயன்பாடு அடைவில் மென்பொருளைப் பயன்படுத்தும் போது பயனர் அணுகும் கோப்புகள் மட்டும் இருக்க வேண்டும். நிரல் தொகுப்புகளில் செயலிகள் (functions), செயலிக்கூட்டுகள் (classes) போன்றவற்றின் தொகுப்புகள் இருக்க வேண்டும். இவை பயன்பாட்டு நிரல்களில் சேர்க்கப் பட்டிருக்க வேண்டும். சேர்க்கப்பட்ட கோப்புகளுக்கான அடைவு இது என்று குறிப்பிட தோதுவாக இருக்கும்.
நுட்பக் கோப்புகளில் தரவுத் தளத்தை உருவாக்கப் பயன்படுத்திய உரைக் கோப்புகள் இருக்கும். தரவுத் தள வடிவமைப்பு ஒரு கோப்பு, கொடாநிலையாக முதலில் போட்டுத் தரும் தரவுகள் ஒரு கோப்பில், தரவுத் தள செயலிகளுக்கு ஒரு தனி அடைவு - அதில் ஒவ்வொரு செயலிக்கும் ஒரு கோப்பு. இப்படிப் போட்டு வைத்து விட்டால் வாடிக்கையாளர் பதிப்புகளுக்கிடையேயான தரவுத் தள மாறுதல்களையும் எளிதாகக் கையாளலாம்.
நிரல் பராமரிப்பு - 4
எங்கள் நிரல் பராமரிப்பு முறையில் சில தடைக்கற்கள்.
- முதலில் சிவிஎஸ் பயன்பாட்டை எப்படி பயன்படுத்துவது, யார் யார் பயனர்கள், திட்டங்கள் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்ற தெளிவான திட்டமிடல் இல்லாமல் இருந்தது.
ஆரம்பித்த காலங்களில் வாடிக்கையாளர்களுக்குத் தனியாக பதிப்பு வேண்டாம் என்று முடிவு செய்திருந்தோம். ஒரு பிரதியில் குறிப்பிட்ட மாறுதல் செய்தால் எல்லா இடங்களுக்கும் அந்த மாறுதலை அனுப்பி விட வேண்டும். எந்த நேரத்திலும் எல்லா வாடிக்கையாளர்களின் பிரதிகளும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.
நடை முறையில் அது சாத்தியமில்லாமல் போய் விட்டது. ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப தனிப்பயனாக்கம் செய்யும் போது அதே மாற்றத்தை மற்றவர்களுக்கும் பொருத்திக் கொள்வது நடக்கவில்லை. என்னதான், தகுதர நிரல் பிரதியோடு எல்லாவற்றையும் ஒத்திசைத்து விட வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தாலும், ஒவ்வொன்று ஒவ்வொரு திசையில் இழுத்துக் கொண்டுதான் போய்க் கொண்டிருந்தன.
அந்தத் தவறான கொள்கை முடிவின் விளைவுதான் வாடிக்கையாளர் பிரதிகளில் ஏற்படும் மாற்றங்கள் கைவழி செய்ய வேண்டியிருந்தது. - இரண்டாவது காரணம் சிவிஎஸ் என்ற கருவியின் தலைவலிகள். பல ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட சிவிஎஸ்ஸைப் பயன்படுத்த நல்ல பொறுமையும், கவனமும் வேண்டும். எல்லோராலும் அதை திறமையாகப் பயன்படுத்தி விட முடியாத அளவுக்கு அதன் கட்டளைகள், அறிக்கைகள் கொஞ்சம் கடுப்பாக இருக்கும். அதனால் கருவி இருந்தும் அடிப்படையாக ஓரிரு பயன்பாடுகளை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்தோம்.
- மூன்றாவதாக பணி புரிபவர்கள் மாறிக் கொண்டே இருந்தது. ஒரு மென்பொருள் உருவாக்கக் குழுவின், நிறுவனத்தின் வலிமையே அதன் குழு உறுப்பினர்கள்தான். இரண்டு ஆண்டுகள் பணி புரிந்த ஒருவர் வெளியேறி விட்டால், சதையே பிய்த்துக் கொண்டு போனது போலத்தான். நிலைமை குணமாகி வழக்கமான பணிகள் தொடங்க கொஞ்ச காலம் பிடிக்கும். அப்படி பல பேர் விலகிப் போய்க் கொண்டே இருக்கும் போது எந்த விதமான அமைப்புகளையும் கட்டிக் காக்க முடியாமல் குலைந்து போகின்றன.
இரண்டாவது காரணத்தை எதிர் கொள்வது நாம் மட்டும் அல்ல, இன்னும் பலர் சிவிஎஸ்சின் கடுப்புகளை சந்தித்திருக்கிறார்கள். அதற்காக சும்மா இருக்காமல் ஒரு மாற்றுத் திட்டத்தைத் தொடங்கி சப்வெர்ஷன் என்று உருவாக்கி விட்டார்கள். சிவிஎஸ்சின் செயல்பாடுகள் அனைத்தையும், அதன் தலைவலிகள் இல்லாமல் கொடுப்பதுதான் சப்வெர்ஷனின் நோக்கம். ஏழெட்டு ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி பெற்று, இன்றைக்கு சிவிஎஸ் பயன்படுத்தி வந்த பெரிய மென்பொருள் திட்டங்கள் எல்லாம் சப்வெர்ஷனுக்கு மாறி விட்டன.
அதுதான் திறவூற்று மென்பொருள் உலகின் சிறப்பு. உங்களுக்குப் பிடிக்கா விட்டால், திட்டத்தை நகல் செய்து தனி வழியில் உருவாக்கிக் கொள்ளலாம்.
ஒரு பிற்பகலில் உட்கார்ந்து சப்வெர்ஷன் குறித்துப் படித்து அதன் கட்டளைகளை பயன்படுத்திப் பார்த்தேன். சிவிஎஸ் பயன்படுத்தும் போது, 'இது இப்படி இருந்தால் தோதுவாக இருக்குமே' என்று நமக்குத் தோன்றும் இடத்தில் எல்லாம் அதை மேம்பாடு செய்திருக்கிறார்கள் சப்வெர்ஷனில். அதனால் சப்வெர்ஷனுக்கு மாறி விடலாம் என்று முடிவு செய்தோம். ஒன்றரை மாதக் காலத்தில் புதிய முறைக்கு முற்றிலுமாக மாறி விட வேண்டும்.
இதற்குத் திட்டமிடலையும் நமது தேவைகளுக்கு ஏற்றவாறு செய்து விட வேண்டும்.
சப்வெர்ஷனில் பல பிரதிகளை உருவாக்கிக் கொள்வதில் எந்த தடையும் கிடையாது. ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு மாற்றங்களை இணைப்பதும் எளிதாக செய்து கொள்ளலாம். மாற்றங்களின் விபரங்களைத் தெரிந்து கொள்வதும் எளிதாக்கப்பட்டிருக்கிறது.
சப்வெர்ஷனில் திட்டங்கள் (projects), பிரதிகள் (versions), வெளியீடுகள் (releases), கிளைகள்(branches) எல்லாமே அடைவுகள்தான் (directories). நமது நிரல் தொகுப்புகள் அனைத்துமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை ஆதலால் எல்லாவற்றையும் ஒரே தொகுப்புக்குள் (repository) போட்டு விடலாம் என்று முடிவு.
Friday, October 12, 2007
நிரல் பராமரிப்பு - 3
இன்றைக்கு இரண்டு பெரிய, இரண்டு சிறிய என்று நான்கு மென்பொருள் திட்டங்கள்.
- தோல் பதனிடும் நிறுவனங்களுக்கான திட்டத்தில் கிட்டத்தட்ட இருபது வாடிக்கையாளர் பிரதிகள் அவர்கள் இடத்தில் இருக்கின்றன.
- காலணி உருவாக்கும் நிறுவனங்களுக்கான திட்டத்தில் 5 பிரதிகள் வாடிக்கையாளர்கள் கணினிகளில் நிறுவியுள்ளோம்.
- இந்த இரண்டும், புதிதாக ஆரம்பித்துள்ள வேதிப் பொருள் நிறுவனங்களுக்கான திட்டம் மற்றும் வாடிக்கையாளர் பின்னூட்டங்களை சேகரிக்கும் பயன்பாட்டுக்கான திட்டம் ஆக நான்கு திட்டங்களில் பிரதிகள் எங்கள் இணைய வழங்கியிலும் நிறுவியிருக்கிறோம்.
- தினமும் அலுவலகத்தில் 10-15 பேர் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
- அந்த மாற்றங்கள் இணையக் கணினிக்கும், வாடிக்கையாளர் இடங்களுக்கும் போய்ச் சேர வேண்டும்.
- யாராவது வாடிக்கையாளர் சேவைக்குப் போயிருக்கும் போது சிறு மாறுதல்கள் அங்கு செய்திருந்தால் அந்த மாறுதல் அலுவலகப் பதிப்புகளில் சேர்க்கப்பட வேண்டும்.
- சில மாறுதல்கள் குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு மட்டும் தேவைப்படுபவை. அவற்றை அவர்களின் பிரதியில் மட்டும் மாற்றி விட்டு மற்ற பிரதிகளில் மாறாமல் வைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது அலுவலகத்தில் ஒரு கணினியில் cvs பயன்பாட்டை நிறுவியிருக்கிறோம்.
- ஒவ்வொருவரும் வேலை செய்ய ஒரு பிரதியை எடுத்து வைத்துக் கொள்வார்கள்.
- தினமும் வேலை ஆரம்பிக்கும் முன்பு மத்திய பிரதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தமது பிரதிக்கு ஒத்திசைவு செய்து கொள்ள வேண்டும்.
- தமது மாறுதல்களை அனுப்பும் முன்பு மத்திய பிரதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தமது பிரதிக்கு ஒத்திசைவு செய்து கொள்ள வேண்டும்.
- மாற்றங்களை முடித்து தனது பிரதியில் சரியாக இருக்கிறது என்ற பார்த்த பிறகு மாறுதல்களை மத்திய பிரதிக்கு அனுப்பி விட வேண்டும்.
- சின்னச் சின்ன வழு சரி செய்தல்களுக்கு (bug fixing) ஒரு மாறா கிளையும் (stable branch), பெருமளவு புதிய மாற்றங்களுக்கு (development branch) இன்னொரு கிளையும் வைத்திருக்கிறோம்.
- மாறாக் கிளையிலிருந்து ஒரு பிரதியை எடுத்து இணைய வழங்கியில் நிறுவியுள்ள பிரதிக்கு தினமும் மாறுதல்களை சேர்த்து விடுவோம்.
- மாறாக் கிளையில் செய்த மேம்பாடுகளை உருவாக்கக் கிளைக்கு தினமும் இணைக்க (merging) கட்டளை கொடுத்து விடுவோம்.
- உருவாக்கக் கிளையில் மாற்றங்கள் முடிந்து நல்லபடியாக வேலை நடக்கிறது என்று உறுதிப் படுத்திக் கொண்ட பிறகு ஒரு மாதத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை உருவாக்கக் கிளையை புதிய மாறாக் கிளையாக மாற்றி விட்டு அடுத்த உருவாக்கங்களுக்குப் புதிய ஒரு கிளையை உருவாக்கிக் கொள்கிறோம்.
- வாடிக்கையாளர்களின் பிரதிகளை cvsல் சேர்க்காமல் தனியாக அடைவுகளில் போட்டு வைத்திருப்போம்.
- வாடிக்கையாளர் பிரதியில் நேரடியாக மாறுதல்கள் செய்வதைத் தவிர்த்து விட்டு தகுதர திட்டத்தில் மாற்றம் செய்து அது சரியாக வேலை செய்த பிறகு வாடிக்கையாளர், தேவையான கோப்புகளை மட்டும் எடுத்து வாடிக்கையாளர் பிரதியுடன் ஒப்பிட்டு சேர்த்து விடுவோம்.
- வாடிக்கையாளரின் பிரதியில் ஏதாவது சிறப்பு மாற்றங்கள் செய்த அதே வரிகள் புதிய பிரதியிலும் மாறியிருந்தால் இரண்டையும் ஒத்திசைக்க முயற்சி செய்வோம்.
இந்த விதி நடைமுறையில் பல முறை மீறப்பட்டே வருகிறது. வாடிக்கையாளர் ஏதாவது மாற்றம் கேட்டால், நேரடியாக அவர்கள் பிரதியில் மாற்றம் செய்து அனுப்புவது நடக்கிறது - அலுவலகக் கணினியில் இருக்கும் வாடிக்கையாளர் பிரதியில் கோப்புகளை சேர்த்துப் பரிசோதித்துப் பார்த்த பிறகு அவற்றை மின்னஞ்சல் மூலம் அல்லது யாரவது போகும் போது அனுப்பி வாடிக்கையாளர் கணினியில் இருக்கும் பிரதியில் சேர்த்து விடுவோம்.
- வாடிக்கையாளர் கணினியில் இருக்கும் பிரதியில் ஏதாவது மாற்றினால் அதை அலுவலகத்தில் இருக்கும் பிரதியில் மறக்காமல் சேர்த்து விட வேண்டும்.
நிரல் பராமரிப்பு - 2
ஒரு மென்பொருள் திட்டத்தில் நான்கு அடைவுகள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம்.
global_files
programs
admin
users
ஒவ்வொன்றினுள்ளும் பல கோப்புகள் அல்லது உள்அடைவுகள் இருக்கலாம்.
project
global_files -
global_db.inc
global_form.inc
global_report.inc
global_page.inc
programs -
order_entry.php
shipment_entry.php
bill_entry.php
order_report.php
admin -
backup_db.php
user_management.php
users -
change_password.php
preferences.php
login.php
இவை அனைத்தையும் ஒரு மத்திய இடத்தில் பிரதி செய்து வைத்துக் கொள்ளும் சிவிஎஸ்.
இப்போது ரவி என்பவர் வேலைக்கு வந்தால் அந்த மத்திய பிரதியிலிருந்து ஒரு பிரதியை தனது கணினிக்குக் கொண்டு வருமாறு (checkout) கட்டளை கொடுப்பார். அவருடைய அடைவில் எல்லா கோப்புகளும் மேலே இருக்கும் அதே அமைப்பில் பிரதி செய்யப்பட்டு விடும்.
ரவி order_entry.php என்ற கோப்பில் மாறுதல்கள் செய்கிறார். மாறுதல்கள் எல்லாம் அவரது பிரதியில்தான் நடக்கும். மத்திய பிரதியில் எந்த மாறுதலும் இல்லை.
இந்த நேரத்தில் தேவி என்பவர் தனக்கென ஒரு பிரதி வேண்டினால் ரவி செய்த மாறுதல்கள் சேராத கோப்புகள்தான் கிடைக்கும். தேவியும் வேலையை ஆரம்பித்து விடலாம். இதே போல் எத்தனை பேர் வேண்டுமானாலும் தனித்தனி பிரதிகள் எடுத்து வேலை செய்து கொண்டிருக்கலாம்.
தேவி தன் வேலையை முடித்து மாறுதல்கள் எல்லாம் சரிவர வேலை செய்கின்றன என்று சரிபார்த்து விட்டு அந்த மாற்றங்களை மத்திய பதிப்பில் சேர்க்க (commit) விரும்புகிறார். அவர் bill_entry.php என்ற கோப்பையும் order_entry.php என்ற கோப்பையும் மாற்றியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
முதலில் தான் வேலை செய்து கொண்டிருந்த போது வேறு யாரும் மாற்றங்களை மத்திய பிரதியில் சேர்த்திருந்தால் அவற்றை தன் பிரதியில் புதுப்பித்துக் கொள்ள ஒத்திசைவு கட்டளையைக் (update) கொடுப்பார். இது வரை எதுவும் மாறியிருக்கவில்லை. தேவி தனது மாற்றங்களை மத்திய பிரதியில் சேர்க்க (commit) கட்டளை கொடுத்ததும். சிவிஎஸ் மத்திய பிரதிக்கும் தேவியின் பிரதிக்கும் இடையே ஒவ்வொரு கோப்புக்கும் என்னென்ன வேறுபாடுகள் உள்ளன என்று பார்த்து விட்டு தேவியின் மாறுதல்களை மத்திய பிரதியில் சேர்த்து விடும்.
இதற்குள் ரவியும் தனது வேலையை முடித்து விட்டார். அவர் order_entry.php என்ற கோப்பில் மாற்றங்கள் செய்துள்ளார். இப்போது மத்திய பிரதியையும் தனது பிரதியையும் ஒத்திசைக்க (update) கட்டளை கொடுத்தாரானால், தேவி மாற்றியிருந்த bill_entry.php ரவியின் பிரதிக்கும் வந்து விடும்.
ஆனால் order_entry.php என்ற கோப்பு மத்திய பிரதியிலும் மாறியிருக்கிறது. ரவியின் பிரதியிலும் மாறியிருக்கிறது. இப்போது சிவிஎஸ் பயன்பாடு இரண்டு கோப்புகளுக்குமிடையே என்ன வேறுபாடு என்று ஒவ்வொரு வரியாக ஒப்பிட்டுப் பார்க்கும். மாறுதல்கள் வெவ்வேறு வரிகளில் இருந்தால் மத்திய பிரதியின் மாறியுள்ள வரிகளை மட்டும் ரவியின் கோப்பில் மாற்றி விடும். ரவி செய்த மாறுதல்கள் அப்படியே இருக்கும்.
கடைசியாக ரவி தனது மாறுதல்களை மத்திய பிரதிக்கு அனுப்ப கட்டளை கொடுத்தால் தேவியின் மாற்றங்களையும், ரவியின் மாற்றங்களையும் உள்ளடக்கிய கோப்பு மத்திய பிரதிக்கு வந்து விடும். அடுத்த முறை தேவி அல்லது பிற ஊழியர்கள் ஒத்திசைக்கும் கட்டளை கொடுத்தால் இந்த பிரதி அவர்களுக்கும் போய்ச் சேர்ந்து விடும்.
முந்தைய பத்தியில் இரண்டு கோப்புகளிலும் ஒரே வரிகளில் மாறுதல்கள் இருந்தால் என்ன நடக்கும்? அதாவது தேவி மாற்றிய அதே வரியை ரவியும் மாற்றியிருக்கிறார், என்ன ஆகும்? அப்படி ஒரு நிலைமையைக் கண்டால் சிவிஎஸ் பயன்பாடு ரவி ஒத்திசைக்கும் போது அந்த விபரங்களைக் (conflict) காட்டி தேவியுடன் பேசி மாற்றங்களை ஒன்றையொன்று இடிக்காமல் சரி செய்து கொள்ளும் படி தகவல் கொடுக்கும்.
இந்த எளிய வழியைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கானவர்கள் பல லட்சம் வரி நிரல் தொகுப்புகளில் ஒரே நேரத்தில் வேலை செய்ய முடிகிறது.
நிரல் பராமரிப்பு - 1
மிக எளிதான சிறு நிரல்களைத் தவிர்த்து மற்ற எல்லா பெரிய மென்பொருள் உருவாக்கத் திட்டங்களிலும் நிரல்களை பல கோப்புகளில் பிரித்தால்தான் சமாளிக்க முடியும். ஒரே மாதிரியான அல்லது ஒரே வேலைகளைச் செய்யும் நிரல் கோப்புகளை ஒரு அடைவில் (directory) சேர்த்து வைக்க ஆரம்பித்தால் பல அடைவுகளும் உருவாகி விடும்.
ஒரு மென்பொருள் திட்டத்தின் மூலநிரல் தொகுப்பில் பல அடைவுகளும் ஒவ்வொரு அடைவுக்குள்ளும் இன்னும் பல அடைவுகள் அல்லது பல கோப்புகளும் இருக்கலாம்.
அந்த அளவு பெரிய திட்டத்தில் தனி ஒருவராக நிரல் எழுதுவது நடக்காது. நான்கைந்து பேரில் ஆரம்பித்து நூற்றுக் கணக்கான பேர் நிரல் எழுதுவார்கள். மாற்றங்கள் செய்வார்கள். வழுக்களைச் சரி செய்வார்கள்.
இப்படி பல கோப்புகளை, பலர் இணைந்து கையாளும் போது பல சிக்கல்கள் ஏற்படும்:
- ஒரே நேரத்தில் இரண்டு பேர் ஒரே கோப்பை மாற்றிக் கொண்டிருந்தால் ஒன்றுக்கொன்று மேலெழுதிப் போகும்.
- குறிப்பிட்ட மாற்றத்தில் ஏதாவது வழு இருந்தால் அதை என்று நிகழ்ந்தது என்று தேடிக் கண்டுபிடிப்பது பெரும் பாடாகிப் போகும்.
- திறவூற்று உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படுவது cvs (concurrent version control - ஒத்திசைந்த நிரல்பதிப்பு பராமரிப்பு) என்ற பயன்பாடு.
- cvsன் குறைபாடுகளைக் களைந்து புதிதாக சப்வெர்ஷன் (subversion) என்ற பயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்த இரண்டும் போதாது என்று லினஸ் தோர்வால்ட்ஸ், லினக்சு கெர்னல் உருவாக்கத்தைப் பராமரிக்க கிட் (git) என்ற கருவியைத் தானே எழுதிப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.
- இவற்றைத் தவிர மைக்ரோசாப்டு நிறுவனத்தின் sourcesafe என்ற பயன்பாட்டையும் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.
Thursday, October 11, 2007
வலுவான ரூபாயின் விளைவுகள்
- நம் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் விற்பனை குறையும்.
ஒரு பொருள் செய்ய 100 ரூபாய் செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம் டாலருக்கு 45 ரூபாய் கிடைத்துக் கொண்டிருந்த காலத்தில் அந்த பொருளை லாபமும் சேர்த்து 2.5 டாலருக்கு விற்றால், ஏற்றுமதியாளருக்குக் கையில் 112.50 ரூபாய்கள் கிடைக்கும். 12.50 ரூபாய்கள் லாபம்.
இப்போது அதே பொருளை 2.5 டாலருக்கு விற்றால் (1 டாலர் 39.50) 99.50 காசுகள்தான் கிடைக்கும். 50 காசுகள் இழப்பு.
இதைச் சரிகட்ட செலவுக் கணக்கைக் குறைக்கப் பார்க்கலாம் அல்லது விற்பனை விலையை ஏற்றப் பார்க்கலாம். வாடிக்கையாளர் விலையை 2.70 ஆக ஏற்ற ஒப்புக் கொண்டால் அதே பொருளை விற்று 106.60 ரூபாய்கள் கிடைக்கும். கூடவே உள்ளிடு பொருட்கள் வாங்கும் போது விலை குறைக்கச் சொல்லி கேட்கலாம். தேவையில்லாத செலவுகளைக் குறைக்கலாம், முதலீடுகளைத் தள்ளிப் போடலாம். பழையபடி 12.50 ரூபாய்கள் லாபம் நிற்கும் படி முயற்சிப்பார்கள். - வெளிநாட்டிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருட்கள் மலிவாகக் கிடைக்க ஆரம்பிக்கும்.
எரிஎண்ணையின் விலை பேரலுக்கு 70 டாலர்கள் என்றால் அதன் விலை முன்பு 70*45=3150 ரூபாய்களாக இருக்கும். இன்றைக்கு அதே விலை எண்ணெய் வாங்க 70*39.5= 2765 ரூபாய்கள் செலவழித்தால் போதும்.
இது இரண்டு வகையில் போகலாம். திறமையான மக்களாக இருந்தால் இப்படிக் கிடைத்த தமது நாணயத்தின் வலிமையைப் பயன்படுத்து வெளி நாடுகளிலிருந்து மூலப் பொருட்களை வாங்கி தமது உற்பத்தியைப் பெருக்கிக் கொள்வார்கள் அல்லது முதலீட்டில் செலவிட்டு புதிய இயந்திரங்கள், வெளி நாட்டில் விற்பனை அலுவலகங்கள் என்று ஆரம்பித்து தமது உற்பத்தி வலிமையையும் சந்தைப்படுத்தும் திறனையும் அதிகப்படுத்திக் கொள்வார்கள்.
மாறாக, இறுதிப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்தால் உள்ளூர் மக்களின் பாடு திண்டாட்டமாகிப் போகும்.
இந்தியாவில் அரிசி கிலோ 25 ரூபாய்க்கு விற்கிறது என்று வைத்துக் கொள்வோம். பழைய மதிப்பில் கிலோ 0.5 டாலருக்கு அமெரிக்காவின் அரிசி இங்கு வந்து சேர்ந்தால் அடக்க விலையே 22.50ல் ஆரம்பிக்கும் (45*0.5). இப்போது அதே அரிசியின் அடக்க விலை ரூபாய் 19.75 ஆக இருக்கும். மற்ற செலவுகள் போக கிலோவுக்கு 2 ரூபாய் லாபம் பார்க்கலாம் என்று ஒருவர் அமெரிக்க அரிசியை நம் ஊரில் விற்க ஆரம்பித்தால் விவசாயிகள் நிலைமை திண்டாட்டமாகிப் போய் விடும். - ரூபாய்களில் சம்பாதிப்பவர்களின் வளம் அதிகரிக்கும். இந்தியாவில் செயல்படும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு நல்ல ஆதாயம். புதிய கருவிகள் வாங்கும் செலவுகள், வெளிநாட்டு இணைப்புக்குக் கொடுக்கும் கட்டணம் எல்லாம் குறைந்து விடும். வருமானமோ குறையப் போவதில்லை.
இந்தியாவிலிருந்து துபாய்க்கு தொலைபேசி அழைப்புக்குக் கட்டணம் நிமிடத்துக்கு 4.50 ரூபாய்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் 0.05 டாலர்கள் துபாய் நிறுவனத்துக்கு பிஎஸ்என்எல் கொடுக்க ஒப்பந்தம். முந்தை செலாவணி விகிதத்தில் ஒரு நிமிடத்துக்கு கொடுக்க வேண்டிய தொகை 2.25 ரூபாய்கள், மிஞ்சும் தொகை 2.25 ரூபாய்கள். இப்போதைய விகிதத்தில் கொடுக்க வேண்டிய தொகை அதே 0.05 டாலர்களுக்கு ரூபாய்களில் 1.95 காசுகள். ஒரு நிமிடத்துக்கு 30 காசுகள் லாபம்.
இது 2வதாக சொன்ன அதே இறக்குமதி ஆதாயம்தான். துபாய் நிறுவனத்தின் சேவையை இறக்குமதி செய்து கொடுக்கிறது இந்திய நிறுவனம். அதற்கான செலவு குறைவு.
இதைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து வெளி நாடுகளுக்கு அழைக்கும் கட்டணங்கள் குறைக்கப் படலாம். எதிர்மறையாக வெளிநாடுகளிலிருந்து இந்தியாவை அழைக்கும் கட்டணங்கள் உயரலாம். - வெளிநாடுகளில் சுற்றிப் பார்க்க, தொழில் தொடர்பாக, படிக்கப் போகும் இந்தியர்களுக்குச் செலவு குறைவு.
ஆங்காங்கில் விற்பனை அலுவலகம் ஒன்றைத் திறந்து அந்த ஊர் ஊழியரை வேலைக்கு வைக்க ஆகும் மொத்த செலவு மாதத்துக்கு 5000 டாலர்கள் என்று வைத்துக் கொள்வோம். டாடா தேயிலை நிறுவனம் குறைந்த செலவில் அலுவலகத்தை ஆரம்பித்து நடத்தலாம். முன்பு 2.225 லட்ச ரூபாய்கள். இப்போது 1.95 லட்ச ரூபாய்கள்தான்.
இரண்டு ஆண்டுகள் மேலாண்மை படிப்புக்குச் செலவு 20000 டாலர்கள் என்றால் முன்பு 9 லட்சம் ரூபாய்கள் தேவைப்படும் இப்போது 7.9 லட்சத்தில் முடித்து விடலாம்.
நியூயார்க்கில் ஒரு இரவு தங்குவதற்கான விடுதிச் செலவு 80 டாலர்கள் என்றால், இப்போதைய செலாவணி விகிதத்தில் 420 ரூபாய்கள் குறைவான செலவு. - வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்கள் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பும் போது கிடைக்கும் மதிப்பு குறைந்து விடும். 1000 டாலர்கள் சேமிப்பு முன்பெல்லாம் 45 ஆயிரங்களாக மாறிக் கொண்டிருந்தது, இப்போது 39 ஆயிரங்கள்தான் கிடைக்கும்.
என்னென்ன செய்யலாம்? முதலீடுகளை டாலர்களில் செய்யலாம். வேலை பார்க்கும் நாட்டிலோ, டாலர்களில் செலாவணி நடக்கும் நாடுகளிலோ சொத்துக்களை வாங்கிப் போடலாம்.
இந்தியாவில் முதலீட்டுக்காக வாங்கி வைத்திருந்த சொத்துக்களை விற்று டாலராக மாற்றிக் கொண்டால் லாபம் கிடைக்கும்.
ஒரு ஆண்டு முன்பு 20 லட்சம் ரூபாய்களுக்கு ஒரு வீடு வாங்கும் போது அதற்காக 45,000 டாலர்களை மாற்றிச் செலவழித்திருக்க வேண்டும். இப்போது அதே வீட்டை அதே விலைக்கு விற்று டாலராக மாற்றினால் 50,000 டாலர்களுக்கு மேல் கிடைக்கும். நிகர லாபம் 11%. வீட்டு விலைகள் தாறுமாறாக ஏறியிருக்கும் நிலையில் அதே வீட்டுக்கு 40 - 45 லட்சங்கள் கிடைத்தால் அதை டாலராக மாற்றி வேலை பார்க்கும் நாட்டில் முதலீடு செய்யலாம். - ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள்
மென்பொருள், துணி, ஆடைகள், தோல் போன்ற துறை நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் கொஞ்சம் இறுக்கிப் பிடித்தலுக்குத் தயாராக வேண்டும். முன்பு போன்ற ஊதிய உயர்வுகள், புதிய வேலையில் தாவும் வாய்ப்புகள் இருக்காது.
தொலை தூர நிறுவனச் சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு நெருக்கடி அதிகமாக இருக்கும். பல மாறுதல்களைப் பார்க்கலாம்.
Tuesday, September 25, 2007
கொடுக்கல் வாங்கல்
பரிமாற்றம் நேருக்கு நேர் நடந்தால் சிக்கல்கள் குறைவு.
- வாங்குபவர் பொருள் அல்லது சேவையை பார்த்து பரிசோதித்த பிறகு பணத்தைக் கொடுத்தால் போதும். பொருளைப் பார்த்து உறுதிப் படுத்திக் கொண்ட பிறகு பணம் கொடுத்தால் போதும் என்ற வசதி.
- பொருள் கண்ணை விட்டு மறையும் முன்னால் பணம் பைக்குள் வந்து விடும் என்ற நிம்மதி விற்பவருக்கு.
விற்பவருக்கு ஆதாயம் அதிகமான முறையில் ஆரம்பித்து வாங்குபவருக்கு அதிக ஆதாயம் இருக்கும் முறைகள் வரை பார்க்கலாம்.
- முழுத் தொகையும் முன்பணமாக அனுப்பிய பிறகு பொருள் அல்லது சேவை அனுப்பி வைக்கப்படும்
பெரிய நிறுவனம் ஒன்றிலிருந்து சந்தைப் போட்டி அதிகம் இல்லாத பொருள் அல்லது சேவை வாங்க ஒரு புது வாடிக்கையாளர் அணுகினால் 'பணத்தைக் கட்டி விட்டுப் பொருளை எடுத்துக் கொண்டு போ' என்று சொல்லி விடலாம்.
இணையத்தின் மூலம் பொருட்கள் வாங்கும் போது கடனட்டை மூலம் பணம் விற்கும் நிறுவனத்தின் கணக்குக்குப் போய்ச் சேர்ந்த பிறகுதான் பொருளை அனுப்பவே ஆரம்பிப்பார்கள்.
முன்பணமாக வரைவோலை வாங்கி அனுப்பினால்தான் புத்தகங்கள் அனுப்பி வைப்பேன் என்று பதிப்பகங்கள் இருக்கின்றன. - 'பொருளைத் தயாரித்து பொதிந்து வண்டியில் ஏற்றி அனுப்பி விடுகிறேன் (லாரியில், ரயிலில், கப்பலில், வானூர்தியில்). போக்குவரத்து நிறுவனம் கொடுத்த சீட்டைக் காண்பித்தால்தான் பொருளை விடுவிக்க முடியும். வங்கி மூலம் அந்தச் சீட்டை அனுப்புகிறோம், காசைக் கொடுத்து சீட்டை பெற்று பொருளை விடுவித்துக் கொள்ளுங்கள்' என்பது அடுத்த நிலை.
இதில் வாங்குபவருக்கு கொஞ்சம் பாதுகாப்பு அதிகம். மூன்றாவது நிறுவனம் ஒன்றின் கையில் பொதியப்பட்ட பொருட்கள் இருக்கின்றன. பணம் கை விட்டுப் போய் விட்டாலும் ஏதோ ஒன்று கிடைக்கத்தான் போகிறது.
தபால் மூலம் பொருளை அனுப்பி விட்டு தபால்காரரிடம் காசைக் கொடுத்து விடுமாறு நடக்கும் விபிபி முறையும் இது போலத்தான். - மேலே சொன்னதில் ஒரு பெரிய ஓட்டை, பொதியுள் என்ன இருக்கிறது என்று தெரிய முடியாமல் இருப்பது. விற்பனையாளர் டிரான்ஸிஸ்டர் வானொலி என்று சொல்லி அனுப்பியதைத் திறந்து பார்த்து உள்ளே செங்கற்கள் இருந்தால் வாங்கியவரின் பணம் போனது போனதாகி விடும்.
அதனால் வாங்குபவர் தனது வங்கி மூலம் உத்தரவாதக் கடிதம் ஒன்றை அளித்துக் குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றினால் பொருளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று விற்பவருக்கு நம்பிக்கை அளிக்கலாம். வங்கியிலிருந்து பணத்தைப் பெறுவதற்கு கடன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் எல்லா ஆவண ஆதாரங்களையும் காட்ட வேண்டும். அப்படிக் காட்டி விட்டால் வாங்குபவரின் வங்கி பணத்தைக் கொடுத்து விடும்.- ஏற்றுமதியாகும் நாட்டில் இருக்கும் ஒரு தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்,
- பொதி விபரங்கள் விளக்கமாக தரப்பட வேண்டும்
- கப்பலில் ஏற்றி விடப்பட்ட பொருள் தாம் எதிர்பார்ப்பது போன்ற தரம் மற்றும் அளவுடன் இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்ளலாம்.
- ஒரு ஆவணம் கப்பலில் அல்லது வானூர்தியில், அல்லது லாரியில் ஏற்றி அனுப்பிய ஆவணம்.
இப்படி விற்பவர் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்றி அவற்றுக்கான ஆவணங்களை காண்பித்து விட்டால் வங்கிப் பணத்தைக் கொடுத்தே தீர வேண்டும்.
'பொருளும் போய்ப் பணமும் வரா விட்டால் என்ன செய்வது? பொருளை அவ்வளவு செலவில் வெளி நாட்டுக்கு அனுப்பிய பிறகு வாங்குபவர் பணத்தைக் கொடுத்துப் பொருளை எடுத்துக் கொள்ளா விட்டால் என்ன செய்வது' போன்ற விற்பவரின் கேள்விகளுக்கும் பொருத்தமான விடை கடன் கடிதங்கள்.
- ஏற்றுமதியாகும் நாட்டில் இருக்கும் ஒரு தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்,
- நான்காவதாக கடன் கடிதத்தில் பொருளை எடுத்த பிறகு குறிப்பிட்ட நாட்கள் கழித்து வங்கி பணம் கொடுப்பதாக உறுதி தரும் முறை. இதில் ஆவணங்களை நிபந்தனைப் படி தயாரித்து சமர்ப்பித்த 30 அல்லது 60 நாட்களுக்குப் பிறகு வாங்கியவரின் வங்கி பணத்தை விற்பனையாளருக்கு கொடுத்து விடுவதாக உறுதி அளிக்கிறது.
- அடுத்ததாக எந்த கடிதமும் இல்லாமல், போக்கு வரத்து நிறுவனத்திடமிருந்து பொருளை விடுவித்துக் கொண்டு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு பணத்தை வாங்கியவரே செலுத்தி விடுதல். இதில் விற்பவருக்கு பணம் கிடைக்காமல் போகும் அபாயம் மிக அதிகம். வாங்குவது பேர் பெற்ற நிறுவனமாக இருந்தாலோ, இரண்டு நிறுவனங்களுக்கிடையே நீண்ட நல்லுறவு நிலவும் போதோ இத்தகைய பணம் கொடுக்கும் முறையைப் பின்பற்றிக் கொள்ளலாம்.
Friday, September 7, 2007
கவிழ்ந்து விடக் கூடாத வானூர்தி
ஒரு நாளைக்கு நூற்றுக் கணக்கான சின்னச் சின்ன முடிவுகள் எடுக்க வேண்டும். எது சரியான திசையில் கொண்டு போகும், எது தொல்லையைக் கொடுக்கும் என்று அலசி ஆராய முழு விபரங்களும் கைவசம் இருக்காது. முடிவு எடுத்து சிறிது காலம் கழித்துதான் அதன் விளைவுகள் தெரிய வரும். அந்த விளைவுகளை சமாளிக்கும் அதே நேரத்தில் மாதா மாதம் சம்பளம் கொடுப்பது, வாடகைக் கொடுப்பது, வாங்கிய பொருளுக்குப் பணம் கொடுப்பது, சரியான தரத்தில் பொருளை விற்பது. அதற்கான பணத்தைக் கொண்டு சேர்ப்பது என்று நிறுத்த முடியாத சக்கரத்தை இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
"இன்றைக்கு உடம்பு சரியில்லை, இரண்டு மாதங்கள் மருத்துவ விடுப்பு எடுத்து உடம்பைத் தேத்திக் கொண்டு வேலைக்குப் போகலாம்" என்ற சுகம் தொழில் நடத்துவதில் கிடையாது. வேலை பார்க்கும் போது நாம் அப்படி விடுப்பு எடுத்தால் வேறு யார் நம் வேலையைப் பார்க்க வேண்டும் என்று கவலைப் படுவதற்கு அமைப்புகள் இருக்கும், அந்த அமைப்புகளின் இறுதிப் பொறுப்பாளி ஒரு தனிமனிதர்தான்.
எனக்குத் தெரிந்த ஒரு நிறுவன உரிமையாளருக்கு நுரையீரல் புற்று நோய் வந்து விட்டது. அது வரை மாதத்துக்கு ஒரு கோடி ரூபாய் வரை வணிகம் செய்து கொண்டிருந்த அவர் அடுத்த ஆறு மாதங்களில் எல்லா நடவடிக்கைகளையும் குறைத்து, வேலை பார்த்தவர்களுக்கு வேறு இடம் தேடிக் கொடுத்து, சரக்குகளை விற்றுத் தீர்த்து, வர வேண்டிய பணத்தை வசூலித்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து நிறுவனத்தை மூடிக் கொண்டு விட்டார். நல்ல கட்டுப்பாட்டில் ஓடிக் கொண்டிருக்கும் வண்டியைத்தான் அப்படி வேகம் குறைக்கவோ, ஒழுங்காக நிறுத்தவோ முடியும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளர்ந்து விட்ட நிறுவனத்தை மூடுவது கூட சிக்கலாக இருக்கும். அதில் பலருக்கு பண இழப்பும் ஏற்படும்.
அத்தனை பேரை ஒன்று திரட்டி குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையை வழங்க ஆரம்பித்த பிறகு அந்த உந்தம் குறைந்து விடாமல் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். இதுவும் ஆகாய விமானம் பறப்பது போலத்தான்.
விமானம் மேலே கிளம்ப மேல் நோக்கிய உந்தம் வேண்டும். அதை உருவாக்க தரையிலேயே வேகம் பிடித்து காற்றழுத்த வேறுபாட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட வேகத்துக்கு மேல்தான் காற்றழுத்த வேறுபாடு விமானத்தின் எடையை தூக்க மேலே எழும்பவே முடியும். அதன் பிறகு அந்த வேகம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இடையில் ஏற்படும் மாற்றங்கள் எல்லாவற்றையும் சமாளித்து சரியான முடிவுகளை எடுத்து வேகத்தை பராமரிக்க வேண்டும்.
ஏதாவது தவறு செய்து கட்டுப்பாட்டை இழந்து விட்டால் பயணிக்கும் எல்லோருடனும் விமானம் கீழே விழ வேண்டியதுதான். தேவைப்படும் போது முறையாகக் கீழே இறங்குவதற்கான ஏற்பாடுகளையும் வைத்திருக்க வேண்டும்.
Thursday, September 6, 2007
சொந்தத் தொழில் செய்வதில் என்ன சிறப்பு?
'சின்ன வயசில படிக்கும் போது எல்லாரும் சேர்ந்து சீட்டாடிக் கொண்டிருக்கும் போது ஒருத்தன் டாக்டர் ஆவேண்ணான், இன்னொருத்தன் எஞ்சினீயர்ணான். எம்முறை வந்ததும் நான் உங்களை எல்லாம் வேலைக்கு வச்சுப்பேன்டான்னு சொன்னேன்'
'இப்ப யோசிக்கிறது போல காரணங்கள் எல்லாம் யோசிச்சது இல்லை. மாத்திச் சொல்லணும்னு கூடச் சொல்லியிருக்கலாம், என்னவோ அப்ப இருந்தே அப்படித்தேன் புத்தி போனது'
அவர்கள் வணிகக் குடும்பம். அவர் அப்பா தொழில் செய்து கொண்டிருந்தவர். அதனால் அவருக்கு அது இயல்பான மனப்போக்குதான்.
'சொந்தமா தொழில் செஞ்சா விருப்பப்படி நம்ம திறமை எல்லாம் பயன்படுத்தலாம். இன்னொரு இடத்தில வேலை பார்த்தா அவங்க கொடுக்கிற வேலையத்தானச் செய்ய முடியும்' என்று சொல்லி முடித்துக் கொண்டார். இந்தக் கேள்வியை மனதில் அலசி அடுத்த முறை பார்க்கும் போது ஏதாவது வடிவில் பதில் கொடுத்து விடுவார்.
முன்பொரு தடவை. 'ஒருத்தன் திடீரென்னு நாலு நாள் வேலைக்கு வரல. வந்த பிறகு ஒடம்பு சரியில்லாம போயிட்டு சார்னு சொல்றான். ஒரு போனாவது போட்டு தகவல் சொல்லியிருக்கக் கூடாதான்னு கேட்டால் ஏதோ சாக்கு போக்கு. அவன்ட்ட கேட்டேன்...'
'ரெண்டு நாள் முன்னால எனக்குக் காய்ச்சல். அப்படியே இங்க வந்து நாற்காலிலயே உட்கார்ந்து கையில தலையச் சாய்ச்சு இருப்பதைப் பார்த்து ஒவ்வொருத்தரா வந்து ஒன்னும் பிரச்சனை இல்லையே என்று கேட்டுட்டுப் போனாங்க. நான் அவ்வளவு முடியாமலும் இங்க வந்து செய்ய வேண்டிய வேலைகளைப் பார்த்தேன். நீ நாலு நாள் சொல்லாம கொள்ளாம வராமல் இருந்தே, ஏன்னு சொல்லு'
'ஏன்னா, மாசம் பொறந்தா உங்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்கணும்னு பொறுப்பு எனக்கு இருக்கு. உனக்குத் தெரியும் நாலு நாள் லீவு எடுத்தாலும் ஒண்ணாம் தேதி கையில் சம்பளம் வந்துரும். நாலு நாளைக்கு காசைப் பிடித்தாலும், உடம்பு முடியாமத் தானே வராம இருந்தேன்னு சொன்னால் அதையும் கொடுத்து விடுவோம்னு ஒரு நம்பிக்கையும் உண்டு.'
'நான் வேலைக்கு வந்து நடக்க வேண்டியதைப் பார்த்தால்தான் காசு வந்து ஒண்ணாம் தேதி சம்பளம் போட முடியும்னு எனக்குத் தெரியும். அதான் நான் காய்ச்சல் அடிச்சாலும் இங்க வந்து உட்கார்ந்துக்கறேன். உனக்கு நாலு நாள் சொகுசு கேக்குது'
சின்னச் சின்ன நிகழ்வுகளில் உண்மைகளைச் சொல்லி விடும் திறமை அவருக்கு.
இப்படி செய்வது பலன் தருகிறது
இதனால் பல மாறுதல்கள் ஏற்பட்டன. நமது நி.வ.தி மென்பொருள் உருவாக்கத்தில் என்னென்ன திட்டமிட்டிருக்கிறோமோ, என்னென்ன நுணுக்கங்கள் உருவாக்கியிருக்கிறோமோ எல்லாவற்றையும் வாடிக்கையாளர் பலன் பெறும் விதத்தில் விளக்க முயற்சித்தோம். அப்படி முயற்சிக்கும் போது அவர்கள் பார்வையில் அதை மேம்படுத்த சிறு சிறு முயற்சிகளிலேயே பெரும் மேம்பாடுகளை காட்ட முடியும் என்று தெரிந்தது.
இதுதான் எங்க மென் பொருள் என்று கொடுத்து விட்டு, அவர்கள் கையில் பயன்பாட்டை விட்டு விடும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவில் பயன்படுத்துகிறார்கள். பயன்பாடு மற்றும் அடுத்தக் கட்ட உறவைத் தீர்மானிப்பது வாடிக்கையாளர் நிறுவனத்தின் முடிவில் இருந்து விட்டிருந்தது. அவர்களுக்கு மென்பொருளின் பயன்பாடு முழுமையாகப் புரியாமல் இருந்ததால் அதன் பலன் முழுமையாகக் கிடைக்காமல் போனது. அடுத்த விற்பனைக்கு வாய்ப்புகள் மூடிப் போய் புதிய வாடிக்கையாளர்களைத் தேடி ஓட வேண்டியிருந்தது.
புதிதாக ஒரு வாடிக்கையாளரைத் தேடிப் பிடிப்பது என்பது ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளரிடம் அடுத்த பணியை பெறுவதை விட பல மடங்கு கடினமானது. நம்மைப் பற்றி, நம் நிறுவனத்தைப் பற்றி, நமது பொருள்/சேவையைப் பற்றித் தெரிந்து கொள்ளவே அவர்களுக்குப் பல நாட்கள் பிடிக்கும்.
ஏற்கனவே உறவு இருக்கும் வாடிக்கையாளரிடம் விற்பனை முயற்சியில் பெரும்பகுதி முடிந்திருக்கிறது. அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நமது சேவையை மேம்படுத்தி இன்னும் பலன்களைக் காட்டி விட்டால் அடுத்த வாய்ப்பு தன்னால் வந்து விடும். 'இன்ன பிரிவில் இவ்வளவு பலன் வந்தது அல்லவா, அதைப் போல அல்லது இன்னும் சிறப்பாக அடுத்த பிரிவில் செய்யலாம்' என்று சொன்னால் சரி செய் என்று சொல்லி விடப் போகிறார்கள்.
புது விற்பனையின் போது நமது உறுதிமொழிகளை நம்பி வாங்குகிறார்கள். மறு விற்பனை என்பது நமது உறுதிமொழிகளின் நம்பகத்தன்மையை பார்த்த பிறகு வாங்குகிறார்கள்.
நீண்ட காலம் நிலைத்து வளர விரும்பும் நிறுவனம் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொண்டு அவர்களுக்கே மேலும் மேலும் புதிதாக விற்கும் உத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
நிறுவனத்தின் வருவாயில் 80% தற்போதைய வாடிக்கையாளர்களிடமிருந்தும், 20% புதிய வாடிக்கையாளர்களிடமிருந்து வர வேண்டும் என்று வரையறுத்துக் கொண்டோம்.
ஒரு கட்டத்தில் 'புதிய விற்பனை முயற்சிகளே வேண்டாம், விற்றவர்களிடம் நல்ல பேர் வாங்கினால் புதிய வாடிக்கையாளர்கள் தானாக கேள்விப்பட்டு நம் கதவைத் தட்டுவார்கள்' என்று கூடச் சொல்லிக் கொண்டிருந்தேன். புதிய வாடிக்கையாளர்களைத் தேடிப் போவதும் பல காரணங்களுக்காக தேவையான ஒன்று.
- புதிய வாடிக்கையாளர்கள் புதிய தேவைகளுடன் இருப்பதால் மென்பொருள் மேன்மையடையும்.
- அதிகமான இடத்தில் நமது மென்பொருள் பயன்படுத்தப்பட்டால் நமது வாடிக்கையாளர்களுக்கு ஆதாயம் அதிகம்
- போட்டியாளர்கள் பல இடங்களில் சேவை அளித்துக் கற்றுக் கொண்டு விட, நாம் பின்தங்கிப் போய் இப்போது இருக்கும் வாடிக்கையாளர்களையும் இழக்க நேரிடக் கூடாது
'உங்களுக்கு நாங்கள் ஏற்படுத்தித் தரும் சேமிப்பில், புதிதாக ஈட்டித் தரும் ஆதாயத்தில் ஒரு பகுதியை எங்களுக்கு ஊதியமாகத் தாருங்கள் என்று கேட்கலாம்' என்று சொன்னதும் எனக்கு விருப்பமில்லை. 'அது பேராசை இல்லையா, நமக்கு என்ன செலவாகிறதோ அதை மட்டும் வாங்கிக் கொண்டு பலன்களை அவர்களை அனுபவிக்க விடுவதுதானே நியாயம்' என்று விவாதித்துக் கொண்டிருந்தேன்.
அப்படி ஆதாயத்தில் பங்கு என்பது நடைமுறையில் பொருத்தமான ஒன்று:
- வாடிக்கையாளர் பெரும் தொகையை முன்கூட்டியே வாக்குக் கொடுக்கத் தேவையில்லை. பலன் 1 கிடைத்தால் இவர்களுக்குப் பங்கு கொடுக்கப் போகிறோம் என்றால் யாருக்கும் மறுப்பு இருக்கப் போவதில்லை.
- அப்படி ஆதாயம் வருவதற்குத் தேவையான முயற்சிகள் அனைத்தையும் தடையின்றி பயன்படுத்தவும் நமக்கு வழி கிடைத்து விடுகிறது. குறிப்பிட்ட தொகை என்று பேசி விட்டால் அந்தத் தொகைக்கு மேல் முயற்சி செய்ய முடியாது. அதற்குப் பிறகு மீண்டும் பேரம் பேச ஆரம்பிக்க வேண்டியிருக்கும். '10 லட்சம் ரூபாய் உங்களுக்கு ஆதாயம் என்றால் எங்களுக்கு 2 லட்சம்' என்று பேசி விட்டால், தலை கீழாக நின்றாவது வாடிக்கையாளருக்கு ஆதாயத்தை அதிகரிக்க முயற்சி செய்வோம்.
- வாடிக்கையாளர்களிடம் தேவையில்லாத விவாதங்கள் தவிர்க்கப்பட்டு விடும். எந்த ஒரு வேலையையும் அது அவர்களுக்கு சேமிப்பு கொடுக்க உதவுமா என்று பார்த்து விட்டுச் செய்து விடலாம். ஓரிரு மாதங்களில் விளைவு தெளிவாகத் தெரிந்த பிறகு அதை நிரூபித்து காசோலையை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.
Tuesday, September 4, 2007
எப்படி விற்பது?
நம்ம ஆள் வாடிக்கையாளர் வீட்டுக்குப் போய், 'எப்படித் தரையை, கூரையை, சுவர்களை தூய்மை செய்ய வேண்டும். தூய்மை செய்த பிறகு தூசியை எப்படி பையிலிருந்து வெளியேற்ற வேண்டும், எவ்வளவு நேரம் தொடர்ந்து ஓட்டலாம்' என்று விளக்கிச் சொல்ல வேண்டும். அதில் புதிதாக ஏதாவது நுட்பம் இருந்தால் அதையும் விளக்கமாகச் சொல்லி விட வேண்டும்.
சொல்லா விட்டால் அப்படி ஒரு வசதி இருப்பது தெரியாமல் அதைப் பயன்படுத்தாமலேயே இருந்து விடுவார்கள். பணமும் நேரமும் செலவழித்து ஒரு நுட்பத்தை உருவாக்கிச் சேர்த்திருக்கிறோம். விற்கும் விலையில் அந்த செலவும் அடங்கி இருக்கிறது. வாடிக்கையாளர் அந்த நுட்பத்துக்கான பலனை அடையா விட்டால் கொடுத்த காசுக்கான பலன் அவருக்குக் கிடைக்காமல் போய் அடுத்த முறை நம்மிடம் வர மாட்டார்.
நாங்கள் ஆரம்பத்தில் மென்பொருளுக்கு இன்ன விலை என்று பேசி விட்டு, நிறுவுதல், மாற்றங்கள் செய்தல், பயிற்சி அளித்தல், தேவையான அறிக்கைகளை எடுத்தல் போன்றவற்றுக்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று பொறுப்பேற்றுக் கொள்வோம்.
எங்களைப் பொறுத்தவரை ஏற்கனவே மென்பொருள் செய்து வைத்திருக்கிறோம், வாடிக்கையாளர் இடத்துக்குப் போய் வேலை செய்யும் ஒவ்வொரு நாளுக்கும் செலவாகிக் கொண்டே இருக்கிறது. அந்தக் காசு வர வேண்டும். மென் பொருளை நிறுவியதும் இவ்வளவு காசு, ஒரு மாதத்துக்குப் பிறகு இவ்வளவு காசு என்று அட்டவணை அமைத்துக் கொண்டோம்.
வாடிக்கையாளருக்கோ மென்பொருளை அவர்கள் பயன்படுத்த ஆரம்பித்து தினசரி வேலை விபரங்களை சேகரித்து அறிக்கைகள் வர ஆரம்பித்த பிறகுதான் பயன்பாடு தெரிகிறது. அதற்கு முன்பு காசு கொடுக்கத் தயங்குவார்கள். அப்படியே கொடுத்தாலும், பேசிய முழுத் தொகையை கொடுக்கும் முன்பு பயன்பாடு அவர்கள் எதிர்பார்த்தபடி கிடைத்து விட்டதா என்று பார்ப்பார்கள்.
நாங்கள் விற்பதாக நினைத்துக் கொண்டிருந்தது மென்பொருள். அவர்கள் வாங்குவதாக நினைத்துக் கொண்டிருந்தது அதன் மூலம் கிடைக்கும் பலன்கள். இரண்டுக்கும் இடையேயான இடைவெளியில் பல வாக்குவாதங்கள், கருத்து பேதங்கள்.
அப்படி நோக்கங்கள் தெளிவாக இல்லாததால் எங்களது முயற்சிகள் புதிது புதிதாக வாடிக்கையாளர்களைத் தேடுவதில் இருந்தன. ஏற்கனவே வாய்ப்பளித்த இடங்களில் சீக்கிரம் மென்பொருளை நிறுவிக் கொடுத்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்று முயல்வோம். இதனால் விற்பனையின் மதிப்பும் அதிகமாக முடியாமல் தவித்தோம்.
ஒரு பொருளின் விலைக்கு இரண்டு பக்கங்கள். ஒன்று வாங்குபவருக்குக் கிடைக்கும் பலனின் அளவு, இரண்டாவது விற்பவருக்கு ஆகும் முயற்சியின் அல்லது செலவின் அளவு. விலை பலனை விடக் குறைவாகவும், முயற்சியை விட அதிகமாகவும் இருக்க வேண்டும். இல்லை என்றால் வாங்குபவர் அல்லது விற்பவர் பின்வாங்கி விடுவார்.
இரண்டுமே ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. அதிக விலை கொடுக்கும் வாடிக்கையாளருக்கு கூடுதல் செலவு செய்து அதிக பலனைத் தேடிக் கொடுக்க முடியும். அந்த வாடிக்கையாளரும் கூட இவ்வளவு காசு கொடுத்து விட்டோமே, இதை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று தேடித் தேடி, விற்பனையாளரை துரத்தி துரத்தி ஆகக் கூடுதல் பலனை பெற முயற்சிப்பார்.
Monday, September 3, 2007
எதை விற்கிறோம்?
ஒரு பொருளை வாங்கும் போது அதன் பயன்பாட்டைத்தான் வாங்குகிறார்கள்.
- சாப்பாடு வாங்கினால், அதைச் சாப்பிடும் போது கிடைக்கும் நிறைவும், உடலுக்கு கிடைக்கும் ஆற்றலையும்தான் வாங்குகிறோம்.
- தொலைக்காட்சி வாங்கவில்லை. அதில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் திறனைத்தான் வாங்குகிறோம்.
- சலவை எந்திரம் வாங்கவில்லை, சலவைகளைத்தான் வாங்குகிறோம்
யுரேகா போர்ப்ஸ் என்ற நிறுவனம், துணி துவைக்கும் எந்திரம், வெற்றிடக் கருவி போன்ற புதிய கருவிகளை விற்கும் போது வாங்கியவர்களின் வீட்டுக்கே ஆள் அனுப்பி அவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொடுத்து விடுகிறார்கள். பொருளை வாங்கிக் கொண்டு போய் வீட்டில் சரியாக வேலை செய்யா விட்டால் திரும்பி எடுத்துக் கொள்கிறார்கள்.
உலர் அரைவை எந்திரத்துடன் பயன்படுத்தும் கையேடு ஒன்று வரும். நுண்ணலை அடுப்பில் எப்படி சமைப்பது, என்ன சமைப்பது என்று விளக்கங்களையும் சேர்த்து விற்காததால் நம்ம ஊரில் அது பிரபலமாகமலேயே இருந்தது.
மென்பொருட்கள் மிக அண்மைக் காலத்தில் நம் வாழ்க்கையில் நுழைந்தவை. கணக்குப் போட மென்பொருள், கடிதம் எழுத மென்பொருள், இணையத்தில் இணைய மென்பொருள் என்று வாங்குபவர் தாமே உருவகித்து அதன் பலனைப் பெற்றுக் கொள்கிறார். 100 ரூபாய்க்கு ஒரு குறுவட்டு கடையில் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம், அதில் என்னென்ன இருக்கிறது என்று எப்படித் தெரியும். எதற்காக அந்த 100 ரூபாயைச் செலவழிக்கிறோம்.
'15000 ரூபாய்க்கு மைக்ரோசாப்டு ஆபிஸ் வாங்கி வாரத்துக்கு நான்கு கடிதம் எழுத மட்டும் பயன்படுத்தினால் அது உங்கள் விருப்பம். நான் அப்படி ஆயிரக்கணக்கான பேருக்கு விற்று பணம் சம்பாதித்துக் கொள்கிறேன் ' என்று பரவலாக விற்பது.
'உங்களைப் போன்று வாங்கிய இன்னொருவர் ஆபிசு 2007ல் இருக்கும் எல்லா நுணுக்கங்களையும் பயன்படுத்தக் கற்றுக் கொள்கிறார் என்றால் அது அவர் விருப்பம். '
இப்போது 2 ஆண்டுகள் கழித்து மைக்ரோசாப்டு ஆபிசு 2010 வெளி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் விலை 40000 ரூபாய் என்றால் மேலே சொன்ன இரண்டு பேரில் யார் புதிய பதிப்பை வாங்க விரும்புவார்?
வாரத்துக்கு நாலு கடிதம் அடிக்க இருப்பதே போதும் இன்னும் 40000 ஏன் செலவு என்று முதலாமவர் இருந்து விடுவார். இன்னும் அதிகமான வசதிகளைத் தேடி இரண்டாமவர் வாங்க முன் வருவார்.
Thursday, July 19, 2007
சில குறிப்புகள் - மென்பொருள் துறையில் தொழில் வேலை வாய்ப்புகள்
'அப்படி என்னதான் செய்யறீங்க? இத்தனை ஆயிரம் கோடி ஏற்றுமதி என்கிறாங்க, இத்தனை லட்சம் படிச்ச பசங்க வேலை பார்க்கிறாங்க. இன்னும் பல ஆண்டுகளுக்கு இது வளர்ந்து கொண்டே போகும் என்கிறாங்க. மென் பொருள்னா என்னங்க?'
'பொதுவா ஒரு பொருளை, சேவையை உருவாக்கி ஒருத்தருக்குக் கொடுத்து காசு சம்பாதிக்கிறோம். மென்பொருள் துறையில் என்ன நடக்குது, இவ்வளவு வளர்ச்சி என்று புரியவில்லை'
என்று நண்பர் ஒருவர் கேட்டார். வேதித் தொழில் நுட்பம் படித்து வளைகுடா நாடு ஒன்றில் பெரிய வேலையில் இருக்கிறார்.
நாமெல்லாம் கையால், விலங்குகளின்் ஆற்றலால் செய்து வந்த வேலைகளை இயந்திரங்களால் செய்ய ஆரம்பித்தது தொழில் புரட்சி போல, மனித மூளையில் நடந்து வந்த வேலைகளை கணினிகளால் செய்து கொள்வது தகவல் தொழில் நுட்பப் புரட்சி. நாம் இப்போது இருப்பது அந்தப் புரட்சியின் ஆரம்பக் கட்டங்களில்.
- எங்கெல்லாம் திரும்பத் திரும்ப நடக்கும் கணக்குகள் போட வேண்டுமோ,
- எங்கெல்லாம் தகவல்களைத் திரட்டி வைத்துக் கொண்டு பின்னர் பயன்படுத்த வேண்டியிருக்கிறதோ,
- எங்கெல்லாம் புதிய கருவிகளில் சிந்திக்கும் வேலை செய்ய வடிவமைக்க வேண்டுமோ
அதுக்கு ஏன் இவ்வளவு மதிப்பு?
ஒரு நிறுவன மேலாண்மையை எடுத்துக்குவோம். சின்னக் கடை என்று வைத்துக் கொள்வோம். மொத்தமாக நொறுக்குத் தீனிகள் வாங்கி சின்ன அளவில் பொதிந்து கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி. வேலை செய்ய ஆறு பேர், தின்பண்டங்களை வழங்குபவர்கள் 10-15 இடங்கள், வாடிக்கையாளராக சில்லறை விற்பனைக் கடைகளுக்கு வினியோகிக்கும் பணி செய்பவர்கள் 10-12 பேர்.
இந்தத் தொழிலில் கையாள வேண்டிய விபரங்கள்,
- யாரிடமிருந்து என்ன விலைக்கு, எந்தப் பொருளை வாங்குகிறோம்,
- அவருக்குப் பணம் கொடுக்க வேண்டிய கொடுத்த தகவல்கள்,
- வேலை பார்ப்பவர்கள் தினமும் வந்த விபரம், விடுமுறை எடுத்த விபரம்,
- போட்ட பொதிகளின் எண்ணிக்கை அளவு வாரியாக,
- யார் எத்தனை பொதிகள் எடுத்துச் சென்றார்கள், யார் எவ்வளவு பணம் தர வேண்டும்,
- கைவசம் விற்காமல் சரக்கு எவ்வளவு மீதி இருக்கிறது
- எந்த விற்பனையாளரிடமிருந்து வாங்கிய பொருளில் குறைபாடுகள் தென்பட்டன,
- எந்த பொருளுக்கு விற்பனை அதிகரிக்கிறது, எதற்குக் குறைகிறது.
- புதிதாக என்ன விற்க ஆரம்பிக்க வேண்டும்
கணினி காலத்துக்கு முன்பு இத்தகைய தொழிலில் உரிமையாளர் ஒரு சின்ன நோட்டுப் புத்தகத்தில் விபரங்களைத் தனக்குப் புரியும் படிக் குறித்து வைத்துக் கொள்ளலாம், பணம் வர வேண்டிய விபரம், கையிருப்பு இரண்டையும் பார்த்துக் கொண்டால் போதுமானது.
இன்னும் நுணுக்கமாக தகவல் சேகரிக்க, குறித்து வைக்க அதை அலசிப் பார்க்க ஆரம்பித்தால் அவருக்கு அதற்குத்தான் நேரம் சரியாக இருக்கும் அல்லது புதிதாக ஆள் போட வேண்டும். பெரிய நிறுவனங்களில் கணினிகள் வரும் முன்னரே இது போன்று தகவல் திரட்டுவதற்காக சிலரை வைத்திருப்பார்கள்.
ஆனாலும் மனித மூளையைப் பயன்படுத்தி சில வேலைகளை செய்வதில் அளவு இருக்கிறது. பெருவாரியான தகவல்களை சேமித்த வைத்தல், சிக்கலான கணக்குகளைப் போடுதல் போன்ற பணிகளுக்கு நமது மூளை அவ்வளவு திறமுடையது இல்லை. அந்த வேலைகளுக்கு மின்னணுக் கருவிகளைப் பயன்படுத்துவதுதான் கணினித் துறை.
நீராவி எந்திரத்தை மனித ஆற்றலுக்கும், கால்நடைகளின் உழைப்புக்கும் மாற்றாகப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு அது வரை முடியாத பலப் பல சாத்தியங்கள் தோன்றின. தரையில் வேகமாகப் போக இயந்திரங்களை பயன்படுத்தும் போது, கிடைத்த கூடுதல் வேகத்தைப் பயன்படுத்தி பறக்கும் விமானங்களை உருவாக்க முடிந்தது. இதே போல நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான சிறிதும் பெரிதுமான கண்டுபிடிப்புகள் தோன்றி மனித வாழ்க்கையை மாற்றி அமைத்தன.
இவ்வளவு இருந்தாலும் 'இயந்திரம் என்ன வேலை செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும்' என்று திட்டமிட்டு, தீர்மானித்து அதை இயக்குவது மனிதக் கைகளால்தான் நடந்தது.
அதே போல நமது மூளையால், முடிந்த வரை செய்து வந்த வேலையைக் கணினிகளுக்கு தள்ளி விட்டு வேகமாக துல்லியமாக முடிக்கும் வசதி உருவானவுடன் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் சாத்தியமாகின்றன.
எவ்வளவுதான் நடந்தாலும் கணினிகளைப் பயன்படுத்துவது, வடிவமைப்பது, இயக்குவது மனிதர்களாகத்தான் இருக்கிறது.
இப்படியாக வழக்கமான தொழில்களின் தகவல் திரட்டல், அலசுதல், பழைய கருவிகளை இயக்குதல், புதிய கண்டுபிடிப்புகளுக்கு உயிர் கொடுத்தல் என்று கணினிகள் பயன்படுத்தப்படும் எல்லா இடங்களிலும் மென்பொருட்கள் எனப்படும் கணினியின் உயிர்ப்பொருட்கள் பயன்படுகின்றன.
இத்தகைய மாற்றங்களில் பெரும் பகுதி அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில்தான் நடக்கின்றன.
நம்ம ஊரில் ரயில்வே துறையில் பயண முன்பதிவு, வங்கிகளில் கணினி மயமாக்கம், தொலை தொடர்பு நிறுவனங்களில் கணினி மயமாக்கம் என்று இருப்பது போல ஒவ்வொரு துறையிலும் கணினிகளைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்ட முன்னேறிய நாடுகளில்தான் மென்பொருள் தேவை பெரிய அளவில் இருக்கிறது.
- மருத்துவர் ஒருவர் தான் பார்த்த நோயாளியைப் பற்றிய விபரங்களைச் சேமிக்க கணினிகள் பயன்படுத்தப் படுகின்றன.
- தொழில் நிறுவனங்கள் தமது வாங்கல், விற்றல், சரக்கு கையிருப்பு, ஊழியர்களை கையாளுதல் போன்றவற்றுக்குக் கணினிப் பயன்பாடுகளைப் பயன்படுத்துகின்றன.
- புதிது புதிதாகக் கண்டுபிடிப்புகள் தோன்றி அவற்றை இயக்க மென்பொருட்கள் தேவைப் படுகின்றன.
மென் பொருள் பயன்படுத்துவது, அதன் மூலம் வாழ்க்கைத் தரம் உயர்வது, புதிய கண்டுபிடிப்புகள் நடப்பது எல்லாம் வேறு இடங்களில்தான். அதனால் அங்கு இருக்கும் வல்லுநர்கள் என்ன மென்பொருள் தேவை, அது எப்படி வடிவமைக்கப்பட வேண்டும், அதற்கு என்ன செலவு செய்யலாம் என்று திட்டமிட்டு அதை உருவாக்கும், பராமரிக்கும் பணியை நம் பக்கம் தள்ளி விடுகிறார்கள். அதைத்தான் நமது இளைஞர்கள் மாய்ந்து மாய்ந்து செய்கிறோம்.
இந்த நமது பணிக்கு ஆண்டுக்கு 50,000 கோடி வருமானம் கிடைக்கிறது என்றால் இந்தப் பணியைப் பயன்படுத்தும் சமூகங்களுக்கு அதை விட இரண்டு மடங்காவது நன்மை கிடைக்கும் அல்லவா?
மென்பொருள் என்பது ஒரு வீடு கட்டவது போல என்று வைத்துக் கொள்ளலாம்.
ஒருவருக்கு வசிக்க வீடு வேண்டும். அந்தக் குடும்பத்தில் எத்தனை பேர், யார் யார் என்ன செய்கிறார்கள், எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும், என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்று அலசி ஆராய்வது முதல் படி.
இரண்டாவதாக இந்தத் தேவையை எப்படி செயல் படுத்த முடியும் என்று படம் வரைவது, தொழில் நுட்பச் சாத்தியங்கள், செலவுகள் முதலியவற்றைக் கருத்தில் கொண்டு திட்டம் ஒன்றை உருவாக்குவது இரண்டாவது படி.
அதை வாடிக்கையாளர் ஏற்றுக் கொண்டால், திட்டத்தை எப்படிச் செயல்படுத்துவது என்று நடைமுறை வேலைகளைப் பார்ப்பது மூன்றாவது படி.
இந்த மூன்றாவது படி வேலைகளைத்தான் வெளிநாடுகளுக்கு மென்பொருள் சேவையை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் செய்கின்றன. ஜாவா, டாட் நெட் என்ற படித்து விட்டு வேலைக்குச் சேர்ந்தால் செய்யும் பணி கட்டிடம் கட்டும் வேலையில் செங்கல் அடுக்குவது, சாந்து குழைப்பது போன்ற வேலைகள்தான்.
அடுத்த படியில் உருவாக்கிய மென்பொருளைப் பராமரித்தல், பயன்படுத்தும் போது ஏற்படும் குறைகளை நிவர்த்தித்தல், பயனர் புதிதாகக் கேட்கும் மேம்பாடுகளை உருவாக்குதல் என்று முடிவில்லாமல் பணிகள் உள்ளன. வீட்டை தினமும் கூட்டிப் பெருக்க வைக்க நேரமும், ஆட்களும் இல்லாத நாடுகள் தகவல் தொழில் நுட்பப் புரட்சியின் சாத்தியங்களால் அந்த வேலைகளை வெளிநாடுகளில் செய்து வாங்கிக் கொள்ள முடிகிறது.
வேலை வாய்ப்பு என்று பரவலாகக் கிடைப்பது மேலே விளக்கியது போன்ற குறைந்த மதிப்பிலான பணிகள்தாம். அதனால் அவற்றைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. மென்பொருள் துறை இந்தியாவில் வளர்ந்ததால் பல்லாயிரக் கணக்கான பேருக்கு முன்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வருமானம் கிடைக்கிறது. அந்தப் பணம் வரியாக அரசாங்கத்துக்குப் போய் நலப் பணிகளில் பயன்படுகிறது. மென்பொருள் துறையில் பணிபுரிபவர்களின் குடும்பங்களை தளைக்கின்றன. தொழில் வாய்ப்புகள் பெருகுகின்றன.
ஆனால், இவை எல்லாவற்றையும் விடப் பல மடங்கு மதிப்புள்ள சாத்தியங்கள் மென்பொருள் துறையில் உள்ளன. கணினிகளை நம் ஊர் பணிகளுக்கு செயல்படுத்தும் பெரும் பணி காத்திருக்கிறது. அதைச் செய்ய பெருமளவிலான முயற்சிகள் நடப்பதில்லை. பெரிய நிறுவனங்கள் கூட அமெரிக்க ஐரோப்பிய பணிகளை மட்டுமே எடுப்பது என்று கொள்கை முடிவுடன் இயங்குகின்றன.
வேலை வாய்ப்பு என்று சொன்னால், அத்தகைய நிறுவனங்களில் திறமையான, படித்த, பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலைக்குப் பஞ்சமே இல்லை.
ஆனால் பெரும் புதையல் காத்திருப்பது உள்ளூர் பொருளாதாரத்தில். பேருந்தில் போகும் போது சீட்டு கொடுத்த பிறகு ஒரு சின்ன அட்டையில் கணக்குகளை எழுதிக் கொள்கிறார் நடத்துனர், பெங்களூரூவில் இருப்பது போல ஒரு குட்டிக் கணினியைக் கையில் வைத்துக் கொண்டு, அதில் விபரங்களை ஒத்தி சீட்டு அச்செடுத்துக் கொடுத்தால் விபரங்கள் தானாகவே பதிவாகி பணி முடிந்ததும் மையக் கணினியில் ஒப்படைத்து விடலாம். நடத்துனரின் பணி பல மடங்கு எளிதாகி விடும்.
எந்த தடத்தில் எந்த நேரத்தில் எந்த பருவத்தில் கூட்டம் அதிகமாக வருகிறது என்று ஆராய்ந்து பார்க்க, அதிக முயற்சி இல்லாமல், கணினியில் பதிக்கப்பட்ட விபரங்களைப் பயன்படுத்தி அறிக்கை உருவாக்கிக் கொள்ளலாம். அதற்கு சில நிமிடங்கள்தான் பிடிக்கும். அதைப் பொறுத்து முடிவுகளை எடுத்து பயணிகளுக்கு சேவையை மேம்படுத்தலாம்.
வளர்ந்த நாடுகளில் இந்த வேலைகளைச் செய்ய போதுமான பணியாளர்கள் கிடைக்காததால் அவை இந்தியா போன்ற நாடுகளில் செய்து பெறப்படுகின்றன.
Friday, July 13, 2007
நாணய மாற்று வீதமும் ஏற்றுமதியும்
இந்த நெரிசலில் பல நிறுவனங்கள் நொடித்துப் போக வாய்ப்பு இருக்கிறது. என்னதான் நல்ல பொருள்/சேவை வழங்கினாலும், எதிர்கால சாத்தியங்கள் இருந்தாலும் நிகழ்காலத்தில் பணப் புழக்கம் நின்று போனால் உயிர் நின்று விடும். உடலில் ரத்த ஓட்டம் போல அது. வர வேண்டிய பணம் என்று எவ்வளவு இருந்தாலும் கையில் இருக்கும் பணமாக மாறாத வரை பலனில்லை.
பெரிய நிறுவனங்கள் இந்த மாற்று வீதக் குறைவிலிருந்து தப்பிக்க ஏற்பாடுகள் செய்திருந்ததால் இப்போதைய விளைவுகளைத் தவிர்த்தாலும். அடுத்த பருவத்துக்கான கணக்கிடுதலில் உதைக்கப் போகிறது.
உற்பத்தித் துறையைப் பொறுத்த வரை வலுவான ரூபாய் ஆறு மாத நோக்கில் ஏற்றுமதி திறனை அதிகரிக்கத்தான் செய்யும்.
- இறக்குமதி இடுபொருட்களின் விலை குறைதல்,
- பொதுவான உள்நாட்டு விலை வாசி குறைதல்,
- வாடிக்கையாளரிடம் விலை மாற்றம் கோருதல்
1990களில் ரூபாயின் மதிப்பு குறையும் போது ஒவ்வொரு முறையும் இது ஏற்றுமதி வணிகத்துக்கு நல்லது என்று சொல்லிக் கொண்டாலும். அந்தத் தாக்கம் சில மாதங்களிலேயே சமன் படுத்தப்பட்டு ஏற்றுமதி வியாபாரமும் தத்தளிக்கத்தான் செய்தது. மலிவான விலை என்ற ஒரே வலிமையில் செய்யும் தொழில்கள் மறைந்தாலும், ஒட்டு மொத்தமான திறமையுடன் செயல்படும் உற்பத்தித் தொழில்கள் வளப்பட வலிமையான நாணயம் உதவுகிறது என்றே படுகிறது.
Wednesday, July 4, 2007
தரவுத் தள வடிவமைப்பு வழிகாட்டிகள் - நிவதி (ERP) 15
பதிவர் எண் | பெயர் | ஊர் | நாடு | பதிவு எண் | பதிவு முகவரி | பதிவு பெயர் | இணைந்த நாள் |
68 | டோண்டு ராகவன் | சென்னை | இந்தியா | 1325 | http://dondu.blogspot.com | Dondu's Dos and Donts | 2004/10/05 |
75 | சிறில் அலெக்ஸ் | போஸ்டன் | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | 1332 | http://theyn.blogspot.com | தேன் | 2005/01/25 |
92 | அருள்குமார் | சென்னை | இந்தியா | 1346 | http://arul76.blogspot.com | உணர்வின் பதிவுகள் | 2005/06/01 |
1932 | http://chennapattinam.blogspot.com | சென்னைப் பட்டணம் | 2006/07/01 | ||||
106 | பாலபாரதி | சென்னை | இந்தியா | 1359 | http://balabharathi.wordpress.com | விடுபட்டவை | 2006/01/01 |
1932 | http://chennapattinam.blogspot.com | சென்னைப் பட்டணம் | 2006/07/01 |
இப்படி தகவல் இருக்கும் அமைப்பு பதிவுகள் என்ற பட்டி. அதில் ஒவ்வொரு வரிசையிலும் பதிவர்-எண், பதிவர்-பெயர், ஊர், நாடு, பதிவு-எண், பதிவு-முகவரி, பதிவு-பெயர், இணைந்த-நாள் என்று விபரங்கள் இருக்கின்றன.
புதிதாக ஒருவர் பதிவைச் சேர்க்கும் போது
328 | உண்மைத்தமிழன் | சென்னை | இந்தியா | 2948 | http://truetamilians.blogspot.com | உண்மைத் தமிழன் | 2007/01/25 |
- இப்படி விபரங்களைச் சேமித்துக் கொள்வதால் என்னென்னக் குறைபாடுகள்?
- முந்தைய இடுகையில் சொன்ன நோக்கங்களில் என்னென்ன தவறும்?
தரவுத் தள வடிவமைப்பு - நிவதி (ERP) 14
- நம் சட்டைப் பை குறிப்பேட்டில் தொலைபேசி எண்களைக் குறித்து வைத்திருப்பதும் தரவுத்தளம்தான். அதிலிருந்து தகவலைப் பெறுவது, புதிய தகவலைச் சேர்ப்பது ஒவ்வொன்றுக்கும் வழிமுறைகள் வைத்திருப்போம்.
- விரிதாள் (spreadsheet) மென்பொருளில் தரவுத் தளம் இருக்கலாம்.
- அல்லது ஒரு உரைக் கோப்பாகக் (text file) கூட வைத்திருக்கலாம்.
- அட்டி என்பதில் வரிசை (tuples/row) வரிசையாகப் பல தகவல் தொகுப்புகள் இருக்கும்.
- ஒவ்வொரு வரிசையிலும் பல விபரங்கள் (attributes/columns) இருக்கும்.
எடுத்துக்காட்டாக ஒரு வலைப் பதிவரைக் குறித்த விபரங்கள் ஒரு வரிசையில் இருக்கும். வரிசை எண், பெயர், பதிவு முகவரி, பதிவின் பெயர் என்று விபரங்கள் இருக்கலாம். - அடுத்தடுத்த வரிசைகளில் மேலும் பிற பதிவர்களின் விபரங்கள் இருக்கும்.
- சேமிக்கத் தேவைப்படும் இட அளவு குறைவாக இருக்க வேண்டும். ஒரே விவரத்தைத் திரும்பத் திரும்ப சேமித்து இடத்தை வீணாக்கக் கூடாது. (space saving)
- ஏதாவது விபரத்தை புதுப்பிக்கும் போது எல்லா இடங்களிலும் அந்த விபரம் மாறி விட வேண்டும். (avoiding updation anamoly)
- ஏதாவது வரிசையை தேவையில்லை என்று நீக்கும் போது, தேவைப்படும் மற்ற விபரங்களை நீக்க வேண்டிய நிலை இருக்கக் கூடாது. (avoiding deletion anamoly)
- ஏதாவது விபரம் சேமிக்கும் போது தேவை இல்லாத மற்ற விபரங்களையும் சேமிக்கும் கட்டாயம் இருக்கக் கூடாது (avoiding insertion anamoly)
Monday, July 2, 2007
ஆசிட் - நிவதி (ERP) 13
பாலபாரதியின் கணக்கிலிருந்து 1000 ரூபாய்கள் லக்கிலுக்கின் கணக்குக்கு மாற்ற வேண்டும்.
- முதல் படியாக பாலபாரதியின் கணக்கிலிருந்து 1000 ரூபாய் குறைக்கிறோம்.
- தொடர்ந்து லக்கிலுக்கின் கணக்கில் 1000 ரூபாய் சேர்க்கிறோம்.
கணினியில் இந்த பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று மின்தடைப் பட்டு கணினி நின்று போகிறது. அந்த நேரத்தில் இரண்டு படிகளும் நடந்திருந்தால்தான் பரிமாறலைக் கணக்கில் காட்ட வேண்டும். பாலபாரதியின் கணக்கில் குறைக்காமலேயே லக்கி லுக்கின் கணக்கில் சேர்த்து விடவோ அங்கு குறைத்து விட்டு இங்கு கூட்டாமல் இருந்து விடவோ கூடாது.
இந்த முழுமை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வெவ்வேறு உத்திகளைக் கையாளுகிறார்கள்.
இரண்டாவதாக ஒழுங்கு
'ஒருவரது கணக்கில் கையிருப்பு 100 ரூபாய்க்குக் கீழ் போகக் கூடாது' என்பது போன்ற விதிகள் அமைக்கும் வசதியும், அந்த விதிகள் மாறாமல் இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளும் ஒழுங்கும் இருக்க வேண்டும்.
500 ரூபாய் கையிருப்பு இருக்கும் கணக்கிலிருந்து 475 ரூபாய் மாற்ற முயன்றால் அதை மறுத்து விடும் ஒழுக்கம் தரவுத் தள மென்பொருளுக்கு வேண்டும்.
மூன்றாவதாக தனிமை
ஒரே நேரத்தில் இரண்டு பரிமாறல்கள் நடந்தால் ஒன்று செய்யும் மாறுதல்கள் மற்றதைப் பாதிக்கக் கூடாது.
நான்காவதாக உயிர்மை
மாற்றங்கள் தரவுத் தளத்தில் சேமிக்கப்பட்டு விட்ட பிறகு வெளிப் புறக் காரணங்களால் அது பாதிக்கப்பட்டு மறைந்து போய் விடக் கூடாது.
(இந்த நான்கையும் இணைத்து தமிழில் பொருத்தமான குறுஞ்சொல் ஒன்றை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். தேவைப்பட்டால் தமிழ்ப் பெயர்களை மாற்றவும் செய்யலாம்.)
தரவுத் தளம் - குறிப்புகள் - நிவதி (ERP) 12
பயன்பாட்டுக்குக் கிடைக்கும் தரவுத்தளங்களில் (relational databased) சில கீழே (முழுப் பட்டியல்):
வணிக முறைப் பயன்பாடுகள்:
- ஐபிஎம் நிறுவனத்தின் DB2
- ஆரக்கிள் நிறுவனத்தின் ஆரக்கிள் (Oracle Database)
- மைக்ரோசாப்டு நிறுவனத்தின் எஸ்கியூஎல் சர்வர் (MS SQL Server)
- மை எஸ்கியூஎல் (MySQL)
- போஸ்ட்க்ரெஸ் கியூஎல் (PostgreSQL)
நடைமுறையில் ஒவ்வொரு தரவுத்தள மென் பொருளும் தனிப்பட்ட சில சிறப்புகளை உருவாக்கியுள்ளன. அத்தகைய சிறப்புக் கூறுகளைப் பயன்படுத்தினால் மற்ற தரவுத்தளங்களில் பயன்படுத்த மென் பொருளில் பல மாறுதல்கள் செய்ய வேண்டியிருக்கும்.
ஒரு தரவுத் தளத்துக்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளை ACID என்று குறுக்கிக் குறிப்பிடுகிறார்கள். முழுமை (Atomicity), Consistency (ஒழுங்கு), Isolation (தனிமை), Durability (உயிர்மை).
(இந்த நான்கையும் இணைத்து தமிழில் பொருத்தமான குறுஞ்சொல் ஒன்றை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். தேவைப்பட்டால் தமிழ்ப் பெயர்களை மாற்றவும் செய்யலாம்.)
Thursday, June 28, 2007
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 6
அப்படி சீன மொழி கற்பிப்பது ஆரம்பித்து ஒரிரண்டு வாடிக்கையாளர்களைப் பிடித்தோம்.
'எங்கள் மென்பொருளை எப்படியாவது வாங்கிக் கொள்ளுங்கள்' என்று குறைந்த தொகைக்கு மென்பொருள், அதைத் தனிப்பயனாக்கும் பணி, பயனருக்கு பயிற்சி அளிப்பது, நடைமுறைப்படுத்துவதில் உதவி என்று முடிவில்லா புதைகுழிக்குள் மாட்டிக் கொண்டிருந்தோம், ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும்.
கறுப்பு நாட்களாக ஓடினாலும் அப்போது அவற்றின் வலி அவ்வளவாகத் தெரியவில்லை. ஏதோ எதிர்கால சாதனையை செய்து காட்டப் போகிறோம் என்ற நம்பிக்கை ஒவ்வொரு நாளும் செயல்பட வைத்தது. ஆனால் வருமானம் குறைவாக, செலவுகள் குறைய வழியில்லாமல் பல அழுத்தங்களும் பிரச்சனைகளும் சமாளிக்க வேண்டியிருந்தது.
காலையில் எட்டு மணியிலிருந்து மாலை எட்டு மணி வரை, ஞாயிற்றுக் கிழமைகளில் கூட வெளியே சுற்றிக் கொண்டிருப்பேன். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க மாலையில் கதை சொல்லித் தூங்க வைத்து, காலையில் எழுப்பிப் பள்ளிக்கு அனுப்புவதோடு திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று.
இதுவரை தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கே பணி செய்து கொண்டிருக்க, 2005ன் ஆரம்பத்தில் தோல் காலணி செய்யும் நிறுவனம் ஒன்றில் அவர்களுக்கான மென்பொருளைச் செய்ய வாய்ப்பு கொடுத்தார்கள். 2004 டிசம்பரில் ஆரம்பித்து மார்ச்சுக்குள் நான்கைந்து நிறுவனங்கள் வாடிக்கையாளராகக் கிடைத்தனர். மே மாதம் ஐஐஎம்மில் மேலாண்மை பயின்ற நண்பர் ஒருவர் இணைந்து கொண்டார்.
அவருடன் இணைந்து பல ஆர்டர்களைப் பிடித்தோம். ஆனாலும் மென்பொருளை ஒரு செய்பொருளாக (product) விற்கும் மனப்பாங்கால் செய்யும் வேலைக்கும், கிடைக்கும் பலனுக்கும், ஈட்டும் பணத்துக்கும் தொடர்பு இல்லாமல் இன்னும் பணப்புழக்கம் தள்ளாட்டத்திலேயே இருந்து வந்தது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இருபதை தாண்டி விட்டிருந்தாலும், பண வரத்து குறைவாகவே இருந்தது.
நண்பரின் முயற்சியால் நிறுவனத்தில் பங்குதாரராக முதலீடு செய்ய அவருடன் கூடப் படித்தவரும், கனடாவில் ஒரு நிறுவனத்தின் மூத்த பொறுப்பில் இருக்கும் அவரது சகோதரரும் முன்வந்தார்கள். பணத்தை முதலீடு செய்தவர்கள் சில காட்டமான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள்.
மென்பொருளை செய்பொருளாக விற்காமல், சேவையாக வழங்க வேண்டும் என்று நிறுவன நலனில் அக்கறை கொண்ட இன்னொரு இயக்குனர் புரிய வைத்தார்.
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 1
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 2
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 3
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 4
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 5
Tuesday, June 26, 2007
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 5
'இப்படி ஒரு சேவை மூலமாக எங்கள் உற்பத்தி நிலவரங்களை எங்கள் வாடிக்கையாளருக்கு தெரிவிக்க முடிவது மிகத் தேவையான ஒன்று, எம்முடைய வாடிக்கையாளர்கள் இப்படி ஒரு சேவையைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்' என்று சொன்னார்.
நடைமுறையில் எப்படி சேவையை வழங்குவது, என்ன விலை வைப்பது, எப்படி செயல்படுத்துவது எல்லாமே இன்னும் புதிராகவே இருந்தது. (திட்டமிடலில் அவ்வளவு சொதப்பல்). இரண்டு வருட ஓட்டத்துக்குப் பிறகு இந்த நிலை. நமது திட்டத்துக்கு எதிர்காலம் இருக்கிறது என்பதில் மட்டும் மேலும் மேலும் உறுதி ஏற்பட்டது.
எனது வகுப்புத் தோழன் ஒருவன் சொந்தமாக தோல் நிறுவனம் நடத்தி வந்தான். அவன்,
'இணையத்தில் இருக்கும் ஒரு கணினியில் விபரங்களைப் போட்டு வைக்க யாரும் தயங்குவார்கள். நானே அதை ஏற்றுக் கொள்ள மனம் இல்லை. இணையத்தில் இணைக்காமல் சரக்கு நிலவரம், ஆர்டர் நிலவரம் போன்றவற்றை பதிந்து கண்காணிக்கும் மென்பொருளாக இருந்தால் நான் பயன்படுத்துவேன்' என்று ஒரு வெளிப்படையான பேச்சில் கூறினான். 'மாதத்துக்கு இத்தனை ரூபாய் என்று என்னிடம் வசூலித்துக் கொள். இதற்கான மென்பொருளைக் கொடு' என்று சொல்லி விட்டான்.
அந்த திசை திருப்பலை ஏற்றுக் கொண்டோம்.
- கணினி வசதியே இல்லாத, இணைய இணைப்பே இல்லாத நிறுவனங்கள் தமது உற்பத்தி நிலவரங்களை துண்டுச் சீட்டில், குறிப்பேடுகளில் குறித்து வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இணையம் மூலம் தகவல்களைப் பல இடங்களில் பல பங்குதாரர்களுக்கு அறியத் தருவது எப்படிச் சாத்தியமாகும்!
- முதல் படியாக அவர்கள் உள் பணிகளை கணினியில் சேமித்து பயன்படுத்தும் முறையைச் செயல்படுத்தினால்தான் அடுத்தக் கட்டமான நமது திட்டம் வேலைக்கு ஆகும் என்று முடிவு செய்தோம்.
- தகவலை இணையத்தின் மூலம் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவமும், ஆதாயமும் அவர்களுக்குப் புரியவில்லை, தேவையில்லை.
- அவர்களுக்கு எது முக்கியமோ எது ஆதாயமோ அதற்கான கணினி மென்பொருள் சேவையைக் கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு அடுத்தக் கட்டத்தில் இந்தப் பயன்பாடு அவர்களுக்குப் புரிய ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பித்தோம்.
அவர்களுக்கு சில்லறைத் தொகை என்று படும் சில பத்தாயிரம் ரூபாய் விலையில் சேவை கொடுக்க ஆரம்பித்தோம். செய்துதான் பார்ப்போமே என்று முதலில் தொடர்பு கொண்ட சென்னை நிறுவனம், ராணிப்பேட்டையில் ஒரு நிறுவனம், பாண்டிச் சேரியில் ஒரு நிறுவனம், கண்காட்சியில் சந்தித்த நிறுவனம் என்று சொல்லிக் கொள்ளும்படியாக வாடிக்கையாளர் பட்டியல் கிடைத்தது.
ஒவ்வொரு மாதமும் சம்பளம் கொடுத்து வீட்டுச் செலவுகளையும் செய்வது இழுபறியாகப் போய்க் கொண்டிருந்து. அதுவரை தொடர்பு கொள்ளாத ஒரு நண்பன் பெருந்தொகை ஒன்றைக் கொடுக்க வெளியில் வணிக முறையில் வாங்கியிருந்த கடனைத் திருப்பி விட்டு தலைக்கு மேல் தொங்கிய கத்தியை தவிர்த்துக் கொண்டோம்.
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 1
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 2
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 3
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 4
Saturday, June 23, 2007
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 4
ஓரிரு பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்களைச் சந்தித்த போது அவர்கள் இந்தப் பயன்பாட்டில் ஆர்வம் காட்டினாலும் நடைமுறையில் இணையத்தின் மூலம் தமது வேலைகளைச் செய்வதில் யாருக்கும் வசதியாக இருக்கவில்லை.
குறைந்த சம்பளத்தில் அப்போதுதான் கல்லூரி முடித்திருந்த பட்டதாரிகள் இரண்டு பேரை வேலைக்கு அமர்த்திக் கொண்டோம். இந்த நேரத்தில் நிறுவனச் செலவுகளுக்கும், வீட்டுச் செலவுகளுக்கும் கையில் இருந்த சேமிப்பு கரைந்து கொண்டிருந்தது. முதல் ஆண்டின் (2002) கடைசியில் கைக்காசு முழுவதும் கரைந்திருந்தது. எனக்கு அறிவுரையாளராக இருந்த நண்பனின் உந்துதலில் நண்பர்களையும், உறவினர்களையும் பணம் கடன் கேட்டு அணுகினேன்.
சந்தைப் படுத்தும் முயற்சியாக
- பல வண்ண கையட்டை (brochure), பெயர் அட்டை (colour visiting card) உருவாக்கினோம்.
- ஜனவரி (2003) இறுதியில் நடைபெறும் சென்னை - இந்திய பன்னாட்டு தோல் கண்காட்சியில் ஒரு கடை எடுத்துக் கொண்டோம்.
- கணினியிலிருந்து பெரிய திரையில் காட்சி வைத்து வருபவர்களுக்கு எல்லாம் மென்பொருளின் அருமை பெருமைகளை விளக்கிக் கொண்டிருந்தோம்.
கடன் கொடுக்கக் கூடிய உறவினர்கள், நண்பர்களின் பட்டியலும் கடைசிக்கு வந்து விட்டிருந்தது. 'எங்கிருந்தாவது பணம் திரட்ட வேண்டும், இப்படியே சேவையை விளம்பரப்படுத்தி விற்பனையில் தீவிரம் செலுத்தினால் காசு வர ஆரம்பித்து விடும்' என்று நம்பிக்கையில் ஓடிக் கொண்டிருந்தோம்.
இந்து வரிவிளம்பரங்களில் வந்த ஒரு தொழில் ஆலோசனை வழங்கும் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள அவர்களைத் தொடர்பு கொண்டு பணம் முதலீடு செய்ய தொழில் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்த ஒரு நண்பருடன் இணைத்து விட்டார்கள்.
அவரிடமிருந்து கணிசமான தொகையை கடனாகப் பெற்ற பிறகு வீட்டிலேயே ஒரு அறையில் இயங்கிக் கொண்டிருந்த அலுவலகத்தை தனி இடத்துக்கு மாற்றினோம். அகலப்பட்டை இணைய இணைப்பு, குளிரூட்டப்பட்ட அலுவலக அறை என்று காசு வேகமாகக் கரைந்து கொண்டிருந்தது. கைவசம் இருந்த காசு கொடுக்கும் வாடிக்கையாளர் ஒரே ஒருவர்தான். அவரது ஆதரவில் ஊக்கம் இழக்காமல் முயன்று கொண்டிருந்தோம்.
காசு முற்றிலும் கரையும் முன்னர் சீனாவுக்குப் போய் ஒரு முயற்சி செய்து பார்த்து விடுவோம் என்று அங்கு வேலை பார்த்த போது ஏற்பட்ட தொடர்புகளில் சிலருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். ஓரிருவர் எதுவும் தேவையில்லை என்று சொல்ல ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளர் வந்து பார்க்கும் படி சொன்னார். அதனால் ஊக்கமடைந்து காசை முடக்கி சீட்டு எடுத்து இன்னொரு நண்பனுடன் சீனாவுக்குப் பயணமானோம்.
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 1
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 2
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 3